எதிர்பார்ப்பு!.. அஞ்சல் அட்டை.. நேசம்
01.
எதிர்பார்ப்பு!
-----------------
அதிக நேரமொன்றும்
ஆகாதுதான்.
ஒருதொலைபேசி அழைப்பில்கூட
உறுதிசெய்து கொள்ளலாம்.
ஆயினும்,
எதிர்பாரா ஒரு தருணத்தில்
நீ
எடுத்துத்தரப் போகும்
பிறந்த நாள் பரிசைக்
காண
அமைதியாகவே
வருவேன்.
அநேக எதிர்பார்ப்புகளோடு.
02.
அஞ்சல் அட்டை
---------------------
நாளேடு தொடர்கதைக்கு
அனுப்பிய ஒன்று.
நேயர் விருப்பத்திற்கு
(வானொலியில் பெயர்!)
அனுப்பிய அத்தனை
ஆசைகள்.
நேர்முகத்தேர்வுத் தகவல்கள்
நிறையவே கொண்டு வந்தவை.
திரைப்படக் கலைஞர்களிடம்
புகைப்படம் கேட்டு
எழுதியவை.
படித்ததும் கிழிக்கப்பட்ட
உத்திரகிரியைப் பத்திரிக்கைகள்.
இப்படி
எதையெதையோ
ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது
அலுவலகக் கடித அலமாரியில்
அமைதியாய் வீற்றிருந்த - அந்த
மஞ்சள் நிற அஞ்சல் அட்டை.
03.
நேசம்
----------
செம்புலப் பெயல் நீர்
ஈரேழு ஜென்மம்
ஈருடல் ஓருயிர்
எவற்றிலும் நீ
எதுவரினும் நீ
எக்கணமும் நீ
இத்தனையும் பேசி
இனித்திருந்த நம் நேசம்
இப்போது இடம்மாறி
என்னவளாய் நீயின்றி
எவரோடோ நீயொன்றி.
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-25