எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி
------------------------------------------------------

சீக்கிரமாய் விட்டுவிட்டதால்
பள்ளியிலிருந்து குழந்தைகளை கூட்டிக் கொண்டு
வரும் வழியில்ல் 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்'
சீடையும் முறுக்கும்
'ஸ்பெஷல் பாக்' வாங்கிக் கொண்டு
அரைலிட்டர் பால் பாக்கெட்டோடு
உள்ளே நுழைந்தது
எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி...

கண்ணா ஷுவை ஓரமாய் வை..
குளி,யூனிபார்ம் மாற்று என்ற
வழக்கமான அர்ச்சனையோடு
ஆரம்பமானது பண்டிகை...

பிஞ்சு விரல்களால் நெற்றியிலிட்ட விபூதி
கண்ணக்குழிவிலும் மூக்கு நுனியிலும் சிதற
குழந்தைக்கண்ணன் ரெடியாகி விட்டான்...

அவனுக்குத் தெரியும்
இன்று விசேஷமென...

பள்ளியிலிருந்து திரும்பும் சாயங்கால வேளைகளில்
வீட்டில் அம்மாவும் சூடான பாலும் டிபனும்
விசேஷம் அவனுக்கு...

அரைடம்பளர் காபியோடு
அவசரக் கோலமும் குளியலும் முடிந்து
'ஆண்டவா' என நின்றப் போது
கோபந்தான் அவன்மேல் சிறிது

அழித்து விட்ட ஒரு கம்சனைப்போல்
அழிக்காதுவிட்ட ஆயிரம் கம்சன்களுக்காக
எந்த யுகத்தில் தான் நீ சம்பவிக்கப்போகிறாய்
என அரை மனதில் யோசித்தாலுமா

எங்கள் வீடுகளில்
குட்டி குட்டிக் குழந்தைகளாய
என்றும் அவதரித்து
புதிது புதிதாய் குறும்பு செய்யும் அவனை
கோபிக்கவும் முடியாமல்

'நெட்டில்' தேடி பிடித்து
மகாராஜபுரம் சந்தானமும்
உண்ணிக்கிருஷ்ணணும்
உருகி உருகி
'ஆடாது அசங்காது வா...கண்ணா....'
என்றழைக்க

என் மடியில்
எங்கள் வீட்டு குட்டிக்கிருஷ்ணன்
மூடிய கைகளில்
முறுக்கும் சீடையுமாய்..
அம்மா 'ஓவரா சாப்பிடலாமா' என கேட்க
கண்ணனுக்கு நைவேதியமும் ஆனது..

S.உமா.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-10 00:00
Share with others