என்னவள் ஒரு தேவதை II - III
--------------------------------------

II.
வைகறையில் நீர்தெளித்து
கோலமிட வாசலுக்கு
வருகிறாய்...
உன் வருகைக்காக‌
காத்திருக்கிறோம்
நானும் வைகறையும்...
நீரள்ளி நீ தெளிக்கையில்
சிதறிவிழும் ஆயிரம்
துளிகளில் ஒவ்வொன்றிலும்
உன் பூமுகம் தெரிய‌
ஒவ்வொன்றிற்காகவும்
ஒரு முறை மீண்டும்
பிறக்க நினைக்கிறோம்
நானும் வைகறையும்...
நாளை மீண்டும்
உன்னை த‌ரிசிக்க‌வே
பக‌லுக்கு வ‌ழிவிட்டு
க‌ட‌ந்து போகிற‌து
வைக‌றை...
நாளைவ‌ரை காத்திருக்க‌
ம‌ன‌மின்றி
நான் ம‌ட்டும் தொட‌ர்கிறேன்
என் விடிய‌லை
உன்னை பார்த்த‌ப‌டியே...

III
என்னவள் ஒரு தேவதை
--------------------------------

குளவிப்பூ விரல்களை
வட்டமாய்க் குவித்து
அதில் சோப்பு நீரால்
சிலந்திவலை பிண்ணி
உன் குவளைப்பூ இதழ்களைக்
குவித்து காற்றில்
ஏதோ ரகசியம் சொல்கிறாய்...
அந்த‌ ரகசியங்களை
மூட்டைகட்டி காற்றில்
பறக்கின்றன நீர்க்குமிழிகள்...
அவைகளில்
என்னைப்பற்றிய செய்தி
ஏதேனும் இருக்குமாவென
நான் ஆர்வமுடன் தேட‌
ஒவ்வொன்றும்
என் உள்ளங்கையில்
வட்டமாய்
சிலீரிட்டு வெடித்து
உன் குவளைப்பூவிதழ்
ஈரம் தான் அந்த
ரகசியங்கள் அனைத்தும்
என்று சொல்லாமல் சொல்லின‌...

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-11-16 00:00
Share with others