1989-ல் என்னுடைய 'வியர்வைத்தாவரங்கள்' கவிதை நூலை ,சிங்கப்பூர் ஜாலன் புசார் சமூக மன்றத்தில் கவிப்பேரரசு அறிமுகப்படுத்தினார்.அவருடைய கவிதைக்கரங்களிலிருந்து நூல்களைப்பெற்றவர்களின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கரிய முகம், ஓர் இளைய முகம் நூல் வாங்கியிருப்பதையும் பார்த்தேன். இது யாருடைய முகம்? இந்த முகத்திற்குரிய இளைஞன் யார்? கேள்வி எழுந்து மறைந்தது. அடுத்த வாரத்தில், சிராங்கூன் சாலையில் "அண்ணே! என்னுடைய படம் இருக்கா?" என்று உரிமையோடு கேட்டான் அந்த இளைஞன். "இருக்கிறது .வந்து பெற்றுக்கொள்" என்றேன். இப்படித்தான் எங்களிடையே உறவு மலர்ந்தது. முதல் சந்திப்பிலேயே அண்ணன் தம்பி ஆனோம். மரியாதை மறைந்து உறவு மலர்ந்தது; உரிமை தழைத்தது. அதற்குப்பின் என் நிழலாக வந்தான்; நிஜமாக வளர்ந்தான்.
தமிழர்கள் மட்டும்தான் கேள்வியை ஞானமென்றவர்கள். பேரரசர் அக்பரைப்போல கேள்விஞானம் நிரம்பப்பெற்றவன் ரஞ்சில் பாண்டியன். பாரதம், இராமாயணம் கேட்டுக்கற்றவன். இலக்கியக் கூட்டங்களில் செவிகளை இழந்தவன்; இழப்பவன். 'தெரியாதது எதுவுமில்லை' என்றளவுக்கு எல்லாம் தெரிந்தவன்; தெரிந்துகொள்ள முயல்பவன். 'சகலகலா வல்லவனாக' இருந்தாலும் கவிதையைத்தான் காதலித்தான்; கவிதையில்தான் கவனம் செலுத்தினான். நான் தொடங்கிய கடற்கரைச்சாலையில் கலந்துகொண்டு கவிதை பாடினான். தமிழ்முரசில் கவிதை எழுதினான்.தாய்லாந்து சென்றுவந்து ஒரு பக்கம் கட்டுரை எழுதினான். புலவர்க்குப் புலியாக விளங்கிய வெண்பாவும் எழுதினான். ஒரு நேரத்தில் தமிழ்முரசில் என் கவிதை வெளிவர இவனின் ஆதரவு தேவைப்பட்டது. பள்ளிப்படிப்பை முடிக்காத பலர் விஞ்ஞானி ஆனதுபோல தம்பி ரஞ்சில் பாண்டியனும் ஒரு விஞ்ஞானிதான். ஒரு விஞ்ஞானிக்கே உரிய தேடல்; உழைப்பு; பார்வை , புதுமை நிரம்ப இருக்கிறது.
அவனுடைய 'லாடம்' கவிதைத்தொகுப்பைப் பார்த்தபோது, என் உள்ளம் விரிந்தவானாகி கருமேகம் பொழியும் கனமழையாய் மகிழ்ச்சியில் என்னை நனையவைத்தது. கவிஞன் ரஞ்சில் பாண்டியன் பிறந்தது கரம்பயத்தின் கத்திரிக்கொல்லை. கத்திரிக்கொல்லையல்ல...அது கவிதைக்கொல்லை. கற்பனை, சிந்தனை,மொழி,கூர்த்தமதி,ஆர்வம் நிரம்பப்பெற்றிருக்கும் இவனிடமிருந்து கவிதை வருவது எனக்கு வியப்பல்ல. இவன் என்னோடு இருக்கும்போது ஒர் இராணுவ வீரன் இருப்பதுபோல் உணர்வேன். ஆனால்,ஒரு கிராமத்துக் கிழவனைப்போல் பழமொழிகள் பேசுவான்.சிங்கப்பூரில் பலமொழிகள் பேசியவன். அந்த அன்புத்தம்பியின் ஹைக்கூ கவிதையைச் 'சிங்கைச்சுடரில்' ஆசிரியனாக இருந்தபோது படத்துடன் வெளியிட்டேன். அந்தக்கவிதை இதுதான்:
பத்தினி பரம்பரை
நான் தொட்டதற்குத்
தீக்குளித்தது சிகரெட்!
இன்றைக்கு ஒரு தொகுப்பே வந்துவிட்டது.அதாவது கவிதையில் ஒரு தோப்பே உருவாகிவிட்டது. தனி மரம் தோப்பாகிவிட்டான். இவனிடம் நிறைய கனவுகள், இவனிடன் வித்தியாசமான கற்பனைகள், இவனிடம் பளிச்சிடும் ஆற்றலல்கள் , விளையத்துடிக்கும் இலட்சியங்கள் காத்திருக்கின்றன. இவனிடமிருந்து எல்லாச்சிந்தனைகளும் உதயமாகின்றன. எல்லாவற்றையும் நிறைவேற்ற முடிவெடுத்திருக்கும் இவனுடைய பயணத்தின் முதல் அறிவிப்பு இந்த 'லாடம்".
இந்நூலின் அமைப்பு, வடிவம்,அட்டை வண்ணம் எல்லாம் ஒரு நவீனத்தின் அடையாளம். கிரானைட்டில் இழைத்ததுபோல் நூலின் அட்டை, வண்ணம்,வடிவம் சிறப்பாய் அமைந்து மனதைத்தைக்கிற கவிதைகளின் தொகுப்பாக லாடம் நமக்குக் கிடைத்திருக்கிறது.
கால்நடைகளின் தேய்ந்த கொளும்புகளுக்குத்தான் லாடம் கட்டுவோம். ரணமாகி குருதிக்கொட்டும் அந்தப்பாதங்களுக்குத்தான் லாடம் அவசியம். எல்லா கால்நடைகளுக்கும் லாடம் கட்டுவதில்லை. சமூகத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்குத்தான் லாடம் கட்டுவோம்.பயன்பாட்டைக்கூட்டவே லாடம் அவசியமாகிறது. இவன் கவிதையை லாடமாக வழங்கியிருப்பது நடைதளர்ந்த சமூகம் நடப்பதற்கு. நடக்கவேண்டியவை நடக்க;நடக்கவேண்டியவர்கள் நடக்க லாடம் வழங்கியிருக்கிறான்.114 பக்கங்களில் 224 கவிதைகளில் நமக்கு லாடம் கிடைத்திருக்கிறது. இது கவிதை உலகிற்கும் தமிழுக்கும் இலாபம்.முதல் கவிதையே முத்திரைக்கவிதையாகிவிட்டது. காதலிப்பதற்காக கவிதை எழுத வருபவர்கள் அதிகம். காதலிப்பதற்காக கவிதையைத்தேடுபவர்கள் அதிகம். காதலிப்பவர்களுக்கு முதல் தேவையாக இருப்பது கவிதை. காதலர்கள் மனக்கனத்தை கவிதையாகத்தான் இறக்கிவைக்கிறார்கள். அவர்கள் பேசுவது அவர்களுக்குக் கவிதையாகத்தெரிகிறது. கவிதை அவர்களிடை பாலமாக விளங்குகிறது. காதலின் ஆழத்தைக் கவிதைதான் அழகாகச்சொல்கிறது.ஆனால் இவன் கவிதை எழுதி காதலிக்கவந்தவன். காதலிமீது அல்ல தாய்மொழி மீது. முரண் அழகோடு கவிதை இருக்கிறது. காதலிப்பதற்காக கவிதையைத்தேடுபவர்களுக்கு காதலும் விளங்குவதில்லை; கவிதையும் விளங்குவதில்லை. இவன் கவிதை எழுதி காதலிக்கவந்தவன். யாரை ?தாய் மொழியை. இந்த வயது இளைஞனிடம் இப்படியொரு மொழிப்பற்றை; முதிர்ச்சியை காண்பது அரிது. கவிதை எழுதினேன்
காதல் வந்தது
தாய்மொழி மீது.
இதுமட்டுமா?...காதலியை அழைத்து "ராட்சசியே வா
காதலிப்போம் தமிழில்
கவிதை எழுத"
என்று எழுதியிருப்பது வயதை மீறிய மொழிப்பற்றைக் காட்டுகிறது; சிந்தனை நலத்தை வெளிச்சமிடுகிறது.எதிர்கால இளைஞர்களுக்கு இருக்கவேண்டிய மொழியுணர்ச்சியைச் சொல்கிறது. இது படிக்கும் இளைஞர்களைக் கொஞ்சமாவது மடைமாற்றம் செய்யும்.
நவீனக்காலத்தில் கணிணி உதவியுடன் வாக்களிக்க வந்துவிட்டோம். இது அறிவியலில் நாமடைந்த பெருமை.வாக்களிக்க வரும்போது இன்னும் கோவணம் இருப்பது விடுதலை பெறாத வறுமை. பெருமையும் வறுமையும் கைகோக்கும் இடமாக வாக்குச்சவடி விளங்குவதை அழகாகச்சொல்லியிருக்கிறான் இப்படி:
கையில் கம்பு
குறிமறைக்கும் கோவனம்
மின்னணுவில் ஓட்டு.
திருச்சியில் வானொலியில் பணியாற்றியபோது நாமக்கல் பக்கத்தில் ஒரு கிராமத்திற்குச்சென்றிருந்தேன். ஒலிப்பதிவு முடிந்தவுடன் 'காபி' தர ஆசைப்பட்டார்கள். நானோ அன்னாந்து தென்னைமரத்தைப்பார்த்தேன்.என்ன? என்றார்கள். 'இளநீர்' என்றேன்.அப்படியா என்ற ஆச்சர்யத்துடன் ஒரு குலையை வெட்டச்சொன்னார்கள்.நகரத்தில்ருந்து வரும் நமக்கு 'காபி'தான் பிடிக்கும். காபி கொடுப்பதுதான் நாகரீகம் என நினைக்கிறார்கள். இளநீர் என்பது பட்டிக்காட்டுப்பொருள் என எண்ணுகிறார்கள். அதைப்போலவே பயிர்செய்யும் கேழ்வரகையும் சோளத்தையும் கம்பு,தினை போன்ற தானியங்களையும் விற்றுவிட்டு அரிசிவாங்கிச்சாப்பிடும் பழக்கம் வந்துவிட்டது.அரிசிச்சோறு சாப்பிடுவது நாகரிகமாகிவிட்டது.கேழ்வரகுக்களி,கேழ்வரகுக்கூழ் தின்றவர்கள் நலத்தோடு இருந்தார்கள். அரிசிச்சோறு சாப்பிட்டவர்கள் இன்றைக்கு சர்க்கரைநோயால் அவதிப்படுகிறார்கள். பணக்காரர்களின் நோய் என்று அழைக்கப்பட்ட நீரிழிவுநோய் இன்றைக்குக்கிராமத்துக்காரர்களையும் தாக்குகிறது. காரணம் கிராமத்திலும் உடல் உழைப்பு இல்லை. குறைந்துவிட்டது. கேழ்வரகையே சாப்பிடவேண்டும் என்றில்லை. ஆனால் குரைந்தபட்சம் உழைக்கலாம் இல்லையா?இந்த மோகத்தைச் சொல்லாமல் சொல்கிறான் தம்பி.....
கேழ்வரகு சோளம் விற்று
அம்மா வாங்கினாள்
அரிசி
பன்முகப்பார்வை கவிதையில் கண்சிமிட்டுகிறது.மொழிப்புலமை புன்னகைக்கிறது.சமுகத்தின் மீதான எள்ளல், இனத்தின்மீதான கோபம், இளைஞனுக்கே உரிய ஆர்வம் எல்லாம் சேர்ந்து வானவில்லாய் விளைந்திருப்பதுதான் .....'லாடம்'ஹைக்கூ கவிதைத்தொகுப்பு.
செத்தும்கொடுத்த சீதக்காதியைத்தான் நமக்குத்தெரியும். இருந்துவரைந்த இரவிவர்மனைத்தான் நமக்குத்தெரியும். இறந்தும் வரைந்த இரவிவர்மனை; இறந்தும் வரையும் இரவிவர்மனை முதலில் கண்டவர்,சொன்னவர் ரஞ்சில் பாண்டியன்தான். இரவி என்றால் சூரியன்.சூரியன் மறைவதை;மாலைப்பொழுதை; மாலைநேர மேற்கை;அந்தியை;வண்ணக்குழம்பாய் வானம் தெரிவதை ஒவியம் என்றதும் இறந்தும் இரவிவர்மன் வரைந்தது என்றதும் தம்பியின் கூர்த்தமதிக்கு எடுத்துக்காட்டு. இதோ....
இறந்தும் வரைந்தான்
இரவிவர்மன்
அந்தி.
சூரியனைத் நவீனத்தமிழ்க்கவிதை உலகில் இரவிவர்மன் என்று பொருத்தமாக கையாண்ட கவிஞர் யார் ? கேட்கத்தோன்றுகிறது. இப்படி அழகான,அக்கறைமிகுந்த,நுட்பமான உணர்வுகளின் பின்னலாக, நயமாக,எண்ணங்களின் தோரணமாக வந்திருக்கிறது லாடம். எல்லாக் கவிதைகளும் அப்படியல்ல. வழக்கம்போல் சலிப்பூட்டுபவையும் உண்டு. சாதாரண சிந்தனைகளும் உண்டு..ஆனால் அவை எண்ணிக்கையில் குறைவு. அவற்றுள் ஒன்றிரண்டு...
வேலுக்கும் வாளுக்கும்
பிறந்த தமிழன் இன்று
மது புட்டியோடு.
.........................................
சாதி ஒழிய மாநாடு
மூக்கையா'தேவர்'
தலைமையில்
.....................................................
அரிசனச்சேரி தண்ணீர்த்தொட்டி
அக்கரகாரத்து
தாகம் தீர்ந்தது.
இவை அக்கறையுள்ள கவிதைதான். ஆனால் இன்றைய கவிதை உலகின் எளியச்சிந்தனையாக, நகல்களாகத் தெரிகிறது.நகல் என்று பாடுபொருளைக் குறிப்பிடுகிறேன்.
நாயே என்று திட்டாதே
மாடு என்று திட்டு
இறந்தாவது உன் பாதத்தில்
இது மேதாவின் கவிதையை நினைவுப்படுத்தியது.அது நேரடியாகச் சொல்லும். சரியான வரிகள் ஞாபகத்திற்கு வரவில்லை.
கருத்து இதுதான்.....
கழற்றுவதற்கு .....
காலணிகள் அல்ல
உன் கால்கள்
இவரோ இறந்து பாதத்திற்குக் காலணியாக வர ஆசைப்படுவது, காலணியை மறைத்துச்சொல்வது நன்றாக இருக்கிறது.
அடுத்து......
ஒருசூரியன் ஒரு நிலவு
போதாது
இன்னும் இருட்டில் ஏழைகள்.
திராவிக்கட்சிகளின் ஆட்சியைக் குறைசொல்வதாக, கிண்டல்செய்வதாக எடுத்துக்கொள்ளலாம். வறுமையை இருட்டென்ற மடிமம்;உருவகம் அழகு. இருட்டுக்கு ஏது உருவம்?இருட்டைத்தான் உருவகப்படுத்துவார்கள்.இவர் வறுமையை இருட்டென்பது அழகிலும் அழகு. தொகுப்பைப் புரட்டுகிறபோது முரண்தொடைக்கும், எள்ளலுக்கும், கோபத்திற்கும், வேதனைக்கும், படிமத்திற்கும் எடுத்துக்காட்டுக்கள் நிறைந்த தொகுப்பாக லாடம் நமக்குக்கிடைத்திருக்கிறது.ஆழமும் பொருளும் புதுமையும் உடையவை நிறைய.எல்லாவற்றையும் எடுத்தாளமுடியவில்லை.
தமிழனுக்குத் தமிழகம்
அடைக்கலம் தந்தது
அகதியாய்
..................
இருபுறமும் வெட்டிக்கொலை
சாகவே இல்லை
சாதி
......................
வீட்டுக்குள் விளக்கு
வேடிக்கைப்பார்த்தது நிலவு
பூமியில் நட்சத்திரம்
.................
ஒளிவுமறைவு இல்லாத
நடிகை
குடும்பம் நடத்தினாள்
கூச்சத்தோடு. ..
இதே சிந்தனையை எத்தனையோ ஆண்டுகளுக்குமுன்பு உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் 'சுவரும் சுண்ணாம்பும்' என்ற கவிதைத்தொகுப்பில் ஒரு நடிகையைப்பற்றிப் பாடும்போது 'அவருக்கும் நாணம்வந்ததாம்' என்று பாடியது லேசாக நினைவுக்கு வருகிறது.
...............
ஆள்வதற்கும் வாழ்வதற்கும்
விட்டுவிட்டுத்
தமிழன் துப்புரவில்
..................
சுடர்விட்டு எரிகிறது
சிறார்களின் அறிவு
தீக்குச்சி
.....................
ஒற்றைச்சக்கரம்
தேசியக்கொடியில்
ஊனப்பட்ட இந்தியா
....................
மகிழ்ச்சியானகுடும்பம்
அழுகிறது தினம்
தொலைக்காட்சி முன்பு
..........................
அருள்பாலித்தது ஆசிரமம்
ஆயுள்தண்டணை வழங்கியது
நீதிமன்றம்
....................
மீன்போட்ட வலை
மாட்டியது நான்
அவள் விழி.........
இதைப்போலவே ஒத்தச்சிந்தனை என்னுடைய 'காதல் தீ' யிலும் உள்ளது.
.................
இந்தியாவில் நிலநடுக்கம்
எவருக்கும் தெரியவில்லை
கிரிக்கெட்
.............
தன்னை இழைத்து
வெளிச்சம் விதைத்தது
மெழுகுவர்த்தி தாய்
......................
வறுமைக்குப் பயந்து
வேலைக்குப்போனாள்
வளர்கிறது வயிறு
.......
பார்த்துப்பார்த்துப்
போட்டேன் வாக்கு
குருடர்களுக்கு
......
அரசியல்வாதி நடிகக்கிறான்
நடிகன்
அரசியல்வாதியாகிறான்....
....எரியும் ஈழம்
பார்க்கும் உலகம்
குருட்டுத்தமிழகம்.
இப்படி நறுக்கென்றும் சுருக்கென்றும் மனதைத்தைக்கிற கவிதைகளின் தொகுப்பாக லாடம் நமக்குக்கிடைத்திருக்கிறது. தீப்பற்றும் கற்பூரத்தைப்போல சிந்தனைத்தீப்பற்றி எரியும் ரஞ்சில் பாண்டியனைக் கற்பூர பாண்டியன் என்பதுதான் சரி. கத்திரிக்கொல்லையில் அல்ல அல்ல கவிதைக்கொல்லையில் பிறந்த கற்பூரம் ரஞ்சில் பாண்டியன். கால்களுக்குள் மறையும் லாடத்தை கண்களுக்குத்தெரிய பளபளப்பாகவும் கவர்ச்சியாகவும் அழகோடும் தந்திருப்பது சிறப்பு. லாடத்தை எழுதியவரை லாடன் என்றழைத்தால், ரஞ்சில் பாண்டியனை penலாடன் என்றழைக்கலாம். ஆவேசம்,கோபம், இவன் பேனாவின்(பென்னின்)மூச்சாக வெளிவருகிறது. சாகித்திய அகாடமியின் தமிழ்க்குழுத்தலைவர், மனோன்மணியம் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர், இலக்கிய விமர்சகர், டாக்டர் பாலா, " ஞாபக யுத்தம் செய்வதுதான் உயிருள்ள கவிதை நாம் விட்டுவிட்டுப்போனபின்னும் பின்னால் ஓடிவந்து நம்விரல்தொட்டுப் பேசுவதுதான் கவிதை"என்று கூறுகிறார். ஞாபக யுத்தம் செய்யும் கவிதைகளைத் தந்திருக்கிற இவனுடைய வளர்ச்சி என்னுடைய வளர்ச்சி. இவனுடைய சாதனை எனக்கும் சாதனை.. இப்போதிருந்து இவனை இவர் என்று அழைக்கத்தொடங்கிறேன். கவிஞர் ரஞ்சில் பாண்டியன் வாழ்க! வளர்க!
அன்புடன் பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)3.09.07
கருத்துகள்
வார்ப்பு ஆசிரியர் அவர்கட்கு
"லாடம்" கவிதை நூல் எழுதிய
கற்பூரசுந்தரனார் அவர்களுக்கும்
கற்பூரவெளிச்சம் காட்டி தமி்ழுக்கு
உயிரெழுத்து மெய்யெழுத்து மட்டும் அல்ல
கற்பூர பாண்டியன் அவர்களே
லாடம் எனும்
உங்கள் குறும்பாக்கள்
உள்ளம் குமுறும்பாக்கள்
"சமுதாயமா?'
அது கிடக்குது கழுதை என்று
வீராப்பாய்
முகம் தெரியாத கால்களில்
தினமும்
உதைவாங்கிக்கொண்டிருக்கும்
மனிதர்களின்
அன்றாட பிரச்னைகளே தான்
உங்கள் கவிதைகள்.
அந்த வலிகள்
என்று உணர வைக்கிறது
உங்கள் கவிதைகளின்
கடைசி முனையில்
முற்றுப்புள்ளியை
நான் காணவில்லை.
அது
நீங்கள் நட்டு வைத்திருக்கும்
மைல் கற்கள் அல்லவா?
ஒவ்வொரு கவிதைக்குள்ளும்
விடியல் எனும் நீண்ட பயணம்
ஒன்றை
பாக்கி வைத்திருப்பதாகத்தான்
நான் பார்க்கிறேன்.
தாகம் நிறைந்த வரிகள்
தகிக்கும் சொற்கள்
ஓடவேண்டிய
புதிய யுகம்
எனும் குதிரைக்கு
லாடம் கட்டுவற்கு மட்டும்
நீங்கள் ஆணி அடிக்கவில்லை.
புதைக்கவேண்டிய
தத்துவங்களின் சவப்பெட்டிக்கும்
ஓங்கி ஓங்கி
ஆணிகள் அடித்திருக்கிறீர்கள்.
அவை முற்றுப்புள்ளிகளில்
முடிந்து போகவேண்டாம்
என்று
அதில் தொங்கும்
மி்ன்னல் விழுதுகளைப் பற்றி
ஏறும் முயற்சியில்
எனது குறும்பாக்களையும்
உங்கள் பயணத்தின்
பாதையில்
எனது மைல்கற்களாக
நானும் நட்டுவைத்துள்ளேன்.
கவிதையை
கவிதை கொண்டு
சிவிகை தூக்குவது தான்
இந்த பாராட்டுமடல்.
மீண்டும் மீண்டும்
என் பாராட்டுகள்
உங்கள் "லாடத்துக்கு"
கற்பூரபாண்டியனுக்கு
"வைரமுத்துக்களை" வைத்து
மகுடம் சூட்ட
கைகள் உயர்த்தினேன்
எட்டவில்ல.
அவர் கவிதைகள் அவ்வளவு உயரம்.
அதனால் அதை அவர்
காலடியில் வைத்து வணங்குகிறேன்.
"வாழ்த்த வயதில்லை"
என்பது போல் தான் இதுவும்.
வாழ்த்த உயரம் எனக்கில்லை
'பிச்சினிக்காடு' இளங்கோ அவர்கள்
பிசைந்து வைத்த ஒரு
பிரபஞ்சத்திலிருந்து
கிடைத்திருக்கும் வெளிச்சம் இது.
அந்த அற்புத மனிதருக்கு..என்
அன்பு வணக்கங்களுடன்
சூட்டுகின்றேன் புகழ்மாலை
கற்பூரபாண்டியனுக்கு
"வைரமுத்துக்களை" வைத்து
மகுடம் சூட்ட
கைகள் உயர்த்தினேன்
எட்டவில்ல.
அவர் கவிதைகள் அவ்வளவு உயரம்.
அதனால் அதை அவர்
காலடியில் வைத்து வணங்குகிறேன்.
"வாழ்த்த வயதில்லை"
என்பது போல் தான் இதுவும்.
வாழ்த்த உயரம் எனக்கில்லை.
கற்பூரக்காடு.
===========
பிச்சினிக்காடு புகுந்து வந்த தனிமரம்
தோப்பு ஆனது...
தமிழுக்கு ஒரு கற்பூரக்காடு.
.
பாடம்
======
.லாடம் லாடம் லாடம்
கற்றுக்கொடுக்கிறது
பாடம் பாடம் பாடம்.
தேசியக்"கொடி"
=============
துணிகாய்ந்து விட்டதே.
ஈரமும் இல்லை வீரமும் இல்லை.
மடித்து வையுங்கள்.
தமிழ்"வருஷம்"
==============
அறுபதையும் வரிசையாய் சொல்லுங்கள்.
"வாயில்" நுழையவில்லல தமிழகத்தில்
தமிழனே அகதிகள் ஆனது இப்படித்தான்.
ஊசி"களும்.. ஆணிகளும்..
=========================
மீராவின் "ஊசி"களுக்கு
உறைக்காதவை கூட..."லாடத்தின்"
ஆணிகளுக்கு நடுங்கிடும்..
"இலவசமாய் ஒரு விடியல்"
===========================
சூரியனும் சந்திரனும் இலவசமே.
பற்றவைக்கும் தீப்பெட்டிக்கு தான்
"இலவசத்திட்டம்" ஏதுமில்லை.
கற்பூரபாண்டியன்.
==================
அறிவுக்கு கற்பூரம் கொளுத்தினார்
ஆண்டவன்கள் எல்லாம்
வெளியில் நின்றனர்.
சிகரெட்!
========
மனிதனின் வாயில்
ஏன் இந்த
வெள்ளைக்கல்லறை?
"தமிழுக்கும் தமிழென்று தான் பெயர்"
=====================================
தமிழனுக்கு தமிழே "ஹீப்ரு" ஆனதால்
பாரதிதாசன் பாட்டு இன்று இது தான்.
"தமிழுக்கும் தமிழென்று தான் பெயர்"
அம்மாவும் அரிசியும்
======================
இருந்தால் வைர வைடூரியங்களையும்
கொடுத்து அரிசி வாங்கியிருப்பாள்.
ஏனெனில் அவள் அம்மா அல்லவா.
கிரிக்கெட் கமென்ட்ரி
======================
"மூன்று விக்கெட் நஷ்டமா...."
போச்சு போச்சு எல்லாம் போச்சு
தேசியபொருளாதாரம்.போயே போச்சு
.
துப்புரவு தொழிலாளி
=====================
மும்மலம் அள்ளவந்த இறைவனுக்கு
"கும்பாபிஷேகம்"....இந்த மலங்களெல்லாம்
கன்னத்தில் போட்டுக்கொண்டன.
புதிதாய் ஒரு சாதி
===================
சாதிகள் ஒழிந்தன.எல்லாமே காலி.
இனி அரிவாள்களுக்கே
இடஒதுக்கீடு.
தீர்ப்பு
======
ஆயிரம் பக்கங்களில் தீர்ப்பு எழுதினார்
ஆயுள்தண்டனை என்று.
" நீதிக்கு"
ஒரு வியாபாரம்
=================
மற்றவற்றை விலையைப்பார்த்து வாங்குங்கள்.
டி.வி யை மட்டும்
"அழுது" பார்த்து வாங்குங்கள்.
மியூசியம்
ரவிவர்மாவை கைவேறு கால்வேறு
==========
ய்த்து வைத்திருந்தார்கள்
பிக்காஸோ என்று.
வாளெடுத்தவன்..
================
புதுப்பெரிய வாள் சின்னபெரியவாள்
புதுப்புது பெரியவாள்...
விவிலியம் சொன்னது வேதத்துக்கும் தான்.
"அழகான ராட்சசியே"
=====================
"நீராரும் கடலுடுத்த.." இசைத்தட்டு மாறிவிட்டது.
தமி்ழ்த்தாயே பொறுத்துக்கொள்...இந்த
சினிமா நோய்க்கு "இனிமா" கொடுக்கும்வரை.
தண்ணிருக்கு அஞ்சுவர்ணம்
============================
குடிநீருக்கு நான்கு வர்ணம் பூசியவர்கட்கும்
குடிநீர் கொடுத்து தாகம் தீர்த்தது
இந்த பஞ்ச(ம)வர்ணம்.
=ருத்ரா
தொகுப்பைப் படித்துச் சுவைக்க வாய்ப்பின்றி. இந்த விமரிசனக் கட்டுரையில் நான் படித்த கவிதைகளே என்னைக் கவர்ந்துவிட்டன. கவிஞருக்கு எனது வாழ்த்துக்கள்!
> கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழகம்.