ஹைக்கூ எழுதுபவர்களே பின்னாங்கால் பிடறியில் பட ஓடும் அளவிற்கு அதன் விதிகள் குறித்து விவாதித்தாகி விட்டது.

ஸ்கேல் வைத்து ஹைக்கூவை அளந்து வந்த கிளுகிளு பாய்ஸ் தாத்தா சுஜாதா கூட கொஞ்சம் ஓய்ந்து விட்டார். ஆனால் அவரது அடியொற்றி, புதுக்கவிதை பேரன்களில் பலர் தாத்தா விட்ட இடத்தை எடுத்துக்கொண்டு விட்டார்கள். இவர்கள் ஆக்கிரமித்து வரும் செமிசீரியஸ் பத்திரிக்கைகளினால் தொடர்ந்து தமிழ் ஹைக்கூகள் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. ஆனாலும் ஜப்பனிய ஹைக்கூகளை மொழி பெயர்த்து வெளியிட்டு தங்களின் பங்களிப்பை வரலாற்றில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.


ஜப்பனிய ஹைக்கூவை விட தமிழ் ஹைக்கூ மிகச்சிறந்தது என்பவன் நான். அவை வெறும் ஜடப்பொருளை மட்டுமே பாடக்கூடியவை. தமிழ் ஹைக்கூகள் அப்படியில்லாமல் மக்களின் வாழ்க்கை முறையை /வாழ்வியல் விடயங்களை பாடு பொருளாக்கிக்கொண்டுள்ளான என்பது தான் நமது சிறப்பு.

அதே சமயம் தமிழில் 'ஹைக்கூ மாதிரி' எழுதப்பட்டு வரும் போலிகளும் இல்லாமலில்லை. அவற்றை அடையாளங்கண்டு கொள்ள வேண்டிய முக்கியமான பணியும் இன்று ஹைக்கூ வாசகனிடம் உள்ளது. அது போலவே கூறியது கூறல்... ஒருவர் எழுதியதை சில வார்த்தைகள் மாற்றி எழுதி தனது கவிதையாக்கிக் கொள்ளும் முயற்சிகளும் தமிழில் அதிகரித்து விட்டது.

சரி... சரியான தமிழ் ஹைக்கூவை எப்படி அடையாளங்கண்டு கொள்வது என்ற கேள்வி எழலாம். மூன்று வரிகளையும் இப்படி பிரித்துக்கொண்டால் மிகச் சுலபம்...

நெறிபடுத்தப்பட்ட வார்த்தைகள்,
காட்சியை கூட்டல் குறைத்தலின்றி அப்படியே பதிவு செய்தல்,
கடைசி வரிக்குள் ஒளித்து வைக்கப் பட்டிருக்கும் அதிர்வலைகள்.

அவ்வளவு தான் அது சிறந்த ஹைக்கூ என்ற முடிவுக்கு வந்து விடலாம். அங்கத தன்மையோடு எழுதப் படுபவை சென்றியூ! ஒரு சின்ன சம்பவத்தை பத்தியில் கூறி.. பின்னால் ஹைக்கூ எழுதினால் அது ஹைபுன்! அந்ததிகளும் கூட தமிழ்ஹைக்கூவில் வந்து விட்டன.

பெரும் வணிக இதழ்கள் ஹைக்கூ கவிதைகளை பிரசுரிக்கின்றன. ஹைக்கூவை முதலில் வெளியிட்டு பின் தொடர்கதைகளும் எழுதப்பட்டு விட்டன.


மாதத்திற்கு குறைந்தது ஒரு ஹைக்கூ நூலாவது வந்து விடுகிறது என்கிறார் நண்பர் மு.முருகேஷ். அவற்றை துளிப்பா, குறும்பா, குறுங்கவிதை என்றெல்லாம் பெயர் வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். குழந்தையை எப்படி அழைத்தாலும் அது குழந்தை தானே? அது போல எப்படி அழைக்கப்ப்பட்ட போதிலும் அவை ஹைக்கூ தான்.


வங்கி அதிகாரியாலோ,பள்ளி ஆசிரியாராலோ அல்லது ஏதோவொரு அரசு அதிகாரிகளால் தான் இலக்கியம் படைக்க முடியும் என்ற விடயத்தை உடைத்து, எழுத்து குறித்த போலி பிம்பத்தை விழுங்கி, சாதாரண வாசகனையும் ஹைக்கூ எட்டியுள்ளது. அவனாலும் கூட எழுத முடியும் என்ற நம்பிக்கையை ஹைக்கூ கொடுத்திருக்கிறது. ஹைக்கூவில் தமது எழுத்தை தொடங்கிய பலர் இன்று வெவ்வேறான இலக்கிய வடிவத்துக் -குள்ளும் பிரகாசிக்கத்தொடங்கி விட்டார்கள்.

பக்கம்பக்கமாய் சிறுகதையிலும் கட்டுரையின் வாயிலாகவும் சொல்லப் படவேண்டிய ஒரு கருத்தை மூன்றே வரிகளில் சொல்லி விடலாம் என்பது தான் நம் தமிழ்ஹைக்கூவின் மிகப்பெரிய பலம். அதுவும் கூட அதே கோபத்துடனும் அதே வீரியத்துடனும் சொல்லிவிட முடியும் என்பதற்கு இந்த கவிதை சாட்சி,

இட ஒதுக்கீடு எனக்கு வேண்டாம்
வா....... வந்து
நீயே பீ அள்ளு.
- திண்டுக்கல்.தமிழ்பித்தன்

காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்டு வந்த கருப்பனும் சுப்பனும் கூட தங்களது வாரிசுகள் எழுத
தொடங்கி விட்ட மகிழ்வில் இருக்கிறார்கள். தலைமுறை கோபங்களை வரலாற்றின் பக்கங்களில் அவர்கள் பதிவு செய்யத்தொடங்கி விட்டார்கள்.

ஹைக்கூவோடு நில்லாமல் அதன் மற்ற வடிவங்களையும் கூட்டு தொகுப்பு வாயிலாக நாம் நூலாக்க வேண்டும்.

சாதிய அடக்குமுறையை எப்படி தொடர் போராட்டத்தின் மூலம் ஓரளவெனும் முடிவுக்கு கொண்டு வந்தோமோ.. அது போல ஹைக்கூவிற்கு எதிரானவகுரல்களை ஒடுக்க.. நாம் தொடந்து இயங்கிக்கொண்டிருந்தாலே போதும். அதனால் தொடர்ச்சியான இயங்குதலின் மூலம் நமது எதிர்ப்பை காட்டுவோம்.

வாழ்த்துக்களுடன்
தோழன்
எஸ்.பாலபாரதி.
பிப்ரவரி04.06 பனிகொட்டும் அதிகாலை 4.25

Share with others