டீன்கபூரின் கவிதைகள், கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான உணர்வுகள் வெளிப்பட்ட மனநிலையில் புனையப்பட்டவைகளாகும். இவரின் கவிதைகளில் சர்யலிச, மெஜிகல் ரியலிசப் போக்குகளை அவதானிக்க முடிகிறது. பிம்பமாற்றம்,, தளமின்மை, வடிவமின்மை, வெகுஜனத் தன்மை போன்றன சேரும் போது சில கவிதைகள் பின்நவீனத்துவம் நோக்கியும் பாயப்பார்க்கின்றன." இவ்வாறு அம்ரிதா ஏயெம் டீன்கபூரின் "திண்ணைக் கவிதைகள்" கவிதைத் தொகுப்புக்கு வழங்கிய முன்னுரையில் கூறியுள்ளார். எம். முஜீப் றஹ்மான்; "மெஜிகல் ரியலிசம் கற்பனைகளின் எல்லைகளைக் கடந்து" என்ற தலைப்பில் இணையத்தில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகளை, அம்ரிதா ஏயெம்மின் உரைக்கு விளக்கமாக எடுத்துக்கொண்டால், அது டீன்கபூரின் கவிதைகளோடு பொருந்தும் தன்மையைக் காணலாம்.
இவ்வுலகத்தைப் புதுக் கண்களால் பார்க்கும் விதத்தைச் சொல்வது மெஜிகல் ரியலிசம் என்பதை நாம் அறிவோம். உலகம் பொருள்களால் மாத்திரமல்லாது அர்த்தங்களாலும் சூழப்பட்டடிருக்கிறது. ஒவ்வொரு பொருளும் புறவயமான அர்த்தங்களையும், ஆழமான அர்த்தங்களில் புதிரையும்; மாயத்தையும் கலந்திருக்கிறது. ஒவ்வொன்றையும் சொல்லுவதற்கு ஒரு முறையல்ல பல முறைகள் இருக்கின்றன. மெஜிகல் ரியலிசமென்ற இந்தமுறை பழைய பார்வைகளையும், உண்மை பற்றிய அகவயமான மற்றும் புறவயமான அத்தனை சாத்தியங்களையும் சொல்லித் தருகிறது.
மெஜிகல் ரியலிசம் எதனையும்விட யதார்த்த வெகுஜன அல்லது மரபு சார்ந்த வடிவங்களில் திறந்த அல்லது மூடிய அமைப்பில் விரிவாகவோ அல்லது சுருக்கிய நிலையில் பதிவு செய்ய விரும்புகிறது. வாழ்வில் புதிரானது எது என்றும், மனித நடவடிக்கைகளில் வேறுபாடானது எது என்பதைக் கண்டுபிடித்து மெஜிகல் ரியலிசத்தை எழுத வேண்டிய சூழலில் எழுத்தாளன் உள்ளான். மனிதர்களுக்கும் சுற்றுச் சூழல்களுக்குமான புதிர்களைக் கண்டுபிடித்து கற்பனைகளுடன் எழுதுவதும் மெஜிகல் ரியலிசத்தில் உள்ளவைதான். மெஜிகல் ரியலிசத்தில் உள்ள முக்கிய சம்பவம் தர்க்கரீதியானதாகவோ உளவியல் அடிப்படையிலோ உள்ளது அன்று. ஒரு மெஜிகல் ரியலிஸ்டு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று காப்பி அடிக்கத் தேவையில்லை. அதேசமயம் யதார்த்தத்தை புதிர்வெளிகனூடே கட்டமைத்துக் கொள்கிறான்.
மெஜிகல் ரியலிசம் என்பது நடப்பியலைப் போன்றதல்ல. அது மாயமந்திர கூறுகளையுடைய யதார்த்தத்தை காட்டித் தருவதாகும். "மார்குவேஸ்" எனும் ஆய்வாளார் சொல்லும் போது நடப்பியல் பிரதிகளைவிட மெஜிகல் ரியலிசப் பிரதிகளே அதிக யதார்த்தமுடையது.
யதார்த்தம் கலந்திருத்தல், உண்மையிலிருந்து உண்மையற்றதாக தளமாற்றம் அடைதல், ஆச்சரியமான கலையாக கால, வெளிகளைக் கலைத்துப் போடுதல், வெகுஜன ரசனைக்கு அப்பாற்பட்டு ஆழகியலுடன் புதுமையைத் தருதல் போன்ற சிறப்பம்சங்களை மெஜிகல் ரியலிசம் கொண்டுள்ளது.
அதீதத்தின் கவித்துவம் என்பதே வகைமாதிரியாக மெஜிகல் ரியலிசப் பிரதிகளில் விரிவான அளவில் விபரிக்கப்பட்டிருக்கிறது. அதீத கற்பனையை நம்பமுடியாத அளவுக்கு உச்சபட்சமாகப் பயன்படுத்துவதும் இதில் உள்ளதாகும். மெஜிகல் ரியலிசம் வாழ்வை ஒரு நோக்காக மகிழ்ச்சியை மட்டுமல்லாது துன்பத்தையும் காண்பிக்கிறது. இதன் விளைவாக வாசகன் இதுவரை காணாத உலகை பார்ப்பதன் வாயிலாக ஏதோ ஒன்றை இழந்த மனநிலையை அடைகிறான். உண்மையை உருமாற்றி கலை நயமிக்க கற்பனைகளுடன் புத்திசாலித் தனமாக ஆனால் இதுவரை அறியாத விதத்தில் சொல்லுவது முக்கியமாகும்.
மெஜிகல் ரியலிசம் என்பது பொதுவாக அன்றாட யதார்த்தங்களையும், உண்மையற்றவற்றையும் உருமாற்றம் செய்வது என்பதாகும்.
இவ்வாறான அம்சங்களை முதன்மைப்படுத்திய கவிதைகள் டீன்கபூரின் "திண்ணைக் கவிதைகள்"; தொகுதியில் கிடைக்கின்றன. "கனவின் துண்டு" என்ற கவிதை மெஜிகல் ரியலிசத்தை சிறப்பாகக் கற்றுத்தருகிறது.
கனவின் துண்டு.
கனவின் துண்டுகளை
இரவின் பாதிக்குள்
புதைத்து விழிப்பதற்குள்
நரகத்து மொழியின் விபரீதம்
இன்னமும் செவிகளை நசுக்கின.
துண்டு துண்டுகளாக
அந்தரத்தில் தொங்கும் என் இளமை
பழுக்கத் தொடங்கிவிட்டது.
ஒரு மயிர்
கோழி கிளறிய என் குப்பைக்குள்
மின்னியது.
நெஞ்சுக்குள் உடைந்த
மலை முகட்டின் பாறை
வேர்விட்ட நிலையிலே
அண்ணார்ந்து பனிப்படரின் வீதியில்
என் கனவை நடக்கவைத்தது ஊன்றுகோல்
கனிந்த மாம்பழத்தின் பக்கம்
அணில் ஆட்கொள்ளவில்லை
இவன் கொக்கையுடன் கனவுகளுக்காக.
ஒரு பாதி இரவுக்குள்
இன்னும் கன் கனவு வாயு கலையாத வயிறு.
கனவின் துண்டுகளை
இரவின் பாதிக்குள்
புதைத்து விழிப்பதற்குள்
நரகத்து மொழியின் விபரீதம்
இன்னமும் செவிகளை நசுக்கின.
அம்ரிதா ஏயெம்மின் குறிப்புரையில் மெஜிகல் ரியலிசம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது நம்மில் பலருக்கு சரியான விளக்கத்தை தந்திருக்க இயலாது. அதீத வாசிப்பபுப் பழக்கம் தேடுதல் உள்ளவர்களுக்கு சிலவேளை அதன் யதார்த்தம் தெரிந்திருக்கலாம். எம்மைப்போன்ற பலர் மெஜிகல் ரியலிசம் பற்றிய அறிவைப் பெற்றிருப்பது சாத்தியமற்றது என்பதனால் முஜீப் றஹ்மானின் கட்டுரையின் முக்கிய பகுதிகளை கோர்த்து டீன்கபூரின் கவிதைகளுக்கு விளக்கமாகத் தந்திருப்பது பொருத்தமாக இருக்கும்; என நம்புகிறேன்;.
- ஏ.எம். ஜஃபர் -
கனவுகளும் துண்டுகளும்
- ருத்ரா
கனவுகளை துண்டுகளாக்கி
காலத்தையும் கசக்கிப்பிழிந்து
கவிதை காய்ச்சியெடுத்திருக்கும்
டீன் கபூர் அவர்களே!
உங்கள் எழுத்துக்குள்
ஒரு நீண்ட குகை ஒன்று
படுத்திருக்கிறது.
மனம் எனும் மலைப்பாம்புக்குள்
ஊர்ந்து ஊர்ந்து சென்று
ஒரு வானவில்லை
பிடிக்க முயன்றிருக்கிறீர்கள்.
விழுங்கிய தருணங்களை
விதையூன்றி
ஒரு விருட்சத்தை
வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள்.
ஹைக்கூ கவிதைகள் என்பது
உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள்..
அதற்கு சொந்தமான
ஒரு பூங்கரத்தை..
அதற்கு சொந்தமான
ஒரு பூமுகத்தை தேடி
பயணம் புறப்பட்டிருக்கிறீர்கள்.
ரசிக்கத்தகுந்த
இனிமையான பயணம் அது.
நீங்கள் கவிதை எழுத
காகிதம் தேவையில்லை.
மூளியான அந்த இருட்டு போதும்.
மாயமாய் மொய்த்திருக்கும்
அந்த மவுனம் போதும்.
உங்கள் சிற்பத்திற்கு
காற்றே உளி.
காற்றே கல்.
"சர்ரியலிசத்துக்குள்"
சர்ப்பங்கள் சீறும்
சப்தம் கேட்கிறது.
உங்கள் கவிதைகள்..ஒரு
புற்றுக்குள் இருந்தாலும்
உற்று கேட்க வைக்கிறது
எல்லோரையும்.
என் மனமார்ந்த பாராட்டுகள்.
வாழ்த்துக்களுடன்
ருத்ரா
(இ.பரமசிவன்)
=========================