அனிமல் பிளானெட்.. காரண 'காரியம்'

01.
அனிமல் பிளானெட்
------------------------

தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம்
மனிதர்களைப் பார்க்க முடிவதில்லை
மான்களும் மயில்களும் மட்டுமே

கணவன் வேறொருவரின் மனைவியுடன்
நடனமாட
மனைவி வேறொருத்தியின் கணவனுடன்
சரசமாட
மெய்மறந்த நேயர்கள் சொல்கிறார்கள்
"கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கு"

முப்பது வயது மங்கையுடன்
முகத்தில் மீசை முளைக்காத சிறுவன்
விரச நடனமாட
அவிழ்ந்து விழும் வகையில்
ஆடை அணிந்த
நடுவர் நடிகை சொல்கிறாள்
"மச்சான்...ஐ லவ் யூ டா"

02.
காரண 'காரியம்'
------------------

"பிழைப்பு"

"காலத்தின் கட்டாயம்"

"வேறு வழியில்லை"

"நான் மட்டுமா..."

"உலக நியதி"

ஏதாவதொரு காரணம்

வைத்திருக்கவே செய்கிறார்கள்

தங்களை நியாயப்படுத்த

எல்லாத் துரோகிகளும்

-ஜெ.நம்பிராஜன்

-ஜெ.நம்பிராஜன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-28 00:00

கருத்துகள்

நண்பர் திரு நம்பிராஜன் அவர்ளே

தொலைக்காட்சி பற்றி
கவிதை அருமை.
அந்த‌ தொலைக்காட்சிக் க‌ள‌ம்
எப்போதும்
வர்ண வர்ண ரத்தங்களில்
நடந்து கொண்டிருக்கும்
கொலைக்காட்சிக் களம் தான்.
இந்த விளம்பர யுத்தத்தில்
வாள் எங்கிருந்தோ வீசப்படுகிறது.
பார்த்துக்கொண்டிருப்பவர்களை
இழுத்துப்பிடிக்க‌
"பாசக்கயிறு" திரிப்பவர்களின்
பாங்கான வார்த்தையே இந்த‌
"கெமிஸ்ட்ரி".
உற்றுக்கவனித்தால்
வசூல் குவிக்கும்..மர்மமான‌
"மிஸ்டரி"தான் இது.

உங்கள் கவிதைக்குள்
சூடு தெரிகிறது.
சுவையும் இருக்கிற‌து.
பாராட்டுக‌ள்.

இப்ப‌டிக்கு
அன்புட‌ன்
ருத்ரா

Share with others