என்னவள் ஒரு தேவதை - IV & V
IV.
என்னவள் ஒரு தேவதை
----------------------------
மொழி பயின்றதென்னவோ
உன் இதழ்கள்தான்
எனினும்
அதிகம் பேசுவதென்னவோ
உன் விழிகளே...
ஆனால்,
இப்படி காதல் பேச
யாரிடம் கற்றன அவைகள்
எனக்கேட்டால் என்னையே
காரணம் காட்டுகிறாய்...
மழைக்காகத்தான் குடைகள்...
எனினும்,
உன் மடியில்
நான் சாய
இமைக்குடை விரிக்கும்
உன்னிரு கருமீன்களின்
கருணைப்பார்வையில்
எப்போதும் என் கண்களில்
மழைதான்...
இனியவளே,
நீ பேசப்பேச
திகட்டாமல் இனிக்கிறது
எந்த மொழியும்...
புரியாத மொழியில்
நீ என்ன பேசினாலும்
எனக்குப் புரிகிறது
அது காதல் தானென்று...
V.
என்னவள் ஒரு தேவதை
-------------------------------
உத்திரத்தில் கயிறுகட்டி
அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்த
ஊஞ்சலின் மடி
அமர்ந்திருக்கிறாய்,
என் மடி வேண்டாமென்று
வழக்கம்போலொரு ஊடலில்...
அது பொய்யெனப் புரிந்தவனாய்
உனதுருவம் பொறித்த
தலையணையை நீயென
பாவித்து மடியமர்த்திக்
கொஞ்சுகிறேன்...
என் கொஞ்சல் மொழி
தனக்கு மட்டும்தானென
ஓடிவந்து தலையணை விரட்டி
உனை கொண்டு
நிரப்புகிறாய்...
அகவை மூவெட்டை
தாண்டிய குழந்தையென
உனை மடியேந்தி
தாலாட்டுகையில் இறையிடம்
வேண்டுகிறேன்
இனி எப்பொழுதும்
இப்பொழுதாய் என்றும்
இனியதாய் கடந்திடவேண்டுமென...