வயிற்றுக்கு நல்லதாய்
பப்பாளி..
வரும் ஜூரம் தடுத்திட
திராட்சை..
உடல்வெப்பம் தணித்திட
வாழைப்பழம்..
எலும்புக்கு ஏற்றதாய்
கொய்யா..
உடல் உறுதிக்கு
ஆப்பிள்..
அளவாய்க் கொழுப்பைக் குறைத்திட
அண்ணாசிப்பழம்..
அதுபோல் இரத்த
அழுத்தம் குறைத்திட
மாம்பழம்..
முடிந்தவரை தின்றுபார்,
மறந்திடலாம்
மருந்து என்பதையே...!
-செண்பக ஜெகதீசன்...
மணம்வீசும் கனிதூங்கும் மரங்கள்தோறும்
மகிழ்வோடு பறவைகள் கனியைத் தேடும்
குணம்கொண்ட மனிதரோ விலங்கைத்தேடி
கொன்றதைத் தின்றிடக் கூடி ஓடும்
பிணம்மீது ஆசையை விட்டு நல்லோர்
பெரிதாம் பழம்மீதும் காய்கள் மீதும்
உணவென்று மனம் வைத்தால் உயர்வதோடு
உடல் தானும் உணர்விலும் சிறப்பர் தாமே
வேல்கொண்ட முருகனோ நாவல்கனியும்
விதிமாற்றும் கனிநெல்லி அதியமானும்
கோல்கொண்ட ஔவைக்கு ஈந்தார் இன்று
கொண்டெமக்கு யார்தருவர்? குழந்தைவேலன்
ஞாலமதை சுற்றிவந்து நானே வென்றேன்
தா கனியை என்றுசொலத் தமையன் கொண்டான்
காலமது மாறியது உலகம் வேண்டாம்
கடைவீதி சுற்றிநற் கனியை உண்பீர்
-கிரிகாசன்
நாவின் சுவைக்கு
அடிமை நானில்லை
என்றிருந்தால்,
நோய்கள் நோக்குவதில்லை,
பாயும், படுக்கையும்
அழைப்பதில்லை!
‘அருந்தியது செரித்தபின்
அடுத்தவேளை உணவு உண்டால்
மருந்தினை நாடும்
தேவையில்லை’
என்ற
வள்ளுவனின் வாக்கினை
வாழ்வினில் கைக்கொண்டு
வாழ்வோம் வளமுடனே!
- கு.லட்சுமணன்,புதுப்பட்டினம், தமிழ்நாடு.
எல்லோரும் தான் விரும்புகிறார்கள்
நோயற்ற வாழ்வுக்கு
எல்லாம் இருந்தும்..
அதுமட்டும் எட்டா கனியானது
பலருக்கு...
முன்னோர்கள் சொன்ன வழியில்
தப்பாது நாமிருந்திருந்தால்
மருந்தும் மருத்துவமும்
எப்போதாவது என்றே
வாழ்ந்திருப்போம்..
தப்பியே நாமும் வாழ்ந்தோம்..
நிலையற்ற வாழ்வென்று
தத்துவம் பேசியே
சென்றோம்..
-பாரதிமோகன்
நோயற்ற வாழ்வு
உடலுக்கும் உள்ளத்துக்கும்,
பெரும்பாலும் பேசப்படுவது
உடல் நோய்கள் மட்டுமே.
நிற்பன அசைவன
நடப்பன பறப்பன
ஊர்வன நீந்துவன
என
உயிர்கள் அனைத்தும்,
உண்ணும் விருந்தாக
நோய்க்கு மருந்தாக
கொல்லும் விஷமாக
இப்படி
ஒவ்வோரிடத்திற்கு
ஒவ்வொரு கூட்டத்திற்கு
ஒவ்வொருவிதமாக.
சில இடங்களில்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருவிதமாக.
எதையெதையோ உண்டு உடுத்தி
எங்கெங்கோ உறங்கினாலும்
எதுவும் ஆவதில்லை
சிலர்க்கு.
இது இதுயென உண்டு உடுத்தி
இங்கு இங்கென உறங்கும் சிலர்க்கோ
எந்நாளும் நோய்கள்.
உலகெங்கிலும்
சட்டங்கள் திட்டங்கள்
தண்டனைகள் தங்கவிருதுகள்.
அவரவர்க்கு தகுந்தாற்போல
தீர்ப்புகள் தீர்வுகள்.
இவை
இயற்கையின் மறுதீர்ப்பால்
மாறும் காட்சிகளாக,
உணவை உணவாக
மருந்தை மருந்தாக சிலர் உண்ண,
மருந்தை உணவாக
உணவை மருந்தாக உண்ணும் சிலர்.
தங்களுக்கான உணவை
தேடி உழைத்து சிலர் உண்ண,
மற்றவர் உணவையும்
ஏமாற்றி உண்ணும் சிலர்.
சர்க்கரையில்லாத இனிப்பு
உப்பு இல்லாத உணவு
அரிசியில்லாத சாப்பாடு
தேயிலையில்லாத தேனீர்,
உணவு கட்டுபாடாம்.
மொத்தத்தில்
வாழ்வில்லாத வாழ்க்கை.
“உங்களுடையதல்லாததை
விரும்பாதீர்கள்
விட்டெரியுங்கள் அல்லது
விலகிச் செல்லுங்கள்.
நீங்கள் உண்ணும் உணவு மட்டுமல்ல
விஷமும் மருந்தாக மாறும்.”
மரியாதையுடன்
எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.
ஏழையெளியோரை பாருங்கள்
கண்நோய்கள் நீங்கும்.
அவர் வீடுகள் வழி நடைபோடுங்கள்
கால்நோய்கள் விலகும்.
அவர்க்கு இயன்றவரை உதவுங்கள்
அனைத்து நோய்களும் மடியும்.
அவர்களோடு இணைந்து வாழுங்கள்
நோய்களே நெறுங்காது.
அவர்களின் துன்பங்களுக்காக
கண்ணீர் சிந்துங்கள்
உங்களின் உடல் மற்றும் மன நோய்களின்
அனைத்து காரணிகளையும்
உங்களுக்குள்ளிருந்து தேடி பிடித்து
அழித்து கரைத்து
கண்ணீராக வெளியேற்றும் சக்தி,
கண்ணீர் என்று பொதுவாக சொல்லப்படும்
அந்த புனித நீருக்குத்தான் உள்ளது.
நம்புங்கள்
இது மனிதநேய மருத்துவமென்று
ஒருவர் உளறுவது,
கொஞ்சம் கொஞ்சம் தான்
எனக்கே புரிகிறது.
ந.அன்புமொழி
சென்னை.
இயற்கையுடன் இயைந்த வாழ்வு
அது தருமே நிறைவான மகிழ்வு
நோயும் நொடியும் தான் அஞ்சுமே
எழில் கொஞ்சும் பல்வகை
பழங்களை நாம் புசித்தால்....
புசித்துப் புசித்து பசியை
மறப்பதை விட - பசித்த
வேளையில் புசிப்போம்!!!
இயற்கையில் எத்தனை
வண்ணங்கள் -
அவையனைத்தும் பிரதிபலிக்கும்
மலர்களும் கனிகளுமாய்......
அவை தருமே
உடல் - உள்ளத்தை
வலுவாக்கும் சத்துக்கள்!!
காத்திடுவோம் இயற்கையை
வழிவகித்திடுவோம்-
நோயற்ற வாழ்வுக்கு!!!
-பி.தமிழ் முகில்