புணர்ச்சி
-----------
முற்றுப்பெறாத கதை
இன்னமும் தொடர்கிறது.
மிக அவசர அவசரமாக
ஒவ்வொருவராக
புணர்ந்து கொள்கிறார்கள்.
புனிதம், அந்தரங்கம் எல்லாம்
அவசர அவசரமாக
தன்நிலை இழக்கிறது.
வீரியம் குறைந்து விடும் என்பதற்காகவோ
முதுமை வந்துவிடும் என்பதற்காகவோ
அழகு குலைந்து விடும் என்பதற்காகவோ
முழுதாக அவிழ்க்காத ஆடைகளோடு
புணர்ந்து கொள்கிறார்கள்.
மூத்திரம் கழிக்கும் சந்துகளில்
வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில்
மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்
வாத்ஸாயனரின் சூத்திரம் எல்லாம் பறந்து போக
எல்லோரா ஓவியங்களின் காட்சிகள் எல்லாம் கழிந்து போக
சொறிநாய்களும்
விரல்கள் இழந்த குஷ்டரோகக்காரனும்
வாயில் வீணீர் வடித்தபடி பார்த்துக் கொண்டிருக்க
எங்கும் புணர்ச்சி.
மூத்திரம் கழிக்கும் சந்துகளில்
வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில்
மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்
இரவு அவசர அவசரமாக
இருளை விழுங்கிக் கொள்கிறது.
-துவாரகன்.
140920060025
கருத்துகள்
எனது கவிதை பற்றிய நண்பர் சோனு அவர்களின் கருத்துக்கும் ‘புணர்ச்சி’ கவிதை பற்றிய அவரது வாசிப்புக்கும் நன்றி. நாங்கள் வெளிப்படையாக எதையும் எழுத முடியாத சூழலிலே இருக்கின்றோம். அதற்காக சிலவற்றைப் பதிவாக்காமல் விடமுடியாது. இக்கவிதையும் ஒரு குறியீட்டுக் கவிதை. அப்படிப் பார்த்தால்த்தான் நல்லது.
துவாரகன் 07.05.2008
//வாத்ஸாயனரின் சூத்திரம் எல்லாம் பறந்து போக
எல்லோரா ஓவியங்களின் காட்சிகள் எல்லாம் கழிந்து போக
சொறிநாய்களும்
விரல்கள் இழந்த குஷ்டரோகக்காரனும்
வாயில் வீணீர் வடித்தபடி பார்த்துக் கொண்டிருக்க
எங்கும் புணர்ச்சி. //
வாத்ஸான்யர் இங்குதான் செய்ய வேண்டும் என புணர்ச்சிக்கு விதிகள் தந்திருக்க வாய்ப்பில்லை. ஓவியங்கள் போலவும் சூத்திரங்களிற்கமையவும் எப்போதும் புணர முடியாது. புணர்ச்சி மனித இயல்பு. அது மூடிய அறைகளுக்குள், நிறை வாசனைத்திரவியங்களுடன், உயரிய இசைக் குறிப்புடன் தான் நடக்க வேண்டுமென்றால் சேரிகளில் மனிசர் புணரவே முடியாது.. யாரும் பார்க்காமல் செய்யணும் என்பதே ஒரு மரபுசார்ந்த மனநிலையின் பாதிப்பாற்பட்டதுதான். புணர்ச்சி எப்போதும் 'மறைவுக்குரியது' அல்லது கலைஞர்கள் அதை 'நடக்க நினைக்கிற அழகிய பின்னணிகளிலேயே' அதை நடத்த வேண்டும்.
இது ஒரு வன்முறை இல்லியா? துவாரகன் சொல்வதுபோலவோ, சினிமாவில் போலவோ பாடல்களின் துணையுடனா யதார்த்தத்தில் புணர்ச்சி நடக்கிறது? அது ஒரு இயல்பில்லையா..
இந்தக் கவிதையில் அதை ஒரு இயல்பாக விடாத, குற்றமாகவோ அருவருப்பாகவோ பார்க்கிற (தனக்கு விரும்பாத மாதிரி நடப்பதை விரும்பாத) மனநிலை, நிறையக் கவிதைகளில் காணலாம். கவிஞர்கள், மதகுருக்கள், மற்றும் மனிதர்களைப் பொறுத்தவரை அதை குற்றமாகவோ அருவருப்பாகவோ பார்ப்பதிலிருந்து வெளி வர முடிவதில்லை. அதனாற்தான் அதை 'அழகுபடுத்த' பாடாப் படுகிறார்கள்... அழகுபடுத்தப்படாத சூழல்களில் இருப்பவர்களது புணர்ச்சி (இக் கவிதையில் வருகிற குஸ்டரோகியினது அல்லது சேரிகளில்) இவர்களால் தாங்க முடியாது. அதனாற்தான் கவிதையில் -அதை மறைக்க - இரவு அவசர அவசரமாய் இரவை விழுங்குது.. அப்ப, பகலில் நடந்தால்!
~~~~சோனு~~~~