ஒரு நல்ல கவிஞன் தான் வாழும் உலகுடன் ஒன்றி விடுகின்றான். காலத்துள் கரைந்து, சமூக உணர்வுகளில் சங்கமித்துப் போகின்றான். யாதும் ஊரே யாவரும் கேளிர்| என்ற விசாலப் பார்வைக்குள் வியாபித்து விடுகின்றான். அவனது படித்தரம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோட்டைத் தாண்டும்போது, அண்ட சராசரங்கள் அனைத்துமே அவனுக்காகி அனைத்திலும் அவனுமாகி.... இன,மத,இட எல்லைகளை கடந்தவனாய் இப்பிரபஞ்சத்துள் ஒளிந்து விடுகின்றான்!

இந்த உன்னத நிலைக்குள் உயர்ந்து விட்ட ஒரு கவிஞனால் மட்டும் தான் அவன் எதிர்கொள்ளும் சமூக அவலங்களையும், அவஸ்தைகளையும், ஆனந்தங்களையும், ஆவேசங்களையும் கூட நியாயமுள்ள தகுதி மிக்க உணர்ச்சிகளில் The Justice or Propriety of the Emotion வெளிப்படுத்த முடியும். அவ்வாறு ஆற்றலுடன் வெளிப்படுகின்றன அந்த உணர்ச்சி பிரவாகமே, வீரியமிக்க - அற்புதமான கவிதைகளாக மிளிர்கின்றன. இதைத்தான் "Poetry is Spontaneous outflor of Powerful feelings" என்று கூறுவார்கள்.

இப்படி, எழுதப்படும் கவிதைகள் யாருக்காக எப்படி எழுதப்படவேண்டும் என்பது பற்றிய, பிரபலங்கள் சிலரின் கருத்துக்களை வாசகர்முன் வைத்துவிட்டு. அப்பால் நகர்தலே பொருத்தம் எனப்படுகின்றது.

'மக்களின் அவலங்களையும் உணர்வுகளையும் உள்வாங்கி, மக்களுக்காக - மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்படுவதே உண்மையான மக்கள் இலக்கியம். என்றான் உலகின் முதல்தர படைப்பாளி மாக்ஸிம் கோர்க்கி.

இதையே நம்தேசத்து ஒரு நல்ல படைப்பாளி 'முருகைய|னிடம் கேட்டால்,

"எவ்வாறாயினும் வாசிப்போரின் தலைப்பு நிலையையும், உணர்திறனையும் மனதிற்கொண்டு தன் படைப்பின் அமைப்புச் சீர்மையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது படைப்பாளிகளின் பொறுப்பாகும். வேறெல்லா விதத்திலும் சிறந்தது விளங்குமேயாயினும் தான் சென்றடையக் கருதும் வாசகனின் கவனத்தை ஈர்க்கும் வல்லமை அற்றதோர் ஆக்கம், வீண்பொருளாய் தோற்றொழியும்|| என்கிறான்.

அயல் நாட்டு மேத்தாவை அணுகினால் -
"தனி மொழிச்சேனை, பண்டிதபவனி....
இவை எதுவும் இல்லாத - கருத்துக்கள்
தம்மைத்தாமே ஆளக் கற்றுக்கொண்ட,
புதிய மக்களாட்சி...
என்று அடித்து சொல்கிறான்.

இத்தனைக்கு மத்தியலும் இன்றைய நவீன புதுக்கவிதைகளின் வளர்ச்சில் போக்கானது முற்றிலும் தலைகீழான அல்லது எதிர் வினையான திருப்பத்தை தன்னளவில் அவாவி நிற்பதையே அவதானிக்க முடிகிறது. படிமங்களும் குறியீடுகளும் சொற்சிலம்பமாடும் உத்திகளுமே இன்று எழுதப்படும் அனேகமான புதுக்கவிதைகளில் ஆதிக்கம் செலுத்துவதால், சாதாரண நிலையிலுள்ள எந்த ஒருசராசரி வாசகனாலும் புரிந்து கொள்ள முடியாத - புரிந்துகொள்ளக்கூடாத வகையில் எழுதப்படுவது தான் நவீன புதுக்கவிதை|| என்றாகி விட்டது. மற்றுமொரு வகையில், வட்டார வழக்குச் சொற்களும், விரசம் பேசும் தூசண வார்த்தைகளுமே இவர்களது கவிதை மொழியாகவும் இருப்பதால், ஊர்கடந்து அல்லது தேசம் கடந்து சொல்லும் இக்கவிதைகளுக்கும் வாசகனுக்கும் இடையிலான புரிதல் பற்றிய நேரடித்தொடர்பு இல்லாமல் போகின்றது. அண்டி வாழும் சகோதர இனத்தவன் கூட இக்கவிதைகளைப் புரிந்துகொள்ள, அடிக்குறிப்புக்களையும், பிரதேச வழக்கு அகராதிகளையும் தேடவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் தளப்படுகின்ற போது, எதிர்காலம் பற்றி பேச வேண்டியதில்லை. நல்லதொரு கவிதைப் படையலுக்குள் படிமங்களும் குறியீடுகளும் சில நோரங்களில் பிரதேச வழக்குகளும் கூட, ஆங்காங்கே இழையோடி நிற்றல் இயல்புதான் என்றாலும், அது கவிஞன் கூறவந்த செய்தியை வாசகன் தெளிவுடன் புரிந்துகொள்ள நேர்துணையாக நிற்க வேண்டுமே தவிர, எதிர் வினையாகி ஏமாற்றி விடக்கூடாது. கல்பதித்த மோதிரமே கவர்ச்சியும் பெறுமானமும் உள்ளது என்பதற்காக, கல்லையே மோதிரமாக்கும் முயற்சியைத்தான் இன்று சிலர் நவீன புதுக்கவிதைக்கான திருப்பமாய்க் கொள்கின்றனர்.

தென்னிந்திய சிற்றேடுகளில் உள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகளில் வரும் புறவயம் சார்ந்த பண்புக்கூறுகளில் சட்டகம் போட்டு, எதையோ சொல்ல வந்து, வேறு எதையெல்லாமோ சுற்றிச் சென்று, வாசகனை இடைநடுவில் எங்கோ தவிக்க விடும் அகவயப்பட்ட அதன் பண்புக் கூறுகளையும், செய்யப்பட்டதும், வரையறுப்புக்குட்பட்டதுமாய் விளங்கும் வித்துவ கவிமொழியினையும்... அப்படியே வரிக்கு வரி ஷகாப்பி|யடிக்கின்ற நமது இளசுகளால் இன்று நவீன தமிழ் புதுக்கவிதை இலக்கியம் தன் சுயத்தை இழந்து அந்நியமாகிப் போகின்ற பரிதாப நிலை பற்றி, இப்படியானவர்களை தட்டிக்கொடுக்கின்ற விமர்சக விற்பன்னர்கள் சற்று சிந்திக்க வேண்டும் எனக்கேட்டு, விடயத்திற்கு வருகின்றேன்.

"மனித நேயந்தேடும் தன்னிலை உணர்வுகள்...... நடப்பு அரசியலும் சமூக நகர்வுகளும்... மேலாண்மை வாதம் பற்றிய சர்வதேசிய பார்வை...... போர்க்கால அவலங்களை தழுவி நிற்கும் ஆவேச உணர்வுகள்...." என்றவாறு,

கவிஞர் அஷ்ரப் சிகாப்தீன் அவர்களின் "என்னைத் தீயில் எறிந்தவள்" கவிதைத் தொகுப்பினை ஒன்றில் ஒன்று இணைந்து செல்லும் நான்கு வித்தியாசமான களமுனைகளில் தரிசிக்க முடிகிறது.

மற்றுமொரு வகையில் சொல்வதென்றால் - மனித நேயம் என்ற பொதுமைக்குள் நின்று, தன்னையே பிறனிலும் தரிசிக்கின்ற தார்மீக உணர்வு, தற்சார்புகளில் இருந்து பிரக்ஞை பூர்வமாக விலகி, அரசியல் பற்றிய சமூக நிகழ்வுகளின் நடப்புச் சிக்கல்களை ஆராயும் பொறுப்புணர்வு, வாழ்வின் அதீத ரகசியங்களை எல்லாம் உற்று நோக்கும் தீட்சய்ணப் பார்வை..... இவற்றுடன் ஒட்டிப் பிறந்த 50 கவிதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

தன்னையே பிறனிலும் காணுகின்ற கவிஞனின் தார்மீக உணர்வானது, படர்க்கை இடத்தில், அந்நியப்பட்டு நின்று பெண்ணியம் பேசும் படைப்பாளிகளை 'ஒருசோடிச் செருப்பு|க்குள் எப்படி அற்புதமாய் நையாண்டி செய்கிறது!

"குளிர் அறைகளில்
பெண்மை பேசும் மானிடமே
உங்களில் யார்
வாங்கிக் கொடுக்கப்போகிறீர்கள்
இவளுக்கு
ஒரு சோடி செருப்பு"

தனி மனித உணர்வுகளுக்குள் தானும் கரைந்து ஒளிகின்ற ஒரு நல்ல படைப்பாளியின் வல்லமை காக்கும் மற்றுமொரு சித்திரம் தான் என்னைத்தீயில் எறிந்தவள்.|

"என்கண்ணில் குளம் கண்டு
உன்னை அனுமதிக்க
போனாய் நீ பெண்ணே
என்னை ஒரு பெருந்தீயில் எறிந்துவிட்ட

என்ற வரிகளை படிக்கின்ற போது, நமது கண்களும் குளமாகி விடுகின்றதல்லவா? இதுதான் பாரதி சொன்ன நவகவிதை!

வண்டிச்சக்கரமாய் சுழலும் உலக வாழ்க்கையின் நிலையாமை பற்றி, துன்பத்தில் உழலும் சராசரி மக்களை ஆற்றுப்படுத்த வந்த வேளையில் வீசுங்காற்று தான் சொல்ல வந்த செய்தியை, எத்துணை எளிமையாய் - அழகாய் - ஆழமாய் வெளிப்படுத்தி நிற்கின்றது!

"ஆள நினைத்தும் வாழ நினைத்தும்
ஆடிய மனிதரெலாம் - ஒரு
கால நொடிதனில் காணாதாகினர்
கதைகள் நீயறிவாய்."

நாய்களும், பேய்களும், நரிகளுமாய்..... மனித முகங்களுக்குள் மற்றுமொரு முகங்காட்டும் இன்றைய நவீன சமூக அமைப்புக்குள் புலிவால் பிடித்தேனும் நாமும் வாழவேண்டித்தான் இருக்கிறது. யதார்த்தத்துடன் ஒட்டியதான கவிஞனின் நிதர்சனப் பார்வை, தன்வயப்பட்டு அனுபவத்தில் குவிகிறது.

"கடன் கேட்பதற்கு முதல் நாள்
எனது கவிதையொன்றைப் படித்து
புல்லரித்துப்போனதாய்ப் புகழ்ந்தாய்...
அத்தனைக்கும் ஆமாம் போட்டுத்தான்
ஆகவேண்டியிருக்கிறது
உன்னிடமும் சில தேவைகள் இருப்பதால்!"

"சின்னஞ்சிறியதும் பிரமாண்டமானதுமாய்... இன்றும் இன்னுமாய் அற்பதங்கள் எத்தனையோ கொட்டிக்கிடக்க, ஒரு துண்டுமேகமும் பத்தோ பதினைத்தோ வெள்ளிகளை மட்டுமே கண்டு கண்டு... பிரமித்துப் போகின்ற", "கிணற்றுக்குள் இருப்பவர்கள்" வீசும் நையண்டிப்பார்வை, கூர்ந்து ரசிக்கும் படியாய் உள்ளது. குறியீடுகளும் படிமங்களும் குடிகொண்ட இதன் வரிகள்,

"பெரிய வாளி சுமந்தபடி
இறங்கி ஏறத்தான் செய்கிறது
துலா
நீங்கள் தான் வெளியே வருவதில்லை!"

என்ற அங்கலாய்ப்புடன் முடிவதே ஒரு அழகுதான்!

பொய்யில் விளைந்து கிடக்கும் இந்தப் பொய் உலகின் யதார்த்தம் சுட்டி வந்த பொய்களோடு வாழ்தல்||, உவமை அணியில் கூட,

"கால் இடறினால்
கொழும்பில்
ஓர் அறிவிப்பாளனில் விழுவது போல.....

என்றவாறு நிதர்சன உலகை நியமப்படுத்தி இருப்பதானது, நயக்கத்தக்கதாய் உள்ளது. பாதுகாப்பும்| இந்த வகைக்குள் அடங்கி நிற்கும் ஒரு நையண்டிக் கவிதைதான்!

அதிகாரம் மனித சமூகத்தை எப்படி எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதை உணர்த்த வந்த கவிஞன்,

"எல்லாமான இறைவனே
என்றைக்கும் என்றைக்கும்
உனக்கு நன்றி
நீரையும்
காற்றையும் காலத்தையும்
உனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக!"

என்றவாறாய் அமையும் ஒரு நிம்மதிப் பெருமூச்சின் அதிர்வுக்குள், எத்தனை எத்தனை அர்த்தங்களை அடக்கி வி;ட்டிருக்கின்றன!

பாழும் இந்த உலகில் ஒரு சராசரி மனிதன் எப்படி எப்படி எல்லாமோ தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. உணர்ச்சியுள்ள ஒரு மிருகமாக சிலவேளை உணர்வே அற்ற ஒரு ஜடமாக, சாவி கொடுத்த ஒரு பொம்மையாக, உயிரற்ற ஒரு பிணமாக....

"எதையெதையோ.....
யார் யாரையோ திருப்திப்படுத்த
எதையெதையோ
யார் யாரையோ தேடித்தேடி......"

பாரச்சிலுவை சுமந்தபடி காலந்தள்ளுதல் கவிஞனின் பார்வைக்குள் மிகத்துல்லியமாய் படமாக்கப்பட்டுள்ளமை சிறப்பு.

80க்கு பிற்பட்ட காலப்பகுதிகளில் இலங்கை மண்ணிலும் அதற்கு அப்பாலும், போர்க்கால அவலங்களையும், அட்டூழியங்களையும், உயிருடன் மண்ணுக்கள் புதைக்கப்பட்டதான மனித உயிர்களின் கடைசி சொட்டு துடிப்புக்களையும் கூட தன் கவிதைக்குள் சிறைப்படுத்தி, சித்திர மாக்குவதில் ஒரு வித்தியாசமான கலைஞனாக அஷ்ரப் சிகாப்தீன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்!

இவன் எடுக்கும் படம் கவிதைத் திரையில் முப்பரிமாணங் கொண்டதாய் விழுகிறது. எக்ஸ்ரே எடுக்கவும் இவனுக்குத் தெரியும். தேவைப்பட்டால் ஷஸ்கேனிங்| பண்ணியும் பார்க்கிறான்....!

போர் அவலங்களில் தினம் தினம் எப்படியோ இல்லாமல் போகும் 'யாரோ ஒருவருக்குள் உன்னையும் .இழந்து விடாதே!| என்ற கவிஞனது எச்சரிக்கை வேட்டின் பின் புலம் பற்றி நிற்கும் 'ஆள் தேவை|யும் 'உனது மரணமும்' தெருநாயிலும் கேவலமாய் மனிதம் மதிக்கப்படுதலை செம்மணி அவலம் பற்றிய ஒரே தளத்தில் நின்று, வெ வ்வேறு கோணங்களின் படம் பிடித்துள்ள விதம், வியந்து நோக்கத்தக்கது.

இப்படி மானுடம் சார்ந்த போர்க்கால உணர்வுகளை வெளிக்கொணரும் 'தெரியாதது| கவிதைக்குள் - இனம், மதம், மொழி, தேசம் என்ற எல்லைக்கோடுகள் கடுகாய் சிறுத்து, காணாமல் போக - மானிட உணர்வும், மனித நேயமும் மேலோங்கி நிற்றல் காண்கின்றோம்.

"ஆடாயினும் கோழியாயினும்
அறுக்க முனைகையில்
கருணை இரந்து
கதறிப் பார்க்கும்....||

"பாலஸ்தீனத்திலும்
கொஸோவோவிலும்
செம்பணியிலும்
அழுதார்களா
அவலக்குரல் கொடுத்தார்களா
தெரியவில்லை
உயிருடன் புதைக்கப்பட்டவர்கள்!"

படிக்கும் போதே கண்கள் பனிக்கின்றன. இது ஒரு படைப்பாளியின் விசாலப்பார்வைக்கு கிடைத்த வெற்றி அல்லவா?

"சாந்தி சொல்வதுவும் சகவாழ்வு பேசுவதும்
பொழுது போக்காகப்
புறாக்கள் விட்டுப்
புகைப்படங்கள் எடுப்பதுமாய்
வாழ்பவர்க்கேது வருத்தங்கள்?

"நாயிழுத்துப்போட்டு
நக்கிப்புரட்டி
நாறடித்த சட்டியென நாடாயிற்று!"


"என்று தணியும்" இந்த இனவெறித் தாகமென்ற அங்கலாய்பு, அழிஞ்சிப் பொத்தானையில் விழுந்த 'குரும்பட்டி|யாக வாசகர் நெஞ்சத்தை தொட்டுச் செல்கின்றது.

"ஆகட்டும் நண்பர்களே....
உங்கள் செங்கோல் ஓங்கட்டும்
என்
அக்கம் தொலைகின்ற நாள்வரையும்,"

என ஆவேசங்கொள்ளும் இவன், தன் கவிதையை

"ஒருகைத்துப்பாக்கியாக நீட்டவோ
அன்றி
ஒருகைக்குட்டையாய் வெடிக்கவோ...."

செய்யும் முனைப்பில், நடப்பு அரசியலுக்குள் நகர்த்திச் செல்லும் விதம் முற்றிலும் வித்தியாசமானது!

'பேச்சுவார்த்தை| சமகால சமூக நிகழ்வுகளை விரக்தியுடன் கொட்டித் தீர்க்கின்ற ஒரு அருமையான குறியீட்டுக் கவிதை, இப்படி, எளிய வார்த்தைச் சரடுகளை எறிகுண்டாக்கி, சமூகத் தலைமைகளை நையாண்டி பண்ணவும் நையப் புடைக்கவும் வேறுயாருக்கு வரும் இவனைத்தவிர இந்த வகையறாக்குள் 'நீயும் உன் தேசபக்தியும்|, 'ஒப்பந்தம், 'கரையோரமும் நமது தலை விதியும்', 'சப்பாத்துப் பாடல்', 'நிமிர்தல்', முதலிய கவிதைகளையும் உள்ளடக்கி பார்க்க முடியும். இக்கவிதைகளின் வெற்றியில் இவனிடம் நிறைந்துள்ள sympathetic feeling மிகவும் செல்வாக்குச் செலுத்துவதை அவதானிக்க முடிகிறது!

முஸ்லிம் தேசியம் என்பதை வலியுறுத்தும் அல்லது அந்த வித்தியாசத்தை எடுத்துரைக்க விழையும் கவிதைகள் 90களுக்குப் பின்பான ஈழத்து தமிழ்க்கவிதைகளில் ஒரு பிரதான போக்காக உருவாகியிருக்கிறது. புதிய இத்திருப்பு முனைக்குள் தடம்பதித்து நிற்கும் அஷ்ரப் சிகாப்தீனின் எழுத்துக்கள் காத்திரம் மிக்கவை.

"இருநூற்று ஆறு மீஸான் கட்டைகளுக்கும் ஒரு கைகுலுக்கலுக்கு மிடையில்.....|| தன்னையே பிடுங்கித்தின்னும் வெட்கத்தில் இருப்பதாகத் தொடரும் கவிதை, தன் வயப்பட்ட தனிமனித உணர்வுக்குள் தள்ளாடி விடாமல், சுதாகரித்துக் கொண்டெழும் சந்தர்ப்பமானது, வாசகர்களாகிய நம் மனதை சுளீர் எனத் தொட்டுச் செல்கின்றது.

தன் தாய்மாமனையும் மைத்துனனையும் படுகளத்தில் அவன் கண்ட காட்சி.

"அரவணைத்த தந்தையின் கைகளுக்குள்
ஹுஸைனியாப் பள்ளிவாசலின்
இரத்தம் உறைந்து போயிருந்த தரையில்
நீ சுருண்டு கிடந்ததைப் பார்த்தேன்.
ஓநாய் குதறிய கூட்டுக்குள் கிடந்த
கோழியும் குஞ்சுமென......"

தொடர்கையில் நாம் அழுகின்றோம். அவனோ, தன் சமூகத்தின் வரலாற்றுப் பக்கம் ஒன்றில் அதனை ஆவணப்படுத்தி விட்டு, அப்பால் நகர்ந்து செல்கின்றான்!

சமகாலத்தில் பலராலும் சிலாகித்து பேசப்பட்ட நல்ல தொரு கவிதை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகா நாட்டில் அரங்கேற்றப்பட்ட போது கவிக்கோ சான்றோர் பலரையும் ஆச்சரியம் கொண்டு அசத்தி விட்ட கவிதை!

"முஹம்மது என்று எழுதி விட்டு
முகர்ந்து பார்த்தேன்
என்
கலிமா விரலில் கூட
கஸ்தூரிவாசம்.....!"

எனத் தொடங்கும் இக்கவிதையின் ஆரம்பமே அலாதியாய்..... அற்பதமாய் அமைந்து விடுகின்றது.

"நாயகமே......
உங்கள் வார்த்தைகளுக்கு
மிருகங்களும் கட்டுப்பட்டன.
நாங்களோ
மிருகங்களால்
கட்டுப்படுத்தப்படுகின்றோம்.......

என்ற வரிகள் நயக்கத்தக்கன. எங்களிடமிருந்து
எங்களைக் காப்பாற்ற
இறைஞ்சுங்கள்.....!"
என்று முடியும் இக்கவிதை, கவிஞனின் முத்திரைக் கவிதைகளான 'ஸெய்த்தூன் அல்குர்ஆன் போல தனித்துவமும் கருத்தாழமும் நிறைந்து காணப்படுகின்றது.

ஒரு படைப்பின் மீதான விவாதங்களும் விமர்சனங்களும் தான் முக்கியமே தவிர பாராட்டுரைகளல்ல. காரசாரமான எதிர்வினைகளும் அதற்கான பதில் வினைகளுமாகத்தான் ஒரு படைப்பின் மீது வாசகர் கவனத்தை ஈர்க்க முடியும். அந்த வகையில் வெற்றி கண்ட ஒரு படையல்தான் ஒரு வீரவணக்கம்.

கவிதை வெளிவந்த காலப்பகுதியில் வரிந்து கட்டிக்கொண்டு வாதப் பிரதி வாதங்கள் செய்த வாசகர்கள் ஏராளம். இந்தக் கவிதை அரசியல் வாதிகளின் முகத்திரைகளை ஆங்காங்கே கிழித்துக் காட்டியதும், நடப்பியல் யதார்த்தங்களை நையாண்டிக்குள்ளாக்கியதும், எதிர் வினையாடலின் முக்கிய காரணங்களாயின.

"நாட்டை, பிரதேசத்தை, சமூகத்தை
விற்றுப்பிழைப்போரை
விட்டுவைத்திருக்கிறார்கள்
கேவலம்
மரத்தை விற்ற உங்களையல்லவா

சுட்டுக்கொன்று விட்டார்கள்...." என்ற ஆதங்க உணர்வு,

"ஒரு கொலைகாரன் என்று
உங்களைக்
குறை சொல்கிறார்கள்
பலஸ்தீனத்தில், குஜராத்தில்
கொஸோவோவில், ஈராக்கில்,
ஆப்கானில், காஷ்மீரில், மீரட்டில்
ஏன்
எங்களது வடகிழக்கில்
கொல்லப்பட்டவர்களது
தொகையை விடவா

நீங்கள் செய்தது அதிகம் என்ற ஆச்சரியம் நிறைந்த வினாவுக்குள் மறைய, கவிதை தொடர்கிறது.

இப்படி, இனம் - தேசம் என்ற கட்டுக்களை உடைத்துக் கொண்டு, சர்வதேசங்களையும் ஆகர்கித்து நிற்கும் இவனது பார்வை, அமெரிக்க மேலாண்மை வாதத்திற்கு எதிராக திரும்பி இருப்பதை 'வஞ்சனை ஏன் 'இன்னொரு பக்கம் 'அந்தக் கதவுகள் ஊடாக காண முடிகின்றது!

இக்கருத்தை தொகுப்பிற்கு முன்னுரை எழுதியுள்ள விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹ்| வின் கடைசி வரிகள் உறுதி செய்கின்றன.

"ஈழத்து முஸ்லிம்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் கவிதை வரலாற்றில் அஷ்ரப் சிகாப்தீனை மறந்து அந்த வரலாறை எழுதமுடியாது. ஒரு வழியில் அதன் ஒரு காலகட்ட திருப்பு முனையை பதிவு செய்த முதல்வராகவும் அவரை காணலாம்.

வி.ஏ. ஜுனைத்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-11-18 00:00
Share with others