சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
------------------------------------------------------------
ஞாயிறு வாராதா என்று
ஞாபகத்தில் உளைகின்றது மனது...
சிவப்பு நாளை கலண்டரில்
கண்டவுடன் வரும் குதூகலிப்பு
மேலதிக வேலையென்று பறக்கும்
அப்பாவினால் இப்போதெல்லாம்
பிடிக்காமலே போனது...
கண்விழிக்கையில்
உறங்கும் அப்பா நான்
கண்ணுறங்கையில் வந்துதரும்
முத்தத்தினை தூக்கத்தில்
தட்டிவிடுகின்றேன்...
பேச்சுப்போட்டியில் பெற்ற
முதற்பரிசு கூட இன்னும்
வராந்தாச்சாலை மேசையில்
அப்பாவின் வாழ்த்துக்காய்
ஏங்கிக்கொண்டிருக்கின்றது...
பாலர்வகுப்பு வரை
என்னோடு வந்த அப்பா
டாலர்களின் மதிப்பேறியதும்
ரொக்கத்தின் பின்னே ஓடியலைகின்றார்...
மாலைநேர சைக்கிளோட்டம்
மழைநாளின் ஐஸ்கிரீம்
சாலையோரம் கைகோர்த்த நடை
சாப்பாட்டுக்கடை தேடுமென் பிடிவாதம்
அப்பாவின் தோளில் குதிரையோட்டம்
அவர் மடியில் ஆட்டம்பாட்டம்
தப்பாமல் தருகின்ற செல்லமுத்தம்
தலைகோதும் விரல்கள் - எல்லாமே
தாள்களுக்குள் அடங்கிப்போய்
தாராளமாகவே இடைவெளியை
விசாலப்படுத்தி விட்டிருந்தது....
வாங்கிவந்த இனிப்பையூட்ட
வாசலிலிருந்தே கூப்பிடுமென்
அப்பாவின் குரல்கேட்க
இப்போதெல்லாம்
ஆசைப்பட மட்டுந்தான் முடிகின்றது...
பாசத்தை நிரூபிக்க
பணத்தை நிரப்ப வேண்டியதில்லை
என்றுணர்த்த நானின்னும்
வாழ்க்கையை படிக்கவில்லை....
சொத்துசுகத்தினால் மட்டுமே -தன்
சொந்த மகளின் சோகம்
தீராதென்றுணர அப்பா இன்னும்
உறவுகளை படிக்கவில்லை......