இளம் விதவையின் சோகம் ..வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி..
01.
இளம் விதவையின் சோகம்
---------------------------------------
தேயும் வளரும் வெண்ணிலவில் ஒளியும் இருளும் உண்டு
தொலைத்துவிட்டேன் நிலவினையே வெளிச்சம் எனக்கு என்று?
தூணாக நீயிருந்தாய் சரிந்ததில்லை என் கோட்டை
சாய்ந்ததனால் சரிந்துவிட்டேன் விளைத்தவர் யார் கேட்டை.?
தனி மரத்தில்கனி பறிக்க எண்ணி சதியில் உறவினம்
தட்டிக்கேட்க ஒருவரில்லை துன்பம் தினம்...தினம்... !
வலை வீசி வீசித் திரியுதய்யோ வேடுவக் கூட்டம்
நான் சிக்கவில்லை சிக்கிக்கொண்டேன் துன்பத்தில் மட்டும்..!
விட்டுப்பிரிந்த நாள்முதலாய் அணைத்ததென்னை துன்பம்
பட்டுப்போன வாழ்வினிலே துளிர்விடுமோ இன்பம் ?
அந்தநாளின் நினைவு நெஞ்சில் மோதி நிற்குமலைகள்
வெந்து இன்னும் தணியவில்லை கொதிக்குது கண்உலைகள்.!
விழியிருந்தும் காட்சியில்லை கண்ணீர் படலங்கள்
விதி மேடையிட்டு ஆடிடுதே துன்ப நடனங்கள்..!
வடமிழந்த தேரும் வீதி ஊர்வலம் வருமா..?
தடமறியா பாதை பயணம் நன்மைகள் தருமா?
துடுப்பில்லா தோணியில் என் பயணங்கள் வீணே
அடுக்கடுக்காய் சோதனைகள் அவதியில் நானே..!
சொந்தபந்தம் என்றதெல்லாம் நீயிருந்தவரை மட்டும்
நிந்தனையில் வாட்டிடுதே எனக்கு விடிவு என்று கிட்டும்..?
அன்று நீ விரித்த பாயில் மணக்கும் முல்லை சிரித்தது
இன்று படுக்கையாக நெருஞ்சி முள்ளை யார் விரித்தது.?
உன்னை இழந்த எந்தன் வாழ்வு ஊசலாடுது
தவிக்கவிட்டு பறந்ததென்ன உன்னை என்று சேர்வது..?
மாண்ட உயிரை மீண்டும் தரும் மரண தேவன் உண்டோ?
தொலைந்த இன்பம் மீட்டுத் தரும் காவலர்தான் உண்டோ?
விண்ணுலகம் செல்லும் வழி நானும் தேடுவேன்
இந்த மண்ணைவிட்டு உன்னை நாடி விரைவில் கூடுவேன்..!!
02.
வெயிலோடு விளையாடி.. வெயிலோடு உறவாடி..
---------------------------------------------
இறுதி ஆண்டில் தேர்வெழுதி
வழியனுப்பி வரும் வேளை
கொண்டாடி மகிழ்வதற்கு
கூட்டாளி வெயில்தானே..!!
ஏராள விடுமுறையில்
சித்திரையோ கத்திரியோ
எது வந்தும் கவலை இல்லை
விளையாடிக் களிப்போமே..!!
வெயில் நித்தம் சிரம் வாங்கி
வெப்பத்தில் முகம் கருக்க
நீரின்றி நீராடி
வியர்வையிலே குளிப்போமே..!!
வெயில் என்ன செய்துவிடும்
நீராகாரம் காலையிலே
கேப்பைக்கூழ் தயிர் கலந்து
அத்தனையும் குடிப்போமே..!
ஊருக்கு எல்லையிலே
ஓடுமந்த ஆற்றினிலே
குதித்திருக்கும் வெயிலோடு
குதித்து கொட்டம் அடிப்போமே..!
தள்ளுவண்டிக் காரனிடம்
நாவில் எச்சி ஊற வைக்கும்
குச்சி ஐஸ் வாங்கித் தின்று
வெயிலுக்கு விடை கொடுப்போமே.!
குற்றாலம் சென்றுமந்த
அருவியோடு ஆர்ப்பரிப்போம்
கொடைக்கானல் சென்றுமந்த
குளிர்மேகம் தொடுவோமே..!
நுங்கு தின்று வெப்பம் தணித்து
பனங்காயின் சக்கரத்தில்
விளையாட வண்டி செய்து
குச்சி கொண்டு ஓட்டுவமே..!
எளிமையாக வெயில் விரட்ட
ஏராளமாய் வழி இருக்கு
குடிசை வாழ் மக்கள்மேல்
வெயிலுக்குத்தான் பகையிருக்கு..!
கோலா இருக்கு கலர் இருக்கு
குப்பியிலே வியாதி கிருமியிருக்கு
மோரும் தர்பூசணியும் - இறைவன்
ஏழைக் களித்த வரமிருக்கு..!
மேட்டுக்குடி மக்களுக்கோ
வெயில் என்றால் பயமிருக்கு
பதுங்கி பதுங்கி இருப்பதற்கு
ஏசி எண்ணும் சிறையிருக்கு....!!
கிராமத்திலே பிறந்துவிட்டோம்
எங்களுக்கு கவலை எதற்கு
தாராளமாய் பெய்த மழையில்
ஏரி குளம் நிறைந்திருக்கு..!!
வீடு சுற்றி மரமிருக்கு
வேப்பமர காத்திருக்கு
ஆற்றினிலே நீராடி
அரவணைக்கும் தென்றல் இருக்கு..!
வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
களித்திருக்கும் இன்பமெல்லாம்
கிராமமன்றி வேறெங்கிருக்கு..?