கனவுகளைத் தொலைத்தவள்

-- சத்தி சக்திதாசன்

கண்ணீரில்
கரைந்ததினால் தொலைந்ததுவோ
அவள் கனவுகள் ?

காதலினை
காயாகப் பார்த்திருந்து
கனிந்து வரும் வேளையில்
காசாக்க முனைந்த
கயவனின்
கல்மனத்தால் பாவம் அவள் தூக்கங்கள்
கனவுகளற்ற பாலைவனமானதுவோ ?

கன்னியாய்ப் பிறந்ததினால்
கடைசிவரை சுமையாக
கற்றோரும்
கருதும் ஒரு சமூகத்தில்
கயல்விழியாள் தொலைத்தாளோ
கனவுகளைக்
கவலை எனும்
கானகத்தே !

காத்திருந்து
காத்திருந்து
கருவிழிகள் பூத்திருந்து
கன்னிமகள் வாழ்வதனைக்
காணாத
காரணத்தால்
கடலினுள்ளே நீர்த்துளிகளாய்
கலைந்தனவோ அவள்
கனவுகள் !

கண்களிலே கண்ட
காட்சிகளைக் கோர்த்தெடுத்து
காவியமாய் நெஞ்சினிலே
கற்பனையால் யாத்தெடுத்து
காலமெல்லாம் பார்த்திருந்த
களிப்புமிகு வாழ்க்கையதும்
கைமீறிப் போனதினால் தான்
கற்சிலைபோல அழகுடைத்த
கன்னியவள் கனவுகளும்
காணமல் போயினவோ ?

கண்டோரை வியக்க வைக்கும்
கன்னியழகு கொண்டவள்தான்
கல்வியிலே தேர்ச்சி பெற்ற
கலைமகள் தான்
கணத்திலே மயக்கிவிடும் பண்பதனைக்
கற்றவள் தான்
கனவுகளை இன்றவள் தொலைத்திட
காரணமென்ன ?
காளயவன் மனதினிலே பேராசை
களியாட்டம் போடுவதால்; சீதனம் எனும்
கொடுமைதனை எதிர்க்கத் திரணியற்ற
கருத்துக் குருடர் நிறைந்த
கல்தோன்றி , மண்தோன்றாக காலத்து சமுதாயம்
கனவுகளைத் தொலைத்தவளின்
கண்ணீரைத் துடைப்பவர் யார் ?

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-01-01 00:00
Share with others