தமிழில்: புதியமாதவி, மும்பை

காணவில்லை..ஆபிஸில்.. கதை

01.
காணவில்லை
-----------------

உனக்கு
எல்லாம் தெரியும்
என்னை
என் முதுகிலிருக்கும் மச்சத்தை
இடது காதில் மறைவாக இருக்கும் தழும்பை
பெருவிரலில் நைந்துப்போன நகக்கணுவை.

அடர்ந்த இருளிலும்
உன்னால் அடையாளம் காணமுடியும்
என் பட்டுப்போன்ற மேனியின்
ஒவ்வொரு வளைவுகளையும்.

ஆனால் நீ அறிந்திருக்கவில்லை
அந்த ஏழு கடல்களைத் தாண்டிய போது
என் பெருமூச்சில்
எரிந்துபோன ஆகாயத்தை.
உன் அணைப்பில் புதைந்து
இதழ் நனைத்த முத்தத்தில்
சரிந்து விழுந்த நான்
காணாமல் போனதை.

02.
ஆபிஸில் மதிய உணவு நேரம்
--------------------------------

அவன் நிறுத்தாமல்
பேசிக்கொண்டே இருந்தான்.
திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்
அறுசுவை உணவு வகைகள்
அவியல், பொறியல்
சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம்,
அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
இத்துடன்
தித்திக்கும் இனிப்பில்
இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம்.

சாப்பிட்டுக்கொண்டே
அவன்
அவன் மனைவியைப் பற்றிக்
குறைபட்டுக்கொள்கிறான்.
அவள் - அறிவிலியாம்.
சோம்பேறியாம்
குண்டாம்
பார்க்க சகிக்கலையாம்
முட்டாளாம்
நடனங்கள் கண்டதில்லையாம்
சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம்
ஏன்..
மாசாலா டீ னா கூட
என்னவென்று தெரியாதாம்
அவளுடன் வாழும் வாழ்க்கை
வெறுத்துவிட்டதாம்
ஆனாலும் ஆனாலும்
என்ன செய்வது
குழந்தைகளுக்காக
குடும்ப கவுரவத்திற்காக..
என்றவன்..

என்னைப் பார்த்து
சொன்னான்..

நான் புத்திசாலியாம்
அறிவுஜீவியாம்
ஆபிஸ் வேலை
வீட்டு வேலை
இரண்டிலும் கெட்டிக்காரியாம்
சம்பாதிக்கிறேனாம்
கவிதை கூட எழுதுகிறேனாம்
என் கணவர் ரொம்பவே
கொடுத்து வைத்தவராம்...

நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்..

அன்றுமாலை
என் கணவருக்குப் பிடித்தமானதை
சமைத்துக் கொண்டிருக்கும்போது
அவர் ஆபிஸ் பையன்
கழுவப்படாத டிபன் பாக்ஸை
என்னிடன் நீட்டிவிட்டு
சொல்லிச்சென்றான்
'பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று'

03.
கதைச் சொல்லு
-----------------

கதைச் சொல்லு
எனக்கொரு கதைச் சொல்லு.
உன் கதையில்..
ஏழு கடல்கள்
இடியுடன் கூடிய புயல்
தீ கக்கும் டிராகன்
இவர்களுடன் இருக்கட்டும்
அரக்கனைப் பரிகாசம் செய்யும்
ஒரு சின்னப் பச்சைக்கிளி
முத்துக்களைக் கொறித்துக்கொண்டு.
இருக்கட்டும்
முடிவில்லாத சிக்கலான பாதை
வெளிவரமுடியாமல்
ஒவ்வொரு படியிலும்
தடைக்கற்கள்
பயப்படவில்லை.
இந்த மாதிரிக் கதைகளை
எனக்குத் தெரியும்.
எல்லா கதைகளிலும்
எப்போதும்
கடைசியில்
இனிமையாக வாழ்ந்ததாக
சுபமாக முடியும் என்று.

கதைச் சொல்லு
எனக்கு.
மூச்சுத் திணறும் அணைப்பில்
வேப்பமரத்தடியில்
அவன் கனவுகள் விழித்தெழுந்ததை..
கதைச் சொல்லு எனக்கு.

உன் கதைக் கேட்டு
அடிப்பட்ட மான் போல
துடிதுடித்து அழவேண்டும்.
கதை முடிவில்
தொலைந்து போன குழந்தைகள்
சந்தர்ப்பவசத்தால்
ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும்..
கதைச் சொல்லு எனக்கு.

ஒரே ஒரு ஊரில்
ஓர் இளவரசியாம்
அவளைக் காதலித்தானாம்
துணிகளை வெளுக்கும் அவன்..

இந்தக் கதையில் கற்பனை இருக்காதே..
கதைச் சொல்லு எனக்கு.
கதைச் சொல்லு.

-பிரதிபா கன்னடக்கவிதைகள்
prathibha nandakumar's poems.
-----------------------------------------
From Indian literature - sahitya akademi's bi-monthly journal, No 215, 2003. pg 56, 63, 67

மொழியாக்கம்: புதியமாதவி.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-04 00:00
Share with others