ஞானத்திற்காக உரையாடியவர் – கவிஞர் பெரிய ஐங்கரன்
துவாரகன். யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றைச் சேர்ந்தவர். திருமணம் செய்து அல்வாயில் வசித்து வருகிறார். இயற்பெயர் சு. குணேஸ்வரன். கவிதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு, ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருபவர். இவரின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்ற கவிதைத் தொகுதி 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த கவிதை நூலாகத் தெரிவு செய்யப்பட்டு வடமாகாண இலக்கிய விருதினைப் பெற்றுக் கொண்டது. இவைதவிர ‘அலைவும் உலைவும்’ என்ற கட்டுரைகளின் தொகுதி ஒன்று இம்மாதம் வெளிவருகின்றது. ஏற்கனவே வெளிவந்த ‘வெளிநாட்டுக் கதைகள்’, ‘அம்மா – தேர்ந்த கவிதைகள்’, ‘கிராமத்து வாசம்’ ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியர். ‘வல்லைவெளி’ (www.vallaivelie.blogspot.com) என்ற தனது வலைப்பதிவில் தொடர்ந்து எழுதி வருகிறார். ஈழத்துச் சஞ்சிகைகள் பத்திரிகைகளிலும் புகலிடத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும், இணைய இதழ்களிலும் இவரது கவிதைகள் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. இவரை ஞானத்திற்காக மின்னஞ்சல் ஊடாக ஒர் உரையாடலை ஒழுங்கு செய்திருந்தோம்.
1. உங்களைப் பற்றிக் கூறுங்கள்?
நான் பிறந்து வளர்ந்தது கெருடாவில் என்ற கிராமத்தில். இது தொண்டைமானாறு செல்வச்சந்நிதிக்கு அருகிலுள்ள ஒரு பெரிய கிராமம். பெற்றோர் சுப்பிரமணியம் கமலாதேவி. குடும்பத்தில் மூத்த பையன். எனக்கு ஆரம்பக் கல்வியளித்தது கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலை. சாதாரணதரம் வரை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலும் உயர்தரத்தை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும் கற்றேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்பாகப் பயிலும் வாய்ப்புக் கிடைத்தது.
வவுனியாவில் முன்னர் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். தற்போது அம்பன் அ.மி.த.க பாடசாலையில் பணியாற்றி வருகிறேன்.
2. எழுத்துத்துறைக்குள் நீங்கள் வந்தது பற்றிக் கூறுங்கள்?
எனது வாசிப்புக்கு ஏற்ற சூழல் எனது குடும்பத்திலிருந்தே எனக்குக் கிடைத்தது. நான் அப்போது 6ஆம் 7 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த காலம். எமது வீட்டில் கடை வைத்திருந்தோம் அதன்போது வல்வெட்டித்துறைக்கு கடைக்குப் பொருட்கள் வாங்கச் செல்வது வழக்கம். வாரநாள்களில் அப்பா வைத்திருந்த ஏபோட்டி (A40) வானில் அச்சுவேலி, சுன்னாகம், மருதனார்மடம், சந்தைகளுக்குச் செல்வதும் வழக்கம். அப்போது அப்பா தரும் பணத்தில் காமிக்ஸ் மற்றும் படக்கதைப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வம் தொடர்ச்சியாக வாசிக்க வைத்தது. நான் அறிந்தவரையில் அப்போது அச்சுவேலியிருந்து வெளிவந்த ‘புத்தெழில்’ என்ற சஞ்சிகையும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘மல்லிகை’ யுமே நான் படித்த ஆரம்பகால இலக்கியச் சஞ்சிகைகளாக இருந்தன. இதன்பின்னர் கொழும்பிலிருந்து வந்த ‘குமரன்’ சஞ்சிகையும் படித்த ஞாபகம். இவ்வாறே எனது வாசிப்பு ஆரம்பமாயிற்று.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் படித்தபோது நண்பர்களின் தொடர்பினால் இந்த ஆர்வம் மேலும் வளர்ந்தது. எனது கவிதை அப்போது கல்லூரியில் இருந்து வந்த ‘அரங்கம்’ கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியாகியது. எனது ஊரில் இருந்த விவேகானந்தா சனசமூக நிலையத்திலிருந்து வெளிவந்த கையெழுத்துச் சஞ்சிகையான ‘அறிவொளி’ யிலும் சிறுகதைகள் எழுதியிருந்தேன். தொண்டைமானாற்றில் ‘கலை இலக்கிய சாகரம்’ என்ற அமைப்பினூடாக ‘சக்தி’ என்ற சஞ்சிகையை எனது இலக்கிய நண்பர்கள் மற்றும் பெரியவர்களின் ஆதரவோடு கொண்டு வந்தோம். இவையெல்லாம் எனது வாசிப்பையும் எழுத்தையும் வளர்க்க வித்திட்டவையாக நான் கருதுகிறேன். எனது எழுத்துப் பணிக்கான ஆரம்பங்கள் இங்கிருந்துதான் தொடங்கியது என்றும் நினைக்கிறேன்.
3. கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?
கவிதை ஒரு இலக்கிய வடிவம் என்றும் அது உணர்வின் வெளிப்பாடு என்றும் கூறுவது பொதுவான மரபு. ஆனால் அது மனித அனுபவங்களின் ஒட்டுமொத்த பெறுமானம் என்று கூறலாம். ஒரு நல்ல கவிதை நிச்சயம் எம்மைப் பாதிக்கும் அது எமக்குள்ளும் உணர்வுத் தொற்றலை ஏற்படுத்தும். வாழ்க்கையை, அதன் காலங்களை, இலக்கியப் போக்குகளையும் கூட அது வெளிப்படுத்தும்.
ஒரு கவிதை உருவாகும் கணங்கள் மிக முக்கியமானவை என்று எண்ணுகிறேன். எமக்கு முன்னால் ஒவ்வொரு கணங்களிலும் பல நிகழ்வுகள் நிகழ்ந்தேறி வருகின்றன. எரிநெருப்பு எம்மைச் சுடுவதும், ஒரு இனிய இசை எம்மைக் கொள்ளை கொள்வதும் மாறாக எரிநெருப்பே விருப்புக்குரியதாக மாறுவதும், இனிய இசை எம்மை வருத்துவதும் திரும்பவும் திரும்பவும் நிகழ்ந்தேறி வருகின்றன. இவற்றில் எல்லாம் கவிதையாவதுமில்லை. சில சமயங்களில் பஸ் யன்னலூடாகப் பயணிக்கும் குழந்தையொன்று முகம் தெரியாத எம்மைப் பார்த்து கையசைப்பது போல் கவிதை எமக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிடும். அது மகாகவியின் ‘புள்ளியளவில் ஒரு பூச்சி’ போலவோ அல்லது செழியனின் ‘கடலைவிட்டுப் போன மீன் குஞ்சுகள்’ போலவோ இருக்கலாம். கவிதையின் எல்லைகள் இழக்கப்படுவதும் அவை வரையறைகளை மீறிக் கடக்கப்படுவதும் நிகழ்ந்தேறி வருகின்றன. இதுபோலவே கவிதை உருவாகும் கணங்கள் சொல்லில் வடிக்க முடியாதவை. பூக்கள் மலர்வதைப் போல.
4. 2008 ஆம் ஆண்டு வடக்கு மாகாண இலக்கிய விருது உங்கள் கவிதை நூலுக்குக் கிடைத்தமை பற்றி…?
விருதுகள் பரிசுகள் கிடைப்பதும் கிடைக்காமல் விடுவதும் பெரிய விடயல்ல. ஆனால் ஒரு படைப்பாளி அல்லது ஒரு படைப்பு கவனிக்கப்படுவதற்கு இவை ஒரு வகையில் காரணமாக இருக்கின்றன. படைப்பாளியைத் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கின்றன. அந்த வகையில் எனது கவிதைகள் கவனிக்கப்பட்டிருக்கின்றன என்றுதான் கருதுகிறேன். நாங்கள் அனுபவித்த துன்பங்கள், வேதனைகள், சோதனைகள், இழப்புக்கள் எல்லாம் அந்தக் காலங்கள் ஊடாக எனது தொகுப்பிலும் பதிவு பெற்றுள்ளன.
ஒவ்வொரு கவிதைகளிலுமே எனது சூழலும் மக்களின் வாழ்வும் அடிநாதமாக இருந்துள்ளன. நான் தவழ்ந்து திரிந்த என்னூர், எனக்குக் கிடைத்த அனுபவங்கள், அவை என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் இந்தக் கவிதைகளில் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளன.
5. ஈழத்து விமர்சகர்கள் உங்கள் ஆளுமையை முற்று முழுதாக உணராத நிலையிலே உங்களைப் பற்றி ராஜமார்த்தாண்டன் ‘போர்ச்சூழலிலும் இயற்கையின்பால் குதித்தோடும் கவிமனம்’ என்று எழுதியது பற்றி?
ஒரு நூலுக்கான மதிப்பீடு என்பது அந்த நூலைப் பற்றிய சிறிய அறிமுகத்தைப் போடுவதுடனோ அல்லது மதிப்புரைகள் எத்தனை வெளிவந்தன என்பதைப் பொறுத்தோ கணக்கிடப்படுவதில்லை. பாரதி பற்றியோ கம்பன் பற்றியோ எழுத்தாளர்களை விட சாதாரண மக்கள்கூட நிரம்ப அறிந்து வைத்திருக்கிறார்கள். அதேபோல் ஒரு கவிதைத் தொகுப்புப் பற்றிய மதிப்பீடு என்பது எழுதியவற்றைக் கொண்டு மட்டும் கணக்கிடவும் முடியாது
தமிழகத்தில் காலச்சுவடு சஞ்சிகை இந்நூல் பற்றிய மதிப்பீட்டினை பிரசுரித்திருந்தது. அதனை ராஜமார்த்தாண்டன் எழுதியிருந்தார். ராஜமார்த்தாண்டன் அனுபவங்களுடன் கூடிய ஒரு முதிர்ந்த கவிஞர். ஈழத்திலக்கியத்தின்பால் ஈடுபாடு கொண்டவர் என்பதனை பல சந்தர்ப்பங்களில் அவரின் எழுத்துக்கள் ஊடாக அறிந்து கொள்ள முடிந்தது. அவர் எழுதிய ‘புதுக்கவிதை வரலாறு’ வல்லிக்கண்ணனின் நூலுக்குப் பிறகு முக்கியமானதொரு நூலாகும்.
ராஜமார்த்தாண்டன் 2000 ற்குப் பின்னரான ஈழத்துக் கவிதைப் போக்கைப் பற்றியும் அந்நூலில் எழுதியிருந்தார். போர்க்காலச் சூழலிலும் நாங்கள்கூட பல தொகுப்புக்களை வாசிக்கத் தவறியிருக்கிறோம். ஆனால் அவர் சில முக்கியமான கவிஞர்களை ஆரம்பத்திலிருந்தே எழுதியிருந்தார். முருகையன் முதல் எம்.ஏ. நுஃமான், சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம், வ.ஐ.ச.ஜெயபாலன், அ.யேசுராசா, தா.இராமலிங்கம், சேரன், சண்முகம் சிவலிங்கம், சு.வில்வரத்தினம் ஆகியோரைப் பற்றி ஆழமான பார்வையைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் பின்னவர்களான கருணாகரன், திருமாவளவன், அனாமிகன், அலறி, தீபச்செல்வன் ஆகியோரையும் இனங்கண்டிருந்தார்.
அந்த அடிப்படையில்தான் எனது தொகுப்பு வெளிவந்து சில மாதங்களிலேயே தனது மதிப்புரையை எழுதியிருந்தார். இதிலிருந்து ஈழக் கவிதைகளை அவர் எவ்வளவு நுட்பமாக அவதானித்து வந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.
ஈழத்தைப் பொறுத்தவரையில் விமர்சகர்கள் படைப்பாளிகள் உட்பட பலரிடம் இத்தொகுப்பு சென்று சேர்ந்திருக்கிறது.
விமர்சகர் கலாநிதி செ. யோகராசா ஈழத்துக் கவிதைகள் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். அவர் தனது அண்மைக்கால இரண்டு கட்டுரைகளில் இக்கவிதைகள் பற்றி சிலாகித்திருக்கிறார். ஈழத்தில் முதலில் மேமன்கவி மல்லிகையில் எழுதியிருந்தார். ஞானத்தில் குறிஞ்சிநாடன் ஒரு அறிமுகத்தினை எழுதினார். அதன்பின்னர் புலவர் சீடன் இந்நூல் பற்றி நீண்டதொரு விமர்சனத்தினை திண்ணையில் எழுதியிருந்தார். தீபச்செல்வன் கலைமுகத்தில் எழுதிய விமர்சனம் பல இணைய சஞ்சிகைகளில் மீளபிரசுரிக்கப்பட்டன. மற்றும் இராஜேஸ்கண்ணன் அறிவோர் கூடலில் இது பற்றிய விரிவான மதிப்பீடு ஒன்றினைச் செய்திருந்தார். செ. சுதர்சன்; ராஜமார்த்தாண்டன் பற்றி ஞானத்தில் எழுதிய கட்டுரையிலும் இத்தொகுப்பின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டிருந்தார். மற்றும் இணையத்தளங்களிலும் அதிகமான ஈழத்துச் சஞ்சிகைகளிலும் அறிமுகக் குறிப்புக்களை வேறும் பலர் எழுதியுள்ளனர்.
6. படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலாவகமாக கையாள முடிகிறது?
கவிஞன் எப்போதும் நான் படிமத்தை வைத்து கவிதை எழுதப்போகிறேன். இல்லை குறியீட்டில் ஒரு கவிதை எழுதிக் காட்டுகிறேன் பார் என்று எழுதுவதில்லை. படைப்புக்கான உந்துதல் ஏற்படும் நேரங்களில் எல்லாம் எழுதிக் கொண்டிருப்பான். நாங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர் படைப்புக்களை வாசிக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு எமக்கும் படைப்புக்கான உந்துதல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதன் நோக்கம் கொப்பி பண்ணுவது அல்ல. குறித்த படைப்பின் வாசிப்பு அனுபவம் எமக்குள் இருக்கும் அனுபவங்களை எழுத வைக்கிறது. அது எமது சொந்த மொழியில் வருகிறது. அந்நேர உணர்வுநிலை, அவனின் மொழியாளுமை, கலைநுட்பம் எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல படைப்பை உருவாக்கும் என்று நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் எந்த இலக்கியமாக இருந்தாலும் அதில் ஒரு பயிற்சி வேண்டும் என்று எண்ணுகிறேன். கவிதை ஒன்றினை முதலில் எழுதுவதோடு அது முடிந்து விடுவதில்லை. செம்மைப்படுத்துதல் என்ற ஒன்று மிக முக்கியம். அதனூடாக சிலவேளை எனது கவிதைகளில் படிமம் குறியீடு என்பன இலாவகமாக வந்திருக்கலாம்.
நீங்கள் வாசித்தால் தெரியும் அ. முத்துலிங்கத்தின் ஒரு நான்கைந்து வருடங்கள் முந்தைய படைப்புக்கும் தற்போதைய அவரின் படைப்புக்கும் இடையில் சில வித்தியாசங்களை கண்டு கொள்வீர்கள். அவர் தனது கதைகளில் பயன்படுத்தும் உவமை மற்றும் உபகதைகள் பிறமொழியில் தான் பெற்ற அனுபவங்களை உள்வாங்கியதாக இருக்கும். அதேபோல்தான் எனது வாசிப்பு, எனக்குக் கிடைத்த சூழல், எனது கவிதைகளில் படிமங்களையும் குறியீடுகளையும் கொண்டு வந்து சேர்க்கிறது போல் தெரிகிறது.
கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இருந்தது போல் அல்ல இன்றைய இலக்கியம். அது இன்று பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்கிறது. நவீன இலக்கியக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொள்கிறது. சர்ரியலிசம், உளவியல் எல்லாம் இன்று இலக்கியத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவை எல்லாம் எங்கு எங்கு எத்தனை வீதத்தில் வரவேண்டும் என்பது படைப்பையும் படைப்பாளியின் மனநிலையையும் அவனது வாசிப்பையும் பொறுத்துத்தான் இருக்கிறது.
7. நீங்கள் செய்த புலம்பெயர் இலக்கியம் தொடர்பான ஆய்வு பற்றிக் கூறுங்கள்?
புலம்பெயர் இலக்கியப்பரப்பில் பார்க்கவேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் சில ஆரம்ப முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.
புகலிடத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் படைப்புக்களைப் பெற்றுக்கொள்வது இதன் முதல் வேலையாக இருக்கின்றது. அவை பற்றிய அறிமுகத்தை முன்வைப்பது அதன் இன்னொரு கட்டமாக இருக்கின்றது. ஏனையவை எல்லாம் அதற்குப் பின்னால்தான்.
1983 இல் இருந்து வெளிவந்தவற்றுள் சில படைப்புக்களைப் பற்றிய அறிமுகங்கள், விமர்சனங்கள், அவை பற்றிய கட்டுரைகளை அவ்வப்போது எழுதியிருக்கிறேன். புலம்பெயர் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆளுமைகள் பற்றியும் நோக்கியுள்ளேன். இந்த வகையில் நான் அவ்வவ்போது எழுதியவற்றை ‘அலைவும் உலைவும்’ என்ற நூலாகத் தொகுத்துள்ளேன். அந்நூல் இம்மாதம் வெளிவருகின்றது
‘20 ஆம் நூற்றாண்டில் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் கவிதை புனைகதைகள்’ என்ற முதுதத்துவமாணி (M.Phil) ஆய்வேட்டினை 2006 இல் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் நெறியாள்கையில் செய்து முடித்துள்ளேன். இதில் கடந்த கால்நூற்றாண்டாகப் புகலிடத்திலிருந்து வெளிவந்த படைப்புக்களை நோக்கியுள்ளேன்.
இவை தவிர கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக புகலிடத் தமிழ் நாவல்களை தனியாக நோக்கும் முயற்சியில் தற்போது முயன்றுள்ளேன். இன்றுவரை புகலிடத்திலிருந்து ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள்/குறுநாவல்கள் வெளிவந்துள்ளன. அவை பற்றி முழுமையாக இதுவரை நோக்கப்படவில்லை. அதனூடாக புலம்பெயர் படைப்பாளிகளில் முக்கியமான சிலர் இனங்காணப்பட வேண்டியுள்ளனர். குறிப்பாக நாவல்களைப் பொறுத்த வரையில் ஷோபாசக்தி, செழியன், கருணாகரமூர்த்தி, இ. தியாகலிங்கம், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமல் குழந்தைவேல் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்நாவல்கள் ஊடாக புலம்பெயர்ந்த எமது சமூகத்தின் வாழ்நிலை, அவர்களின் பண்பாட்டுப் பேணுகை முதன்மையான விவாதப் பொருளாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இவை எல்லாம் புலம்பெயர் இலக்கியத்தில் நான் மேற்கொண்டிருக்கும் சில முன்முயற்சிகள் மேலும் பல வேலைகளைச் செய்யவேண்டியுள்ளது. எதிர்காலத்தில் அவை கைகூடும் என்று எண்ணுகிறேன்.
8. புலம்பெயர் கவிஞர்களில் 2000 ற்குப் பின்னர் யார் யாரைக் குறிப்பிட்டுக் கூறுவீர்கள்?
எப்பொழுதும் ஒரு படைப்பாளியை ஆண்டுக் கணக்கை வைத்து மதிப்பிட முடியாது. வேண்டுமானால் ஒரு வசதிக்காக குறுக்கிக்கொள்ளலாம்.
1983 இல் இருந்து பல கவிஞர்கள் எழுதிவருகிறார்கள். அவர்களில் பலரும் பல்வேறு அரசியல் நெருக்கடியான காலங்களில் எழுதியவர்கள், மற்றும் சில விடயத்தை முதன்மைப் படுத்தியவர்கள் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கலாம்.
இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே இங்கு முக்கியமாக இருக்கிறது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு பிரச்சனைகள் மையப்பொருளாக இருந்துள்ளன. அதனை விவாதப் பொருளாக்கியும் அந்தக் காலங்களைப் பதிவுசெய்வதற்காகவும் பலர் முயன்றுள்ளார்கள்.
ஆரம்பகாலங்களில் எழுதிய சேரன், செழியன், செல்வம், இளவாலை விஜயேந்திரன், வ.ஐ.ச. செஜயபாலன், கி. பி அரவிந்தன், அருந்ததி, பாலமோகன் (ரவி) போன்றோர் ஒரு கட்டத்தில் முதன்மை பெற்றிருந்தார்கள். இன்னொரு கட்டத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன், தா. பாலகணேசன், திருமாவளவன், சக்கரவர்த்தி, இளைய அப்துல்லா, பிரதீபா, மைத்திரேயி போன்றோரும் இப்போது இளங்கோ, வாசுதேவன், ஆழியாள், றஞ்சினி, இன்னும் பலர் இருக்கிறார்கள். இப்படிக் கூறிக்கொண்டு போனால் அது ஒரு பட்டியற்படுத்தலாக இருக்கும். ஒவ்வொருவரிடமும் தனித்துவமான சில போக்குகள் இருக்கின்றன. அவை தனித்து நோக்கப்படவேண்டியவை.
புதியவர்கள் பலர் இணையத்தளங்களிலும் வலைப்பதிவுகளிலும் காத்திரமாக எழுதி வருகின்றனர். ஆனால் அவை தொகுப்பு வடிவம் பெறும்போதுதான் கூடுதலான வாசகர்களைச் சென்று சேரக்கூடியதாகவும் மதிப்பீட்டினை முன்வைக்கக்கூடியதாகவும் இருக்கும்.
9. புலம்பெயர் எழுத்தாளர்கள், ஈழத்துக் கவிஞர்கள் எல்லோருக்குமே அண்மைக்காலம் வரை போரியலே பாடுபொருளாக இருந்தது. போர் முடிந்து விட்ட சூழ்நிலையில் பாடுபொருள் எவ்வாறு மாறப்போகிறது?
புலம்பெயர் கவிஞர்கள் எல்லோருக்கும் போரியலே பாடுபொருளாக இருந்தது என்பதை முற்று முழுதாக ஏற்க முடியாது. அவர்களின் கவிதைகளில் போரியல் பற்றிப் பாடுவதும் ஒரு அங்கமாக இருந்துள்ளது. அடக்குமுறையையும் அதிகாரத்தையும் பொதுவாக எல்லோரும்தான் பாடினார்கள். மற்றும்படி அவர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் எதிர் கொண்ட பல பிரச்சினைகளையும் அனுபவங்களையும் கூடப் பாடியுள்ளார்கள். அகதி அனுபவம், தொழிற்தள நெருக்கீடுகள், இனவாதம், நிறவாதம், பண்பாட்டு அதிர்ச்சி, தனிமை, அந்நியம், அனைத்துலக நோக்கு என்றவாறு அவர்களின் கவிதைப் பாடுபொருள் விரிந்து சென்றுள்ளது.
ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரையில் மழை விட்ட பின்னரும் தூறல் விட்டபாடில்லை என்பது போல் எமது பிரச்சனைகள் இன்னமும் முழுதாகக் தீரவில்லை. மக்கள் மீளவும் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்லவேண்டும். அவர்கள் இழந்தவை என்றுமே ஈடு கட்டமுடியாதவை. அது உயிராக இருக்கலாம். அல்லது அவர்கள் சிறுகச் சிறுகச் சேமித்த சொத்துக்களாக இருக்கலாம்.
ஆனால் அந்தப் பேரின் வடு இன்னமும் எங்களை விட்டு முழுதாக நீங்கிவிடவில்லை. மனங்கள் ஆற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதும் தெரியாது.
எனவே அந்த போரின் வடுவும் மக்களின் வாழ்வுப் பிரச்சனைகளும் இன்னமும் கவிதைகளில் தொடரத்தான் செய்யும் என்று நினைக்கிறேன். எமது அடுத்த சந்ததிகளாவது இந்தக் காயங்களைச் சுமக்காமல் இருக்கவேண்டும்.
ஒவ்வொரு காலங்களிலும் மக்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அவை தீர்க்கப்படும்வரை அவை பற்றி இலக்கியங்களில் பதிவுபெற்றவண்ணம்தான் இருக்கும். முரண்பாடு இல்லாமல் வாழ்க்கை இல்லைத்தானே. தமிழ் இலக்கிய வரலாறே இதற்குச் சான்றாகவுள்ளது.
10. தமிழ்நாட்டுக் கவிஞர்கள் ஈழத்து அறிஞர்களிடம் அணிந்துரை வாங்கிய காலம்போய் இன்று ஈழத்துக் கவிஞர்கள் சினிமாப் பாடலாசிரியர்களிடம் அணிந்துரை வாங்கி மகிழ்கிறார்கள். இத்தகைய போக்கு யாழ்ப்பாணத்தில் அதிகரி த்து வருகிறது. இது ஆரோக்கியமான சூழ்நிலையா?
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல. வேறு பிரதேசங்களிலும் இந்த நிலை உள்ளது.
ஒன்றை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எப்போதும் இலக்கியத்தில் வெகுஜனத்தன்மை, சீரியஸ் தன்மை என்ற இரண்டு போக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறன. வெகுஜனத்தன்மைக்கு பிரமுகர்த்தனமும் மலினமும் தொடர்ந்த வண்ணமிருக்கும். அதன் நோக்கமே வியாபாரம்தான். மற்றைய சீரியஸ் தன்மையில் காத்திரமும் சமூகநோக்கும் மேலோங்கியிருக்கும் பிரமுகத்தனத்திற்குப் பதிலாக ஒருவரின் ஆளுமையே முதன்மை பெற்றிருக்கும்.
இந்த இரண்டும் தனித்தனியே பயணிக்கும்போது பிரச்சனையில்லை. ஏனென்றால் எல்லாப் படைப்புக்களுக்குமே எப்போதும் ஒரு வாசகர் கூட்டம் இருந்துகொண்டிருக்கும். அதேநேரம் சமூக இயங்கியல் என்பதும் தனியே ஒரு பக்கத்தால் மட்டும் நிகழ்வதும் இல்லைத்தானே. அது சினிமாவாக இருக்கட்டும் இலக்கியமாக இருக்கட்டும். எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு பொறுப்புணர்வு மற்றும் கடமைகள் இருக்கின்றன. இங்கு ஒரு வெகுஜன சஞ்சிகை தன் வாசகனுக்கு நல்ல விடயங்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக காத்திரமான விடய
தானங்களைச் சேர்க்கும்போது அந்த வாசகன் ஒரு தீவிரமான வாசிப்புநிலைக்கு வருவதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் அதனை யார்தான் ஏற்படுத்துகிறார்கள். அதிகமானவர்கள் பணம் பண்ணுவதில்தான் குறியாய் இருக்கிறார்கள்.
இந்த இரண்டு போக்கையும் குளப்புபவர்கள்தான் ஒரு வகையில் பிரச்சனைக்குரியவர்கள். காத்திரமான ஒரு படைப்பைச்செய்து விட்டு எதற்காகப் பிரபலங்களைத் தேடி ஓடவேண்டும். ஒரு மட்டமான படைப்புக்கு பிரபலமான ஒருவரோ அல்லது தீவிரமாக செயற்படும் ஒருவரோ அணிந்துரை கொடுப்பதால் அந்தப் படைப்பு முதன்மை பெறும் என்று நினைப்பது முட்டாள்த்தனம். நல்ல படைப்புக்கள் எப்படியாயினும் கண்டுகொள்ளப்படும். அது வாசகர்களைச் சென்று சேரும்.
சினிமாப் பாடல் ஆசிரியர்களைக் குறை சொல்ல முடியாது. இதற்குள் இருந்து வெளிவந்தவர்கள் கூட இருந்திருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அதற்குப் பின்னர் மேத்தா, அப்துல் ரகுமான், கவிஞர் தாமரை ஆகியோர் இவ்விதத்தில் முக்கியமானவர்கள். மற்றும்படி இன்று எழுதிக்கொண்டிருக்கும் நல்ல கவிஞர்கள் கூட அதிலிருந்து விடுபட முடியாமல் இருக்கிறார்கள்.
இலக்கியத்தில் இந்த நிலை நீடித்தல் ஆரோக்கியமான போக்கல்ல.
11. எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது?
உங்களுக்குத் தெரிந்திருக்கும் எமது பல படைப்பாளிகள் தாங்கள் எழுதியவற்றையே திருப்பிப் பார்ப்பதில்லை. ஆய்வாளர்கள் விமர்சகர்கள் மற்றும் இலக்கியத் தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் வாசிப்பதே மிகக் குறைவு என்பது அவர்களது பேச்சினூடாகவும் எழுத்தினூடாகவும் தெரிகிறது. யாராவது ஒரு குற்றம் கண்டுபிடித்துவிட்டால் மட்டும் தேடிப்பிடித்து தாம் பெரிய படிப்பாளிகள் போல் பந்தா காட்டுவார்கள். அதுவும் குற்றம் கண்டுபிடித்து அந்தப் படைப்பாளியை எந்தெந்த விதத்தில் தமது சொந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தலாம் என்றே எதிர்பார்த்திருப்பார்கள். இலக்கியத்தின் நவீன போக்குகளைக் கூட உணராத நிலையிலே எப்போதே வாசித்ததைக் கொண்டுதான் பலர் இங்கு தம் நிலையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்?
உண்மையில் இந்த நிலை மாறவேண்டும். இலக்கியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் முதலில் ஈழத்துப் படைப்புக்களைப் படிக்க வேண்டும். அது நிறைவானதோ குறைவானதோ அதுபற்றிய கருத்துக்கள் வெளிவரவேண்டு;ம். அதைவிடுத்து தனக்கு வேண்டியவரை தலையில் தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவதும் பிடிக்காதுபோனால் தமது காழ்ப்புணர்வைக் கொட்டுவதும் நீங்க வேண்டும் இது இப்போது மட்டும் புதிதானதுமல்ல.
பாடசாலை மாணவர்களின் தமிழ் பாடத்திட்டத்தில் கூட இடைநிலைக்கல்விமுதல் உயர்தரம் வரை தரமான பாடத்திட்டம் அண்மைக்காலங்களில் புகுத்தப்பட்டிருப்பது இளையவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதற்காகவே. இதனை உணர்ந்து பலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. இல்லாது போனால் ஒரு வறண்ட இலக்கியத் தலைமுறைதான் எதிர்காலத்தில் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டியிருக்கும்.
ஆனால் பல புதியவர்கள் தற்போது இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியூட்டக்கூடியதாகவுள்ளது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். தீவிரமாக வாசிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். உலக இலக்கியப் போக்குகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இவை நீடிக்க முதிர்ந்த படைப்பாளிகளும் கூட ஒன்றினைந்து செயற்பட்டு எமது படைப்புக்கள் உலகத் தரத்துக்கு உயர பல பணிகளை தொடர்ச்சியாக செய்யவேண்டும். அது காலத்தின் கட்டாயமானதும் கூட. ஏனென்றால் எமது ஒருகட்ட இலக்கிய முயற்சி சர்வதேசியத் தளத்தில் இருந்துதான் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அதுதான் புலம்பெயர் இலக்கியம். அதற்குச் சமாந்தரமாக ஈழத்திலும் படைப்புக்கள் முன்னோக்கி நகர வேண்டும்.
நன்றி :- ஞானம், இதழ் 114, நவம்பர் 2009, கொழும்பு ---