முகமில்லாத மனிதன்

- எழுதியவர்:தீபச்செல்வன்

முகமில்லாத மனிதனின்
புன்னகை
அந்த இரவுக்குள்
தொலைந்துகொண்டிருந்தது.

இது வேறுஒரு செயற்கை இரவு.

முதலில் இரவை சிறைவைத்தார்கள்
பிறகு இரவாய் நாளை
சிறைவைத்தார்கள்
பிறகு நாட்டை சிறைவைத்தார்கள்
இந்த செயற்கை இரவு
காலத்தை படர்ந்து
விழுங்கிக்கொண்டிருந்தது.

இனந்தெரியாத துப்பாக்கிகளும்
வெள்ளை வான்களும்
இராணுவ முகாம்களும்
மனிதர்களை இந்த இரவில்
தேடித்திரிய தொடங்கியது.

இரவில் முகங்கள் புதைந்தன.

மரணத்தை ஊதி பெருப்பித்து
அழுகைகளை நிரப்பி
இரவால் நாடு செய்தார்கள்.

இரவின் தெருவில்
நிதானமற்று எல்லோரும்
அலையத்தொடங்கினோம்
அடங்கிப்போய்
இருட்டில் அடைந்தோம்.

இரவு இன்னும் ஆக்கிரமித்தது.

இருட்டில் எழுதி
இருட்டில் கேட்டு
இருட்டில் திருகி
இருட்டாகி போகிறது
முகங்களும் புன்னகையும்.

இரவுக்காக ஒருவன்
அழுதுகொண்டிருந்தான்
இரவும் அழுதுகொண்டிருந்தது

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-07 00:00

கருத்துகள்

இரவுக்காக ஒருவன் அழுதுகொண்டிருந்தான் இரவும் அழுதுகொண்டிருந்தது என்ற வரிகள் அழகாக இருக்கின்றன... வலிகள் புரிகின்றன.

Share with others