vidumurai
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-09-06 00:00

விடுமுறை நாளொன்றில்...

நீலக்கடலின்
நிறத்துடன் விரிப்புகள்
பலவாய்
நிலத்தில்போட்டு வரவேற்றாலும்,
வராது
வானமும் கடலும் மண்ணில்..
விடுமுறை நாளொன்றில்,
தானாய்வரும் கடலும்
தாங்காமல் மனிதன் கொடுமையை-
சுனாமியாக...!

-செண்பக ஜெகதீசன்...

- செண்பக ஜெகதீசன், 2011-09-06
விடுமுறை நாளொன்றில்...

வானவில் கம்பளம் விரித்து
கடற்கரை மணல் மீது காத்திருந்தேன்
நாம் அமர நிழல் வெளியில்
நட்டுவைத்த குடையின்
மடக்கிவைத்த உன் நினைவுகளோடு
விடுமுறை நாளொன்றில்
வானவெளியின் அடியில்..

தொட்டராயசுவாமி
http://www.thottarayaswamy.net/

- தொட்டராயசுவாமி, 2011-09-08
விடுமுறை நாளொன்றில்...

நீலவானிலேறும் கதிர் காணவில்லையா மதற்கு
நேர்ந்ததென்ன நாளிலின்று விடுமுறையாமோ?
ஓலம்போடும் அலைகள் இன்று அமைதியாக காணுதங்கே
ஓடவில்லை நாளுமின்று விடுமுறையாமோ
சீலமுள்ள ஞால மாந்தர் காணவில்லை மண்ணில் ஓடிச்
செல்லுங் கால்கள் கேட்டதென்ன விடுமுறையாமோ?
காலைப் பக்கமாக வைத்துஓடு நண்டுகூட இன்று
கரையில் காணவில்லை ஏது விடுமுறைநாளோ?
பாலரோடு பெண்டிர்காக்க பலமெடுத்த வீரர் வெற்றி
பார்க்கும் வேளை நாடுசேர்ந்து விடுமுறை என்றார்
ஆலமுண்ட தேகமாக அழியும் எங்கள் ஈழமண்ணின்
அவலம் கோரம் விட்டுசெல்லும் விடுமுறை எப்போ?

கிரிகாசன்

- கிரிகாசன், 2011-09-08
விடுமுறை நாளொன்றில்...

அம்மாக்களின்
அடுப்படி வேலை இரட்டிப்பாகும்!
குழந்தைகளின் கூச்சலால்
தெருக்கள் நிறைக்கும்!
ரிமோட்களின் கை மாறலால்
தொலைக்காட்சிபெட்டி விசும்பும்!
பிள்ளைகளின் சப்தமின்றி
பள்ளிகள் ஏங்கும்!
தந்தைகளின் விடுமுறைகளை
சுப நிகழ்சிகள் விழுங்கும்!
எப்பொழுதும் போல் இவர்களை
திங்கள்கள் திரும்பி அழைத்துகொள்ளும்!

தங்க ரமேஷ் .பாலி -

- paaliramesh@gmail.com, 2011-10-02
விடுமுறை நாளொன்றில்...

ஆகாயத்தையும்
அது தொடுகின்ற கடலையும்
நீல நிறமாய்ப் பார்த்து
நினைவு பூரித்திருக்க,
கடற்கறைப் படுக்கையில்,
கடல் அலையும் ஓய்வெடுத்து
பக்கத்தில் வந்து
பாயில் உறங்க வேண்டும்.

-சித. அருணாசலம்
சிஙகப்பூர்.

- -சித. அருணாசலம்
விடுமுறை நாளொன்றில்...

இயற்கையிலோர்

அற்புத நிகழ்வு -

அலைகடலும் செவ்வானமும்

மாலைப் பொழுதில்

ஓய்வாய் கைகோர்த்து

நடை பழகுகின்றனவே .......

வானவில்லுக்கும் இன்று

விடுமுறை நாளோ?

கடற்கரையில்

ஓய்வெடுக்க வந்துள்ளதே !!!

- பி.தமிழ் முகில்

- பி.தமிழ் முகில், 2011-12-12

Share with others