இயற்கை சீற்றமில்லா
இழப்புகள் ஏதும் நேரா
புத்தாண்டே நீ வருக
பொருளாதார வீ ழ்ச்சியில்லா
பணவீக்கம் ஏதுமில்லா
புத்தாண்டே நீ வருக
முதியோர் இல்லங்கள் ஒன்றுமில்லா
மனங்களை மதிக்கும் மனிதர்களாக்க
புத்தாண்டே நீ வருக
கல்வியை வியாபார கலப்படமில்லா
சேவை என கற்றுத்தரும் நிலையங்களாக்க
புத்தாண்டே நீ வருக
இந்த வரங்கள் அனைத்தும் தரும்
வரலட்சுமியாக நீ வருக - உன்
வரவு நல்வரவாக
புத்தாண்டே நீ வருக
- லலிதாசுந்தர்.
இரண்டாயிரத்து பதினொன்றே வருக!
இனியவளாய் விளங்கிட வருக!
புத்தாண்டே வருக!
ஆரமுடன் ஆண்டே வருக!
அனைவரும் மகிழ வருக!
திரண்டிடும் செல்வமாய் வருக!
தீரமுடன் புதிதாய் வருக!
சுரந்திடும் செழிப்பாய் வருக!
சுடரான ஒளியுடன் வருக!
நிரந்தர இன்பமாய் வருக!
நிலவட்டும் அமைதி எங்கும்.
- அகணி
புத்தாண்டே நீ வருக
புதுச் செய்தி நாளும் தருக
போர் வேண்டாம், பூசல் வேண்டாம்
அண்டை நாடுகளுடன் நிழல் யுத்ததம்
வேண்டவே வேண்டாம்
நான்கு சுவர்களுக்குள்
காம லீலைகள் செய்யும்
குருமார்கள் வேண்டாம்
நம்பி வீட்டில் விட்டால்
நம் கால்களை வாரி விட
சமயம் பார்க்கும் நண்பனெவனும்
வேண்டவே வேண்டாம்
வறியவர்களுக்கு ஈயாமல்
சொத்து சேர்த்து கோட்டையில்
குடும்பம் நடத்துகின்றவன் வேண்டாம்
உழைக்கின்ற காசில் குடித்துவிட்டு
குடும்பத்தை பட்டினி போட்டுவிட்டு
ஊதாரியாய் திரியும் குடும்பஸ்தன்
வேண்டவே வேண்டாம்
கருணை வேண்டும், தயை வேண்டும்
காண்கின்ற இடமெல்லாம்
சுபிட்சமாக இருக்க வேண்டும்
தன்னலம் கருதாமல்
பொதுநலம் கருதி
பாமர மக்களுக்காக
அயராது பாடுபடும்
பெருந்தலைவர்கள் வேண்டும்
உழைத்துவிட்டு வந்து படுத்தால்
முள்படுக்கை தனில்
புரளும் இரவாக இல்லாமல்
நல்நித்திரை நாளும் வேண்டும்
சினிமாவில் சிந்தனையை தொலைத்துவிட்டு
இளைஞர்கள் சீர்கெட்டு அலையவேண்டாம்
கையில் சில்லரை இல்லையெனினும்
நற்சிந்தனை நாளும் வேண்டும்
உழைத்தால் உயர்வு
என்ற வார்ததையை நம்பி
களம் இறங்க வேண்டும்
இந்த புத்தாண்டிலாவது
லட்சியப் பெரியோர்களின்
அரிய புத்தகப் பொக்கிஷங்களை
தேடிப் படிக்க வேண்டும்.
கடந்த ஆண்டில் நடந்தது பற்றி
கவலை வேண்டாம்
கடந்தது கடந்தபடி இருக்கட்டும்
இனி எதிர்கொள்வது நல்லபடி வாய்க்கட்டும்
மீண்டும் ஒருமுறை சொல்வோம்
புத்தாண்டே நீ வருக
புதுச் செய்தி நாளும் தருக.
- ப.மதியழகன்
தனிமனித சரிபார்ப்பில்
அறியாது நிகழும்
உயிர்களின் இழப்பினும்
உணர்ந்து கொடுக்கும்
நிணமும் உதிரமும்
அதிகமாய் இருக்கிறது.
தாயின்
குரல் அறியாத குஞ்சு
ஓடுடைத்து
வெளிவரும் நிலையிலும்
எச்சரிப்பு ஒலியில்
பதுங்க நினைக்கிறது.
இயல்பு அறிந்தும்
அந்துப் பூச்சியை
இருப்பில் வளர்ப்பது
குணமாகாது. குறை.
இது என் குணம்
மறுப்பதற்கில்லை. உண்மை.
பாவம் ஓடுவதாலேயே
தன்னைக்
காட்டிக் கொடுக்கிறது முயல்.
கூட்டை அலங்கரிக்கும்
குருவிக்கு
மின்மினியின் சோகம்
தெரிவதில்லை.
உயர்வெப்ப அடைவிடம்
மரித்துப் போகின்றன
சுரப்பிகளற்றவை.
கால்வழி
உடலோடு பிறந்து
நடத்தையாகிறது.
இருக்கைநிலை வாழ்க்கையில்
பழகிப் போனவை.
அவசர அவசரமாய் கூடி
குசுகுசுக்கும் எறும்புகளின்
செயல் ஒத்திருக்கிறது
தார் ரோட்டில் சலசலக்கும்
மழைநீர்.
இமைகளைப் பிணிக்க
பொட்டிலேயே
தங்கிவிட்டது வலி.
மலைப்பாய் இருக்கிறது
கடந்தவைகளில்
தொலைந்து போவது.
இயலாமையில்
எப்பொழுதாவது கசியும் நீர்
இன்று.. அப்படியில்லை.
இப்பொழுது சொல்லுங்கள்
நீங்கள் எந்த இடத்தில்?
அண்ணாந்து பார்க்குமளவு
உயர்ந்திருக்கிற தென்னையின்
வளர்ச்சி சூட்சுமம்
தன் மட்டைகளைத்
தானே கழித்துக் கொண்டு
வளர்வதுதான்.
பலனடைய
திறமை வேண்டாம்
அது சூழ்ச்சிக்கு வித்திடும்
வேண்டும் நேர்மை.
மாறிக்கொண்டிருக்கிறது சூழல்
நெகிழ்வுடையன
இடம், காலம், உறவு
வரையரைக்கும்
அப்பாற்பட்டது. இருப்பும்.
நினைப்பது போல்
சுருக்க விரிக்க இயலாதது
இயல்பு.
தோன்றவில்லை
தோன்றவேயில்லை
உள்ளடங்கியப் பேச்சிலும்
மெலழும் புருவத்திலேயுமே
நிற்கிறது. அன்பு. பாசம்
முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்
சென்ற ஆண்டின் சுரண்டல்கள்,
சொல்லிமாளா சோகங்கள்,
எல்லையில்லா ஏய்ப்புக்கள்,
ஏமாற்றும் இலவசங்கள்,
நல்லவராய் நடிப்புக்கள்,
நாலுசுவர்ச் சித்திரங்கள்..
இந்த
மனிதம்மறந்த தீமைகள்
மாறிடவேண்டும்
புதிதாய்ப்பிறந்த புத்தாண்டில்…!
போதிமரத்து புத்தனாய்,
புனிதக் கருணைக் காந்தியாய்
புவியே மாறிடவேண்டாமே..
மண்ணில் மனிதர் யாவரும்
மனிதராய் வாழ்ந்தால் போதுமே…!
-செண்பக ஜெகதீசன்…
நாள் நலமோடு தளிர
தியாகம் தொடக்கம்
ஹைட்ரஜன் வாயுவின் தியாகம்
ஆக்சிஜன் அணுக்களின் அர்ப்பணம்
உள்ளங்கை தேங்கிய தண்ணீர்
வழிந்து போன சொட்டொன்று
சூத்திரம் சொல்லும்
கருத்தரித்த மேகம்
கனமழை பெற்றெடுக்க
மலைகள் மோதி
மரங்கள் சரிந்து
முள்முனை கிழிபட்டு
ஐந்தறிவு சாதி மூத்திரம் சுமந்து
இடம் மரித்த பாறைகள் இடர்ப்பட்டு
கூழாங்கற்களை குருமணலாக்கி
வெள்ளமென ஓடிவரும் நீர்
கற்றுக் கொள்கிறோம்
தடைகள் தாண்டியே வாழ்வு
2011 - ல்
தமிழ் சனமே !
கால்களுக்கு நீருற்றி
கடந்தன கழித்து
நிலைவாசல் தாண்டலாம்
நாள் நலமோடு தளிர
தியாகம் தொடக்கம்
கொ.மா.கோ.இளங்கோ
புத்தாண்டு
பிறந்துவிட்டது!
அது
பத்தோடு பதினொன்றாய்
போகாமல் செய்வது
நம் கையில்தான் !
அரவிந்த் சந்திரா
எனக்கும் அவளுக்கும்
பிடித்தமே இல்லை.
புரிந்து கொள்ளாததும்
பொறுத்துப் போகாததுமே
காரணங்களா
சாயலில் என்ன இருக்கிறது
என் செயல்கள்
மறுக்கப்படுவதால்
விலகிச் செல்கிறேன்.
ஓர் அறைதான்
என் பொருள்கள் தனித்திருக்கும்
அவற்றுடனேயே உலவுகிறேன்.
முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்
வால்பாறை,கோயம்புத்தூர், தமிழ்நாடு
உறவுகளின் மத்தியில்
நான் உயிருள்ளவை
கவலைப்படுவதில்லை.
என்னையும் அவற்றையும் பிரிக்கும்
எவர் பதிவையும்
அனுமதிப்பதில்லை.
அய்ந்தையும் ஒடுக்கி
ஆறாவதில் சிறக்க
அவர்களால் எப்படி முடிகிறது
என்னின் இச்சுருக்கம்
அவமானமாக இருக்கின்றது
எதுவரை....
காலங் காலமாய் கணிக்கப்பட்ட
கணக்குகள் புறக்கணிக்கப்பட்டு
இடைச் சொருகலாய்
வந்த க்ரிகோரியக் கணக்கு
கண்மூடி கைகொள்ளப்பட
இழந்த இயற்கையின்
இம்மியளவும் உணர்ச்சியின்றி
இருண்ட நேரத்தில்
இடைவிடா கூச்சலோடு
கள்வெறி கைகோர்க்க
கட்டவிழ்ந்த காமத்தோடு
கல்தோன்றிய காலத்திற்கே
கட்டாய அழைப்பாய்
புதிய ஆண்டிற்கான நெறியறியாமல்
புது எண் மாற்றத்திற்கு
புல்லுருவிகளின்
புரிதலற்ற அழைப்பு . . .
புதிய ஆண்டு நமக்குமா ?
மார்கண்டேயன்,
மதுரை, பாரதம்.
தகவலுக்கு : http://markandaysureshkumar.blogspot.com/2010/12/blog-post.html
http://markandaysureshkumar.blogspot.com
எல்லாரும் எல்லாமே
பெறவேண்டும்!
‘இலவசங்கள்’ இல்லாமல்
ஒழியவேண்டும்!
ஊழலில்லா நாடாக
உழைப்பு உள்ள வீடாக
உருவாகவேண்டும்!
பெண் சிசுவும் பொன் சிசுபோல்
போற்றப்பட்டு,
பெண்கள் நிலை பாரினில்
உயரவேண்டும்!
- வைகைத்தென்றல். மதுரை
(தமிழ்நாடு)
தனிமையில் புலம்பும்
எனது நிழலின் சோகத்தை
பாதச்சூட்டில் தனித்துக் கொள்கிறேன்...
அய்ந்தாம் வகுப்பில்
ஆட்டோவில் சென்றபோது
நெருங்கிநெருங்கி இருந்தும் சொல்லவில்லை....
கடற்கரையில் உலாவச் சென்ற
நன்பரின் அரட்டைப்பேச்சில்
அவளைக்கூறும் போது
இருட்டு உலகமாக்கி கொண்டது இதயம்...
ஒரு நடுராத்திரியில்
மது உண்டு தூங்கிய நண்பனின்
புலம்பலில் தெரிந்தது அவனையும்
அலைக்கழித்திருப்பளோ! என்று...
மழைச்சாரலில் நனைந்த போது
தாவனியின் முந்தானையை தந்தாளே!
தலையில் இட்டுக்கொள்வதற்கு,
என்ன சொல்வதென தெரியாது
நடுங்கியது குளிரில் உள்ளம்...
தென்னைமரத்தினடியில் சோறுண்ட போது
மட்டும்தான் அவளின் டிபன்பாக்ஸில்
நான் இருப்பதைக்கண்டேன்.
சாப்பிட்டு கழுவிட்டு
முகம் பார்க்க சொன்னபோது....
காதலியா? தோழியா
தெரியாமலே இருந்தேன்.
உன்னிடம் மௌனம்காட்டிய
அந்த ஞாபகங்களில்
நெஞ்சை குத்திக்கொண்டே இருக்கின்றன...
நிச்சயிக்கப்பட்டு விட்டபோது
நீ பார்த்த ஏக்கப்பார்வையில் தெரிந்தது
நம்மிடையே வீசிய
தென்றல் இனியும் திரும்புமா என்று?
கவிஞர்வாலிதாசன்
இழந்தவை ஏராளம்....
இனியும்
இழப்பதற்கு எதுவுமில்லை
தொலைந்தவை
தொலைந்தவை தான்
நமக்கு
மீண்டும் அவை
கிடைப்பதில்லை
போனவை
போகட்டுமே...
இனிமேல் புதுயுகம்
மலரட்டுமே...
புத்தாண்டே நீ பிறந்து
எங்கள்
பிணியெல்லாம் விலகட்டுமெ...
இராமசாமி ரமேஷ்
அளம்பில்.