'காதல் அடைதல் உயிரின் இயற்கை' என்றார் பாரதிதாசன். காதல் என்றால் அதன் பின்புலத்தில் உயிர்கள் இருக்கின்றன. உயிர்கள் இருப்பதோடல்லாமல் இயங்குகின்றன. காதல் நிகழ கண்டிப்பாக உயிர்கள் வேண்டும். உயிர்களிடத்தில்தான் காதல் நிகழும். காதல் என்பது தனியாக இயங்குவதில்லை; இயங்கவல்லதுமில்லை. அது உயிரோடு இயைந்த ஒன்று; இணைந்த ஒன்று. அதனால்தான் கவிஞர் அமுதசுரபி உயிரியல் என்ற துறை இருந்தாலும்' காதல் உயிரியல்' என்ற துறையை நிறுவுகிறார். உயிரியல் என்ற துறையின் உட்பிரிவாக தாவரவியலும் விலங்கியலும் உள்ளன. இந்த இரு துறைக்கும் உயிர்கள் உண்டு.அந்த உயிர்களிடத்தில் கவர்ச்சி உண்டு. ஆனால் காதல் இல்லை. விலங்குகளின் காதலைக் கவர்ச்சி என்கிறோம். சமுக விலங்கான மானுடத்தில் கவர்ச்சியும் உண்டு; காதலும் உண்டு. கவர்ச்சி உள்ள இடத்தில் காதல் உண்டோ இல்லையோ காதல் உள்ள இடத்தில் கவர்ச்சி உண்டு. பெண்களிட்த்தில்தான் அந்தக்கவர்ச்சி கவர்ச்சியாக இருக்கிறது. ' வெறிநாற்றம்' என்று வள்ளுவர்சொன்ன மணக்கவர்ச்சி பெண்களுக்கே உரியது. பெண்ணும் மணமும் பிரிக்கமுடியாதவை. மணக்கவர்ச்சியும் மனக்கவர்ச்சியும் இணைந்து விளைந்ததன்ன் விளச்சல்களே உங்கள் கையிலிருக்கும் கவிதைகள்....காதல் கவிதைகள்.
காதல் துறை குயில்களின் காடுதுறை. மயில்களின் ஆடுதுறை. உயிர்கள் உறவாடுதுறை. அதுவே, உயிர்கள் வாடும்துறையாவதுமுண்டு. கவிஞர்களுக்கு என்றென்றும் அது பாடுதுறை. பாடுதுறையில் பயிற்சிபெற்ற கவிஞர் அமுதசுரபியின் ''காதல் உயிரியல்' கவிதைநூலைக் கையிலெடுக்கும்போது வயது குறைந்து விடுகிறது; வாலிபம் வந்துவிடுகிறது. பெண்ணே ஒரு கவிதை.' அழகிய இசைவடிவத்தில் அமைந்த உயிருள்ள கவிதை' என்றான் அமெரிக்கக்கவிஞன் ரசல் ஹான்பக். இவரும் காலையைக் கவிதை என்கிறார்.
கவிதை
சோறுபோடுமோ
போடாதோ
நீ
சோறுபோடும் கவிதை.
கவிதை பலருக்குச் சோறுபோடுவதில்லை என்பது தெரிந்த உண்மை..ஆனால், கவிதையே சோறுபோடும் பாக்கியம் பெற்றவர் அமுதசுரபி. இவருடைய காதலி கவிதையாக சோற்போடுவது நிகழ்காலமாக இருக்கட்டும்.இவருடைய கவிதைகள் சோறுபோடும் காலம் விரைவில் நிகழும்காலமாகட்டும்..
கவிதையாக விளங்கும் காதலி புதுமனைப்புகுவிழாவில் நுழைந்ததும் அது கவிதைப்புகுமனைவிழா ஆவது என்று உரைத்ததிலிருந்து இவரின் காதலி கவிதையாகவே இருப்பது காதலுக்கும் கவிதைக்கும் அடர்த்தியைக்கூட்டுகிறது. 'புதுமனைப்புகுவிழா
உன்
வருகையால் ஆனது
கவிமனைப்புகுவிழா'
காதல் கண்ணுடைய கவிஞனுக்குக் காண்பதெல்லம் காதல்தான். கருணைக்கிழங்கும் காதல் அடையாளம் ஆவது அது பெற்றபேரு.
' கிழங்குவகைகளில்
எதுபிடிக்கும் என்றதற்கு
நீ
கருணைக்கிழங்கு என்றாயே
உன்
கருணையே கருணை'
கருணைக்கிழங்கின் வழியாக காதலியின் கருணை கிடைத்ததை உறுதிப்படுத்துகிறார் கவிஞர். சங்ககாலத்தமிழன் புன்னையை சகோதரியாகப்பார்த்தவன்.காதல் உயிரியல்துறை தலைவனான அமுதசுரபி அவர்களே தாவரவியல் அறிஞர்களைப்பற்றி கவலைப்படாதீர்கள் நீங்கள் காதல்வாகைப்பூவைச்சூட வாகைமரத்தின் வாழ்த்துக்கள் நிச்சயமாக உண்டு. பசியைப் பிள்ளைப்பூச்சி என்றேன் நான். ஆனால், இவர் காதலைப் பிள்ளைப்பூச்சி என்கிறார். சரிதான்....இவருக்குக் காதல்பசி.
' அடியே
ஒரு பிள்ளைப்பூச்சியை
உன் மடியில் கட்டிக்கொள்
என்
காதல் அவஸ்தைப்புரியும்'
வியாபாரத்தில் தரப்படுத்துவது நிகழும். அது அங்கே அவசியம்.காதல் விவகாரத்தில் ஈடுபட்ட இவர் சொல்லைத் தரப்படுத்திவிட்டார். யாரையும் திட்டுதற்குப் பயன்படும் பச்சோந்தி என்ற சொல்லை நுட்பமாய் கையாண்டுத் தரத்தைக்கூட்டிவிட்டார்.ஒரே நிறத்தில்; தரத்தில் இருப்பதால் ஏற்படும் இடையூரை
மறுபிறப்பு இருந்தால்
பச்சோந்தியாகப்
பிறக்கவிரும்புகிறேன்
நீ
போடும் இடமெல்லாம்
மாறுவேடமிட்டு
உன்கூட வர'
என்று எழுதி சாதகமாக்கிவிட்டார். கதலர்கள் சந்திக்கும்போதெல்லம் ஒருவர் ஒருவரிடம் காண்பது உருவமில்லை. இது ஒரு உருவமற்ற காதல். கண்கள் கூடுவதே காதலைக் காணத்தான். காதல் பறவைகளின் கண்களிலும் காதல்பறவைகளே என்பதை
' நம் கண்களில்
காதல் பறவைகள்
இருப்பது
கண்கூடு'
என்கிறார். காதல் என்பது கைகூடாதவரை கனமான ஒன்று. காதல் வந்துதங்கும் வரைலேசானமனம் கனமாகிவிடுகிறது. ஆனால், அது சாத்தியப்படும்போது காதலைத்தாங்கும் மனம் லேசாகிவிடுகிறது. என்ன அழகான வேடிக்கை பாருங்கள்.மனம் லேசானால் காதலர்களும் லேசாகிவிடுகிறார்கள்.
'காதல் வந்தபிறகு
நாம்
காற்றில் மிதக்கும்
சிறகு'
காதல் பறவையால் அதன் சிறகுகளே காதலர்கள் என்பதை எவ்வளவு நேர்த்தியாக நெய்திருக்கிறார் அமுதசுரபி. கதலர்கள் விரும்பாதது பிரிவு. காதலர்களுக்கு மனவலையை ,உடல்வலியைத்தந்து மெலியவைப்பது பிரிவுதான்.பிரிவைத்தாங்கும் மனநிலை காதலர்களுக்கு இல்லை. பிரிந்து செல்வதாக இருந்தால் அதை நீ வரும்வரை வாழ்ந்துகொண்டிருப்பவர்களிடம் சொல். தலைவி கூறுவதாக வள்ளுவர்
' செல்லமை உண்டேல் எனக்குரை மற்றநின்
வல்வரவை வாழ்வார்க் குரை'
பிரியமாட்டேன் என்றால் என்னுடன் பேசு.பிரிவேன் என்றால் வந்து என் உடலிட்ம் பேசு..உயிரோடிருப்பவரிடம் பேசு என்றல்லவா நொந்துகொள்கிறார் தலைவி. பிரிவின் துயர் எத்துணைக்கொடியது காதலர்க்கு என்பதை இரண்டாயிரம் ஆண்டு பழமையான திருக்குறள் வழி தெரிந்துகொள்கிறோம். எந்தக் காலாஅத்திலும் பிரிவு என்பது கொடியதே என்று உணர்கிறோம்.. அந்தப்பிரிவு பிரிவென்றாலும், வேதனையைத்தான் தருமென்றாலும் காதலின் கனம் கூடிவிடுகிறது. பிரிவி காதலர்களிடையே ஈர்ப்பை அதிகப்படுத்துகிறது.பிரிவை கவிதாகூர்'It is not separation but elongation of love' அதாவது 'காதலில் பிரிவென்பது பிரிவல்ல அது அன்பின் விரிவு' என்கிறார் வள்ளுவர். ' காதல் பிரிய முடியாத பிரிய உறவாகிவிடுகிறது' என்கிறார் கவிக்கோ அப்துல்ரகுமான். காதலி பிரியாமலிருக்கவேண்டும் என்றுதான் காதலன் விரும்புவான். வேண்டுதல் எப்போதும் நிறைவேறாததை சாதகமாக்கிக்கொள்கிறான் கவிஞன் மூமின்.
' என் காதலி
பிரியவேண்டும் என்று
பிரார்த்திக்கப்போகிறேன்
ஏனென்றால்
என் பிரார்த்தனை
எப்போதும் நிறைவேறுவதில்லை'
என்று மூமின் எழுதியதை கவிக்கோ எடுத்தாண்டதைப் படித்தது நினைவுக்கு வருகிறது. அதைப்போலவே அமுதசுரபி பிரிவுவேண்டும் என்கிறார்.அந்தப்பிரிவும் காதலை விரிவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியது எனக்கு வியப்பாக இருக்கிறது.வியப்புக்குக் காரணம் பிரிவு எப்படி இருக்கவேண்டும் என்று எழுதியதுதான். .மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்பார்கள் கிராமத்தில். அது சாதாரண மன நிலை. ஆனால், இதுவோ கவித்துவ மன நிலை.
'' நமக்குள்
பிரிவுகள் வரலாம்
கைவிரல்களைப்போல்'
பிரிவுவேண்டும்.... அது தற்காலிகமானதாக இருக்கவேண்டும்.அதற்கு கைவிரல்களின் பிரிவைச்சொன்னது; எடுத்துக்காட்டியது வியப்பு. மிக எளிமையான எடுத்துக்காட்டுதான். அதில் அடங்கியிருக்கும் இயல்பும் எதிர்பார்ப்பும் என்னை அசத்தியது.எவரும் கையாளாத எடுத்துக்காட்டு.
' அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்'
என்று அவ்வையார் பாடியதைப் எப்படித் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டிருக்கிறார் அமுத சுரபி! இதோ...
'மனதைத் துளைத்து
காதல் புகட்டி
குறுகத்தரித்த
உன் குரல்'.
காதலியின் இனிய குரலில் சிக்கிய கவிஞர் மனதையும் கொடுத்து மயக்கத்தில் இருக்கிறார்.ஆனாலும் அவ்வை நடையில் சொல்லி தன் தமிழ் நிதானத்தைக்காட்டியிருக்கிறார்.பாராட்டுக்கள் இப்படிப்பலாச்சுளைக் கவிதைகளைகளால் காதல் உயிரியலைத் தொகுத்திருக்கிறார். ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றிபெறத்தேவை விழிப்புணர்வு. ஆனால், என் வெற்றி என்பதே காதல்தான். ஆகவே,என் அவசரத்தேவை உன்' விழி உணவு' என்று நறுக்கென்றும், நயமாகவும், புதுமையாகவும், சொல்கிறார் அமுதசுரபி.
' விழிப்புணர்வு போலே
என்
அவசரத்தேவை
உன்
விழிஉணவு'
அது மட்டுமா? 'செம்மொழி பேசுகிறது
உன்
கருவிழி'
''கிடைத்தும்
கேட்காமல்
நீ
கேட்டும்
கிடைக்காமல்
நான்'
'காமத்துப்பால் வீதியில்
சந்திர கிரகணம்
வந்தால்
நீ.. நிலவி
நான்...பம்பு'
' தேவையின்றி
வதைப்பவள்
தேவதை'
குறைந்தபட்சம்
ஒரு செல் உயிரியாக
உனக்குள் வாழ
ஒரு
வழி சொல்'
இப்படி நயமான, நாகரீகமான கவிதைகளால் அமைந்த அழகிய தொகுப்பு 'காதல் உயிரியல்' இவர் கவிதைகளில் காந்தம் இருக்கிறது.மனதோடு ஒட்டிக்கொள்கிறது. இவர் கவிதைகளில் கந்தகம் இருக்கிறது நாம் பற்றி எரிவதற்கு. நாம் பின்பற்றுவதற்கு. கைவசம் இளமையும் ,மனவசம் காதலும் இருப்பாகாக்கொண்டிருக்கும் அமுதசுரபியின் இலட்சியத்தை நானறிவேன். அந்தப்பயணத்தின் இடையே கொஞ்சம் இளைப்பாரல்தான் இந்தக் காதல் உயிரியல். 'காதலே இறைவனை அடையும் வழி' என்கிறது சூ·பி தத்துவம். 'படைப்புகள் வெளிப்படுமுன் இறைவனிடம் முதலில் உதித்த உணர்வு காதல்' சூ·பி தத்துவம்.
'காதல் இறைவனிடம் அழைத்துச்செல்லும் பாதை
பெண் காதலைக் கற்றுத்தரும் பள்ளியாக இருக்கிறாள்'
என்று கவிக்கோ கூறுகிறார். ஆகவே,வாழ்க்கைப்பயணத்தில் இயல்பாக வந்துபோகும் காதலை அழகாக, நாகரீகமாக, தமிழ்மரபோடு நவீனம் கலந்த தொகுப்பாக காதல் உயிரியல் அமைந்திருக்கிறது. படிப்பதற்குரியது காதல் உயிரியல் பாராட்டுக்குரியவர் அமுதசுரபி. அதுமட்டுமல்ல, கலைக்காகத் தன்னைக் கரைத்துகொண்ட சந்தனம் அமுதசுரபி.
இவரின் மணம்பரவும் நாளுக்குமுன்னே
இவரின் மனப்பரப்பின் ஒருபகுதியைக் காட்டத்தான் இந்தத்தொகுப்பு.
காதலைக்கடந்தவர்
காதலை எண்ணவும்
காதலை நெருங்குவோர்
கையிலே தவழவும் ஏற்ற நூல் இந்த நூல்.
வாழ்த்துகள்
பிச்சினிக்காடு இளங்கோ
23.12.07.
கவிதை சோறு போடும்
காதலியும் காதலனும் கவிஞராக இருந்தால்
ரசனை உள்ளவராக இருந்தால்
கவிதைக்கு மிஞ்சிய வரம்
நோய்க்கு மிஞ்சிய இசை
ஒன்று சேரும் போது
வாழ்க்கைக்கு பசி தீர்க
கவி.இசை போதும் .
உங்கள் ஆக்கம் அற்புதம்
அன்புடன்
ராகினி