என்னவளுடன்
கைவிரல்கள் கோர்க்காமல்
ஒரு கடற்கரை பயணம்!
என் மூச்சுக்காற்றோ
அவளுடன் பேசுவதற்கே
துடிக்கின்றது.
மாலைநேரச் சூரியன்
மறைய மனமில்லாமல்
அவளை வெறித்துப்பார்க்கிறான்
நனோ சுட்டெரிக்கும் பார்வையில்
அவனைப் பார்க்கிறேன்.
அவளது கைவண்ண
மணல் வீடுகளை
இரசிப்பதற்கு மேகக்கூட்டங்கள்
மொய்த்த வண்ணம் அலைமோதுகின்றன.
அவள் பாதவகிட்டினை
எப்படியாவது தொட்டுவிட வேண்டுமென்று
போட்டியிடும் அலைகள்,
ஆனாலும் அதற்கு பயனில்லை.
அவள் பாதத்தடத்தின்
வழிநோக்கியதாய்
என் கால்களும்...
சேலம்
சுக. வினோத்குமார்
ஏலேலோ பாடி
படகு தள்ளுவதும்
கருவாட்டுக்கு காவலராய்
வெய்யிலில் கரைவதும்
அறுந்து போன வலைகளைப்
பின்னுவதும்
போன படகு திரும்பாதா
என்று பார்த்து ஏங்குவதும்
இப்படித்தான்...
அவர்கள் வாழ்க்கை
நான் பார்த்த கடற்கரையில்
மயூரி கனடா
சீறிச் சினத்தவள் கன்னம் - போல
சிவ்வென்று வண்ணம் எடுத் தடிவானம்
மாறிக் கிடக்குது வெய்யோன் - இந்த
மண்ணில் கொடுமைகள் தன்கதிர் மீறி
தேறிக் கிடக்குதே யென்று - நொந்து
மேலைக் கடலில் உயிர்விடும் நேரம்
சேறெனச் செவ்வண்ணம் பூசி - ஒரு
சின்னக் குழந்தையும் குங்குமம் கொட்டி
வெள்ளைப் படுக்கையில் மீது - விளை
யாடிக் கழித்தது போலவெண் மேகம்
அள்ளிப் பரந்து விரிந்தே - அசை
வற்றுக் கிடந்தன ஆவிஉறைந்து
முள்ளிவாய்க் கால்மண்ணின் கோரம் - மன
மீது எழுந்திட்ட கோல மெனவும்
துள்ளிச் சிதறிய செந்நீர் - சென்று
தோன்றியதோ கடல் மேகம், வியந்தேன்!
கிரிகாசன்
வேலைமுடித்துக் கதிரவன்
மேலைக்கடலில் மூழ்கும் நேரம்..
நீல வானத்தின்
நிறத்தை மாற்றிப் பொன்னாக்கி
நித்திரைக்குச் செல்லும் நேரம்..
நீண்ட கடற்கரையில்
நின்று பார்க்கும் கூட்டத்தில்
நிம்மதிப் பெருமூச்சு-
கோடை வெயிலாய்க்
கொழுத்திய சூரியன்
குடிபெயர்ந்ததே...
நிலைக்குமா இந்த நிம்மதி...!
-செண்பக ஜெகதீசன்...
ஒரு
மாலைப்பொழுதில்-என்
மனதை தொட்ட நாள்,
கடற்கரையில்
என்னவளுடன்
நான் இருந்த
எழுபது நிமிடங்கள்.
அந்த
கடற்கரை
மணல் வெளியில்,
அவள் பதித்த
பாத சுவட்டின் மேல்
நான் பதித்த
பத்து நிமிடங்கள்.
அவள் ரசித்த
அலைக்கு நான் ரசித்த
பத்து நிமிடங்கள்.
அவள் புனைந்த
கவிதைக்கு நான் முத்தமிட்ட
பத்து நிமிடங்கள்.
அவள் சிரித்த அழகை
நான் வரைந்த
பத்து நிமிடங்கள்.
அவள் தொடுத்த கேள்விக்கு
நான் அளித்த பதில்கள்
பத்து நிமிடங்கள்.
அவள் இசைத்த கவிக்கு
நான் விழி மூடிய
பத்து நிமிடங்கள்.
அவள் மடிக்கு அணைத்த
நான் தலை சாய்த்த
பத்து நிமிடங்கள்.
இந்த
எழுபது நிமிடங்கள் தான்,
என் வாழ்வில்
என்னவளுடன் நானிருந்த
எழுபது நிமிடங்கள்.
அதன் பின்னே
அஸ்தமனமும் அழைக்க
ஆதவனும் விழிமூடச்சென்றான்.
என்னவளும்
என்னைவிட்டு சென்றாள்.
உடுவையூர் த.தர்ஷன்
நீல திரைக்கு அப்பால்
நித்தம் முகம் சிவப்பது
ஏனோ சூரியனே..?
அங்கே
உதிர்ந்து போன
எங்கள்
உதிர சொந்தங்களை
உள்ளத்தால் உணர்ந்ததாலோ
கதிரவனே..!
அஸ்தமனம் என்றால்
அடுத்து வருவது
விடியல்தானே
விண்மீனே...!
காத்திருக்கிறோம்
கரைகளிலே
காலம் மாறும் எனும்
நம்பிக்கையுடனே...
-தங்க ரமேஷ், பாலி
ஏ சூரியனே...!
நீ ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லும்போது
நீலக்கடல் பெண்ணுக்கு நீ தரும் முத்தம்...
நித்தம் நித்தம் தொடர்கிறது.
உன் இதழ் தந்த முத்தத்தால் தான்...
இழக்கிறாளோ? நீலக்கடல் பெண்...
“ தன் நிறத்தைக் கூட...! ”
அ.மோகன்
வாடை காத்து விடுமுறைக்கு சென்றதால்
கோடைத் தாகம் சூரியனுக்கும்
கடல் நீரை குடித்தான் உப்புக் கரித்தது
மணலை சுட்டு மமதை கொண்டான்
மாலை வந்தது
மாலை மகிழ்ச்சியில் மணல் நண்டுகளும்
கண்ணாம்பூச்சி ஆடின
மைதான மணலில் கரப்பந்தாட்டம் ஆடி
இளைஞர்களும் விசில் ஒலி எழுப்ப
ஊரின் பெரியவர்களும் சூழ்ந்து ரசித்து
தமது இளமை காலத்தின்
நினைவுகளை தொட்டு நின்றவேளை
கடலில் குளிப்பது சந்திரனா சூரியனா
கேள்வி இவரிடத்தில்
கெண்டை மீன்களும் துள்ளி எழுந்து பார்த்து
அது சூரியன்தான் என்றன
கொடியவன் என சொன்னவரே
குளிர்ந்தவன் என சொல்லும் அழகு
கோடைக்கால அந்த மலைச் சூரியனிடத்தில்
அந்திமாலை பொழுதில் செம்மஞ்சள் பூசி
ஆதவன் மஞ்சம் குளிக்கையிலே
நீலக் கடலெங்கும் தங்கம் மின்னின
பொன் அலைமேலே மீன் வலையேற்றி
பாய்மர படகுகள் உலா போகையிலே
அந்த மந்தமாருத ரம்மியத்தில்
காதல் யோடிகளும் கால் நனைத்து புன்சிரிக்க
இரவு வந்தது, இதற்குமேல் நான் என்ன சொல்ல.
கவியாக்கம் – வல்வை சுஜேன்.
சூரியனும் சந்திரனும்
கட்டித் தழுவும்
ஒரு மென்மையான மாலை பொழுது
தன்னை ஆசுவாசம்
செய்து கொள்ள முனையும்
பல மனங்கள்
காட்சிகளாய் கடற்கரையெங்கும்..
கடலே வாழ்க்கையாய்
கடலுக்குள் தன்னை இருத்திக் கொண்டு
எதிர்காலத்து வெற்றிக் களிப்பில்
கடற்கரையை நோக்கிப் பயணிக்கும்
கட்டுமர மனங்களுக்கு
கோடைகால மாலை
வசந்தமாய்......
துர்கா
தமிழ்நாடு
அலையலையாய் மக்கள்
பெருங்கூட்டமென்றாலும்
சிறு சிறு கூட்டங்களாய்
தனித்தனியாய்
ஒற்றுமையற்ற மக்கள்.
தாய் பாசம் குடும்ப பாசம்
பணப்பாசம் பதவிப்பாசம்
தன்னல பாசம் பொதுநல பாசம்
காரிய பாசம் வஞ்சக பாசம்
இப்படி பல வகையான பாசங்களோடு,
அதேபோல,
அந்த நட்பு இந்த நட்பு
அந்த காதல் இந்த காதல்
என
பல வகையான நட்புகள்
பல வகையான காதல்கள்.
மேலும் பல வகையான
அந்த அது இந்த இது
என்று
இலாப நட்ட பேச்சுகள்
விவாதங்கள்
விளையாட்டுகள்
விவகாரங்கள்.
இப்படி,
மக்களில் மொழிகளில்
மனங்களில் செயல்களில்
விதவிதமாக
பலவித மாற்றங்கள் வந்தாலும்,
பட்டினி வறுமைற்ற
ஏற்ற தாழ்வூகளற்ற
வன்முறை போர்களற்ற
தீமையற்ற மனிதத்துக்காய்,
சிதறடிக்கப்பட்டு துண்டங்களாக
ஆங்காங்கு வீசப்பட்டாலும்
மீண்டும் உயிர்த்தெழுந்து
தனித்தனியாக துடித்துக்கொண்டு
பரிதவிக்கிறது,
கொன்றுவிட்டோமென்ற நினைப்பில்
கடவூளாக்கி விடப்பட்டாலும்
சாகாவரம் பெற்ற
அப்படி இப்படியென்று
என்றும் மாறாத
ஒரே அன்பு !!!
எல்லோரும் அன்பை மட்டுமே பற்றிக்கொண்டு
பொருளாசையற்றவர்களாய்
போதுமென்ற மனதோடு
ஒற்றுமையாக வாழ்ந்தார்களே
அந்த நாளை மீண்டும் காணமாட்டோமா ?
ஏக்கத்தோடு எதிர்பார்த்தபடி
நம்பிக்கையூடன்
கடந்துகொண்டிருந்தது காலம்.
ந.அன்புமொழி
சென்னை
நான் கண்ட அந்திப் பொழுது - என்
சங்ககால தமிழனின் காதல் நினைவுகள்
அவன் காதல், காமத்தை கொட்டியப் பொழுது - அது தான்
என்னினத்தின் அடையாளம் - ஆனால்
இன்று நான் காணும் அந்திப்பொழுது - என்
மீனவனின் குருதியை குடிக்கும் பொழுதாய் - ஆம்
சிங்களவன் தமிழனின் குருதியே சுவைக்க - அதை
தமிழன் வேடிக்கை பார்க்கிறான் - எப்போது
இந்த அடையாளத்தை உடைத்தெரியும்
காலம் தான் வருமோ?
தமிழா......
கோபிநாத்
பரம்பை,தமிழ் நாடு
ஒரு கோடை மாலை
கடற்கரை மணல்
மேற்கு வானம் சிவக்க
செங்கடலாகும் நீலக்கடல்
அலையாடும் ஆழ்கடலில்
புதையதுடிக்கும் மாலச்சூரியன்
உப்புக்காற்றில் கரையும்
உலர்ந்த நினைவுகள்
இவைகளுக்கு மத்தில்
மீண்டும் மீண்டும் அலைபோலவே எழும்
இரண்டு வரி
காதல் காவியங்களாய்
கால் தடங்கள்
-பாரதிமோகன்
மெல்லிய தென்றல் வீசும்
மாலை நேரத்தில்
கடற்கரையில் அமர்ந்து
நினைவுகளொடு பெசிக்கொண்டிருந்தேன்
அலைபாயும் கண்களில் பதிந்த
பாத சுவடுகள்
எங்கள் பெச்சினைக் கலைத்தது...
பல நூறு பதிவுகளில்
என்னவனின் பதிவுகளை
தேடின...
என் கண்கள்
பைத்தியக்கரி
சிற்பமா? பாதச்சுவடுகள்
அழியாமல் இருப்பதற்கு
என்றது அறிவு....
ஆனால்
மனம் உணரவில்லை
அறிவுக்கும் மனதுக்கும்
உள்ள போராட்டத்தை நிறுத்துவத்ற்கு
என்னவன் வருவான்
எனும் நம்பிக்கையுடன்
என்னவள்......
பொ.சகு
சத்தியமங்கலம்
யாரப்பா அங்கே.....
சூரிய தேவனவன்
ஓய்வெடுக்கச் செல்கிறான்....
வழியனுப்ப வாருங்களேன்...
நாள் முழுதும் அயராது
தன் ஒளிக் கதிர்களால்
சுட்டெரிக்கும் பணியைச்
செவ்வனே செய்து முடித்து
அயர்ந்து போய் -
தன் சூட்டையெல்லாம்
ஆழியினுள் அழுத்தி
ஆழி நீரையும்
அகன்ற வானமதையும்
செம்மையாக்கி விட்டு
நித்திரைக்குள் மூழ்குகிறான்
சூரிய தேவனவன்.........
வாருங்கள் - வரவேற்கத்
தயாராவோம்.....தன்மையை
தன்னகத்தே கொண்ட
சந்திர தேவனை !!!
பி.தமிழ் முகில்
---------------------------------------
நீல கடல் தாரகையே
என்னவளும் உன்னை போலவே
தூரத்தில் சப்தமாய்
அருகினில் மௌனமாய்
கரை தொடும் கணங்களில்
பரவசத்தின் பனித்துளியாய்
விலகிடும் வேளைகளில்
பதறிடும் பேரலையாய்
நீல கடல் தாரகையே
என்னவளும் உன்னை போலவே
அலைகளின் தீண்டலுக்கு
காத்திருக்கும் கரைகள் போல்
அவள் நுனி விரல் ஸ்பரிசம் தேடி
தொலைகிறது பல யுகங்கள்
கடல் மணலில் பெயர் எழுதி
அலை வந்து அள்ளி செல்கையில்
தொடைந்து விட்ட என் காதல் சுவடுகளுக்காக
தொடர்கிறது என் தேடல்
நீல கடல் தாரகையே
என்னவளும் உன்னை போலவே
எட்ட நின்ற என்னை
அவளுள் எட்டி பார்க்க அழைத்தாள்
முத்தெடுக்கும் கனவுகளுடன்
மூழ்கி விட்ட நான்
சுவாசிக்கிறேன் அவள் நினைவுகளுடன்!!
சூர்யா சங்கர்
ஜேர்மனி
நீல கடல் தாரகையே
என்னவளும் உன்னை போலவே
தூரத்தில் சப்தமாய்
அருகினில் மௌனமாய்
கரை தொடும் கணங்களில்
பரவசத்தின் பனித்துளியாய்
விலகிடும் வேளைகளில்
பதறிடும் பேரலையாய்
நீல கடல் தாரகையே
என்னவளும் உன்னை போலவே
அலைகளின் தீண்டலுக்கு
காத்திருக்கும் கரைகள் போல்
அவள் நுனி விரல் ஸ்பரிசம் தேடி
தொலைகிறது பல யுகங்கள்
கடல் மணலில் பெயர் எழுதி
அலை வந்து அள்ளி செல்கையில்
தொடைந்து விட்ட என் காதல் சுவடுகளுக்காக
தொடர்கிறது என் தேடல்
நீல கடல் தாரகையே
என்னவளும் உன்னை போலவே
எட்ட நின்ற என்னை
அவளுள் எட்டி பார்க்க அழைத்தாள்
முத்தெடுக்கும் கனவுகளுடன்
மூழ்கி விட்ட நான்
சுவாசிக்கிறேன் அவள் நினைவுகளுடன்!!
-சூர்யா சங்கர்
-சந்தியா,இலங்கை
தொட்டுவிடதான் சீறி வருகின்றனவோ இந்த கடல் அலைகள்...
வெட்கம் கொண்டு ஓடிஒளிகிறான் மாலைக் கதிரவன்..
-பிரகாஷ் ராஜ்குமார்,இந்தியா