flowers
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-03-10 00:00

மீண்டும் துளிர்க்கும் மரங்கள்...

மரணமல்ல மரத்துக்கு
இலையுதிர் காலம்..
அது
அழகு அடைகாக்கும்
அஞ்ஞாதவாச காலம்..
மாறுதல் என்பது
மன்னுயிர்கெல்லாம்
மாறாத விதி..
ஆம்,
மாறுது காலம்,
மாற்றம் மரத்திலும்தான்-
அடைகாத்த அழகு
அரங்கேறுகிறது
துளிர்க்கும் இலையாய்,
தொடரும் பூவாய்..
மீண்டும் துளிர்த்தன மரங்கள்-
இயற்கையின் முகவரியாய்...!

-செண்பக ஜெகதீசன்...

- செண்பக ஜெகதீசன், 2012-03-10
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்

பனி தூங்கும் மேலை நாட்டில்
முக்காடணிந்த மாதர் முன்னே
மரங்கள் போடுது மொட்டை

வெய்யில் கால வெப்பம் கிடந்து
அரை ஆடையும் அதிகமென
மாதர் துளிர் ஆடை
அணியும் வேளை
மரங்கள் போடுது சட்டை

மொட்டைக்கும் சட்டைக்கும் இடையே
இள வேணில் முன் தூங்கி பின்னெள
மீண்டும் மரங்கள் துளிர்க்கிறது
வாழ்ந்து பார்க்க ஆசைதான்
வயசு எனக்கு போதாது
மீண்டும் துளிர்க்கும்
மரம் அல்ல நான்
இயற்கை என்றுமே இனிய விருது.

வல்வை சுஜேன்

- வல்வை சுஜேன், 2012-03-14
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்

பனிக் காலம் கொடுத்தது
கதிரவனுக்கு நீண்ட ஓய்வு....
ஓய்வெடுத்து களைத்துப் போனவன்
முகம் காட்டுகிறான் - மேகத்
திரையினின்று!!!
அவனுக்கு உற்சாகமாய்
மலர்ந்த முகங்களுடன்
வரவேற்பளிக்கின்றன -
மரங்கள் !!!
புன்னகையை சூடிக் கொண்டு......
பூமித் தாயும் தன்மையை சுமந்து
மலர்களால் அர்ச்சிக்கப் பட்டு
பூரித்து நிற்கிறாள் !!!
மீண்டும் துளிர்த்த மரங்கள்
அளித்தன - மண்ணிற்கு
புன்னகையையும் - மனதிற்கு
மகிழ்ச்சியையும்!!!

- பி.தமிழ் முகில்

- பி.தமிழ் முகில், 2012-03-21
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்

அவன் பிரிந்து சென்ற பின்
ஒலிக்கும் போதெல்லாம்
க‌ண்ணீர் தெறித்து தெறித்து
உன் கொலுசுகள்
நனைந்து போயினவே என்று
கழற்றி காயவைக்க‌
இப்படி தொங்க விட்டாயோ!

அவன் வரப்போகிறான்
என்றதும்
மரத்துக்கிடந்த கிளைகள் கூட‌
வெள்ளையாய் சிரித்தத்தில்
உன் இருட்டெல்ல்லாம்
சலவை ஆகி விட்டது.

அந்த பூங்கொத்துகள்
ஒதுங்கிக்கொண்டன...இனி
உன் முறுவல் மட்டுமே
இந்த வானம் எல்லாம்!

முல்லையாய் தொடுக்க‌
மின்ன‌ல்
நார் எடுத்து த‌ருவ‌த‌ற்குள்
க்ளுக் என்று சிரித்தாய்.
ஆயிர‌ம் காமிராக்க‌ள்
"க்ளிக்கின‌"
பல்லாயிரம்
"களித்தொகை"ப்பாடல்களை!

ருத்ரா

- ருத்ரா, 2012-03-29
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்

போவன முகிலும் இருளும் துயிலும்
புலரும் பொழுதினிலே
ஆவன ஒளியும் விழியும் மலரும்
அழகும் காலையிலே
தாவின அணிலும் கிளியும் கனிகள்
தாங்கிய மரங்களிலே
மேவின மகிழ்வும் இனிமை உண்ர்வும்
மீண்டும் வாழ்வினிலே

தேய்வது பிறையும் அறமும் நீதி
திரிவது மெய்மையென
காய்வது வெயிலில் நனைந்தோர் பொருளும்
கண்களில் நீரெனவும்
ஓய்வது இலதாய் உயிரும் உடலும்
ஒன்றாய் துடித்திருந்தோம்
பாய்வது பகையும் நதியும் குருதி
பலரின் உயிர்களென

ஏனது என்றே எண்ணிச் சோர்ந்து
இருந்தோர் வாழ்வினிலே
போனது பொய்யும் திமிரும் கருமை
புன்மை செயலெனவே
வானது மீதில் தெரிதே ஒளியும்
வருதே வசந்தமென
காணுது மீண்டும் துளிர்கள் வாழ்வுக்
கேங்கும் மரங்களிலே

கிரிகாசன்

- கிரிகாசன், 2012-03-29

Share with others