உன்னைச் செறிவூட்டு.
வானம் நிகர்த்தளவு
வைர நெஞ்சம் நிறுத்தி
பூமி புரட்டமுடியுமென
பூதமென உறுதிகொள்வாய் !
பகுத்த சிறுகடுகின்
பல்லாயிரத்தி லொன்றொத்த
அளவினதுதான்
அணுவதன் சிறு பிளவுதான்
அண்டம் நொறுக்கும்தான்
அதனுள்ளடைத்த செறிவுதான்!
சினமூட்டும் நிகழ்வுகளால் - உனை
செறிவூட்டி வைப்பாய் !
சிறிதளவேனும் சினமாற்றாது
உனக்குள் உனையே
உருக்காலையென
நெருப்பு பூட்டிக்கொள்வாய் !
எரிமலையென
நெருப்புக் குழம்பினை
நெஞ்சத்துள் புதைத்துவைப்பாய் ! - நீ
வாய்க்கும் காலத்தே
வெடித்துவிடு
புரட்சிக்கணலாய் சீறியெழு
பூதமென
பூமிதனை புரட்டிப்போடு !
மாற்றம் கிட்டும் ! ஏனெனில்
எல்லாமும்
மாற்றத்திற்குட்பட்டதுதான் !
ஆக்கம்
இ.ஜேசுராஜ் - கீரனூர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16 00:00