வாழ்க்கைச் சதுரங்கத்தில்
வகைவகையாய்க் காய்கள்..
கண்டபடி நகர்த்தினால்
காரியம் கெட்டுவிடும்-
கைமேல் தோல்விதான்..
உறுதியாய் இரு,
நகர்த்திடு காய்களை
நிதானமாய்-
நாடிவரும் வெற்றி
நம்மைத் தேடி...!
-செண்பக ஜெகதீசன்...
லட்சியத்தில்
கொண்ட கொள்கையில்...
உறுதியாய் இரு
உலகாளும் எண்ணமானாலும்
ஒருநாளும் துவளாது...
உறுதியாய் இரு..!
நேற்றுவரை திசைமாறியே வீசிய காற்று
நாளை உன் பக்கம் வீசக்கூடும்..
தேதிகள் கிழிக்கப்படும்போது
யாரும் அறிவதில்லை
அடுத்த நொடியின்
நிகழ்வை..!
என்றாலும்..
உறுதியாய் சொல்வேன்
நடப்பதனைத்தும் நம்பிக்கையின்
அடிப்படையில்தான்..!
உறுதியாய் இரு
லட்சியத்தில்
கொண்ட கொள்கையில்...!
பாரதிமோகன்
ஆடுபுலி ஆட்டமென சொலவார் இதனை
அழகான படமாக போட்டீரதனை
நாடுகெட்டு போகாமல் தடுக்க நாமே
நாளதோறும் உழைத்துத் தாமே
பாடுபட்டுப் பொருள்தேட முயலல் நன்றே
பரவாமல் ஊழல்தான் ஒழியஇன்றே
கேடுகெட்ட அந்நிலையே வேண்டாமெனற
கொள்கையிலே என்றும்நீ உறுதியாய் இரு
யாராண்டால் நமக்கென்ன எண்ணல் கேடே
இதனாலே கெட்டத்துதான் நமது நாடே
பாராண்டான் தமிழனெ சொல்லித் தானே
பாழாக ஈழத்தை விட்டோம் வீணே
சீராண்ட அத்தமிழர் இலட்சக் கணக்கில்
செத்தாரே நமக்குள்ளே வந்த பிணக்கில்
ஊரோடு ஒத்துப்போ பிதற்றல் வீணே
உருவாகும்தனி ஈழம் உறுதியாய் இரு
புலவர் சா இராமாநுசம் அரங்கராசபுரம்
சென்னை 24
போராட்டங்களும் போட்டிகளும்
உண்மையாக்கப்பட்டன
உறவுகளும் உரிமைகளும்
பொய்யாகி மண்ணாகின...
சுழற்சிப் பாதையில்
எண்ணாயிரம் காட்சிப்பிழைகள்
புதியதோர் உலகில் உலா வர
தயாராவோம் உறுதியாய் இருக்க..
துர்கா
தமிழ் நாடு
ஞானப் புதையலின்
இருப்பிடம் தேடி
நாமெட்டும் முதல் சந்து
தேடல்
தேடுதல் பயணத்தின்
ஆர்வம் அடிக்கல்
இலட்சியம் மைல்கல்
ஒழுக்கம் திசை காட்டி
செய்கையின் நடை பாதையில்
பிழை யெனும் புதை குழி
தென்படலாகும்
பிழைசெய்தல் பிழை யில்லை
மரத்தில் துளையிடல்
பறவையின் வாழ்வு தர்மம்
துளைகளுள்ள மூங்கிலும்
மரங்களில் துளைகளும்
நிர்பந்தங்கள்
யதார்த்தத்தின் படித்துறையில்
தவறுகளின் பாசி படிமம்
நிதர்சனம்
தடங்களை விஞ்சு
நேரத்தை மிஞ்சு
நேர்மைக்கு அஞ்சு
தப்பெனில் கெஞ்சு
கடமைகள் கொஞ்சு
'பொறாமை' கழுகின் குஞ்சு
இழந்ததெல்லாம் நஞ்சு
இனி யெல்லாமுனக்கு பஞ்சு
விமர்சனங்கள்- வினா
விருப்போடு விடையளி
வெற்றி தேடு !
உண்மையாய் உள்ளவரை
உறுதியாய் இரு...
கொ.மா.கோ.இளங்கோ
ஊனம் என்பது ஒரு தடையல்ல!
உன் வாழ்வின் முன்னேற்றத்துக்கு
இறைவன் அளித்த கொடை!
உழைப்பும். தன்னம்பிக்கையும்
உன்னிடம் உறுதி! இது
உலகமே காண்கின்ற நியதி!
உறுதியாய் நிற்கின்றது உன் மனம்,
உலகமே புகழும் உன்னை தினம்!
மாற்றுத்திறனாளி தோழனே! நாங்களும்
மாறத்தான் ஆவல் உன்னைப்பார்த்து!
கிரிஜா மணாளன், திருச்சி (தமிழ்நாடு)
உலகம் - இது ஓர்
சதுரங்கக் கட்டம்!!!
நம்மைச் சுற்றி
எத்தனை எத்தனையோ
இராஜாக்கள்....இராணிகள்....
மந்திரிகள்....யானைகள்......
குதிரைகள்.....சிப்பாய்கள்....
பல்வேறு வடிவங்களில்....
பல்வேறு நிறங்களில் ...
ஓர் பெரும் இராஜாங்கமே நடக்கிறது....
சதுரங்கக் கட்டத்திலோ
இரு வேறு நிறங்கள் மட்டுமே!!!
ஆனால் உலகச் சதுரங்கதிலோ....
எத்தனை எத்தனையோ நிறங்கள்....
இராஜாங்கத்தில் -
எண்ணங்களால் உயர்ந்தோரும் உண்டு....
தம் செயல்களால் தம்மை
தாழ்த்திக் கொண்டோரும் உண்டு.....
பார்த்து பொறுமையாய் -
நிதானமாய் அடியெடுத்து வைப்போம்......
எண்ணத்தில் மேன்மை கொண்டு -
உள்ளத்தில் உண்மை கொண்டு
பெருமையாய் நிமிர்ந்து நிற்போம்.....
நம் கண்ணியமான உழைப்பின் துணை கொண்டு!!!
- பி.தமிழ் முகில்
கலகத்தை உண்டு பண்னி
கலக்கத்தை உன்னிடம் தந்து
கட்டமைப்பை சிதறடிப்போர்
நலிந்த புலத்தில் விழிப்போடு
இருப்பேன் என்று உறுதியாய் இரு..
மாவீரர் கல்லறைகளை அழித்தவன்
கரம் பற்றி தரம் கெட்டு நடப் போரை
எங்கள் நெஞ்சறையில் துயில்
கொள்ளும் புணிதரை அணுக விடோம்
என்று உறுதியாய் இரு.........
தயாநிதி தம்பையா
ஒவ்வொரு விடியலும்
எதற்காக உழைக்கும்
தோழர்கள் நமக்காக
தடைகள் வந்தாலும்
படிகள் சரிந்தாலும்
இலட்சிய தனலை
அனையாது காத்திரு
வலிகள்
ஏற்றுக்கொள்வதற்காக
அல்ல போராடுவதற்காக
உறுதியாய் இரு
வலிகள் வாழ்க்கையை
காற்றுக்கொடுக்கும்
வாழ்வதற்கு கற்றுக்
கொடுக்கும்
-மா.ஜெகதீஷ்
வங்கக் கடல் மீது.
தங்க தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்கள்
சங்கறுத்து கொள்கிறது தமிழா !
இன்னுமா நீ உறங்குகிறாய்!
வலை வீசி மீன் பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலை மீது குண்டு வீச்சும்
சடுதியிலே துப்பாக்கி சூடும்
சரமாரியாய் நடக்கிறது தமிழா!
இன்னுமா நீ உறங்குகிறாய்!
நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள் தோறும் அகதிகளாய்!
நாடிழந்து வருகின்றதே தமிழா!
இன்னுமா நீஉறங்குகிறாய்!
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து நொறுக்கி சுட்டுக் கொன்று
அவமானபடுதுகின்றனரே தமிழா!
இன்னுமா நீ உறங்குகிறாய்!
இன்னமும் வளரும் இந்த துளிகள்
-விதுரன்