---------------------------------------
அலையின் அலைக்களிப்பிற்கேற்ப
அசைந்தாடும் ஓடம் -
சென்றிடுமே நீர் செல்லும் வழி எல்லாம் !!!
காற்றின் இசைக்கேற்ப
நீரின் மேல் நடனமாடும் !!!
இயற்கையின் அழகதனை
இன்பமாய் ரசித்திட
நமக்கு வழிகாட்டியாய்.....
நம்முடன் துணைவனாய் !!!
ஓடமே.... உன்
அழகில் தொலைகிறேன் நான் !!!
ஆம் - பிறர் மனம் மகிழ்ந்திட
நீயே ஆகிறாய் -
ஓர் கருவியாய் !!!
உன் தன்னலமில்லா
உள்ளத்தின் - கள்ளமில்லா
அழகில் தொலைகிறேன் நான் !!!
பி.தமிழ் முகில்
------------------------------------------
இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்
கடனோடு
கடல்தாண்டியும்!
உடனோடு இருந்த உடலையும்
உருக்குலைத்து நின்றபோதிலும்,
சேலையால் சுற்றபற்ற
செந்தாமரையே!
செப்பனிடப்பட்டு செதுக்கிய
உயிர் ஓவியமே!
உன் அழகில் தொலையும் நான்
இன்னும் உயிரோடு தான் இருகிறேன்.
அப்துல்லா பேர்ணாட்சா
மலேஸ்யா
------------------------------------
அழகான கனவுகளை கண்களில் அள்ளி வருகிறாய்
நிலா பொழியும் வேளையொன்றில்
புன்னகை பேரொழியாய் நிறைகிறாய்
மழைக்கால குளிர் போல் மனதோடு ஒடடிக்கொள்ளும்
உன்பிரியங்களை
பனிக்கால போர்வையாய் என்னையே சுற்றிக்கொள்ளும்
நேசங்களை
எனக்கெனவே செய்கிறாய்
அன்பே நீபோன பின்னும் என்னை சுற்றும்
உன் ஞாபகங்கள்
அதில் அதில் சிக்கிக்கொள்கிறேன்
உன் அடுத்த வரவுக்காய் காத்திருப்பதை
காற்று உனக்கு வந்து சொல்லும் போது
உன் அழகில் தொலைந்து போயிருப்பேன்.
வேலணையூர்-தாஸ்
இலங்கை
---------------------------------------
தூண்டில் போட்டிழுக்கும்
உன் அழகுக் குவியலின்
அமிழ்ந்துவிடுகின்றேன் நான்..
பனிக்குடம் சுமந்து நிற்கும்
பச்சைப் புல்வெளிகளில்
நடக்க மனமின்றி
நனைகின்ற அழகில் நான்..
வர்ணம் குழைத்த
வாசனைப் புஸ்பங்களை
வருடத் துடிக்கும்
விரல்களை கட்டிவைத்து
தவமியற்றுகிறேன் நான்..
அருவியாய் கொட்டும்
கவிதைகள் பகர்ந்திட
காதுகள் முளைத்த
தென்றலை அழைத்து
கானமிசைக்கின்றேன் நான்..
மலைகள் நதிகள்
மகா சமுத்திரங்கள் என்று
பரந்த உன் அழகில்
பட்சியாய் பறக்கின்ற
காதல் நெஞ்சோடு
தொலைகின்றேன் நான்..
அம்பலவன்புவனேந்திரன்..
-------------------------------------------
வளைந்த உடலும் வடிவொடு நெஞ்சில்
அலைந்து ஆடும் அழகிய மயில்போல்
குலைந்த மேனி குறுகிய முனைகள்
கலைந்த வலையோ கருங்குழல் ஆக
அழைந்த விரல்கள் அதனிடை மின்னும்
விளைந்த மீனோ விழிகளின் வடிவாய்
எழுந்தே ஆடும் அலைகளில் நாமும்
பொழுதோர் மாலை பயணம் கொண்டோம்
இருகை நீட்டி இயல்புற ஆடும்
வரு நீரலையில் வீச்சுறத் தெளிக்கும்
சிறு தூறல்கள் சேரவுன் மடியில்
இருந்தேன் அழகில் எனைநான் மறந்தேன்
பொன்னிற வானம் புதிதோ ரின்பம்
தன்னை மறந்து தனியே நானும்
நின்னுடை மேனி நெளிந்துஆடப்
பின்னலில் தோற்றும் பெருஞ்சுகம் பெற்றேன்
மின்னலில் வானம் மிளிரும் நிலையில்
அன்னமென் றாடும் அலைநீர்க் கரையில்
பொன்னெனும் கூடல் புதுமை படகே
உன்சுகம் தன்னில் தொலைவேனோ நான்
(ஒரு வித்தியாசத்துக்காக படகை முன்னிறுத்தி கவிதை எழுதினேன்)
கிரிகாசன்
---------------------------------------------
கலில் சிப்ரானை படித்தமையால்
அழகின் உடை அழகின்மையால்
களவாடப்பட்டதை அறிந்தமையால்
உண்மை அழகை ஆராய்ந்து தேடியபடி
உயிர் பிழைக்க மூழ்கி மூழ்கி எழுகின்ற
கலங்கரை விளக்கை தேடும்
கலம் போல்..
கலமோ கரையோ விளக்கோ
வேறுவழியின்றி
ஈடுஇணையற்ற சாந்தமான தெய்வீகமான
ஒப்பனையற்றதாய் தாய்மை மிளிரும்
அழகே அழகு
உன்னிடம்.
அன்புடன்
ந.அன்புமொழி
சென்னை.
----------------------------------------
எதிர்பார்ப்புக் கிளையிலேறி
ஏமாற்றக்கனி பறித்தவன்..
கானலிலே வலைவீசி
கவலைமீனைப் பிடித்தவன்..
கற்றறிவோ பெற்றறிவோ ஏதுமின்றிக்
கவிபாடத் துணிந்தவன்..
தரையினிலே படகை ஓட்டித்
தலைகுனிந்து நின்றவன்..
பெண்ணே,
வேறல்ல நான்-
உன்னழகில்
என்னைத் தொலைத்தவன்தான்...!
-செண்பக ஜெகதீசன்...
நினைவில் உனை நிறுத்தி
நிஜத்தைத் தொலைத்தவன்..
கனவினிலும் காணவேண்டிக்
காத்திருந்து
கனவும் தூக்கமும்
சேர்த்தே தொலைத்தவன்..
வாழ்க்கைப் படகென
வருவாய் எனப்பார்தது
வாழ்க்கையைத் தொலைத்தவன்..
வேறு யாருமல்ல நான்,
உன் அழகில் தொலையும் நான்தான்...!
-செண்பக ஜெகதீசன்...
-----------------------------------
இயற்கையாய்
எனக்குள் எப்படி பரப்பினாய்
பார்த்தவுடன் பற்றிக்கொல்லும் தீயை?
அழகான அவஸ்த்தை
நீ தந்ததால் நினைத்துப்பார்க்கிறேன்.
என் வாலிபம் முழுவதும் உன்னை பார்த்தபின்
வைக்கோல்போராய்
கண்களால் மூட்டப்பட்டு
இதயம் வரை எரிகிறது.
அழகே உன் மௌனத்தைவிட
சூனியம் மகத்தானது
சாவதானால் கூட ஒருமுறைதான் சாத்தியம்,
இப்போது இது வாழ்க்கைமுழுக்க வதை
இதுதான் இன்றைய சத்தியம்.
உனக்கென்ன எழிலால் மிழிர்ந்து தினம்
பூமிக்கு புனிதம் சேர்க்கிறாய்
உன்னால் ஆலிசப்பட்டுப்போனது
என் ஆயுழ்தான்.
ரோஷான் ஏ.ஜிப்ரி
இறக்காமம்,இலங்கை.
-----------------------------------
நீல ஆடை போர்த்தி வரும்
வானத்தின் அழகில் தொலைந்து
விடுறேன்.
கார்முகிலாள் கொண்டு
வரும் கரு முகிலிலுள்ளும்
தொலைந்து விடுகிறேன்.
சுட்டெரிக்கும்
சூரியனின்
அழகை ரசிக்கையிலும்
தொலைந்து விடுகிறேன்.
அந்த நீலக்கடலின்
அலைகள் தவழ்கையிலும்
தொலைந்து விடுகிறேன்.
பொட்டு,பொட்டாய்
விண்மீன்கள் போடும்
கோலத்தின் அழகை
ரசிக்கையிலும் தொலைந்து
விடுகிறேன்.
மொத்தத்தில் அமாவாசை
இருள் கிளித்து தமிழர் நம்
வாழ்வு பௌர்ணமி ஆகும்
போது இயற்கையே உன்னிடம்
முழுவதுமாய் தொலைந்துவிடுவேன்.
ஆக்கம்.உன் அழகில் தொலையும் நான்..
நீல ஆடை போர்த்தி வரும்
வானத்தின் அழகில் தொலைந்து
விடுறேன்.
கார்முகிலாள் கொண்டு
வரும் கரு முகிலிலுள்ளும்
தொலைந்து விடுகிறேன்.
சுட்டெரிக்கும்
சூரியனின்
அழகை ரசிக்கையிலும்
தொலைந்து விடுகிறேன்.
அந்த நீலக்கடலின்
அலைகள் தவழ்கையிலும்
தொலைந்து விடுகிறேன்.
பொட்டு,பொட்டாய்
விண்மீன்கள் போடும்
கோலத்தின் அழகை
ரசிக்கையிலும் தொலைந்து
விடுகிறேன்.
மொத்தத்தில் அமாவாசை
இருள் கிளித்து தமிழர் நம்
வாழ்வு பௌர்ணமி ஆகும்
போது இயற்கையே உன்னிடம்
முழுவதுமாய் தொலைந்துவிடுவேன்.
ஆக்கம்..யாயினி
-----------------------------------
உன் தோற்றத்தில்
விலகி நின்றேன்
உன் மொழியில்
சுருங்கிப்போனேன்
உன் அறிவில்
புதைந்த நானோ
உன் செயலில்
நிமிர்ந்து நின்றேன்
முனைவர் ப.குணசுந்தரி தர்மலிங்கம்
வால்பாறை
-----------------------------------------
வாழ்க்கைப் பயணம் தொடங்கிட
உன்னை எதிர்பார்த்து நான்..
வாழ்க்கை ஆற்றைக் கடந்திட
ஓடத்துடன்
உனக்காகக் காத்திருக்கும் நான்..
நீ வரவில்லையெனிலும் வருவாயென
நம்பிக்கை ஓடத்தில்-
உன் அழகில் தொலையும் நான்...!
-செண்பக ஜெகதீசன்...
மழலைப் பேச்சில் மயங்கிவிட்டேன்
மனதை நானும் இழந்துவிட்டேன்
குழந்தாய்! நீயோர் கொள்ளையனே
கொள்ளை அடிப்பதோ இதயங்களை!
பழமை புதுமை இணைந்திருக்கும்
பாசப் புதையல் நீயன்றோ
அழகின் அழகாய் நீயிருக்க
அதிலே தொலைந்தால் சுகமன்றோ!
இப்னு ஹம்துன்
கரைகட்டிய கயிறருந்து தரையிழந்து
ஆழ்ஆழியிலே அளவிலா காற்றினால்
தொலைந்த ஓடம் போலே
கூருகட்டிய மனக் கயிறருந்து
மனமிழந்து முதல் பார்வையிலே
உன்னழகில் தொலையும் நான்
சக்தி
அதோ மேகமாய் வரைந்து கிடந்த நீ கடந்து செல்கிறாய்
இன்னும் வரையப்படாத கோடுகளை
பொய் பிழைத்தால் சரியாகிவிடும்
எனக்குள்ளும் உனக்குள்ளும் முளைக்காது
தவிக்கும் உணர்வு
நான் என்னைக் கடக்கயில் உனக்குள்
விழுந்து விடுகிறேன்.
என் எல்லாப் பிழைகளுமே
உன் இதழ் ருசிகளைத்தான் ஞாபகப்
படுத்துகிறது
நீ உன்னைக்கடந்து போவதாய்க் கூறு நீ
எனக்குள் விழுந்து விடுவாய்
நிலவு வீசுமொலியில் விழுமுந்தன் நினைவுகள்
என் ஞாபகத்தில் நின்று சுவாசிக்கிறது..
விதைக்குளடைபட்டு முளைக்கிறேன் நான் மேலும் சுவாசிக்க முடியாமல்
உன்னைத் தேடிப் பறக்கிறது தானாய் என்மூச்சுக் கலங்களின் தேடல்கள்.
உன்னைத் தேடும் ஞாபகங்கள் என்னைத் தொலைத்த தொலைவுகளாய்;
தூரமாய் என் கனவுகளில் கைதாகிறது....
உன் வெறுப்பின் காரணங்கள் மேலேறி நடக்கிறது...
உன்னை விரும்பும் விருப்புக்கள்...
வீணாய் களிக்கும் காலங்கள் விதியில் பாவங்களாய் சேர்க்கப் படுவதுபோலே
பாரமாகிறது உன்னை நோக்கும் நேரங்கள் குற்ற உணர்வுகளுடன்
அதோ நீ மெகமாய் மாறிப் போனாய்
உன் மெல்லிய ஜீவித சலனத்தில் நானும் அடைபட்டு போகிறேன்
இது என் இரண்டாம் ஜனனமே நான் உன்னை நோக்கி நிலவாகித் தாவுவதால்...
-மௌனஞானி பார்த்தீபன்
நினைக்கவும் விரும்பவில்லை
நினைத்ததை மறக்கவும் முடியவில்லை
முடியாததொரு காரியம் எதுவும் இல்லை
முடிந்துபோன விஷயத்தை நினைப்பததில் அர்த்தமும் இல்லை
இனி எனக்கென்று எதுவும் இல்லை
இருப்பவர்கள் கூட கண்ணுக்கு தெரிவதில்லை
தொலைந்தது ஏனோ ஒன்றுதான் ஆனால்
இழந்தவை மட்டும் பல நூறுகளாய்
அனைத்தும் இழந்ததாய் ஆனால்
அமைதி இழந்தேன் என்றுசொல்வதற்கு இல்லை
இவை அனைத்தும் இழந்ததனால்-என்னுள்
எனக்கு தெரியாமல் தொற்றிக்கொண்டதுதான் -இந்த அமைதி
-மாவீஆ