ஊதா நிற யானை.. கவிஞனின் மனைவி.. வாழ்தலை மறந்த கதை

01.
ஊதா நிற யானை
--------------------------

சுத்தமாய் வெள்ளைத்தாள்
சிதறிய கிரெயோன் கலர்கள்
இரண்டு கோடுகள்
ஒரு கோணல் வட்டம்
நம்பிக்கையோடு
யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று
குழந்தைக்கோ கர்வம்
ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று.
யானைக்கு ஊதாநிறமா?
அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை
இரண்டு கால் யானை எங்குள்ளது
அடித்துத் திருத்தினார்
குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக
அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க
நடந்து போனார் ஆசிரியை.

02.
கவிஞனின் மனைவி
-------------------------------

அபூர்வமான சொற்களைப் பின்னும்
பொன்னிற சிலந்தி அவன்
ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய்
நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான்.
திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில்
அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப்
பார்த்தவாறே உறங்கிப்போவாள்.
அவன் எழுதும் எதையும்
அவள் வாசித்ததில்லை
அவனது விசாரங்களும் தனித்துவமான
சிந்தனைகளும்
அவளுக்குப் புரிந்ததேயில்லை.
அதிகம் பேசுவது அவனை
ஆத்திரமூட்டும்.
அவள் மொழி மறந்தவள் ஆயினள்.
கிராமத்துக்கிளி மொழிகள்
மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள்
அடங்கியிருந்தாள்.
சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் துருப்பிடித்து
சாகத் தொடங்கிய ஒரு பொழுதில்
அந்த ‘அதிசயம்’ நிகழ்ந்தது.
புழுங்கிய சமையலறையில்
நெடுங்காலமாய் திறவாதிருந்த
‘ஜன்னல்’ தான் அது
அதனூடே அவள்
அடர் காட்டு மூங்கிலின் பாடலையும்
வானவில் எழுதும் ஓவியங்களையும்
வாசிக்கத் தொடங்கினாள்.

03.
வாழ்தலை மறந்த கதை
-------------------------------

அவளிடம் சொன்னேன்
அடுப்படி தாண்டு
பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக
விஷயங்கள் இருக்கின்றன
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்
வித்தை சொல்லித் தருகிறேன்
அவள் வந்தாள்.
சுமக்க முடியாத சங்கிலிகளையும்
முடிவற்ற சந்தேகங்களையும்
சுமந்து கொண்டு
மிகுந்த பிரயாசையோடு
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்
நீண்டு நெடித்தலைந்தன.
இனி என்ன
களைப்போடு கேட்டாள்.
இனி நீ வாழத் துவங்கு
வாழ்தல் என்றால்
அயர்வோடு நோக்கினேன்.
அவள்
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-07-03 00:00

கருத்துகள்

அருமை நண்பி உங்களின் கற்பனை...

சகோதரி!rnஎன்னை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் நான் உங்களை உங்கள் பள்ளிப் பருவம் முதலே அறிவேன் (முகம் கண்டதில்லை). பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சாகித்திய விழாப் போட்டிகளில் நானும் 98ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பங்குகொண்டு கவிதையாக்கம் மற்றும் பாடல் இயற்றுதல் என்பவற்றில் பங்குகொண்டு சான்றிதழ்கள் பெற்றேன். அக்காலப் பகுதியில் உங்களையும் உங்கள் கவிதைகளையும் அறிய முடிந்தது. இடையிடையே உங்கள் ஞாபகம் வருவதுண்டு. இன்று வார்ப்பில் உங்கள் பெயரைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி. கவிதைகள் மூன்றையும் வாசித்தேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது. வாழ்வின் யதார்த்தங்களையும் சமூகத்தின் தேவைகளையும் பிரதிபலிக்கும் கருப்பொருட்களைக் கையாண்டிருக்கிறீர்கள். கவிதைத் தொகுதி ஏதேனும் வெளியிட்டிருக்கிறீர்களா? உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்! எனது இயற்பெயர் S.H.M.ஷிஹார். சென்ற மார்ச் மாதம் வெளியீடு செய்த எனது கவிதைநூலின் அட்டைப்படத்தை வார்ப்பின் வாசலில் பார்க்கலாம்.

Share with others