இல்லாதாரும் இலவசங்களும்
-----------------------------------------

எழுத்தாலோ எண்ணத்தாலோ
செயல்படுத்தும் திட்டத்தாலோ
எழும்பும் விளைவுகள்
எளியவனை இயலாதவனை
எழுந்துநிற்க வைத்தால்
எத்தனை நலம்?
ஏங்கிநிற்கிறான் என்பதற்காக
கூனியே கையேந்தவிடுவதா
அவன்வாழ்க்கைக்கு பலம்?
'இனியொரு விதி செய்வோம்
அதைஎந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!'-
பசித்தவன் கேட்டுவிட்டு
பரவசப் படட்டுமென்றா
பாடினார் பாரதி?

இல்லாதவன் கேட்டுவிட்டு
இங்கெமக்குக் குரல்கொடுக்க
இனியொரு நல்லவன்
இதுபோலப் பிறப்பானா என
நன்றியில் நனைந்து போக
வேண்டுமென்றா
எண்ணினார் பாரதி?
பாரதம் தன்னிறைவு கண்டு
பார்புகழத் தலைநிமிர்ந்து
எழுந்துநிற்க அல்லவா
எழுதினார் அந்தமகாக்கவி!
முற்றிலும் முடியாதவனா
தவறில்லை போடலாம்சோறு!
ஆனால்..
முடிந்தும் முயற்சியற்றவனா
இயன்றால்
வேளாவேளைக்குக்
கூழோகஞ்சியோ கிடைத்திட
வேலைக்கு வழிசெய்து-
உழைப்பின் உயர்வை
உன்னதத்தை
உணர்த்திடப் பாரு!
அது விடுத்துத்
தானம் என்றபெயரில்
தந்துதந்து அவனை
தன்மானம் மறக்கச்
செய்வதிடலாமா கூறு!

இல்லாதவனிடம் கொள்ளும்
இரக்கமும்
கலங்கிநிற்பாரிடம் காட்டும்
கருணையும்..
அவரை
முன்னேற்றப் பாதையில்
செல்லத் தூண்டும்
முயற்சியை வேகத்தை-
ஆர்வத்தைத் தாகத்தைக்
கொடுக்க வேண்டியது
அவசியம்.
முட்டுக்கட்டையாய்
அயற்சியை சுயபச்சாதாபத்தை-
அலட்சியத்தை சோம்பலைத்
தராமல் பார்த்திடல்
அத்யாவசியம்!

தனியொருவனுக்கு உணவில்லாத
ஜகத்தினை அழித்திடும்
சாத்தியம் இல்லாது போனாலும்-
சாதிக்க வேண்டிய ஜகம்
இலவசங்களால்
சக்தி இழந்திடாதிருக்க
சிந்திப்போமே!
பொன்னான பொழுதினைத்
தூங்கியே கழிப்போரையும்-
செல்லும்பாதையில் களைத்துத்
துவண்டு விழுவோரையும்-
தூக்கி நிறுத்தும்
தூண்டுகோலாய் நாமிருக்க
யோசிப்போமே!
தத்தமது காலாலே
வீறுநடை போட்டிடத்தான்
பழக்கிடுவோமே!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-11-02 00:00

கருத்துகள்

இலவசங்களால் இருப்போரையும் இல்லாதவர்களாக்கி இயல்வதையும் இயலமுடியாது என்று இயம்பவைக்கும் இக்காலத்திற்கு இக்கவிதை இடம்கொடுக்கும் இன்றியமையா சிந்தனைக்கு,

ராமலக்ஷ்மிக்கு ரம்யமான வாழ்த்துகள்.

Share with others