கருத்துகள்
உணர்வான கவிதைகள் வார்ப்பின் வழி உயிராகிறது. கவிதையுடன் இன்னும் சில அழகியல்கள் இணைந்தால் இன்னும் ஒரு முகம் கூடுதலாய் தெரியும். அப்படியே வார்ப்பில் கவிதையுடன் இணைக்கப்படும் ஓவியமும் மற்றும் புகைப்படங்கள். தலைப்பில்லாத கவிதைகளையும் எழுதிய கவிஞர்களின் பெயரில் சில உலவ கண்டேன். (அதில் என்னுடைய கவிதையும் அடங்கும்) இந்த போக்கு அதிகரிக்ககூடாது என்ற எண்ணப்பாடககூட இருக்கலாம்.( தலைப்பில்லா கவிதைகளை தவிர்த்துவிடுங்கள் என்று வந்த அறிவிப்பு.) தளிருக்கும் இடமளித்து மிளிர்வதே வார்ப்பின் சிறப்பு.
தோழமையுடன்
பாண்டித்துரை
கவிதைக்கென்று உள்ள உறுப்படியான தளங்களில் மிக முக்கியமானதாக நமது வார்ப்பு தளம் வளர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது வார்ப்பு பற்றி மக்கள் தொலைக்காட்சியின் தமிழ்க்கூடல் பகுதியில் அறிமுகம் செய்தார்கள். நீங்களும் கண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன், நண்பர்கள் சிலரும் மக்கள் தொலைக்காட்சியும், ஆனந்த விகடனிலும் பார்த்துவிட்டு சொன்னார்கள் மகிழ்ச்சியாக இருந்தது. மென்மேலும் நமது வார்ப்பு வளர வாழ்த்துகள்
நண்பர்கள் சார்பில்
கவிமதி
துபாய்
வார்ப்பு இதழ் 2008 இல் தனது கவிதைகளைப் பரப்ப எனது வாழ்த்துக்கள்!. டபிளன்.கொம் என ஒரு கூட்டைக் கட்டிய இணையஇதழொன்று இன்று தனைச் சுற்றி வனமொன்றை நிர்மாணித்திருக்கிறது. மரங்களும் நதிகளும் நட்சத்திரங்களும் வானமும் மண்ணும்... என இயற்கையாய் நீண்ட வனமொன்று கவிதைக்காடாகியது.
வடிவமைப்பில் உறுத்தல்களையெல்லாம் அது நீக்கிக்கொண்டு கொண்டு புதிசுபுதிசாய் அது பரிணமித்திருப்பது மகிழ்ச்சிதருகிறது. இவ்வளவு பெருந்தொகையான கவிதைகளை, கவிதை முயற்சிகளையெல்லாம் அது அரவணைத்துக் கொண்டுள்ளது. இடறல் தரும் கவிதைகளிலிருந்து உணர்வைத் தாக்கும் கவிதைகள்வரை -செடிகொடிகளும் வானுயர்ந்த மரங்களும் மண்ணையும் வானத்தையும் இணைக்க வார்க்கும் பசுமைபோல்- வார்ப்பு நிர்மாணித்தபடி இருக்கிறது.
எது கவிதை என நடக்கும் முடிவுறா விவாதங்களை இதன் நிழலில் நின்று நடத்த போதுமான வெளிகளை வார்ப்பு உருவாக்கித் தந்திருக்கிறது. நல்ல பல கவிஞர்களை அது இனம்காட்டிக்கொண்டிருக்கிறது. நல்ல பல கவிதைகளை அது வாசிப்புக்குத் தந்திருக்கிறது. தமிழ்க் கவிதை பற்றிய ஆய்வுகளை நேர்மையாக மேற்கொள்ள முயலும் எவரும் வார்ப்பை தவிர்த்துவிட முடியாது என்ற நிலைக்கு அது தன்னை உயர்த்தியபடி முன்னேறுகிறது என்பது ஒன்றும் முகமன் கூறும் வார்த்தைகளல்ல. வார்ப்பின் ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை அதனுடனான எனது தொடர்பு என்னை மகிழ்வுறச் செய்கிறது. தொடர்ந்தும் வார்ப்பு வனத்தில் காற்றின் ஓசையையும் ரீங்காரங்களையும் குயில்களின் இசையையும் நதிகளின் பாடல்களையும் கேட்டபடி இந்தப் புதுவருடத்தை வரவேற்போம். புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! -ரவி
வார்ப்பு என்னும் இணைய தள தலைவாழை இலையில், கவிதை என்னும் அறுசுவை விருந்து படைத்து எங்களை மகிழச் செய்யும் எண்ணற்ற கவிஞர்களுக்கு எங்கள் நன்றி!
கவிஞர்களின் வேடந்தாங்கலாய் திகழ்ந்திடும் வார்ப்பு இணையதளத்துக்கும், பங்கேற்கும் கவிஞர்களுக்கும் எங்களது அமைப்பின் படைப்பாளர்கள் அனைவரது சார்பிலும் வாழ்த்துக்கள்!
> கிரிஜா மணாளன்
> பா.ஸ்ரீராம்
> அ.கவுதமன்
> சரசுவதி பஞ்சு
> இளஞ்செல்வி செல்வமணி
> ஜோதி கார்த்திக்
(திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்)
திருச்சிராப்பள்ளி, தமிழகம்.
வணக்கம்.
நான் மிகவும் மகிழ்வுற்றிருக்கிறேன்.
தங்களது ‘வார்ப்பு’ தளத்தில் எனது கவிதைகளையும் இணைத்து வருகிறீர்கள், எனக்கும் ஒரு இடம் ஒதுக்கியிருப்பது மகிழ்வைத் தருகிறது. அத்தோடு அண்மையில் நான் வெளியீடு செய்த ‘திண்ணைக் கவிதைகள்’ கவிதை நூலை “நூலகம்” பகுதியில் சேர்த்திருப்பது இரட்டிப்பு மகிழ்வைத் தருகிறது. என்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
இத்தோடு நூலகத்திலுள்ள எனது ‘திண்ணைக் கவிதைகள்’ நூலோடு இணைத்துக் கொள்ள திண்ணைக் கவிதைகளில் உள்ள சில கவிதைகளை அனுப்பிவைக்கிறேன். சேர்த்துக்கொள்ள ஆவன செய்வீர்கள் என நம்புகிறேன்.
என்றும் உங்கள் தளத்தோடு இருக்கும்
டீன்கபூர்
வார்ப்பு கவிதைத் தளத்தின் வடிவமைப்பும் படைப்புக்களும் மிகச் சிறப்பாக உள்ளன. கவிதைக்கென்று வெளிவந்த சஞ்சிகைகள் உள்ளன. இணையத்தளத்தில் கவிதைக்கென்று வெளிவந்து கொண்டிருக்கும் வார்ப்பின் பங்களிப்பு மிக முக்கியமானது. கவிதைகளை விட கவிதைகளுக்கு தாங்கள் தெரிவுசெய்யும் படங்கள் சிறப்பு என்பதைக் கூறியே ஆக வேண்டும். தொடரட்டும் வார்ப்பின் இலக்கியப் பணி.
அன்புடன் சு. குணேஸ்வரன்
அல்வாய். யாழ்ப்பாணம்.
மின் இதழ்களில் நான் அறிந்தவரை இவ்விதழில் தான் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருப்பதாக உணர்கிறேன். அவ்வகையில் இவ்விதழ் குறித்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுத இருப்பதால் வார்ப்பின் முதல் இதழிலிருந்து இன்றுவரை வெளிவந்துள்ள இதழ்களை பார்க்கும் முறையினைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வாசகி
-யோகப்ரபா
புதுச்சேரி
இயந்திர வாழ்க்கையில் இனிய பொழுதுபோக்கு கவிதை… கவிதை எழுதுவது சுவை என்றால் பிறர் கவிதைளை வாசிப்பது அதைவிட தித்திப்பானது.. கவிதைப் பூக்களால் இனிய பூங்கா அமைத்த வார்ப்புக்கு நன்றி.. கவிதையை ரசிக்க ஆரம்பித்தபின் உலகம் இன்னும் அழகாக தெரிகிறது. என்னைச் சுற்றியுள்ள மனிதர்களை இன்னும் அதிகமாய் நேசிக்கிறேன்…
- ஐ. திலகா (வைகறை நிலா)
வார்ப்பின் வாசகன் என்ற வகையில், கையில் எதையும் கொண்டுசெல்லாமலே உலகின் எந்த இடத்திலும் தொட்டுச் சொல்லலாம் இதோ எனது கவிதையென்று. (புதிதாய் எழுதுபவர்களுக்கு அதில் ஒரு மகிழ்ச்சி) கவிதைக்காக தனித்தளம் அமைத்து, கவிஞர்கள் தங்கள் கருத்துக் கணைகளை சோதனைசெய்யவும் கவிதைகளால் போரிடவும் தனிக்களம் அமைத்து, அறிவுப்பூர்வ அழகிய கவிதைகளையும் ஆரோக்கியமான விமர்சனங்கள் கவிஞர்களின் நேர்கோணல்கள் கட்டுரைகளை ஒருசேர அழகிய வடிவில் தந்து, வாசகர்களை அறிவால் மகிழ்வித்து வார்க்கும் ‘வார்ப்பு’ மேன்மேலும் சிறந்துவிளங்க வாழ்த்துக்கள்.
வார்ப்பின் காரணகர்த்தாக்கள் அனைவர்க்கும் நன்றிகள்
உங்கள் வார்ப்பு
தமிழ் இலக்கியத்தின் எதிர்பார்ப்பு.
கவிதைகளின் ஈர்ப்பு
வெறும் வலைச்சன்னல் அல்ல அது.
தமிழ் இதயங்களின் கலைச்சன்னல் அது.
கணினிப்பொறியில்
கல்கண்டு தமிழின் பொங்கல் படைத்த
கவின்மிகு எழுத்தாளன்
சுஜாதாவின் சூடான சுவாசம்
இன்னும்
நம் எழுத்துக்களில்
நரம்பு மீட்டி
நாடித்துடிப்புகளாய்
ஒரு "வேவ் மெகானிக்ஸ்"ஐ
நமக்கு தந்து கொண்டேயிருக்கிறது.
அது இரங்கல் அல்ல.
அஞ்சலியும் அல்ல.
இன்னும் ஒரு 22 ஆம் நூற்றாண்ட நோக்கி
நம் தமிழுக்கு
அவர் தந்து கொண்டிருக்கிற
மின்னணு யுகப்பாய்ச்சல் அது.
கண்ணீரை துடைத்துக்கொள்வோம்
அவர் கனவுகளை அல்ல.
அன்புடன்
ருத்ரா
அன்புடையீர் வணக்கம்.
தங்களின் கவிதைப்பணி அறிந்து மகிழ்கிறேன்.
கவிதைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற நான் தங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இல்லாமல் இருந்தமைக்கு வருந்துகிறேன்.
கவிதைகள்,திறனாய்வுகள்,கட்டுரைகள் யாவும் சிறப்பு.தேர்ந்த முறையில் இதழ் வடிவமைக்கப் படுகின்றமைக்குப் பாராட்டுகள்.நாட்டுப்புறப்பாடல் துறையில் பல பாடல்களைத் தொகுத்து வைத்துள்ளேன்.அவற்றையும் கவிதைகளையும் அனுப்பி வைப்பேன்.மாணவர்களுக்கு இதழை அறிமுகம் செய்வேன்.
அன்பிற்குரிய
மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர்கல்லூரி,
புதுச்சேரி,இந்தியா
வார்ப்பு இணையத்தளம் கவிஞர்களின் கவிதை ஆக்க முயற்சிக்கு சிறந்த களம். கவிதைகள், இலக்கியத்திறனாய்வுகள், கட்டுரைகள் தரமானவை.கவிஞர்களின் கவிதை பற்றிய எனது மனப்பதிவுகளைப் பிரசுரித்தமைக்கு நன்றிகள். பணி தொடரப் பாராட்டுக்கள்.
அன்புடன்,
கு.குகேந்திரன்,
ஆலங்கேணி
பூநகரி,
கிளிநொச்சி.
தாங்கள் தரும் தலைப்புகளும், அவற்றுக்கு கவிஞர்கள் படைக்கும் கவிதைகளும் சிறப்பாக அமைந்துவருவதாக, எங்கள் நகரிலுள்ள வாசகர் வட்ட உறுப்பினர்கள் கூறுகிறார்கள், அண்மையில் நாங்கள் எங்கள் திருச்சி மாநகரில் துவக்கியுள்ள 'உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளையிலுள்ள கவிஞர்கள் அனைவரும் உங்கள் இணையதளத்தின் ரசிகர்களாகி வருவதை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
- கிரிஜா மணாளன்
செயலாளர், திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
உங்க கவிதைத் தளத்துல 'தலைப்பு' கொடுத்த உடனே தன்னோட கவிதையை அதுல போட்டுடனும்னு என் சகாக்களுக்கு ஒரு துடிப்பு ஐயா! (கல்யாணத்துல, முதல் பந்தியில முதல் இடத்தப் பிடிக்க அலையற மாதிரின்னு வச்சுக்குங்களேன்!) நம்ம சக்திதாசன் ஐயாவோ, ருத்ராவோ எங்கே முந்திக்கபோறாங்களளோன்னு எங்க சாகாக்கள் துடிக்கிற துடிப்பு அப்படி! இப்படி ஒரு ஆரோக்கியமான போட்டியால, இந்த தளத்துக்கு நெறைய கவிஞர்கள் அறிமுகமாறதுக்கு வழி பண்ணியிருக்கற உங்களைத்தான் பாராட்டணும்!
> கிரிஜா மணாளன்
திருச்சி, தமிழ்நாடு.
வார்ப்பு கவிதை இதழ்
உலகத்தில் முதல் முறையாக வார்த்து
வழங்கப்படும் கவியமுதம்
புதிய புதிய படைப்பாளர்களை
அரவனைக்கும் அன்னை
கவிதை வாசகர்களின்் சொர்க்கம்
உலக தமிழர்களின் தாகங்களைத்
தனிக்கும் ஜிவநதி
புதிய முயற்சிக்கு அடியனும் ஆட்பட்டுவிட்டேன்.
இப்படிக்கு
மெத்தமகிழ்வுடன்
இரா.சதீஷ்மோகன் எம்.ஏ,எம்.பில்
தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வாளர்
பாரதியார் பல்கலைக்கழம்
கோயம்புத்தூர்-46
வார்ப்பு உண்மையில் நல்லா வந்து கொண்டிருக்கு ,நிறையப்பேர் பார்க்கிறார்கள்போல, வாழ்த்துக்கள் . கவிதைகளுக்கு போடும் படங்கள் மிகவும் அழகு. வார்ப்பில் அறிவிப்பு பார்தேன் தலைப்பில்லாத கவிதைகள் தகுதியற்றவை எனக்கெருதப்படும் என்று எழுதியது கொஞ்சம் கஸ்டமாக இருந்தது ,அப்போ தலைப்புடன் வரும் கவிதைகள் எல்லாம் தகுதியானவையா என்ற கேழ்வி எழுகிறது அல்லவா? தலைப்பிடாமல் வரும் கவிதைகள் வார்ப்பில் பிரசுரிக்கப்படமாட்டாது என்று போட்டிருக்கலாமோ என்று தோன்றியது இது எனது கருத்து ,இதை நீங்கள் பெரிது படுத்தத்தேவையில்லை. மற்றும்படி வார்ப்பை அழகாக வடிப்பதற்கு
வாழ்த்துக்கள்
நட்புடன்
றஞ்சினி