"வெட்டப்பட்ட நகங்களை விடுத்து விரல்களைப்பாதுகாப்போம்"
ஈழத்தின் தென்கிழக்கு நிந்தவூரை சேர்ந்தவர் ஷிப்லி. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்கிறார். இதுவரை 3 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். 2002 இல் சொட்டும் மலர்கள் 2006இல் "விடியலின் விலாசம்" 2008 இல் "நிழல் தேடும் கால்கள்".2007 இல் "தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவசியம்" என்ற ஆய்வு தேசிய சமாதான பேரவை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தினால் சிறந்த ஆய்வுகளுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் இங்கிலாந்தின் "பிறட்போட்" பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட முரண்பாட்டு முகாமைத்தவம் என்கிற பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டார். போர் மற்றும் சமூகப்பிரச்சினைகளிலிருந்து எழுதப்படுகிற இவரின் கவிதைகள் ஓரளவு வாசிப்பிற்கு கிடைத்து வருகிறது. நமது இளைய எழுத்துசூழலை செம்மைப்படுத்தும் எண்ணத்துடன் நானும் ஷிப்லியும் மின்னஞ்சல் ஊடாக உரையாடினோம்.
உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்
நான் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை।இரண்டு சகோதரர்கள்।சகோதரிகள் இல்லை।தந்தை கணக்காளர்।தாய் இல்லத்தரசி।படித்தது எல்லாமே சொந்த ஊரான நிந்தவூரில்தான்.பாடசாலைக்காலங்களில் புறக்கிருத்திய பணிகள் எல்லாவற்றிலும் ஈடுபட வாய்ப்புக்கள் கிடைத்தன.நாடகம், பாடல், கவிதை, கட்டுரையாக்கம், ஆங்கில மொழித்தின போட்டிகள், தமிழ்த்தின போட்டிகள், விளையாட்டு, செஞ்சிலுவைச்சங்கப்பணிகள், சாரண இயக்கம் போன்ற தளங்களில் இயங்க பாடசாலைக்களம் முழுமையாக உதவியுது. உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் (2003) சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான பிறகு பாடசாலை அனுபவங்கள் எனது அடுத்தடுத்த சின்னச்சின்ன இலக்கிய நகர்வுகளை இலகுவாக முன்னெடுக்க உதவியது.பல்கலைக்கழகத்தில் தமிழச்சங்கம், முஸ்லிம் மஜ்லிஸ், மாணவர் பேரவை, மாற்றுக்கருத்துக்களுக்கான சினிமா அமைப்பு, தகவல் தொழிநுட்ப சம்மேளனம் போன்ற தளங்கள் நிறைய பட்டை தீட்டின.முகாமைத்துவ பீட தகவல் தொழிநுட்ப விஷேட துறையில் தற்போது பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் தறுவாயில் உங்களோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன்
ஷிப்லியின் எழுத்து தொடக்கம் எப்படி தொடங்குகிறது
1996 இல் பிஞ்சு என்ற சிறுவர் சஞ்சிகையில் சில சின்னச்சின்ன ஆக்கங்களை எழுதியிருந்தேன்.அப்போது எனது பெயர் பிரசுரமாக வேண்டும் என்ற சிறு பிள்ளைத்தனமான ஆசையைத்தவிர வேறு தரமான படைப்புக்களை படைக்கவேண்டும் என்ற மனநிலை இருக்கவில்லை.(அப்போது 11 வயது என்பதால் அதனை கீழ்த்தரம் என்பது சற்று மிகை என்று தோன்றுகிறது).பின்னர் நிறைய வாசிக்கும் ஆர்வமும் தமிழ்ப்பாடத்தில் எனக்கிருந்த அதீத ஆர்வமும் வாசகனாய் வளர்ந்து கொண்டிருந்த என்னை எழுதத்தூண்டியது. பின்னர் சில காலம் சக்தி வானொலியில் நிறைய கவிதைகள் பிரசுரமாகியிருந்தன.இடையில் (2002 இல்) "சொட்டும் மலர்கள் " என்ற 07 நண்பர்களின் கவிதைகளைத்தொகுத்து நூலாக வெளியிட்டேன்.அதற்குக்கிடைத்த வரவேற்பும் ஊக்கமும் தொடர்தேர்ச்சியான எழுத்தை நோக்கி என்னை இழுத்துச்சென்றது.அதன்பின் தினகரன், மல்லிகை, சுடர் ஒளி, நவமணி, படிகள், நிஷ்டை, அதிர்வு, இணையத்தளங்கள் போன்றவற்றில் தற்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நீங்களும் ஈழத்தின் அனேகமான எழுத்தாளர்களைப்போல போர் எழுத்தக்களை எழுத முற்படுவதுபோல தெரிகிறது அதை பற்றி சேலாம்
ஈழத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் போரும் அதன் தாக்கங்களும் ஒரு சமூக உறுப்பினராக என்னை நிறைய பாதித்திருக்கிறது.அன்றாடம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் கோரச்சம்பவங்கள், படுகொலைகள், கற்பழிப்புக்கள், குண்டுவெடிப்புக்கள் என்னை மட்டுமல்ல எல்லோரையும் வெகு தூரம் பாதிக்கவல்லன. படைப்பு என்பது காலத்தைச்சுட்டும் கண்ணாடி என்பார்கள்.அந்தவகையில் இன்றைய ஈழத்துச்சூழலில் வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களில் பெரும்பான்மையானவை போர்த்தாக்கம் குறித்தவைகள் என்பதில் இரு வேறு வாதங்கள் இருக்கப்போவதில்லை. அவைகள் நமது அவலங்களின் மிக முக்கிய ஆவணங்கள்.வெளியுலகுக்கு நமது இருப்பின் தடுமாற்றங்கள் குறித்து அவைகள்தானே வியாக்கியானம் செய்கின்றன?அந்த வகையில் நானும் போர் குறித்து எழுதுவது இயல்பானதுதானே..?நீங்களும் போர் விளைவுகளை பதிவு செய்யும் படைப்புக்களைத்தானே அதிகம் எழுதுகிறீர்கள்?போரைத்தவிர்த்து வேறெந்தப்பிரச்சினைகள் பற்றியும் நீங்கள் எழுதவில்லை இல்லையா?
போர் பற்றிய தாக்கம் உங்களிடம் எப்படியிருக்கிறது. போர் எழுத்தை உங்களால் திருப்தியாய் எழுத முடிகிறதா?
யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்றும் விரைவில் சமாதான இலங்கை மலர வேண்டும் என்றும் தினமும் இறைவனைப்பிரார்த்திப்பவன் நான்.லட்சக்கணக்கான உயிர்களைக்காவு கொண்ட பின்தான் சமாதானம் பூக்குமாயின் அப்படியொரு சமாதானமே வேண்டாம் என்றும் சிந்தித்திருக்கிறேன்.இங்கு மட்டுமில்லை இந்தியா, ஈரான், பாலஸ்தீனம், ரஷ்யா போன்ற உலக நாடுகளில் இடம்பெறும் யுத்தங்களும் கண்டிப்பாக எல்லா மனங்களையும் பிழியவல்லன.போர் எழுத்துக்களை என்னால் நூற்றுக்கு நூறு சரியாக பிரசவிக்க முடியவில்லை என்றே நான் எண்ணுகிறேன்.எனது கவிதைகளைப்படித்து நீங்களே அதை முடிவு செய்யுங்கள்.
தற்பொழுது ஈழத்தில் இடம்பெறுகிற போரினால் தமிழ் மக்களது நிலமை குறித்த என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு நிறைய இழந்துவிட்டார்கள்.உடமைகள், வீடு, நிலம், ஊர், நாடு, உறவுகள், உரிமைகள், உயிர்கள் என்று நிறைய இழந்துவிட்டார்கள்.சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழ்வதைவிட வலி தரும் விடயம் வேறென்ன இருக்க முடியும்?1948 இல் சுதந்திரம் கண்ட தேசம் இது.ஆனால் தமிழ்மக்களது சுதந்திரம் கேள்விக்குறிதான்....போக்குவரத்து, உணவு, கல்வி, வாழ்விடம் இப்படி அத்தியாவசிய தேவைகளைக்கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பது எத்துணை கவலை தரவல்லது..?ஒரு அடிமைக்கு கிடைக்கும் வாய்ப்புக்களும் சுதந்திரமும் கூட அவர்களுக்கு மறுக்கப்படும் நிலை கல்நெஞ்சக்காரனையும் கண்கலங்கச்செய்து விடும்.விடிவு விரைவில் பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கை எல்லோரையும் போலவே எனக்கும் இருக்கிறது. தேசிய சமாதான பேரவை 2006 இல் பொலனறுவையில் நடாத்திய சமாதானம் குறித்த கருத்தரங்கொன்றில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்ட போது நானும் மிகுந்த வேதனையுடன் பங்கேற்றிருந்தேன்.அப்போதைய அவர்களின் தகவல்களின்படி "யுத்த இழப்புக்களும் சவால்களும் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இழப்புக்கள் பற்றிய தகவல்களை இங்கு பகிர்வது பொருத்தமென எண்ணுகிறேன்.இதுவரை யுத்தத்தினால் கொல்லப்பட்ட மக்களின் வாழ்வாதார மொத்த ஆயுள் இழப்பு 18 லட்சம் ஆண்டுகள்.கொல்லப்பட்டவர்களின் தொகை 70000.இதில் பாதிப்பேர் அப்பாவி பொதுமக்கள்.130000 குடும்பங்கள் அப்பாவி மக்கள். மேலும் யாழில் மட்டும் விதவையாக்கப்பட்ட தழிழ் பெண்கள் 20000.12 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.இப்படி தமிழ் மக்களின் இழப்புக்கள் சொல்லொணா துயர் கொண்டவை.இவை தவிர்த்து யுத்தத்தின் மொத்தச்செலவு 2451 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.யுத்தத்துக்காக கொள்வனவு செய்யும் ஒரு ஹெலிகொப்டரின் விலைக்கு 20 வைத்தியசாலைகள் அமைக்க முடியும்(583140000 இலங்கை ரூபா).இப்படியே இழப்புக்களை பட்டியலிட்டுப்போனால் தமிழ் மக்களின் பொருளாதாரம் எத்தகைய பின்னடைவை தந்திருக்கிறது என்பதை சுலபமாக விளங்கிக்கொள்ளலாம்.
போரினால் அப்பாவி முஸ்லீம்கள் சிங்கள மக்க்ள் பாதிப்படைவது பற்றி என்ன உணர்கிறீர்கள்.
ஒரு பெண்கவிஞரின் கவிதைதான் நீங்கள் இந்தக்கேள்வியைக்கேட்கும்போது எனக்கு விடையாகத்தோன்றியது.
"யுத்தம்
வெல்பவர்களையும்
தோற்பவர்களையும்
விட்டு விட்டு
வாழ்பவர்களையே அழிக்கிறது"
இக்கவிதை வரி அப்பாவி மக்களின் அநியாயச்சாவுகளை அப்பட்டமாய் எடுத்தியம்புகிறது இல்லையா?நிம்மதியாக இந்த நாட்டில் எவராலுமே வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலை இன்றுள்ளது.உயிருக்கு உத்தரவாதமே இல்லாத சூழல்.................. சிங்களவர்களோ, தமிழர்களோ, முஸ்லிம்களோ..யாராயினும் எல்லோரும் மனிதர்கள்தானே... நாமெல்லாம் ஒருவருக்கொருவர் சகோதரர்கள்.நமது சகோதரன் துன்புறும்போது கைகொட்டிச்சிரிப்பதும் அவனைக்கொன்று விடத்துடிப்பதும் ஐந்தறிவுகளிடம் கூட இல்லாத பண்புகள்.இதனால் பாதிப்புறுவது நமது வாழ்க்கைத்தரமும் தேசத்தின் வளர்ச்சியும் தானே..?நமது தாயின் சேலை உருவப்படும்போது நாம் பிரிவினையைத் தூக்கிக்கொண்டாடுவது எந்த வகையில் நியாயமானது? அதிலும் குறிப்பாக அப்பாவி முஸ்லிம்கள் ஆயுதமேந்தாமலே அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.யாழ்ப்பாணத்தின் விளாங்குளி மினுக்கன் வட்டக்கண்டல் ஆண்டான்குளம் பள்ளிவாசல்பிட்டி சொர்ணபுரி போன்ற கிராமங்களிலும் முல்லைத்தீவு வவுனியா போன்ற நகரங்களிலும் நிரந்தரமாக சொந்த பூமியில் வாழ்ந்த வந்த இவர்கள் 1990 ஒக்டோபரில் பலவந்தமாக கட்டாய வெளியேற்றத்துக்கு ஆளாகி இற்றை வரை தங்கள் வாழ்வாதாரத்தை சரியான முறையில் அமைக்கமுடியாமல் புத்தளம் அநுராதபுரம் போன்ற பகுதிகளில் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த துரோக வரலாற்றுக்கு வயது பதினெட்டு. காத்தான்குடி ஓட்டமாவடி ஆகிய பள்ளிவாசல்களில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கதறக்கதற சுட்டுக்கொல்லப்பட்டதை எப்படி மறக்க முடியும்? மிக அண்மையில் அக்கரைப்பற்று பள்ளிவாசல்களில் குண்டுவைத்து அச்சுறுத்திய சம்பவங்கள் அப்பாவி மக்களின் நிம்மதியான வாழ்வை வினாக்குறியாக்கியிருக்கின்றன.சிங்களவர்களும் பொது இடங்களில் குண்டுவெடிப்புக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் விட அப்பாவி தமிழர்களின் துயர் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை. கற்பழிக்கப்பட் அப்பாவி தமிழர்களில் கர்ப்பிணிகளும் அடங்கியிருந்தனர் எனும்போது இதற்குமேல் என்னால் எதுவுமே பேச முடியவில்லை.கோணேஸ்வரியின் சாவு இதுவரை இந்த உலகின் எவருக்குமே நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை (கற்பழிக்கப்பட்டு யோனிக்குள் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டவள்).தமிழர்களின் ஏனைய இழப்புக்களை இதே செவ்வியில் பிறிதொரு இடத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
தமிழ் கவிதை தமிழ் மொழி இவைகளுடனான உங்கள் நெருக்கம் பற்றி சொல்லுங்கள்?
கவிதைகளுடன் நீண்ட காலமாக நெருக்கம் இருக்கிறது.தமிழ்மொழியைப்பொறுத்தவரை க.பொ.த (சா-த) வரை தமிழ் கற்றிருக்கிறேன்.அவ்வளவே..தமிழ்க்கவிதைகளில் மட்டுமன்றி அரபு, பிரெஞ்சு, ஆங்கில மொழிக்கவிதைளின் மொழிபெயர்ப்புக்கவிதைகளிலும் நிறைய ஈடுபாடு உள்ளது.இவைதவிர வாசிப்பின் வழியாகவே தமிழின் பல்வேறு பரிணாமங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்.
உங்களால் இன்னும் சரியான எழுத்தை எட்ட முடியவில்லைபோல படுகிறது வாசிப்பு எழுத்து உரையாடல்கள் எப்படி இருக்கிறது.
எந்த ஒரு படைப்பாளியாலும் தான் எழுத்தத்துறையின் சரியான இலக்கை எட்டிவிட்டோம் என்று திட்டமாகச்சொல்ல முடியாது என்றே நான் கருதுகிறேன்.ஏனெனில் காலவேகமும் சிந்தனைப்பரப்பின் அசுர வளர்ச்சியும் தொடர்தேர்ச்சியான தேடலுக்கு வித்திட்ட வண்ணமுள்ளது. அவைகளை நமது ஆளுமையின் வளர்ச்சிக்கு நாம் பயன்படுத்தி நமது எழுத்தின் வீரியத்தை வளர்த்துச்செல்லவேண்டிய தார்மீகக்கடப்பாடு எல்லோருக்குமே இருக்கிறது என்பதே எனது எண்ணம்.என்னைப்பொறுத்தவரை எனது எழுத்தின் பாணியும் நடையும் அநேக இலக்கிய ஆர்வலர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.அதுவே எனது அடுத்த கட்ட நகர்வுகளை சவாலாக்குகின்றன.மற்றபடி எனது ஒரு சில கவிதைகளைப்படித்துவிட்டு இப்படியொரு கருத்தை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது.நான் எழுதும் சூழல், எனது மொழி வளம், எனக்கும் எனது கவிதைகளின் கருப்பொருட்களுக்கும் இடையிலான அனுபவ இடைவெளி, எனது படைப்புக்களை வெளியிடும் பத்திரிகை சஞ்சிகைகளின் கட்டுப்பாடுகள் (இணையத்தளங்களில் அத்தகைய பிரச்சினைகள் இல்லை) இத்தகைய விடயங்கள் கூட படைப்பின் தன்மையைத்தீர்மானிக்கும் சக்திகள்.எனது எழுத்துக்கள் முற்று முழுதாக ஜனரஞ்சகத்தன்மை கொண்டவை. இருண்மையான படைப்புக்களில் எனக்கு ஆர்வம் குறைவு.சராசரி வாசகர்களுக்காகவே நான் எழுதுகிறேன். நமது படைப்பு விளங்கிக்கொள்ள முடியாதவை என மார்தட்டிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.ஆயினும் எனது படைப்புக்களில் முதிர்வுநலை குறைவு என்பதை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். வாசிப்பைப்பொறுத்தவரை நெருக்கடியான சூழலிலும் நிறைய வாசிக்க நேரம் ஒதுக்குகிறேன். பல்கலைக்கழக நூலகத்தில் எனது துறைசார்ந்த (முகாமைத்துவம்) நூல்களை விட இலக்கிய நூல்களையே அதிகம் இரவல் பெற்றிருக்கிறேன்.இணையத்தளங்களும் நிறைய வாசிக்கத்தூண்டுகின்றன.
சமூகக்கவிதைகள் எழுதுவதிலும் நாட்டம் செலுத்துகிறீர்கள் அவைகள் சராசரி எழுத்தை தாண்டி வருகிறதா?
சராசரி எழுத்து என்று எதை நீங்கள் நிர்ணயம் செய்திருக்கிறீர்கள் என்பது புரியவில்லை? ஆயினும் சமூகக்கவிதைகள் அன்றாட பிரச்சினைகளை யதார்த்தத்துடன் சொல்ல முனைவதால் சராசரியாக எழுத முடிகிறது. ஏனெனில் நாளாந்தம் நாம் பேச, காண, படிக்கக்கிடைக்கும் பிரச்சினைகள்தானே அத்தகைய சமூகக்கவிதைகளின் கரூவூலங்கள்.?
காதல் கவிதைகள் எப்படி வருகின்றன? காதல் கவிதைகள் எழுதுவது தொடர்பில் என்ன கருத்து காணப்படுகிறது.?
ஏன்?காதல் கவிதைகள் எழுதுவதில் என்ன தப்பு?கவிதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நியதி ஒன்றும் இல்லையே...? கவிதை என்பதும் காதல் என்பதும் அழகான இரண்டு பகுதிகள். இரண்டும் இணைவது கூடுதல் அழகு இல்லையா? சங்ககாலப்பாடல்களின் காதல் கவிநயம் இன்றும் போற்றப்படுகிறது இல்லையா? "நளவெண்பா" எனும்போது அதில் ஈரஞ்சொட்டும் காதல் பாடல்கள்தானே நினைவை நனைக்கின்றன..?
முத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது நேரடியாக வழிகாட்டகிறார்களா?
நிறைய வாசிக்கிறேன்.நீலாவணனின் "துயில்", சேரனின் "ஜே.யுடனான உறவு முறிந்து மூன்று நிமிடங்களாகின்றன", காசி ஆனந்தனின் "நெருப்புப்பழம்", "மரணத்துள் வாழ்வோம்"கவிதைத்தொகுப்பு போன்றன நிறைய பாதித்திருக்கின்றன. இவைதவிர வ.ஐ.ச.ஜெயபாலன், கருணாகரன், சங்கரி, பஸீல் காரியப்பர் உள்ளிட்ட நம் நாட்டு எழுத்தாளர்களின் படைப்புக்களோடு இந்தியாவின் மனுஷ்ய புத்திரன், ஆத்மாநாம், வைரமுத்து, அப்துர் ரஹ்மான், தபசி, நம்பிராஜன் போன்றோரின் படைப்புக்களையும் பலமுறை படித்திருக்கிறேன்.நேரடி வழிகாட்டிகள் என்று யாருமில்லை. இருந்தபோதும் இன்றுவரை பலரது ஆலோசனைகளையும், அனுபவங்களையும், விமர்சனங்களையும் அடிக்கடி கேட்டுக்கொள்கிறேன்.
சமீபமாய் வந்த நிழல் தேடும் கால்கள் புத்தகம் பற்றி சொல்லுங்கள்.
பெண்ணியம், போர்ச்சூழல், மற்றும் சில காதல் கவிதைகள் உள்ளடங்கலான ஒரு சிறிய கவிதை நூல் அது.பத்திரிகைகளில் பிரசுரமான எனது கவிதைகளிகளின் தொகுப்பே அந்நூல்.பலரதும் பாராட்டுக்கள் அதற்காக எனக்குக்கிடைத்துக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. சமூகத்தின் பிறிதொரு முகம் அந்நூலில் தெளிவாக்கப்பட்டிருப்பதாகவும் இனங்களின் பின்னிப்பிணைந்த எதிர்காலம் குறித்து அற்புதமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் எனக்கு கிடைத்த வரவேற்பு எனது அடுத்த படைப்புக்களை மிகக்கவனமாக எடுத்தியம்பும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. மேலும் சர்வதேச பிரச்சினைகள் பற்றியும் பேச எத்தனிக்குமாறு பத்திரிகைகள் சுட்டிக்காட்டியிருந்தன.நல்லதொரு நூலை வெளியிட்ட திருப்தியை "நிழல் தேடும் கால்கள்" எனக்குத்தந்திருக்கிறது. சகல விமர்சனங்களுக்கும் நன்றி நவில்வதோடு அத்தனையையும் மனதார ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும் பொருளாதார நெருக்கடிகளால் சுமார் 08 கவிதைகளை தவிர்க்கும் நிலை ஏற்பட்டது மிகக்கவலை தருகிறது.
நீங்கள் அகதியாக்கப்பட்டது அதன் அலைச்சலின் வலி எப்படி உங்கள் எழுத்தில் தாக்கம் செலுத்தகிறது.
நான் அகதியாக்கப்படவில்லை.அகதிகளின் வலிகளை மிக நெருக்கமாக அறிவேன்.பாதிக்கப்பட்ட நண்பர்கள் வாயிலாக அவர்களின் அனுபவங்களும் கண்ணீரும் அத்தகு அகதிவாழ்வை சித்தரிக்கும் எனது கவிதைகளில் தாக்கம் செலுத்துகின்றன. புத்தளத்திற்கு ஒருமுறை செல்லக்கிடைத்த போது அவர்களின் வேதனைகளை கண்கூடாக கண்ட பிறகும் அதுபற்றிப்பாடாமல் இருப்பது எனது மனச்சாட்சிக்கு நான் செய்யும் துரோகம் இல்லையா?
படிப்போடு எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா?
ஓரளவு சிரமம்தான்.எனது துறை வேறாயினும் எழுத்துப்பணிகளில் என்னால் முடிந்தளவு ஈடுபடுகிறேன்.
சோலைக்கிளி, சண்முகம் சிவலிங்கள் போன்ற உங்கள் பகுதி முத்த எழுத்தாளர்களது எழுத்தில் எப்படியான பார்வை உங்களிடம் இருக்கிறது
இலங்கையின் மிகத்கிறமையான எழுத்தாளர்கள்.நீலாவணனுக்குப்பிறகு கிழக்கில் பேர் சொல்லும் படைப்புக்களைப்படைத்தவர்கள்.அதிலும் சோலைக்கிளியின் பாணி அபரிதமானது.சா...நெடிய முடத்தென்னை அடியில் நானும் நீயும்....என்று சோலைக்கிளி எழுதும்போது அந்த இடத்திலேயே நாமும் உட்கார்ந்து விடுகிறோம். கிராமத்தின் மொழிவளக்கை உலகெங்கும் எடுத்துக்காட்டிய பெருமை சோலைக்கிளியை சாரும். அவர் எழுதிய "நானும் ஒரு பூனை" "பனியில் மொழி எழுதி" "எட்டாவது நகரம்" "காகம் கலைத்த கனவு" "பாம்பு நரம்பு மனிதன்" போன்ற நூல்கள் எல்லோரும் அவசியம் படிக்கவேண்டியவை. "சண்முகம் சிவலிங்கமும் அவ்வாறே..ஏக்கங்களையும் வலிகளையும் அப்படியே எழுத்தில் பதிய வைக்கும் திறன் வாய்ந்தவர். "நீர் வளையங்கள்" என்கிற அவரது கவிதை படிப்பவர்களையெல்லாம் அழவைத்துவிடும்.
நிழல் தேடும் காலல்கள் தொகுதியில் இடம் பெற்ற "கிழக்கு இன்னும் வெளுக்கவில்லலை" கவிதை பற்றி சொல்லுங்கள்
அது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைச்சொல்லும் கவிதை. கிழக்கு என்று அதில் உருவகப்படுத்தப்பட்டது எங்கள் மாகாணத்தையோ போர்ச்சூழலில் அமிழ்த்தப்பட்ட எங்கள் மக்களையோ சுட்டி நிற்கவில்லை.
"இன்னும் வெளுக்கவில்லை
எங்கள் கிழக்கு
தண்ணீரில் புதையுண்டு
போயிற்று புன்னகைகள்"
"அன்று அழுதோம்
அன்னையின் மடியில்
இன்று அழுகிறோம்
தனிமையின் பிடியில்"
"சுனாமி பறித்துச்சென்ற
எங்கள் நிம்மதி கூட
நிவாரணங்கள் போலவே
அவ்வப்போது.."
"எங்கள் வானின்
வானவில் கூட
கறுப்பு வெள்ளைதான்"
"துயரக்கடலால்
சூழப்பட்டிருக்கிறது
எங்கள் வாழ்வு மிகப்பத்திரமாய்..."
போன்ற வரிகள் சுனாமியின் தாக்கங்களின்றி போர்ப்பாதிப்பு அல்ல.
யாழ் மண்பற்றிய உணர்வு எப்படி இருக்கிறது?
யாழ் மண் பற்றி நான் எழுதிய "யாரிடம் போய்ச்சொல்லி அழ"என்ற கவிதையே யாழ் மண் பற்றிய எனது கருத்து.அதை இங்கு தருகிறேன்.
யாரிடம் போய்ச்சொல்லி அழ...............
யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?
கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை
உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்
புயலழித்த பூவனமாய்
புலமபெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்
நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப்போனதம்மா....
காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா
அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...
அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப்போனதம்மா
யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?
கொழும்பில் தமிழ் மொழியில் உரையாடும் பொழுது எதாவது சிரமங்களை அனுபவிக்கிறீர்கள?
நிறைய சிரமங்கள் உள்ளன.குறிப்பாக சோதனைச்சாவடிகளில் நமது பயணப்பைகளில் தமிழ்ப்புத்தகங்களைக்கண்டாலே கேள்விகளால் துளைத்தெடுத்து விடுவார்கள்.சிங்களம் முழுதாகத்தெரிந்தால் மட்டுமே கொழும்பில் வாழ முடியும்.நான் ஒருமுறை பல்பிடுங்க சிங்கள வைத்தியரை அணுகி சரிவர எனது பிரச்சினையை சொல்லமுடியாமல் தமிழ் பேசத்தெரிந்த வைத்தியரை மீண்டும் அணுக வேண்டியதாகிவிட்டது.
உங்கள் மதத்திற்கும் எழுத்திற்குமான தொடர்பு எப்படி இருக்கிறது. இதன் தாக்கம் விழுமியம் எதாவது வருகிறதா?
உங்கள் கேள்வி புரியவில்லை.மன்னிக்கவும்.அடுத்த கேள்விக்குப்போகலாமே...
சமகால கவிதைகளை எப்படி வாசித்து வருகிறீர்கள் எப்படி இருக்கின்றன
சமகால கவிதைகள் பின் நவீன சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு வித்தியாசமான தளத்திற்குள் உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது ஒருவகையில் வரவேற்கப்படவேண்டியவை.காரணம் அரைத்த மாவையே திரும்பத்திரம் அரைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற முயற்சிகள் செங்கம்பளத்தால் வரவேற்க வேண்டியவைதான்.இன்னொரு புறம் சிக்கலான சொற்கையாள்கையும் புழக்கத்தில் அரிதாக இருக்கும் வார்த்தைகளும் அதிக அளவில் பின்நவீன சிந்தனைகளில் மேலோங்குவதால் கவிதையின் இருண்மை பலப்பட்டு வாசகர்களை அத்தகைய கவிதைகளிலிருந்து அந்நியமாக்கத்தொடங்குகிறது. மரபுக்கவிதைகளின் அடையாளம் பின்நவீன எழுத்துக்களால் வீச்சம் குறையத்தொடங்கியிருப்பது இன்னொரு வகையில் ஆரோக்கியமற்றது.ஏனெனில் மரபுக்கவிதைகள் புதுக்கவிதைகளை விட வலிமை மிகைத்தவை.கவிதைகளைப்பொறுத்தவரை அதிகபட்சம் மூன்றாவது முறை படிக்கும்போதாவது புரிந்து கொள்ளத்தக்கதாக அமையவேண்டும்.இன்றைய அவசர உலகில் அவைகளை ஆய்வு செய்து அர்த்தங்களை விளங்க முயற்சிக்கும் வாசகர்கள் மிக அரிது.இன்றைய காலகட்டத்தில் நிறைய படைப்புக்கள் மலிந்து கிடக்கின்றன.வாசகர்களை விட எழுத்தாளர்களே இன்று அதிகம். சிறுகதைகள் கூட இப்போது ஒருபக்க கதை, அரைப்பக்க கதை என்று தடம்மாறத்தொடங்கியுள்ளது.காரணம் வாசகர்களின் மனநிலை. என்னைப்பொறுத்தமட்டில் சமகாலக்கவிதைகளின் சகல பரிமாணங்களையும் வாசிக்க எத்தனிக்கிறேன்.பலர் வியக்க வைக்கிறார்கள்.வித்தியாசமான முயற்சிகள் அசர வைக்கின்றன.மொழிபெயர்ப்புக்கவிதைகளிர் கலீல் ஜிப்ரானின் கவிதைகள் என்னைக்கவர்ந்துள்ளன.
கவிதைக்கான இணைய தளங்கள் உங்கள் எழுத்திற்கு எந்தளவில் உதவுகின்றன.
அப்பால்தமிழ்,தமிழ்மன்றம், கீற்று, வார்ப்பு, தமிழ்மணம், திண்ணை, பதிவுகள், தமிழ்ரைற்றர்ஸ், கூடல், ஊடறு, தோழி, மரத்தடி மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்களின் சொந்த இணையத்தளங்கள் என்று எழுத்துத்துறைக்கு இணையம் மிகப்பாரிய வகிபங்கை ஏற்றிருக்கிறது.அவைகளின் ஊடாக நிறைய கற்கும் சூழல் உருவாகியிருக்கிறது.நமது படைப்புக்களையும் இலகுவில் பதிக்க முடிகிறது.இலகுவான அதேநேரம் துரிதமான கருத்துப்பரிமாற்றம் எழுத்தாளர்களின் எழுத்துக்களை பரவலாக்குவதில் அதிக அளவில் ஒத்தாசை நல்குகின்றன. மேலும் தமிழ்ப்படைப்புக்கள் மட்டுமன்றி உலக இலக்கியங்களையும் மிக இலகுவாக படிக்க முடிகிறது.இது நமது படைப்புக்களின் தரம் மேலோங்க இணையம் நேரடியாகவும் மறைமுகமாகவும் செல்வாக்குச்செலுத்துகிறது என்பதே உண்மை.
நானும் நீங்களும் உரையாடுவது வித்தியாசமானதயயிருக்கும் என நினைக்கிறேன். தொடக்கத்தை செம்மைப்படுத்தவதற்கான உரையாடலாய் இதை பார்க்கிறீர்களா?
நிச்சயமாக இது ஒரு புது முயற்சி. இரண்டு நண்பர்களுக்கிடையிலான உரையாடல் என்பதைத்தாணடி நமது எதிர்கால எழுத்துத்துறையின் வளர்ச்சிக்கு வித்திடும் உரையாடல்களின் ஆரம்பமே இது.இதற்குப்பிறகும் பல விடயங்கள் குறித்து உங்களோடு கருத்துப்பரிமாற ஆர்வமாயுள்ளேன்.தொடர்வோம்.
தமிழ்-முஸ்லீம்கள் உறவை வளர்ப்பது பற்றி சொல்லுங்கள். அதன் அவசியத்தை எப்படி காண்கிறீர்கள்.
தமிழ் முஸ்லிம் உறவு குறித்து மிக மிக ஆழமாக பேச வேண்டிய இக்கட்டான காலகட்டம் இது. ஆயினும் யதார்த்தபூர்வமாக இவ்விரு தரப்பு உறவு கைக்கெட்டாத ஒரு விடயமாகவே இற்றைவரை விரவிக்கிடக்கிறது.இந்த இன ஐக்கிய விரிசலுக்கு இருதரப்புமே கால்கோள்.அதில் ஒவ்வொரு தரப்பும் வேறு வேறு வகிபங்கை ஏற்றிருக்கின்றன.அடிப்படையில் தமிழ் இனவாதக்குழுக்கள் இழைக்கும் தவறுகளை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமுமே இழைக்கிறது என்ற தவறான எண்ணக்கரு முஸ்லிம்களிடமும், முஸ்லிம் அரசியல்வாதிகளும், ஒரு சில சுயநலவாதப்போக்குக்கொண்டவர்களும் இழைக்கும் தவறுகளை முழு முஸ்லிம் சமூகமும் புரிந்து கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டில் தமிழர்களும் தவறான அர்த்தங்களை தம்மகத்தே கொண்டுள்ளனர்.அப்பாவி மக்களை இவர்களிடமிருந்து கோடு பிரித்துக்காட்ட முடியாமலிருப்பதுவும் இன விரிசலுக்கு அடிப்படையாக அமைந்துவிடடது. தமிழ்-முஸ்லிம் உறவு முன்பு வலுப்பெற்றிருந்தது.தென்கிழக்கு பிராந்தியத்தில் மட்டுமன்றி முழு கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்துப்பார்க்கவே முடியாது. ஏனெனில் அந்தளவுக்கு இரு சமூகத்தவர்களும் ஒன்றிணைந்த அடிப்படையிலேயே தமது சமூக வாழ்வை வகுத்திருந்தனர்.தமிழ் முஸ்லிம் ஒற்றுமையானது எப்போதுமே இன மத மொழி வேறுபாடுகளைத்தாண்டிய ஒன்றாகவே காணப்பட்டது.ஆரம்ப காலங்களில் சமய நிகழ்வுகள், சடங்குகள், கலை, கலாசார அம்சங்கள், கல்வி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார அரசியல் முன்னெடுப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்திருந்ததனை வரலாற்றினூடே தௌள்ளத்தெளிவாய் நோக்க முடியும். முஸ்லிம் சமூகத்தச்சேர்ந்த ஆண்கள் தமிழ் சமூகத்திலிருந்த "முக்குவர்" குலப்பெண்களை ஆரம்ப காலத்தில் திருமணம் முடித்திருந்தனர். இது அப்போதைய இன நல்லுறவை இறுக்கமாக்கியிருந்தன. முஸ்லிம்களின் திருமண வைபவங்களில் இன்றும் கூட பின்பற்றப்படும் பல்வேறு சடங்கு முறைகள் தமிழ் சமூகத்தவர்களின் சடங்குகளுடன் ஒத்துப்போகின்றன.தாலிகட்டுதல், கால் கழுவுதல், ஆராத்தி எடுத்தல், பால்-பழம் கொடுத்தல், குரவையிடுதல் போன்ற பல அம்சங்களை இதற்கு உதாரணமாக கூற முடியும்.இன்னும் கல்முனையில் வருடாவருடம் இடம்பெறும் முஸ்லிம்களின் கொடியேற்ற நிகழ்வில் தமிழர்கள் கலந்து கொள்வதும் பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய தீப்பள்ளத்தின்போது முஸ்லிம்கள் அதைப்பார்க்கச்செல்வதும் இரு சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை வளர்த்த அம்சங்கள். ஆயினும் இத்தகைய நெருக்கமான உறவுகளை அடிக்கடி பேசுவதன் மூலம் மீளவும் உறவு கட்டியெழுப்பப்படும் என்பது வெறும் மேலெழுந்தவாரியான அலசலன்றி வேறில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல பின்னப்பட்டிருந்தார்கள் என்பது போன்ற புளித்துப்போன பழைய கருத்துக்கள் பிரச்சினையின் சரியான பரிமாணத்தை சுட்டி நிற்காது. எது எவ்வாறாயினும் இரு சமூகங்களிலுள்ள முற்போக்கு சக்திகளுக்கு, அறுந்து போன இந்த உறவை மீளக்கட்டியெழுப்பவேண்டிய தார்மீகப்பொறுப்பு உள்ளது.இது குறித்து எமது பல்கலைக்கழக பழைய மாணவர் சிராஜ் மஷ்ஹீரின் வாதங்கள் மிக முக்கியமானவை. அவரது கட்டுரையொன்றின் பிரகாரம் இப்பரஸ்பர உறவு சீர்குலைந்து போனதற்கான அடிப்படைக்காரணிகளையும் பின்னணிகளையும் வேர் வரை ஆராய்ந்து அடையாளம் காண்பதன் ஊடாக வரலாற்றுக்கடமைகளை செவ்வனே செய்ய முடியும். இவ்விடயம் தொடர்பில் ஆழ்ந்த தெளிவில்லாது முன்னெடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் வெறும் கானல் புரட்சியாகவே கிடப்பில் போடப்பட்டுவிடும்.கடந்த காலங்களில் இதற்கு ஏராளமான சரித்திர உதாரணங்கள் உள்ளன என்று சிராஜ் மஸ்ஹீர் விளக்குவது முற்று முழுதாக ஏற்கவேண்டியவையே. முதலில் இருதரப்பினரதும் நியாயமான கோரிக்கைகள் புரியத்தக்க வகையில் வெளிக்கொணரப்படல் வேண்டும்.தமிழ்த்தரப்பினர் முஸ்லிம்களிடையேயான உறவு குறித்து எத்தகைய அபிப்பிராயங்களை கொண்டிருக்கிறார்கள் என்று ஆவண வடிவில் பிரசவிக்கும் பட்சத்தில் இன விரிசலை மெல்ல மெல்ல தவிர்க்க எத்தனிக்கலாம்.முஸ்லிம்களைப்பொறுத்தவரை பெருவெளி, துயரி(தற்போது நிஷ்டை) போன்ற சஞ்சிகைகள் வாயிலாகவும் மீள்பார்வை, எங்கள் தேசம் போன்ற பத்திரிகைகள் வாயிலாகவும் வெளிக்கொணர்ந்த வண்ணமமுள்ளனர். வ.ஐ.ச.ஜெயபாலனின் "தேசிய இனப்பிரச்சினையும் முஸ்லிம்களும்" என்கிற நூலைத்தவிர வேறு காத்திரமான இது குறித்த நூல்கள் தமிழ்ச்சகோதரர்களிடமிருந்த வெளிவரவில்லை.இருந்தும் லண்டனிலிருந்து வெளிவரும் "உயிர்ப்பு" என்கிற சஞ்சிகை வழியபாக விக்டர் என்பவர் முஸ்லிம் தேசமும் தமிழர்களின் அபிலாசைகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார். மேலும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையேயான உறவை வளப்படுத்த இலக்கியம் மிக முக்கிய ஊடகமாக தொழிற்பட்டு வருகிறது.இன்று வரை தமிழ்-முஸ்லிம் உறவு பற்றி பேசுபவர்கள் இலக்கியவாதிகளே. எது எவ்வாறாயின் இரு தரப்புக்குமான இடைவெளியை குறைப்பதில் இருதரப்புமே தற்போது ஆவல் காட்டியவண்ணமுள்ளனர்.பிரச்சினைகளின் அடிப்படையிலிருந்து ஒற்றுமைக்கான ஆரம்பம் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் இரு தரப்பு இனவிரிசல்களுக்கு விரைவில் சாவுமணியடிக்க முடியும்.
"வெட்டப்பட்ட நகங்களை விடுத்து
விரல்களைப்பாதுகாப்போம்"
என்பதே எனது "நிழல் தேடும் கால்கள்" கவிதை நூலின் கரு.கடந்த காலங்களில் தமிழ்-முஸ்லிம் உறவு எப்படி இருந்நது?என்ற வாதங்களையெல்லாம் தூர எறிந்து விட்டு இன்னும் பல நூறு ஆண்டுகள் (இறைவன் நாடினால்) வாழப்போகும் நமது சந்ததிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை நாம் ஒற்றுமைப்படுவதன் மூலமே நிகழும்.அதுதவிர தமிழ்-முஸ்லீம் உறவு வலுப்பெறும் பட்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூர யுத்தத்துக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிட்டும் சூழலும் உருவாக வாய்ப்புள்ளது. "அடம்பன் கொடிகள் திரண்டால்தானே மிடுக்கு" சில்லறைக் கொள்கைகளையும், வரட்டுப்பிடிவாதங்களையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமைப்படுவதற்கான முயற்சிகளில் இறங்குவோம்.நம்மோடு சிங்கள சகோதரர்களும் கண்டிப்பாக இணைவார்கள்.ஏனெனில் அடிப்படையில் நாமெல்லாம் மனிதர்கள்.ஒருவருக்கொருவர் சமனானவர்கள்.யாரும் யாரையும் அடக்க முயல்வதோ அடங்கிப்போவதோ விண் வீம்பு.
இறுதியாய் என்ன சொல்ல போகிறீர்கள்
இந்த செவ்வியில் நீங்கள் கேட்டிருப்பது 24 வினாக்கள.....உண்மையில் அத்தனைக்கும் விரிவான விடையளிக்கும் நிலையில் நானில்லை என்பது ஒருபுறமிருக்க நமது உரையாடல் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்திற்கொண்டு காலதாமதமின்றி இதனை அச்சேற்ற வேண்டும் என்கிற பதைபதைப்பில் என்னால் முடிந்தவரை உங்களோடு உரையாடியுள்ளேன்.இது சமபூரணமான உரையாடல் இல்லை. இன்னும் பல விடயங்களை ஆழமாகவும் நீளமாகவும் நாம் அலசவேண்டியுள்ளது.கண்டிப்பாக இது ஒரு ஆரம்பமே.தற்போது இலக்கிய கருத்தாடல்கள் உரையாடல் வடிவில் அரங்கேறுவது அரிதாகவே நிகழ்கின்றது.பேட்டியை விட இது போன்ற உரையாடல்கள் மிக அவசியம். இந்த உரையாடலில் வினாக்கள் சற்று அதிகம் என்றே எண்ணத்தூண்டுகிறது.குறைந்த ஆனால் காத்திரமான விடயங்கள் பற்றி அலசும்போது அது அதிகளவான பின்னூட்டங்களை கருக்கட்டும் என நினைக்கிறேன் .வரும் எழுத்தாளனான எனக்கு இந்த உரையாடல் மிகப்பெரிய உந்துதலைத்தருகிறது.இதை ஆரம்பமாகக்கொண்டு (உரையாடல்-01 என்று குறிப்பிடுவோமே).தொடர்ந்தும் பல விடயங்களை பலரையும் இணைத்துக்கொண்டு உரையாடுவோம்.இறைவன் உதவுவான்.வாய்ப்புக்கு கோடான கோடி நன்றிகள்.
தீபச்செல்வன்:- நன்றி ஷிப்லி இது பிரயோசனமான சந்திப்பு என்று நினைக்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுதவும் புதிய பரப்புக்களை கண்டடையவும் வாழ்த்துகிறேன். நன்றி.