விட்டுச் சென்றது 2011
நம்மிடையே
விவரிக்க இயலாத வேதனைகளை!
இட்டுச்சென்றது நம் தோள்களில்,
எண்ணற்ற சுமைகளைத்தான்!
அரசியலிலும் சமூகத்திலும்,
அளவற்ற பிரச்சினைகள்,
ப்ழகிவிட்ட நாமோ அவற்றை,
பார்த்தும் ஊமையாகி,
தலைமேல் ஏற்றுக்கொண்டோம்,
தளிர்க்கும் 'மாறுதலை' எதிர்நோக்கி!
- கிரிஜா மணாளன்
திருச்சி (தமிழ்நாடு)
விட்டு சென்ற உன் நினைவை மட்டும்
உயிர் காற்றாய் சுவாசிக்கிறேன்
தொட்டு பேசும் அலைகரைப்போல்
எனக்குள் நானே தினம் பேசுகிறேன்
விழியால்பேசிய வெண்மதியே,
கசங்கிய காகிதமாய் எனை எறிந்தாய்.
முகிலுக்குள் முழுமதியாய் இன்று நீ மறைந்தாய்.
நம் கால்பட்ட இடமெல்லாம்,
கானலாய் தெரிகிறது-உன்
விரல் பற்றிய கரம் இன்று,
நெருப்பின்றி எரிகிறது.
எடுத்துக்கொள் உயிரை என்று நீ சொல்லி விட்டு
எங்கேயடி பறந்தாய்,எனை
கண்ணீரில் தள்ளி விட்டு.
மூச்சிமட்டும் இருக்கிறது,உயிர் என்னை வெறுக்கிறது,
உறக்கம் வர மறுக்கிறது.
உள்ளம் உன்னை கான துடிக்கிறது.
நீ விட்டு சென்ற சுவடு
நானாக...........
என் வாழ்நாள் போனதடி
உன்னால் வீணாக.................
கு.தமயந்தி,
கள்ளக்குறிச்சி.
வந்த வழியில்
வசந்தங்களும் உண்டு..
வனங்களை அழித்த புகைகளுக்கும்,
வடுவாய்த் தங்கிடும் ரணங்களுக்கும்
குறைவில்லை-
இருட்டின் தாண்டவம்..
இலவச ஏய்ப்புக்கள்..
இரட்டை வேடங்கள்..
இணையாத கூட்டணிகள்-
இரையாய்ப் பதவி வேண்டி..
அரசியல் அநாகரீகங்கள்..
ஆட்சி மாற்றங்கள்..
காட்சி மாற்றங்கள்..
கச்சேரி மோதல்கள்..
கண்டோம் பலவுமாய்..
இனியும்,
2011 விட்டுச்சென்ற
விபரீதங்கள் மட்டும்
வேண்டாமே மீண்டும்...!
-செண்பக ஜெகதீசன்...
எங்கள் வாழ்வில் காலம் எழுதிய
சோக கவியே
தங்கிய நிலங்கள் தன்னை இழந்து
தந்தையை அன்னையை போரில் பிரிந்து
சிந்தை நொந்தகதியாய் தெருவில் அலைந்து
நித்தமும் பெரும்இடர் துயரில் உலைந்து
எத்தனை இன்னல்கள் எமக்கழித்தாய் நீ
வரும் வழி யாவிலும்ஓடிய குருதி வருந்திய தமிழர் கண்ணீர் கழுவி நிலத்தினில் ஆறாய் ஓடியகாலம் மனங்களில் வடுவாய் விட்டு நீசென்றாய்
கால நதியே வளம்பல தந்தாய்
இம்முறை மட்டும் துயரினை தந்தாய்
சென்று வருக 2011 ன்றே போரினில் தளர்தோம் ஆயினும் துணிவுடன் எழுவோம்
கால நதியில் மீண்டும் தளிர்ப்போம்.
வேலணையூர் -தாஸ்,இலங்கை
வருவதும் போவதும்
உங்களின் வாடிக்கை.
எதிர் பார்ப்பும் ஏமாற்றமும்
எங்களின் வழக்கம்.
உலக அழிவின்
உன்னத ஆண்டாகி
உயிர்ப் பலிகளை
மேம்பாடாக்கி....
மனித மனங்களை
ரணங்களாக்கி ரம்மியம்
கலைத்த மேதகையாய்
வேற்றுமைத் தானியங்களை
மனங்களில் தூவி
குரோதங்களை பாரில்
அறுவடையாக்கி செல்லும்
உந்தனுக்கு அள்ளித்தருவதற்கு
இனி ஈறானில் எஞ்சிக்கிடக்கு...
தயாநிதி..பரிஸ்
விட்டுச் சென்றதே என்ற
வேதனை ஒருபுறம்,
அது நம்மை
'விட்டுவைத்தாவது' சென்றதே
என்ற
மகிழ்ச்சி மறுபுறம்!
நம்மை
‘விட்டுவைக்கக் கூடாது!’ என்று
ஒரு பெரும் பொறுப்பை
அரசியல்வாதிகளிடமும்
விலைவாசியிடமும்,
விட்டுச் சென்ற,
2011 ஐ
விரட்டியடிப்போம் இந்த
உலகத்தை விட்டே!
- வீ. உதயகுமாரன், வீரன் வயல்
(தமிழ்நாடு)
2012 என்றில்லை...
எல்லா ஆண்டுகளும்
நம்முள் ஏதோ ஓர்
புதிய உந்து சக்தியை
ஏற்படுத்தத்தான் செய்கின்றன !!!
நாம் கடந்து வந்த
ஆண்டுகளில் - வசந்தங்களும்
புயலும் மாறி மாறி
வந்து கொண்டே தான் இருந்தன...
இனியும் அவ்வாறே இருக்கும்..
ஏனெனில்....இன்பமும் துன்பமும்
கலந்ததன்றோ வாழ்க்கை ????
2011 நம்முள் விட்டுச் சென்ற
இன்பங்களை - என்றும் அழியா
நினைவுகளில் கொள்வோம் !!!
துன்பங்களை தோல்விகளை
பாடங்களாய் அனுபவங்களாய்
மனதில் கொள்வோம் !!!
வரவேற்போம் எதிர் வரும்
புத்தாண்டை புன்னகையோடு !!!
புதிய நம்பிக்கையோடு !!!
நம்புவோம் - புத்தாண்டு
கொண்டு வரும்
அனைவரது வாழ்விலும்
வசந்தங்கள் பலவென்று !!!
வேண்டுவோம் - புத்தாண்டு
அனைவரது உள்ளத்து நீண்டநாள்
கனவுகள் ஆசைகளை
நிறைவேற்ற வேண்டுமென்று !!!
பி.தமிழ்முகில், USA
விட்டு சென்றது என்ன
என்று
அன்று தெரிவதை
இன்று உணர்ந்தால்
மரணமும் சுகம் !
-அரவிந்த் சந்திரா
விட்டுச் சென்றவை
எவை என்று
காலம் ஒரு நாள்
சீர் தூக்கிப் பார்க்கும்..
நல்லதாய் நாலு கவிதைகள்..
பிரியமாய் நாலு வார்த்தைகள்..
நட்டு வைத்த நாலு செடிகள்..
நேசம் சொல்ல நாலு நண்பர்கள்..
விட்டுச் செல்ல இயலாதபடி
வாசம் பூசி நிற்கும் உலகம்!
ரிஷபன்
வரலாற்றுப் பாதையில்
தடம் பதித்தது 2011!
ஊழல் ஒழிப்பில்,
உண்ணாவிரதங்கள்,
ஊர்வலங்கள்,
ஆட்சி மாற்றங்கள்,
அண்ணாகாசரேக்கள்,
அண்டைமாநிலங்களில்
அணைப்பிரச்சினையால்,
அய்யப்ப பக்தர்கள்
அவதியுடன்…
அகதிகளாய்,
அரசியல் சகதிகளால்!
‘இறையாண்மை’மேல்தான்
எத்தனை அழுக்குகள்!
சொல்லமுடியாத
சோகங்களை
உடன் எடுத்துச் செல்லட்டூம்
2011!
நிம்மதியை மட்டும்
வரும் ஆண்டிடம்
கொடுத்துச் செல்லட்டும்!
-முத்துவிஜயன், கல்பாக்கம்
தமிழ் நாடு.
புதுப்புபெயர்களோடு
புதியஆண்டுகள் வருகின்றன ,
போகின்றன புதிதாய் எதையும்தராமலே
மனிதனைத்துவம்சம்செய்து
குருதிஅருவியில்க்குளித்து,களித்து
வெறுங்கையோடு எங்களைவிட்டு
போகிறது தானும் வெறுங்கையோடு...
சு.கருணாநிதி
‘சென்றதினி மீளாது’ என்று சொல்லி
சென்றவரின் கவித்துவம்போல்,
மழைக்குப் பின்னும் தூறும்
தூவானம்போல்,
விடியலுக்குப் பின்னும் மெல்லத்தொடரும்
நிலவினைப்போல்,
முடிந்தபின்னும் எனக்குள் நீள்கிறது
சென்ற ஆண்டின் வசந்தச் சுவடுகள்…
காயங்களும்
காவியங்களும்
கலந்தே பயணித்த
கதம்ப ஆண்டு!
தடைகளும் விடைகளும்
தடமைத்துக் கொடுக்க,
மடைதிறந்த வெள்ளமாய்
மகிழ்ச்சி குடியேற,
சோர்ந்தபொழுதிலும்
தேர்ந்த நண்பர்கள்
துணையிருந்து துயர்துடைத்த,
சந்தர நினைவுகளை
நிரந்தரமாய் விட்டுச்செல்கிறது!
என்னோடு ஈராறு மாதங்கள்
இதமாய்க் குடியிருந்த இவ்வாண்டு!
விருப்பமின்றி விடைகொடுத்தாலும்
விரும்பி வரவேற்கக் காத்திருக்கிறேன்!
இவ்வாண்டின் தொப்புள்கொடி விலக்கி,
புதியாய் ஜனிக்கும்
புத்தாண்டுக் குழந்தைக்காய்!
நம்பிக்கையோடு...
திருமதி. செண்பக காசி (‘சுகா’)
சென்னை, தமிழ்நாடு
கூழுக்குமாசை மீசைக்குமாசை.
ஆடம்பர ஆசை!
மேன்மக்கள் வாழ்வை விரும்பினால்
அவர்களையும் விரும்பவேண்டும்
அப்போது தெரியுமா ?
அவர் ஏமாற்றுவது
அவர்போலானபின்
நாம் ஏமாற்றப்போவது ?
சம்பளமும் ஏற விலைகளும் ஏற
வீண்செலவாக பணஅச்சடிப்பு.
உண்மையை வெட்டுகிறேனென்று
வெட்டியதோ நிழலை.
மகிழ்ச்சி மகிழ்ந்தாட
பள்ளத்தின் பக்கவாட்டில் நிழல்.
இங்கு யாருமே ஏமாளிகளல்ல
உலகை அழிவை நோக்கி அழைத்துசெல்லும்
வெற்றியாளர்களாய் நாம்.
நாயாக வேடம் போட்டாகிவிட்டது
எதுவானாலும்
விட்டுச்சென்ற விட்டுச்செல்கிற விட்டுச்செல்லப்போகிற
அதனோடுதானே வாழ்ந்தாகவேண்டும்.
உண்மையின் மேன்மை உணராதவர்களாய்
நீதியின் அவசியம் அறியாதவர்களாய்
சமத்தின் அருமை புரியாதவர்களாய்.
ந.அன்புமொழி
சென்னை.
அந்த நாட்கள்
ஏராளம் எம்மை விட்டுச்சென்றன
நினைவுகள் மட்டும்
நிழலாடுகின்றது.........
ஆனால்
நாங்கள் விட்டுச் சென்றவற்றை
இன்று மீண்டும்
பெற்றுக்கொண்டிருக்கின்றோம்
எங்களை விட்டு சென்றவற்வற்றை
பெற்றுக் கொள்ளவல்லையே...........
சேனையூர் இரா.இரத்தினா
விட்டுச்சென்ற
உறவுகளின் நினைவுகள்..
நிகழ்வுகளின் படிமங்கள்..
கிழித்தெரியப்பட்ட நாட்களின்
கனநேர நிமிடங்கள்- என
நெஞ்சைச் சுடுவதாய் அமையும்
ஞாபங்களும்...
பேணி பார்த்து காத்து
வளர்த்த செடியில் பூத்த
அந்த ஒற்றை ரோஜா போல்
மலர்ந்து மகிழ்வித்த கனவுகளும்
நிறைந்து கிடந்தன
விட்டுச்சென்ற 2011ல்
-பாரதிமோகன்
புள்ளியாய் மறையும் வரை
அது கோடு தான்.
தூரிகைப்புல் காட்டில்
புதைந்த ஓவியம் தேடி
பயணம் நீள்கிறது.
பிய்ந்து கிடக்கும் இறக்கை போல்
அந்த நெடும்பாதை!
நளனுக்கும் தமயந்திக்கும்
தூது போய் போய்
இற்றுவிழுந்த
"ரவிவர்மா"வின் இறக்கை அது.
பார்வையை
பதுக்கி வைத்துக் கொண்டு
நீண்ட புருவத்தை மட்டும்
விட்டெறிந்த பெண் அவள்
பிக்காஸோவுக்கு.
2011ன்
அந்த முனையில் 2010ஐயும்
இந்த முனையில் 2012ஐயும்
ஒட்ட வைத்துக்கொள்வோம்.
காலம்
அறுத்துக்கொண்டு ஓடினாலும்
நாம் அதை
முடிச்சு போட்டுக்கொள்வோம்
நம் தொப்பூள்கொடியில்.
ருத்ரா