skeleton
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-04-30 00:00

மாறாத வடுக்கள்!

மனிதனுக்கு மனிதன் செய்யும்
மாறாத துரோகமும்,
மனிதநேயம் இழந்து
மற்றவர்மேல் கொள்ளும் விரோதமும்,
மண்ணில் அவன் வாழும்வரை
மாறாத வடுக்களாய் ‍ அவன்
மனதில் பதிந்து தெரிகிறது!

தன்னைப்போல் பிறரையும்
தன்மையோடு நேசிக்கும்
தயாளகுணம் ஒன்றேதான்
வடுக்களற்ற மனங்களை
வாழ‌ச்செய்யும் மனிதனிடம்!

‍கிரிஜா மணாளன்
திருச்சி (தமிழ்நாடு)

- கிரிஜா மணாளன், 2012-04-30
மாறாத வடுக்கள்...

அழுது கண்கள் சிவந்து
அந்திவானில் மறையும்
ஆதவன் ஒளியில்
தெரிவதெல்லாம்
திறந்தவாய் மூடாத
மண்டை ஓடுகள்..

சண்டை தீர்ந்ததாம்..
மாறவில்லை வடுக்கள்..
மாறும் சரித்திரம்
வேறுவிதமாய்..
அன்று
சாட்சியாயிருந்த விண்ணும் மண்ணும்
சாட்சியாகும் மீண்டும்-
வெற்றி வரலாறாய்...!

-செண்பக ஜெகதீசன்...

- செண்பக ஜெகதீசன், 2012-04-30
மாறாத‌ வ‌டுக்க‌ள்
-----------------------------
மூளை இருந்த பெட்டிக்குள்ளும்
மூளையின் க‌ன‌வு இருக்கும்.
மூளை முடிந்த‌ பின்னும்
க‌ன‌வு எரிகின்ற‌து.

.காசுக‌ள் ஒலிக்கும்
வேத‌ங்க‌ள் கேட்குது.
காத‌லிக்கு பாடுகின்ற‌
"கொல‌வெரியும்" கேட்குது.

எண்ணிமுடிந்த ஓட்டுகளின்
பெட்டிகள் இங்கே சிரிக்குது.
பெரும்பான்மையாவ‌ர்க‌ளின்
சிறுபான்மையான‌ சிந்த‌னைக்குப்
பெய‌ர் இங்கே ஜ‌ன‌நாய‌க‌ம்.

செர்ரிப்ப‌ழ‌ம் விழுங்கும்
அந்திவானம்
விடியல் விதை ஊன்றுமா?

புதிய‌ பாதைக்கு இனி
எங்கே மைல் க‌ல் இடுவது?
இன்னும் ஒரு க‌பால‌புர‌ம் நோக்கி
அந்த‌ அக்கினிக‌ணைக‌ள்
சீறிக்கிள‌ம்ப வேண்டாம்.

வெண்புகைச்சுவடுகளில் அது
அமைதிப்புறாவாய் இருக்க‌ட்டும்.

புதுயுகம் சுடர்கின்ற
ஹிரோஷிமா நாகசாகி
ஃபீனிக்ஸ் பறவைகளாகி
வெகு காலம் ஆகிவிட்டது.
இன்னும் ஏன்
இந்த சுடுகாட்டு ஓவியம்?

ருத்ரா

- ருத்ரா, 2012-05-12
மாறாத வடுக்கள்
----------------------------

சமுத்திரத்தை போல்
விரிந்து இருக்கிறது வடுக்கள்
இவை கயங்களில்லை,ரணங்கள்.

மீட்சியற்றதோர் அதிகாரத்தின் கீழ்
சுவடுகள் தெரியும்
வாழ்வின் எச்சங்கள் .

அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல
எதுவுமில்லை ........,
இந்த பிச்சைப்பாத்திரங்களை தவிர !

அவர்களின் மேம்பாட்டுக்காக
உள்ளுக்குள் பிரார்த்திக்க மட்டும் முடிகிறது
யாருக்கும் தெரியாதபடி .

ரோஷான் ஏ.ஜிப்ரி.
டோஹா கட்டார்

- ரோஷான் ஏ.ஜிப்ரி., 2012-07-03
மாறாத வடுக்களை !!!
-------------------------------

உள்ளத்து தேங்கி கிடக்கும்
துன்பச் சுவடுகளை
குப்பைகளென துப்புரவு செய்து
சிந்தனைகளின்று அகற்றி விட்டு
மகிழ்ச்சி விளக்கதை ஏற்றிய போதும்
நையாண்டியாய் வந்து விழும்
ஒரு சுடுசொல் - ஏற்படுத்தி விடுமே
உள்ளமதில் -
மாறாத வடுக்களை !!!

-பி.தமிழ்முகில்

- பி.தமிழ்முகில்
மாறாத வடுக்கள்!

கடல்சேர கரையிடையே போகும்
நீள் வளை ஆறுபோல,
இலக்கடைய எங்கால்கள் போகும்
கரடு முரடு பாதைமேல,
வீழ்ந்தெழுந்து விரயு மாறுகூட
தடம்விட்டுச் செல்லுங் கரையோட,
ஆழ்அகல அறிவு மனிதன்
சுவடுவிடா மறைத்தல் தகுமோ?
ஓடியபாதை அறிகுறியோட ஆறுபோக,
பயனந்தரும் மாறாவடுவோட நான்கூட.!

சக்தி

- சக்தி , 2013-01-15
மாறாத வடுக்கள்

பெருவியாதியோ,
பெரிய விபத்தோ
ஏதும் நிகழவில்லை...
கொலையோ,
தற்கொலையோ,
கொஞ்சமும் எதற்கும்
வாய்ப்பில்லை..
காயங்களை உண்டாக்கிவிட்டு
எப்போதும்
ஆறாத ரணத்தை
தந்திடும்
மாறாத வடுக்கள்போல
எந்த மரணமும் உறுத்துவதில்லை
இதயத்தை!

- வி. சிவசங்கர், கள்ளக்குறிச்சி

- வி. சிவசங்கர், கள்ளக்குறிச்சி, 2013-12-26
மாறாத வடுக்கள்

பாறையின் அடையாளமற்று
நெளியும் நுங்கின் மென்மை
அனிச்சமெனக் கிடக்கும்,
திவலை மிதித்து நடக்கிறது
வன்சொல்லின் சரக்கொன்று...

மழலையின் ஒழுகும் உமிழ்நீரில்
நனைய மனமொன்று விலகுகிறது..
அலட்சியப்படுத்தி...

விரிந்த அலகில்
ஊட்டும் அன்பில்
நிறையும் தாய்மையால்,
உதாசீனப்படுத்துகிறது
குரூரம்..

தொங்கும் கூடுகளில்
தங்கும் முறிந்த கிளையின் ஓரம்
துளிர்க்கிறது
மௌனத்துள்
துக்கிப்பது தெரியாமல்
தெரியும்
வாழ்வின் அரூப வடுக்கள்!

- கவிஞர் அமீர்ஜான்
திருநின்றவூர், (தமிழ்நாடு)

- கவிஞர் அமீர்ஜான், 2013-12-26
மாறாத வடுக்கள்

மேகமிடிக்கவில்லை மின்னல்வந்துசேர்ந்ததில்லை
மண்ணின்மீது இடிவிழுந்ததேன்
தாகம் எடுக்கவில்லை தண்ணீரும் கேட்கவில்லை
தவிக்க உயிர் உடல்பிரித்ததேன்
நாகம் கடிக்கவில்லை நஞ்சுணவும் கொள்ளவில்லை
நீலமென மெய் கிடந்ததேன்
மோகம் பிடித்து நிலம் கொள்ளவென கொன்றுஇனம்
கோரங்கள் செய்தழித்ததேன்

சாவை விரும்பவில்லை சற்றுமுடல் சோரவில்லை
சீரழித்து கொன்றுவிட்டதேன்
நோவை எடுத்தெரிய நொந்து மனம் கதறியழ
நீண்டகுழல் கொண்டு சுட்டதேன்
பாவை மணமுடித்துப் பார்க்கவில்லை பாதம் அம்மி
பட்டதில்லை பார்த்திருக்க முன்
பூவை உடல் துடிக்க போதைகொண்டு இம்சைசெய்து
பூமியிலே கொன்று போட்டதேன்

ஆவையிழந்த கன்று அம்மாஎன் றழக்குழந்தை
அஞ்சியழ குரலிழந்ததேன்
காவைக் கொடுத்தும் அன்னை கண்ணெதிரே பட்டதுயர்
கோலமதும் மேதினியில் ஏன்
தேவை யிதற்குஒரு தீர்வுதனும் இல்லையெனில்
தீயெரிந்த பூமி யாகிடும்
மா வையம் மீது இவை மாறா வடுக்களென
மாறுதுவா மாற்றம்செய்குவோம்

-கிரிகாசன்

- கிரிகாசன், 2013-12-26
மாறாத வடுக்கள்

குழந்தை வயதில் செய்த
குறும்பும்,
பள்ளி வயதில் கைகொடுத்த
நட்பும்,
கல்லூரியில் கனிந்த
காதலும்,
ஆசிரியரின் கண்டிப்பும்,
பெற்றோர்களின் அரவணைப்பும்,
வாழ்வில் நான் அடைந்த
சிறு சிறு தோல்விகளும்,
என் நெஞ்சத்தில் என்றும்
'மாறாத வடுக்களாய்!

- சுபத்ரா, சேலம்
(தமிழ்நாடு)

- சுபத்ரா, சேலம், 2013-12-26
மாறாத வடுக்கள்!

பென்சில்முனை கூர்மை இல்லை..
எழுதுகோளில் மையும் இல்லை..
வாளின் முனையில் ரத்த ஈரம் இல்லை..
பிறர் மகிழ; என் ஜீவன் அறுபடும் வார்த்தை மட்டில்,
ஆண்டாண்டு காலமாய்; ஆனந்த வடுக்கள்
மன மேகத்தை வெட்டும் மின்னல்கள் போல்
இடைவெளி விடாமல் !!!

சுக.வினோத்குமார்
சேலம்.

- சுக.வினோத்குமார், 2013-12-26
மாறாத வடுக்கள்

உள்ளத்து தேங்கி கிடக்கும்
துன்பச் சுவடுகளை
குப்பைகளென துப்புரவு செய்து
சிந்தனைகளின்று அகற்றி விட்டு
மகிழ்ச்சி விளக்கதை ஏற்றிய போதும்
நையாண்டியாய் வந்து விழும்
ஒரு சுடுசொல் - ஏற்படுத்தி விடுமே
உள்ளமதில் -
மாறாத வடுக்களை !!!

பி.தமிழ் முகில்

- பி.தமிழ் முகில், 2013-12-26
மறக்க நினைப்பதை
மறக்க முடியவில்லை
நினைக்க நினைப்பதை
நினனக்க முடியவில்லை
இது எதனால்
வந்த குழப்பம்??
தவியாய் தவிக்கிறது!!
இன்றைய ஜீவராசிகள்...

-புவிதா சுவீடன்

- புவிதா சுவீடன், 2013-12-26

Share with others