அகதி மடி

வெளியற்ற வெளியில்
ஊற்றிய தீயில்
தலையசைக்க முடியாமற் திணறும் காற்று
ஒடுங்கியது
இந்தக் குடியிருப்பில்
புழுதித் தெருவில்
படுத்துறங்க முடியாமல் அலையும்
நாயின் மடியில்

திண்ணையில்
விட்டுச் சென்ற வழிப்போக்கனின்
துயரம்
அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது
யாரையும் நெருங்க விடாமல்.
துடைத்தளிக்க முடியா
ஞாபகத்தோடு
தாத்தாவின் கைத்தடி
தனியே நடந்து சென்றது
வெளியம்பலக் கோவில் முற்றத்தில்
விளையாடும் குழந்தைகளிடம்.

ஒரு சொட்டு நீரில்லாத
அகதி முற்றம்
இவ்வெளி கடந்து
இத்திசை கடந்து
சடைக்கிறது ஜெயமோகனின்
டார்த்தீனியமாய்.

ஆப்கான் மலைச்சரிவுகள்
பெரும் பள்ளமாகின
அகதிப்போக்கரின்
துயர் நிறை சுமை கூடி.

பார்த்தேன்
சிதறியோடும் குர்திஸியையும்
பற்றியெரியும் தீயில்
கருகும் ஈராக்கியையும்
தலையில் காஸாவை
தூக்கியபடி
போகும் வழியும் நிற்குமிடமும்
தெரியாமற் தடுமாறும்
பலஸ்தீனியையும்
தெருவான என்முற்றத்தில்
துக்கமொழுக

மட்டக்களப்பின் பெரு வாவிகளில்
நிறைந்தது பெரிய காக்காவின் கூக்குரல்
நிலவை ஊடுருவி
பெரிய தம்பிரான் பாடுகிறார்
தன் துயர் குத்தும் வலி
பொறுக்காமல் வெடித்த சொற்கொண்டு

வன்னியிலும்
புத்தளத்திலும்
அனற்காற்றடித்து
ஊற்றிய தீயில்
வெளியான வெளியில்
படுத்துறங்க முடியா நாயின் மடியில்
ஆற்றவியலாப் புண்ணென
சாம்பல் பூத்துக்கிடக்குமென்
அகதி மடி.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-14 00:00

கருத்துகள்

இந்தக் கவிதை பதுங்கித்திரியும் வாழ்வின் வலியை அந்த வலியின் கொடுமையில் மிதந்து சொல்கிறது. பொதுவாக அகதிகளின் பாடலாகவும் இருக்கிறது. திண்ணையில் விட்டுச் சென்ற வழிப்போக்கனின் துயரம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது யாரையும் நெருங்க விடாமல். என்ற வரிகளில் உன்மையில் கடும் தாக்கம் உள்ளது. "தின்னைகள் சிதைந்து விட்டன" என நான் எழுதினேன். தின்னைகளின் துயரமும் வலியும் எங்களை கடுமையாய் பாதிக்கின்றன.. //ஆப்கான் மலைச்சரிவுகள் பெரும் பள்ளமாகின அகதிப்போக்கரின் துயர் நிறை சுமை கூடி.// //பார்த்தேன் சிதறியோடும் குர்திஸியையும் பற்றியெரியும் தீயில் கருகும் ஈராக்கியையும் தலையில் காஸாவை தூக்கியபடி போகும் வழியும் நிற்குமிடமும் தெரியாமற் தடுமாறும் பலஸ்தீனியையும் தெருவான என்முற்றத்தில் துக்கமொழுக// என்ற வரிகளும் //மட்டக்களப்பின் பெரு வாவிகளில் நிறைந்தது பெரிய காக்காவின் கூக்குரல் நிலவை ஊடுருவி பெரிய தம்பிரான் பாடுகிறார் தன் துயர் குத்தும் வலி பொறுக்காமல் வெடித்த சொற்கொண்டு வன்னியிலும் புத்தளத்திலும் அனற்காற்றடித்து ஊற்றிய தீயில் வெளியான வெளியில் படுத்துறங்க முடியா நாயின் மடியில் ஆற்றவியலாப் புண்ணென சாம்பல் பூத்துக்கிடக்குமென் அகதி மடி.// என்ற வரிகளுமாய் உலகம் பரந்து விழுங்கிய ஆதிக்கத்தை அலையும் அலைச்சலின் வலிகளைஉள் நிறுத்தி கருணாகரன் எழுதியிருக்கிறார். முக்கியமாக ஈழத்தின் நாலாம் கட்ட பேரின் தொடக்கத்தில் மீண்டும் கருணாகரனின் தனித்துவமான கவிதைகள் அவரிடமிருந்து கிடைக்கத் தொடங்கியுள்ளது என நினைக்கிறேன்.

Share with others