கசக்கும் நினைவுகள்
-------------------------
கசந்து போகும்
எம் நினைவுகளுக்குள்

சதுரங்க விளையாட்டில்
நகர்த்தப்படும்
காய்களைப்போல
நகரமறுத்தாலும்
நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம்

மெய்களைப் புதைத்துவிட்டு
பொய்களுக்காக
புரட்சிக்கொடி ஏந்துகிறோம் ..

அறிமுகங்களை
அறுத்தெறிந்துவிட்டு
ஆளுமையால்
அடிமைகளாய் இருக்கிறோம்

நீதி தேவதையின்
கண்களை கட்டிவிட்டு
தலைமேல்
நடனமாடுகிறது தவறு ..

போதி மரங்களுக்குள்
ஒளிந்துகொண்டு
புனிதர்கள் கூட
புறப்பட்டு விட்டார்கள்
புனித நீர் என்று
களர் நீர் பருகிட ..

பல பாகங்களில்
ஆயுத அணிவகுப்பால்
ஆதாரமின்றிப்போகிறது
மனித உயிர்கள் ...

வாசனைப் பூக்களை
தொலைத்துவிட்டு
காகிதப்பூக்களோடு
காதல் மொழி பேசுகிறோம் ..

கையிலிருக்கும் வைரங்களை
நிலக்கரியாகவும்
எங்கோ இருக்கும்
நிலக்கரியினை
வைரமாகவும்
மதிக்கப் பழகி விட்டோம்

மூங்கில் காடுகளை
கொளுத்திவிட்டு
பீரங்கித் துளைகளில்
புல்லாங்குழல் ஓசையைத் தேடுகிறோம்

நினைவுகளை தொலைத்துவிட்டு
கனவுகளில்
கூச்சல் போடுகிறோம்

மொத்தமாய் ....
அண்டசராசரங்கள்
ஆயிரம் அர்த்தங்கள் சொன்னாலும்
எங்கள்
நெஞ்சங் கூட்டுக்கு
கவசமிட்டு விட்டோம்
நாங்கள் .

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-05-24 00:00

கருத்துகள்

மூங்கில்களை எரித்துவிட்டு பீரங்கிகளில் புல்லாங்குழல் தேடுதல் என்ற வரிகள் நெஞ்சை தொட்டன. வாழ்த்துக்கள்!

Share with others