அகதியாய் அலைகிற கால்களின் வலிகளோடு ஷிப்லியின் 'நிழல் தேடும் கால்கள்' கவிதைப் புத்தகம் வந்திருக்கிறது. போரின் தாக்கம் சமூகத்தின் விளைவுகள் காதலின் பிரிவு முதலிய தன்மைகளோடு எழுதப்பட்டிருக்கும் இந்த கவிதைகள் எளிமையான சொற்களை அடுக்கி உருவாக்கப்பட்டிருப்பதுடன் சாதாரண வாசகர் தரப்பினரை இலக்காக கொண்டிருக்கின்றன. ஒரு 'ஜனரஞ்சக கவிதைப்புத்தகம'; என்ற தன்மையுடன் ஷிப்லியின் கவிதைகளும் புத்தகமும் அமைந்திருக்கிறது.

இதழ்களையும் பத்திரிகைகளையும் கவிதை மற்றும் இதர எழுத்தக்களுக்காக நம்பியிருக்கும் ஒரு சூழல் நிலவி வருகிறது. நாங்கள் எழுதுகிற கவிதைகளை இன்று அவைகளே தீர்மானித்து விடுகின்றன. சங்ககால கவிதைகள் அதிகாரத்திலிருந்தவர்களால் தொகுக்கப்பட்டதாய் கூறப்படுகிறது. ஏனைய காலங்கள் எல்வாவற்றிலும் அதிகாரத்திலிருந்தவர்களினதும் தொகுப்பாளர்களினதும் கொள்ளைகளிற்கு உட்பட்டே தொகுப்புகள் நடைபெற்றிருக்கின்றன.

இன்றும் இதழ்கள் பத்திரிகைகள் அதிகாரத்திலிருப்பவர்களின் தணிக்கை அதிகாரங்களோடு வெளியிடப்படுகின்றன. அல்லது அவைகளை அதிகாரங்கள் அச்சுறுத்துகின்றன. ஷிப்லியின் கவிதைகள் நான் மேலே கூறிய தணிக்கைகளை கருதி எழுதப்பட்டிருந்தன. அவற்றின் மத்தியில் தணிக்கையுடன் வெளிவந்திருக்கின்றன. சிலது அவற்றை மீறியும் எழுதப்பட்டிருக்கிறன்றன.

ஒரு படைப்பு எந்த தணிக்கையுமின்றி பிரசுரிக்கப்படுகிறபோதுதான் அந்த எழுத்து வருகிற சமூகத்தின் அசலான தோற்றம் புலப்படுகிறது. எனவே தணிக்கை செய்யப்பட்ட படைப்புக்களை வைத்து நாம் அசலான சமூகத்தை எப்படி எங்கு தேடுவது என்ற கேள்வி எழுகிறது.

தனது போக்கு ஜனரஞ்சகப்போக்கு என்று கூறகிற ஷிப்லி அத் தன்மையுடைய கவிதைகளைத்தான் எழுதவேண்டும் என்றும் தீhமானித்து எழுதுகிறார். சமூகம்மீதான அனுதாபமாய் அமைகிற அவரது போர்க்கவிதைகள் பாதிப்பு என்ற தன்மையை விடுத்து பார்வை என்ற தன்மையுடன் காணப்படுகிறது. மண்வாச் போர்க்களமும் சில பூக்களும் முதலிய கவிதைகள் போர் பற்றி எளிமையாக பேசுகின்னறன.

வாழ்வையும் பொழுதையும் மனிதர்களையும் துப்பாக்கிகள் ஆளுகிற சூழலில் வாழும் அடக்குமுறை ஷிப்லியின் வாழ்வுச்சூழலாய் கவிதையிலிருந்து புலப்படுகிறது. ஷிப்லியின் கவிதைகள் அகதிச்சமூகத்திலிருந்து வெளிப்படுகின்றன. அகதியாய் அலைகிற நம்மைப்போன்ற ஷிப்லியின் சமூகம் அதன் கொடுமைகளை எல்லாத்தரப்பின் மீதும் அறைந்து விடுகிற தன்மையும் தனக்குள் தானே சொல்லி விமமுகிற தன்மையும் காணப்படுகிறது.

'பெயர் தெரியாத
தெருக்களில்
அகதிகளாய்
மண்வாசனையை
தேடும்போதுதான்
ஊயிர் கருகுகிறது'


மண்வாசம் 40 )

'வாழையடி வாழையாக' என்ற கவிதை அரசியல் அதிகாரங்கள் தொடர்ந்து சனங்களை வதைக்கிற தன்மையை பேசுகிறது. அதிகாரம் என்பது ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்து சனங்களை வதைக்கிறது. சனங்களை வதைக்கிற அரக்கனை கொல்ல மீளமீள அவன் பிறக்கிறான் என்கிறாhர் இவர்

'எல்லாம் கொஞ்ச நேரம்தான்
இவனை எரித்து
சாம்பலாக்கு முன்னே
வந்து விட்டான்…
அடுத்த அரக்கன்'


(வாழையடி வாழையாக 48)

அலுத்துப்போன அரசியல் விடயங்கள் பற்றியும் நம்பிக்ககை கொள்ளுகிற சமூகத்தின் முகங்கள் பற்றியும் கவிதைகள் பேசுகின்றன.

'எதற்கோ
எங்கோ
எப்படியோ
நீண்டு கொண்டிருககும்
இதுவெல்லாம்
ச்சே…
ஒரு பயணமா? '


(நிழல் தேடும் கால்கள் 50)

'ஊரில்
மீண்டும்
வசிக்கப்போகும்
எங்கள் கனவுகளையும்
நம்பிக்கைகளையும்
யாரால்
என்ன செய்ய முடியும்'

(இன்னும் சில நம்பிக்கைகள் 43)


போர் அகதியாய் அலைத்துவிட் துயரமும் அரசியல் ஏமாற்றிவிட்ட அனுபவங்களும் என்று ஷிப்லி போன்றவர்களின் கவிதைகள் அவர்கள் சமூகத்திலிருந்து வருகிறதைக்காணாலாம்.

அரசியல் தவிர ஷிப்லியின் கவிதைகள் சமூகம் மீதான அடிபாடுகள் ஊட்டப்பட்டகவிதைகள் இந்தப்புத்தகத்pல் நிறைய இருக்கின்றன. உலகத்தை இருட்டு உலகம் என்கிறார் இவர். நடைமுறை வாழ்வில் சந்திக்கின்ற மனதர்களிடையே அவர்களால் நிரம்பியிருக்கும் உலகத்தினரிடையே அடிபட்டுக்கிடக்கிற ஒரு மனிதனாயும் ஷிப்லியின் கவிதைகள் காணப்படுகின்றன. 'மரணத்தை தவிர விடுதலை இல்லை' என்று எஸ். போஸ் எழுதியது போல எழுதுகிறார் ஷிப்லி.

'மரணத்தின் திசைநோக்கி
நடக்கிறேன்
மிக மிகத் தெலைவில்
என்னை வரவேற்றுக்
காத்திருக்கிறது அது..'


(இருட்டு உலகம் 16)

மனிதர்களால் பலியிடப்படுகிற உலகம் பற்றி கோபமும் சில கவிதைகளில் வெளிப்படுகின்றன. சிலர் உலகத்தையும் மனிதர்களையும் கையாளுகிற விதம் வேறு சிலரை பாதிக்கிறது அது சிலவேளை சரியாக அல்லது தவறாக இருக்கலாம் ஷிப்லி தனது அவதானத்திலிருந்து எழுதுகிறார்.

'எத்தனை ஜோடிகள்
இருந்தென்ன
யாராலும் ரசிக்கப்படாமல்
சகலக் கடலும்
விரிந்த வானமும்'


(காலிமுகத்திடல் 20)

மனிதாபிமானம் தீர்ந்தஉலகத்தில் கை ஏந்தித்திரிகிற ஏழைச்சனங்களின் கண்ணீர் பாதிப்பிலிருந்து வருகிற அவருடைய ஒரு கவிதை சமூகத்தில் கேள்விகளை விட்டுச்செல்கிறது.

'எங்கள் பாத்திரங்களில்
எப்போதாவது விழும்
சொட்டுச் சொட்டாய்
மனிதாபிமானம்..'


(ஏழையின் கண்ணீர் 25)

கருக்கலைப்பு பற்றிய அவருடைய கவிதை உயிரை அறைகிற மற்றொரு கவிதையாகும். மருத்தவங்கள் நவீன மருத்துவங்கள் சத்திர சிகிச்சை முதலியன மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட போது கருக்கொலை போல மனிதன் தன்னைத்தானே கொலை செய்கிற வேலையையும் செய்கிறான்.

'தொப்புள் கொடிகளே
தூக்குக் கயிறுகளாகின்றன
இந்தக் கருக்கலைப்பில்..'


(கருக்கலைப்பு 31)

பெண் பற்றியும் ஷிப்லி கவிதைகள் எழுத முனைந்திருக்கிறார். கவிதைகள் அனுபவத்தின் மொழியும் வடிவமும் என்ற வகையில் பெண் பற்றி ஷிப்லி எழுதுகிற 'நானும் ஒரு பெண்' என்கிற மாதிரியான கவிதைகள் கேள்விகளின் வயப்பட்டவை. பெண் அடைக்கப்பட்டிருப்பதை காணுகிற ஒரு சிறை மீதான இவரது கவிதை

'அதனுள்
உறைந்து கிடந்த
எதிர்காலம் மீதான
அவைகளின் நம்பிக்கையும்
சுதந்திர அறைகூவலும்
எவருக்குமே கேட்கவில்லை..'


(கிளிகள் பெண்கள் சுகந்திரம் 37)

என்று காணப்படுகிறது. இத்தொகுப்பில் மேலும் 'பெண்மை போற்றி' போலவும் வேறும் சில கவிதைகள் இடம்பெறுகின்றன.

அடுத்து காதல்பிரிவு அதன் வலிகள் ஊடு செல்கின்றன ஷிப்லி கவிதைகள். காதல் கவிதை எழுதுவது தொடர்பான முயற்சி மொழியையும் வாசிப்பையும் இலக்கிய செம்மையற்ற –சாத்தியமற்ற நிலைக்க கொண்டு சென்றிருக்கிறது. மேலோட்டமான சொற்களாலும் ஆழமற்ற உணர்வுகளாலும் வருகிற காதல் கவிதைகளின் சூழலில் அவைகள் 'கவிதைகள் இல்லை' என்று அதிலிருந்து பலர் விடுபட்டிருக்கிறார்கள். காதல் கவிதைகள் தொடர்பில் உணர்வுபூர்மான கவிதைகளும் வருகிறதை காணலாம். ஷிப்லியின் காதல் கவிதைகள் காதல் பிரிவு மீதான வலியுடனும் எதிர்ப்புணர்வுடனும் காணப்படுகின்றன.

கவிதைகள் நுட்பமான சொற்களினால் இணைக்கப்படுபவை, அடுக்கப்படுபவை அல்லது பின்னப்படுபவை என்று கூறப்படுகிறது. கவிதையில் சொற்களே முக்கியம் பெறுகின்றன எனவும் கூறுகிறார்கள். கவிதையில் நிரம்பியிருக்கும் அழகான வித்தியாசமான சொற்கள்தான் கவிதையை தீர்மானிக்கின்றன. ஷிப்லியின் கவிதைகளில் புதுமையான சொற்களை காண முடியவில்லை பழக்கப்பட்ட சொற்களைத்தான் கையாளுகிறார். ஆழகியலான மொழியையும் ஆழமான படிமங்களையும் காணமுடியவில்லை. அவைகளிலிருந்து விடுபட்டு சாதாரணமாய் எழுதவேண்டும் என்று ஷிப்லி நினைக்கிறார்.

ஷிப்லி கவிதைகள் அவரின் தொடக்கக கவிதைகள் என்றே கூற வேண்டும்.

'போனது போகட்டும்
வெட்டப்பட்ட
நகங்களை விடுத்து
விரல்களை பாதுகாப்போம்'


என்ற அடிப்படையுடன் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதுவரை ஷிப்லி தனது பார்வையின் வாயிலாகவே தனது கூடுதலான கவிதைகளை எழுதி வந்திருக்கிறார். அவற்றில் இன்னும் நுட்பங்களைசெலுத்தி தனது அனுபவத்திலிருந்து புதிய வடித்தோடும், புதிய சொற்களோடும் இனி அவர் எழுதும் கவிதைகள் அவரது புதிய அடையாளத்தோடு நமக்கு வரப்போகிற நம்பிக்கையை 'நிழல் தேடும் கால்கள்' கவிதைப் புத்தகம் தருகிறது.

------------------------------------------
உடைந்த வானத்தின் கீழாக
நிலவு
தொங்கிக் கொண்டிருந்தது
நட்சத்திரங்கள்
பேரிரைச்சலோடு
புழுதியில் விழுந்து கிடந்தன.
---தீபச்செல்வன்
தீபம்http://deebam.blogspot.com
------------------------------------------

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-16 00:00

இந்நூல் தொடர்பான பிற விமர்சனங்கள்

Share with others