கவிதை என்பது மனதின் ஆழம் வரை சென்று ஆலாபனை செய்வது, உயிரின் நரம்புகளில் உயிரோவியமாய் உணர்வுகளைத் தீட்டவல்லது. நல்ல கவிதை மனவெளிகளில் மழை பொழியச்செய்து சிந்தனைகளுக்கு உயிர் கொடுக்கும். நான்கு இதழ்கள் எழுதும் நவரசகவிதை முத்தம். முத்தத்தை மையமாக வைத்து கவிதைச்சிற்பம் செதுக்கியிருக்கிறார் கவிஞர் ஜெ.நம்பிராஜன்.

உன் மேல் உதடு சூரியன்...
கீழ் உதடு சந்திரன்
ஒரே முத்தத்தில்
உருக வைக்கும் வெயிலையும்
உறைய வைக்கும் பனியையும்
என் மேல் செலுத்துகிறாய்.


என்ற கவிதையை வாசிக்கும் பொழுது மனம் காதலின் உருகுநிலைக்கும் உறைநிலைக்கும் சென்று திரும்புகிறது. ஊடலின் தாழ்ப்பாள், கூடலின் திறவுகோல் முத்தம்.முத்தத்தின் சுவை எது? இனிப்பா, புளிப்பா, கசப்பா? (ரசனைக்கு அப்பாற்பட்டது).

நீ விவசாயி
நான் விளைநிலம்
என்னுள் மோகத்தை விதைத்து
முத்தத்தை அறுவடை செய்கிறாய்.


என்னும் வரிகளில் முத்தத்தின் வாசனை உயிரின் மூலை முடுக்கெல்லாம் பரவுகிறது.

உன் ஒவ்வொரு முத்தமும்
ஓர் முள்
அதை...
மறு முத்தத்தால் தான்
எடுக்க வேண்டும்.

உன் இதழ் தேனடை
அதில் தேனெடுக்கும் போது மட்டுமே
தேனீக்கள் கொட்டுவதில்லை.

எத்தனை முறை குடித்தாலும்
தீராத மதுப்புட்டி
உன் இதழ்
எவ்வளவு குடித்தாலும்
ஆசை அடங்காத பெருங்குடிகாரன்
நான்.


போன்ற கவிதைகளில் கவித்துவ வாசனை மனதை ஆக்கரமிக்கிறது.

யுத்தங்கள் - இரு நாடுகளைப் பிளவுபடுத்தும்
சத்தங்கள் - இரு செவிகளை ரணப்படுத்தும்
முத்தங்கள் - இரு இதயத்தை வசப்படுத்தும்


அந்த வகையில் சத்தமில்லாமல் யுத்தம் செய்கிறது முத்தத்தின் நிறைகுடம் எனும் இக்கவிதைத் தொகுப்பு.

நேசமுடன்
பா.விஜய்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-03 00:00

கருத்துகள்

"முத்தங்களும் சத்தங்களும்"

- ருத்ரா

(திரு.ஜே.ந‌ம்பிராஜன் அவர்கள் எழுதிய‌

"முத்தத்தின் நிறைகுடம்" என்ற கவிதைநூல்

பற்றி ஒரு விமரிசனக்கவிதை)

முத்தமழையை
கவிதைகளாக்கி
முழக்கமிட்டிருக்கும்
நம்பிராஜன் அவர்களே
அதற்கு
வர்ணக்குடை பிடித்து
காக்காய்பொன் மினு மினுப்புடன்
வார்த்தைகளில்
சாமரம் வீசியிருக்கும்
மதிப்பிற்குரிய‌
பா.விஜய் அவர்களே
உங்கள் இருவருக்கும்
என் மனங்கனித்த பாராட்டுகள்.

எச்சில் முத்தம்
இனிக்கின்ற பாற்கடலில்
காதலெனும் தீவு நோக்கி
கப்பல் விடும் மாலுமிகளே
இந்த‌
கப்ஸாக்களை வைத்தா
புதிய யுகம் நோக்கி புறப்பட்டீர்கள்.

உதடுகள் குவித்துக்கொண்டே
இருக்கும்
உங்கள் தேசத்தின்
தேசிய‌கீத‌ம்
வெறும் "இச்சு"க‌ள் தானா?
ப‌னிஉறைந்த‌
இம‌ய‌ ம‌லையில்
கார்கில் போரில்
வீர‌ இளைஞ‌ர்க‌ள்
துப்பாக்கிக‌ளையே
த‌ம் முதுகெலும்பாக்கி
விறைத்து நின்று
தீர‌ம் காட்டுகின்ற‌போது
அந்த‌ யுத்த‌ ச‌த்த‌ங்க‌ளை
முத்த‌ ச‌த்த‌ங்க‌ளாய்
கொச்சை ப‌டுத்துகின்ற‌
"ப‌ச்சை"க்க‌விஞ‌ர்க‌ளே
உங்க‌ள் காகித‌ ப‌க்க‌ங்க‌ள்
கார்கில் முக‌டுக‌ள் அல்ல‌.
அதில் உத‌டுக‌ள் தேடிஅலையும்
உம‌ர்க‌ய்யாம்க‌ளே !
அந்த பாரசீகக்கவிஞன் பாடியதில்
இளமை எனும் நீர்க்குமிழிக்கு
ஒரு தேடலின் நெருப்புக்குமிழி
சுடர்விட்டுக்கொண்டிருந்தது.
வாழ்க்கை த‌த்துவத்தின்
எரிமலையிலேயே குளிர்காய்ந்து..அதை
முத்த‌மாக்கி ம‌துவாக்கி
தீக்குளித்த‌வ‌ன் அவன்.

நீங்களோ
வாழ்க்கையின் குமிழியைக்கூட
உடைத்து நொறுக்கும்
சம்மட்டிகள்.
மோப்பக்கூட குழையும்
அனிச்சப்பூ எனும் காதலை
அருவறுக்கும்
கள்ளிப்பூக்களின் மூடைகளாக்கி
சுமந்து திரிகின்றீர்கள்.

அமுதம் என்கின்ற முத்தத்தைக் கூட‌
அழுத்தம் கொடுத்து அழுத்தம் கொடுத்து
காமம் மட்டுமே சொட்டும்
கள்ளிப்பாலாய் அல்லவா
ஊற்றிக் கொடுக்கிறீர்கள்.
அந்த மெல்லிய உதடுகளை
உங்கள்
உலக்கைப்பேனாக்களால்
கந்தலாக்கியதையெல்லாம்
ஒட்டுப்போட்டு தைத்து
கவிதைத்தொகுதியாக்கினீர்கள்.

சினிமாத்த‌ன‌மான‌
உங்க‌ள் ஜிகினா முத்த‌ங்க‌ளால்
த‌மிழ்மீது
எச்சில் உமிழ்ந்தா
எழில் கூட்ட‌ப்பொகிறீர்க‌ள்?
நிறைகுட‌ முத்த‌ங்க‌ளால்
கும்பாபிஷேக‌ம் செய்து
காத‌ல் தெய்வ‌த்துக்கு
ப‌க்தி செலுத்துவ‌தெல்லாம்
இள‌ய‌ த‌லைமுறையை
பக‌டை உருட்டி
நீங்க‌ள் கொஞ்ச‌ம்
விளையாடிக்கொள்ள‌த் தானே!

அந்த‌ ச‌ங்க‌த்த‌மிழ‌ன்
சொல்லாத‌ முத்தமா?
அந்த‌ ம‌வுன‌த்திலும்
கேட்காத‌ ச‌த்த‌மா?
"க‌ல்பொரு சிறுநுரை"
என்ற‌ இரு சொல்லே
ஈராயிர‌ம் ஹைக்கூக‌ளை
அங்கு அட‌க்கி வாசித்திருக்கிற‌தே!
க‌ல்லுக்கும் வலி.
அந்த‌ சிறுநுரைக்கும் வலி.
காத‌லின் பிரிவு
முத்த‌மே இல்லாம‌ல் அங்கு
முத்த‌ம் இட்ட‌ க‌விதை அது.

ஒரு குறை குட‌மும்
ஒரு வெறும் குட‌மும்
நிறைகுட‌ம் என்று சொல்லிக்கொண்டு
கூத்தாடும் காட்சிய‌ல்ல‌ அது.
எச்சில் ச‌ள‌ ச‌ள‌ப்புக்க‌ட‌ல்க‌ளையும்
ஏக்க‌ங்க‌ளின்
"ஜொள் அருவிக‌ளை"யும்
ப‌ர‌ப‌ர‌ப்பு க‌விதைக‌ள் ஆக்கும்
இவ‌ர்க‌ளின் பாம‌ர‌த்த‌ன‌ங்க‌ளில்
இருப்ப‌து..வெறும்
"உத‌டும் உத‌டு சார்ந்த‌ இட‌மும்" தான்.

ஒரு க‌விதை தொகுதியை வெளியிடுவ‌து
என்ப‌து சுக‌ப்பிர‌ச‌வ‌ம் இல்லை.
என‌வே பிர‌ச‌வித்த‌
திரு.ந‌ம்பிராஜ‌ன் அவ‌ர்க‌ளுக்கு
என் ம‌ன‌ம் திற‌ந்த‌ பாராட்டு.
அத‌ன் விம‌ர்ச‌க‌ர் பிர‌ச‌வ‌ம் பார்க்கும்
ம‌ருத்துவ‌ச்சி போன்ற‌வ‌ர்.
அத‌னால் திரு.பா,விஜ‌ய் அவ‌ர்க‌ளுக்கும்
என் வ‌ண‌க்க‌ம் மிகு பாராட்டு.
பிற‌ந்த‌து
அசுர‌க்குழ‌ந்தையா?
ம‌னித‌க்குழ‌ந்தையா?
தீர்ப்பை
அந்த‌க் குழ‌ந்தையிட‌மே
விட்டு விடுவோம்.

- by ருத்ரா

நண்பர் ருத்ராவுக்கு,

வணக்கம்.

'பாலொடு தேன் கலந்தற்றே பனிமொழி
வாயிலெறு ஊறிய நீர்'
என்ற திருக்குறளைப் படித்தாலும் தாங்கள் கோபம் கொள்வீர்கள் என்றே தெரிகிறது.

கவிஞரது வாழ்வில் காதலும் ஓர் அங்கம். எல்லாக் கவிஞர்களும் முதலில் காதல் கவிதைகளையே வடிக்கத் துவங்குகிறான். 'Now at U.S.A' என்ற தங்கள் முகவரியைப் பார்த்து விட்டு தாய்நாட்டு நலன்களைப் புறம் தள்ளி அமெரிக்காவுக்கு அடிமை சேவகம் புரியும் ஓர் நபர் என்ற முடிவிற்கு நான் வருகிறேன். அது தவறென்று நீங்கள் மறுக்கலாம்.அதே வகையில் குறைகுடம், வெறுங்குடம் என்ற தங்கள் குறியீடு தேசிய விருது பெற்ற ஒரு கவிஞரையும், வளர்ந்து வரும் ஒரு கவிஞரையும் சுட்டுவது எப்படி சரியாகும்? படைப்புகளை விட்டுவிட்டு படைப்பாளியை விமர்சனம் செய்யும் தங்கள் கேவல புத்தியை மாற்றுங்கள்.தங்கள் கவிதையில் இருந்து தாங்கள் எனது புத்தகத்தை வாசிக்கவில்லை, விமர்சனத்தை மட்டும் வாசித்துவிட்டு பிதற்றுகிறீர்கள் என்று தெரிகிறது. அசுரக்குழந்தையா,மனிதக்குழந்தையா என நீங்கள் குழம்பத் தேவையில்லை. காதல் தெய்வீகமானது. எனவே காதலில் பிறக்கும் கவிதை தெய்வக்குழந்தை ஆகிறது. வீரமும்,காதலும் சங்கத்தமிழ் மரபு. எனது கவிதைகளில் இரண்டும் உண்டு. காதல் கவிதைகள் எழுதுவது தவறென்றால், காதலிக்காதவர்கள் கல்லெறியுங்கள்.

அன்புடன்
ஜெ.நம்பிராஜன்

Share with others