“எப்பல ஊருக்குப் போற?“ என்பான்
நண்பன்
நான்
ஊருக்கு போனதுமே

வந்ததுமே துரத்துகிறானென
வருந்துபவர்களுக்குத் தெரியாது
அவன்
கேள்வியினுள்ளிருக்கும் பொருள் !

புரிந்துக கொண்டவர்களுக்குள்
மட்டுமே
புரிந்து கொள்ளப்படுகிற
விசித்திரமான
மொழிப்பரிமாற்றம்தான்
நட்பு.

விபத்தொன்றில் காலிழந்து
முதுகுத்தண்டு செயலிழந்து
ஓடியாடிய நண்பன்
படுக்கையில்...

ஓடினேன்
வீடுவரை சென்ற கால்கள்
படிதாண்ட பயப்பட்டன
“எந்த முகத்துடன்
எதிர் கொள்வது நண்பனை?“

உணர்ந்துகொண்டதுபோல
உள்ளிருந்து கேட்டது குரல்
“சும்மா வாலேய்..
நான் செத்தா போயிட்டேன்?“

கசங்கிய துணியாய்
கட்டிலின் மீது
நண்பனின் உடல்.

ஆறுதல் சொல்லவேண்டிய என்னை
தேறுதல் செய்து
அனுப்பினான் நண்பன்.

ஓன்றல்ல
இரண்டல்ல
ஓடின ஆண்டுகள் ஆறு.

இன்று
கட்டில் மட்டும்
நண்பன் இல்லை

தாங்கமுடியாத
சோகத்தில் மூழ்கிய எனக்குள்
இன்றும்
ஒலித்துக்கொண்டிருக்கிறது
அழியாத ஒலியலையாய்..
“எப்பல ஊருக்குப்போற..“

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00

கருத்துகள்

திரு.முஜிமைந்தன் நட்பின் அழகினை, ஆழத்தை, அன்பினை அருமையாக வடித்துள்ளார். நெஞ்சம் நெகிழ்கிறேன்.

நண்பா! தவிர்க்க முடியாதவைதான் இழப்பு.நானும் இழந்தேன் ஓடி திரிந்த என் வாழ்க்கையை! நானும் உன் நண்பன்தான். எனக்கும் முதுகுதண்டு பாதிப்புக்குள்ளாகி மாற்றுத்திறனாளியாய் இருக்கிறேன்.அதற்காக பயந்தால் மீள முடியாது. நட்பு என்பது தன்னலமற்றது.அதை மறக்கவோ மறைக்கவோ முடியாது. பூக்கட்டும் நல்ல நட்பு!

Share with others