தேவதையவள்.. புதுமை

01.
தேவதையவள்
-----------------------

உன் வீட்டு
நிலைக் கண்ணாடியை
தொல்லியலாளர்கள்
எடுத்துப் போய்விடுகிறார்களா!!...

சரிதான்...
ரவிவர்மாவின் ஓவியங்கள்
பாதுகாக்கப்பட வேண்டியவை
ஆயிற்றே !!!

02.
புதுமை
-------------
கடவுள் என்றும்,
அதன் மீது பயம் கொள் என்றும்,
கலாச்சாரம் என்றும்,
அதைப் புரிந்துகொள் என்றும்,
நாகரீகம் என்றும்,
அதை தெரிந்து கொள் என்றும்,
பண்பாடு என்றும்,
அதை உணர்ந்து பண்படு என்றும்,
இலக்கியங்கள் வாயிலாக‌
இயக்கங்களை உபதேசித்தது
இப்படி வாழவேண்டாம் என்றும்
இப்படி வாழ்ந்தால் சிறப்பு என்றும்
ஏற்கனவே கண்டுகொள்ளப்பட்ட‌
வாழ்வியல் முறைகளை
மீண்டும் கண்டுபிடிக்க‌
வேண்டாம் என்றுதான்...

அவைகளைப் புறந்தள்ளி
புர‌ட்சி, புதுமை என்று
பெயர்கள் சொல்லி
அதே இல‌க்கிய‌த்தைப்
பொருள் விளங்காமல்
மொழி மாற்றுவ‌தில்,
மானுட‌ப்ப‌த‌ரே, நீ
என்ன‌ விடை க‌ண்டாய்...
இப்ப‌டி கால‌த்தை
விர‌ய‌ம் செய்து
என்னென்ன விலை கொடுத்தாய்...

புதுமை என்ப‌து
கால‌ மாற்ற‌த்தில்
சிதில‌ம‌டைந்த பூந்தொட்டிகளை
அக‌ற்றிவிட்டு பூச்செடிக‌ளைப்
பாதுகாப்ப‌து...
பூச்செடிகளைக் களைந்துவிட்டு
காகிதப்பூக்களால் பூந்தொட்டிகளை
நிரப்புவது அல்ல...

புதுமை என்ப‌து
வேங்கையின் பாதுகாப்பில்
புள்ளிமானைத் துள்ளவிடுவது ...
வேங்கையின் வேகத்தைக்
காரணம் காட்டி
புள்ளிமான் கொல்லப்படுவதை
நியாயப்படுத்துவதல்ல...

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-04-16 00:00
Share with others