ஓற்றைக்கதவும் ஒரு குழந்தையும்.. நோர்வே சில தூரம்

01.
ஓற்றைக்கதவும் ஒரு குழந்தையும்...
------------------------------------------

வடலி குலைந்து
வானம் பார்த்தபடி
ஒற்றைப்பனை

அதன் மேல்
அக்கினி உமிழத் தயாராக
ஊர் நிலவு

குருதி படிந்த
வேலி இடுக்கில்
தலை கிழிந்த
ஒரு புகைப்படம்

கிடுகின் பொந்தல்லூடு
புன்னகை மறந்து
பொசுங்கிப்போன
ஒற்றைக்கை உருவம்

தன்நிலை மறந்து
கோவிலடி ஆலமரம்
அம்மன் பாவம்
ஒரு கண்ணுடனும்
ஒற்றைக் காலுடனும்
அதே...
அப்பாவிச் சிரித்த முகம்

காற்றில் அலைந்து
களைத்து விழுகிறது
ஒரு துளி மழை

மழைத்துளி விழுந்தாலும்
எதோ என்று
பதறியடித்து
பதுங்கிக்கொள்கிறது
உடைந்த ஒற்றைக் கதவடியில்
ஒரு குழந்தை

ஏன் என்பதை
முழுவதுமாய் யாராவது
இனியேனும் உணரக்கூடும்...?

02.
நோர்வே சில தூரம்
----------------------------

சூரியனைக் கொன்று...
விழுங்கிப் பிரசவிக்கும்
கறுப்புப்பகலின் தியானத்திற்குள்
முயங்கிக்கிடக்கிறது
பனிகாலம்

இரவுபகலாய்
ஓய்வு தொலைத்த சூரியன்
வீட்டு முற்றதைச்
அமானுஷ்ய அமைதியில்
ஆக்கிரமிப்புப் செய்கிறது
இது கோடை

மலைமுடிச்சுகளின் உச்சியில்
தம்மை ஏற்றி
எழுந்து நிற்கும்
வெள்ளை முகங்களும்
அதே
மலைக்குவியல்களுக்குள்
முகம் தொலைத்த
கறுப்பு மனிதர்களும்
கலந்து கரைவர்

பனி மூடிய வீடுகளுள்
தீ மூட்டி
குளிர் காய்வதும்
உயிர் வாழ்வதும் இங்கு
சிலருக்குப் போதுமானது

சில நாள் நாடுகடந்து
மீண்டும் வந்து
முகம் தொலைக்க
பழகிவிட்டது சிலருக்கு.
எனக்கும்...

நாடு மலருமெனச்
சபதஞ்செய்த
ஓலங்கள்...
புதிது புதிதாய்
கண்டெடுக்கும்
அன்றன்று விரிந்த
மாயக்கூட்டினுள்
மல்லாந்து கிடக்கிறது...

கறுப்பைத் தவிர்ந்து
எம்மில் அனைத்தும் களைந்து
நிர்வாணமாய்
எங்கள் ஒற்றுமை.

மரணம் வாழும்
எங்கள் மண்ணில்
இன்று
ஊர் போய் சேர
யார்க்கும் தடையில்லை

இங்கிருந்து எல்லாம்
பொறுக்கவும் பெருக்கவுமே
போதுமானதாய் இருப்பதால்...

கறுத்தவிடியலிலும்
வெள்ளையிரவுகளிலும்
ஆழ்மன அலைகள் கரையேற்ற
நிதான நிமிசங்களை
சந்ததிக்கும் சேர்த்தே சிருஷ்டிக்க...

பனி ஒழுகி
பூ மலரும் ஒர்நாள்
சொந்தங்களே உம்மையிங்கு
சில பொழுதிலேனும்
ஒருசேரக்
காண விரும்புகிறேன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-07-14 00:00
Share with others