எனக்கேன் தாய்ப்பால்
-----------------------------
ஈழத்தில்
எத்தனையோ கவலைகள்
உனக்கு மட்டும் ஏனம்மா
என்
உயிர்பற்றிக் கவலை
கண்ணீரின் பலத்தால்
மனதைக்கரைத்து
சுதந்திரக் குளியலில்
நீராட நினைத்தவனை
அகதிப் புழுதியில்
அழுக்காக்கி விட்டாயே
கண்ணீருக்குப் பயந்து
என்னைக்
குருடாக்கி விட்டாயே
சுதந்திர வெளிச்சத்திற்காக
வீணைகளே விறகுகளாக
எரியும் தேசத்தில்
இந்த மூங்கில் கம்புக்கேன்
முக்கியத்துவம் கொடுத்தாய்
உன்
புல்லாங்குழல் மட்டும்
புண்கள் காணாமல்
இசைபாட வேண்டுமா
தாய்ப்பாலோடு நீ ஊட்டிய
தமிழுணர்வும்
இரத்தத்தோடு கலந்துவிட்ட
இனவுணர்வும்
அகதி வாழ்க்கையால்
அழிந்துவிடுமா
ஈழத்தில் நடக்கும்
கொடுமைகள் கேட்கும்போது
என்குருதி
கொதிக்கின்றது தாயே
உணர்ச்சிகள் இல்லாமல்
உறங்கிக் கிடப்பதற்கு
பிணமாகவா என்னைப் பெற்றாய்
இன்னும்
எத்தனை நாட்களுக்கு
என் உணர்வுகளை
கொன்று புதைப்பது
தாயே எனக்கேன்
தாய்ப்பால் தந்தாய்
-சு.சிவா
அருமையான கவிதை.உங்கள் வலைப்பதிவும் மிக அற்புதம். மிகவும் ரசித்து படித்துக்கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
உமா