தூக்கத்துக்கு கனவே சாட்சி

- தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

தூக்கம்
தினமும் வருகிறது
இரவைப்போல்

தூக்கம்
படுக்கையைப்போல்
இருக்கிறது

நான் அதில்
கனவாய்ப் புரள்கிறேன்

தூக்கம்
கரும்பச்சைப் புல்வெளியாய்
படர்கிறது

புல் நுனிகளில்
அங்கங்கே
பனித்துளிகளாய்
கனவுகள் அமர்கின்றன

தூக்கம்
இருண்ட
மா மரமாய் எழுகிறது
மின்மினிகளாய்
கனவுகள்
அதன் கிளைகளில் அமர்கின்றன

நள்ளிரவு வானமாய்
தூக்கம் இருள
விண்மீன்களாய்
கனவுகள் பளிச்சிடுகின்றன

தூக்கம்
கருமுகிலாய்க் கூடுகிறது
கனவு
மின்னலாய்த் தெறிக்கிறது

தூக்கம்
உன்னைப்போல்
என்னிடமிருந்து
விலகியே இருக்கிறது

கனவு
என்னைப்போல்
என்னுடனே இருக்கிறது

தூக்கம்
மேல் போர்வை தேட
கனவு
என்னையே துகிலுரிக்கிறது

தூக்கம்
என்னைப் படுக்கையில்
வீழ்த்தப் பார்க்கிறது
கனவு
என்னை
வானில் பறக்கவைக்கிறது

இருளறைக்குள்
தூக்கம்
கருக்கொள்கிறது
பின்
கனவுக் குழந்தைகளைப்
பிரசவிக்கிறது

தூக்கம்
நிழலாய் வருகிறது
அந்த நிழலுக்கே
காரணமான வெளிச்சமாய்
கனவு மேலே இருக்கிறது

கனவுதான்
நான் தூங்கினேன்
என்பதை நினைவூட்டுகிறது

தூக்கம்
இருளடர்ந்த கானகத்துக்குள்
என்னை இட்டுச் செல்கிறது
ஆங்கே
நெடுமரமாய் நிற்கும்
கனவுகள் மீதே
மோதி விழுகிறேன்

தூக்கத்திலேயே
நான் செத்துவிடவில்லை என்பதை
கனவுகள் மூலமே
உறுதிசெய்துகொள்கிறேன் -
கனவுகள் இல்லாத தூக்கம்
மரணம் மட்டும் தானே?

தாயின் அணைப்பே
என்னைத் தூங்கவைத்துவிடுகிறது
அவள் தாலாட்டு
என்னை விழிக்க வைக்கிறது

நினைவு
புகைப்படமாய்
என் அழகைக் காட்டுகையில்
கனவு
எக்ஸ்-கதிர்ப் படமாய்
என் உள் அசிங்கங்களைக் காட்டுகிறது

கனவில்
சிலப் போழ்தில்
ஆள் மாறாமல்
என் பால் மாறுகிறது
மற்றைச் சில கணங்கள்
உரு மாறாமல்
என் திணை மாறுகிறது

தூக்கம்
எப்போதாவது
தூக்கம் போல்
வருகிறது
ஆனால்
கனவைப் போல்
வெகுவிரைவில்
கலைந்துவிடுகிறது

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others