கவிதைக்கான இணைய இதழ் என்ற முத்திரையுடன் 'வார்ப்பு' இணையதளம் இயங்குகிறது. துவக்க காலத்தில் மாதமொருமுறை புதிய படைப்புகள் ஏற்றப் பட்டு வந்தன. அவ்வப்போது வருத்தங்களை தெரிவித்துக் கொண்டு ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் புதிய படைப்புகள் ஏற்றப் பட்டு வந்தன. ஆனால் தற்போது ''வார இதழாக'' தடையின்றி வந்து கொண்டிருக்கிறது. இந்ததளத்தின் நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்.

'எளிமையே பேரழகு' என்னும் பதத்துக்கு உதாரணம் வார்ப்பு தளம்தான். சிரமம் இல்லாத இணைப்புகளாலும் புத்துணர்ச்சியூட்டும் வண்ணங்களாலும் வலைப்பக்கம் அலங்கரிக்கப் பட்டுள்ளது. கவிதைகளுக்கும் படைப்புகளுக்கும் பொறுத்தமான புகைப்படங்களை தேடிப் பிடித்து இணைத்து படைப்புகளை அழகுபடுத்தும் பணி பெரிதும் பாராட்டத்தக்கது.

இதுவரை 199 கவிஞர்களை அறிமுகப் படுத்தியுள்ளது. மொத்தம் 769 கவிதைகளை வெளியிட்டுள்ளது. கவிதைகள் பகுதியில் பற்பல கவிஞர்களின் கவிதைகளை தலைப்பு/ முதல்வர் மற்றும் கவிஞர் பெயர் கொண்டு வரிசைப் படுத்தி வைத்துள்ளனர். இதன் மேல் கிளிக்குகையில் கவிதைப் பக்கம் விரிகிறது. கவிஞர்கள் பகுதியில் கவிஞர்களின் பெயர்கள் வரிசைப் படுத்தி வைக்கப் பட்டுள்ளன, இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கவிஞரின் வார்ப்பில் வெளியான படைப்புகள் முழுவதையும் வாசிக்கும் வசதி செய்யப் பட்டுள்ளது.

விமர்சனங்கள் பகுதி வார்ப்பு தளத்துக்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல் வாசகர்களுக்கு வளம் சேர்க்கும் பகுதியாகும். கவிஞர்கள் பலரின் புத்தகங்களுக்கு பொறுத்தமான மதிப்புரைகளும் திருப்திகரமான விமர்சனங்களும் வேறு பல கவிஞர்கள் எழுத்தாளர்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது. புத்தகங்களின் அட்டைகள் வருடப் பட்டு இணைக்கப் பட்டிருப்பது அழகிலும் அழகு. 

கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் கவிஞர் மீரா ஆகிய இருவரது நேர்காணல்கள் மட்டுமே நேர்காணல்கள் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியல் நீளாததற்கு காரணம் என்னவோ? இந்தப் பட்டியை நீட்ட வாசகர்கள் உதவலாம்.

'' படமும்...வரிகளும்'' பகுதியில் படத்திற்கேற்ப வாசகம் எழுதும் வாசகர்கள்/கவிஞர்களின் பங்கீட்டை எதிர்ப்பார்த்து உள்ளது. இணைய தளத்தில் கவிதை/இலக்கியத்திற்கான வலைப்பூக்கள் (Blogs) மற்றும் இணையதளங்களை இணைய முகவரியுடன் தெரிவிக்க 'சரம்' என்ற பகுதி காத்திருக்கிறது. இதனால் பிற தளங்களுக்கு இலவசமாக இணைப்பு கொடுக்கப் படும் சேவையும் உண்டு. நிகழ்வுகள் பகுதி தலைப்பிற்கேற்ப பதிவுகளைக் கொண்டுள்ளது.

கவிதைகளில் இருக்கும் ஒருவித வசீகரிப்பு கவிதை இதழுக்கும் இருக்குமோ என்னவோ, வார்ப்பு தளத்தில் அவ்வாறு ஒன்றை உணர முடிகிறது. வார்ப்புக்கு வாழ்த்துகள்.

http://www.keetru.com/ani/index.php

Share with others