தமிழில்: புதியமாதவி, மும்பை

என் பசி
-> மராத்திய மொழிக்கவிதை> தமிழாக்கம் : புதியமாதவி

ஒத்துக்கொள்கிறேன்
நான் உன் அடிமை என்பதை.

உணர்ந்து கொண்டேன்
இழந்துப்போன
என் உரிமைகளை.

நானே வலிய வந்து
ஏற்றுக்கொண்டு விட்டேன்
-என் சுதந்திரம்
பறிக்கப்பட்டதை-

என்னைக் கட்டிப்போட்டிருக்கும்
சங்கிலியின் மறுமுனை
உன் வசம்.
நீ ஆட்டுகிறாய்
என்னை ஆட்டுவிக்கிறாய்
காட்சிப்படுத்துகிறாய்.
என்னைக்
காட்சிப்பொருளாக்கும்
கண்காட்சிகளை
என் சம்மதத்துடனேயே
அரங்கேற்றுகிறாய்.

என்னை விடுவிக்க
என் மீது கொண்ட
அபரிதமான உன் காதலால்கூட
என் கட்டுகளை அவிழ்க்கும்
நாட்களைப் பற்றி
பேசாதே.

உன் வாசலுக்கு வெளியே
என்னைக் கட்டிப்போடும்
காலச்சங்கிலிகள்
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்
காத்திருக்கும்
சிவந்த சவுக்கள்

கெட்டுப்போன
எச்சில் பருக்கையை
என் தட்டில் பரிமாற
காத்திருக்கும்
ராட்சதக்கைகள்

என்ன செய்யட்டும்
இருந்துவிட்டுப் போகிறேன்
உனக்கு
உனக்கு மட்டுமேயான
அடிமையாக.

களைத்துப் போய்விட்டேன்.
கண்டவர்கள்
கால்களை எல்லாம்
நக்கி நக்கி
வறண்டு போய்விட்டது
என் நாக்குகள்.
அதில் பிறக்கும்
என் வார்த்தைகள்
வலிமை குன்றிவிட்டன
எழுந்து நிற்க முடியாமல்
சரிந்து விழுகின்றன.
பற்களுடன் உரசியப்பின்னும்
என் நாக்குகளுக்கு
கிடைக்கவில்லை
வார்த்தைகளின்
ஒலிச்சுவடு.

என் உதடுகளைப்
பற்றிக்கொள்ள துடிக்கும்
வார்த்தைகள்
எல்லா இடங்களிலும்
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.

எதுவும் மிச்சமில்லை
என்வசம் இப்போது.
கண்களில்
தென்படும் கடைசி
எதிர்பார்ப்பைத்தவிர:

உன் தட்டில்
எஞ்சி இருக்கும்
கடைசிப் பருக்கையை
தருவாயா
என் பசித்தீர்க்க?

-- (மராத்திய பெண்கவிஞர் கவிதா மகாஜன் (Kavita Mahajan) கவிதை நூல் "தத்புருஷ் " ல் எழுதியிருக்கும் பசி என்ற கவிதையின் தமிழாக்கம்.)

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-01-01 00:00

கருத்துகள்

kavithi yenbathu un payaril mattum alla nee yaluthiya owworu varthaiyelum yapothu vetri kaniyai unnudane vaithukolla en vallthugal

Share with others