அகதிச்செடி.. செடி எடுத்துக் கொள்ளுங்கள்

01.
அகதிச்செடி
-------------------
புறக்கடையில் அந்த மாஞ்செடியை
இரண்டு நாளாய்தான் பார்க்கிறேன்

சிறு கொழுந்துகள் துளிர்த்து
அருகில் நின்ற வேம்பின் நிழலில்
பணிந்து நின்றிருந்தது

யாருக்கும் தெரியாமல்
பூமியில் கொஞ்சம் நீருறிஞ்சியும்
வெயிலுக்கு தன்னைத்
தொட அனுமதித்தும்
அச்செடி தன் துளிர்ப்பை
வெளிச்சத்தில் வைத்திருந்தது

யான் அறிய விரும்புவதெல்லாம்
எந்த வனத்திலிருக்குமோ
இச்செடிக்கான தாய் மரம்.

02.
செடி எடுத்துக் கொள்ளுங்கள்
---------------------------------------
குழந்தையைச் செவிலியிடம்
ஓப்படைப்பதைப் போல்
பெயர்த்து வந்த புன்னைக் கன்றை
பின் தோட்டத்தில் வைத்தேன்
தொப்புள் கொடி மண்ணோடு
கைக்கு வந்த புதுச்செடியை
தன் கருவென சுமந்து கொண்டது தோட்டம்

வேர் கொண்ட நிலத்தின்
ருசியும் நாற்றமும் கொண்டு
ஒரு தேவகன்னியின் செவ்விதழ்போல் அரும்பியது
அதன் முதல் இலை
மலர் கொண்ட காலத்தில்
தாவரங்களின் தேவதையென
தளும்பி நின்றது அதன் இளமை
பெருங்காமத்தால் முறியும்
தனித்திருப்பவளின் உடலைப்போல்
காற்றுக்கு அதன் சிறு கிளை
முறிந்த காலத்தில்
அதன் விதை ஒன்று
முட்டி முளைத்திருந்தது
அதன் மடியில்
இன்னொரு செவிலிக்கான
குழந்தை அதுவென்று
நினைத்துக் கொண்டேன்.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2015-11-04 00:00
Share with others