தமிழில்: மதியழகன் சுப்பையா

எல்லை
-----------

பிரக்ஞைக்கு திரும்பியதும்
உலகை பார்க்க, நுகர,
உணர, கேட்க வேண்டி
வாசலைக் கடக்கையில்
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள்

இந்தச் சுவர்களே உனது வெளி
இந்த மேற்கூரை உனது வானம்
இங்கே, சலனமற்ற மதிய வேளையில்
இந்தத் தலையணைகள்
இந்த வாசமிகு சோப்
இந்த டால்கம் பவுடர்
இந்த வெங்காயங்கள்
இந்த ஜாடி, இந்த ஊசி
மற்றும் இந்த நூல்
மற்றும் பூ வேலைபாடுடை
தலையணை உறைகள்
இவைகள்தான் உனது வாழ்க்கை

அடுத்தப் பக்கத்தில்
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை
எங்ஙனம் பார்ப்பது?
பின்கேட்டை திறந்து கொண்டு
போகும் அவள்
போகாதே என தடுக்கப் படுகிறாள்.

தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள்
இந்த கீரையை, இந்த கொடியை
அடிக்கடி கவனித்துக் கொள்
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை
இந்த தூய்மையான பசுமை பரப்பை
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை
இந்த மணம் வீசும் மண்ணை
இவையணைத்தும் தான்
உனது உலகம்.

-----------------------

ஒலிக்காத ஒலி

எத்தனையோ பொருட்கள் ஒலிக்கின்றன
உடலின் செல்கள்,
நடனமாடுகையில் கொலுசுமணிகள்
மணிக்கட்டில் வெள்ளி வளைகள்
ஜன்னலில் மழைத்துளி விழவே
தாளத்தோடு ஒலிக்கும் கண்ணாடிக் கதவுகள்
மேகத்துடன் மேகம் மோதுகையில்
மின்னல் ஒலிக்கிறது
கனவுகள் ஒலிக்கிறது
அவைகளின் தாள் நேரத்தையும் கவனிக்கிறது
உள்ளுக்குள் அதிர்வேற்படுத்தும்
தனிமை ஒலிக்கிறது
எனது வீட்டில்
பொறுத்தப் பட்டிருக்கும்
அழைப்பு மணியைத் தவிர
எல்லாம் ஒலிக்கிறது.
------------------

மொழிபெயர்ப்பு மதியழகன் சுப்பையா

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-27 00:00

கருத்துகள்

நஸ்லிமா கவிதைகளை முதன் முதலில் படிக்கிறேன்.
பெண்மையின் குரல் குயிலின் குரலுக்கு ஒப்புமை காட்டும் சமுகத்தில்..
அடக்கம் பற்றி போசுவோர் அழுகையை கேட்பதில்லை.
பெண்களின் பெருமூச்சையே சாடும் சமூகம் இந்தியாவில் மட்டுமல்ல
உலகெங்கும் இருக்கிறது.
நஸ்லிமாவின் கவிதைகள் பெண்மைத்தனத்திற்கெதிரான குரல்.
நல்ல மொழிபெயர்ப்பு.
மதியழகன் சுப்பையாவுக்கு பாராட்டுகள்.

Share with others