வேதாவின் கவிதைகள். வேதாவின் முதலாவது நூல்
ஜேர்மனியக் கவிஞர் அம்பலவன் புவனேந்திரன் பார்வையில்.....
மாதா, பிதாவைப் பற்றியும் அவர்களுடன் மற்றவரையும் இணைத்து நல் வாழ்வு தந்த இறையை வணங்கி நன்றியோடு சரணடைவதில் உங்கள் பக்தி பிரதிபலிக்கின்றமை பூரிப்பை ஏறபடுத்தினாலும், குருவை நினைத்து நன்றி கூறாமை குறையாகப் படுகிறது.
அது என்ன குரலோ -குழலினிது குறளை ஞாபகமூட்டும கவி;தை. கண்டு கேட்டு
உணர்ந்து துய்க்கும் அனுபவம் வரிகளில் வடிகிறது. ஏல்லோரையும் ஈர்க்கும் காந்தக் கவிதை.
சூப்பி வைரம் - புலம் பெயர் வாழ்வியலின் புதினம் சொல்லும் கவிதை. நறுக்கான செய்தியொன்று என்றாலும்
ஒளவைப் பாட்டி -சிறுவருக்கான எளிய நடைக் கவிதை..
யதார்த்தத்தை விட்டு கற்பனை உலகில் சஞ்சரித்திருக்கும் முகவரி தேடும் முகங்களுக்கு அறிவுரை சொல்லும் கவிதையாக இது அமைந்திருந்தாலும அனைவரையும் சிந்திக்கத் தூண்டியிருக்கும்.
ஆற்றங்கரையினிலே.. -பிள்ளைப் பருவத்தைப் பிழிந்து வைத்த கவிதை. அனைவர் வாழ்விலும் அடிபட்டுப் போன நினைவுகளை நிழலாடச் செய்தாலும் நீண்ட பெருமூச்சொன்று வெப்பமாய் வெளியேறிப் போனதெனக்கு -ஏக்கமாய்...
திருமணம் - கவிதையில் பொதுப் பார்வையில்லாது ஒரு பக்கச் சார்பாயிருப்பது உறுத்தலாயுள்ளது. மாற்றுக் கருத்தை முன் வைக்க விரும்பாவிடிலும், ஆண்களில் குற்றச்சாட்டு ஆண்டாண்டுகளாயிருப்பது தான் திருப்தியளிக்கவில்லை. பெண்களால் சீரளிந்த திருமணங்களும் தீட்டப்பட்டிருந்தால் முழு வெற்றியடைந்த கவிதைப் பட்டியலில் இதுவும் சேர்ந்திருக்கும் என்பது என் எண்ணம்.
செல்வியெனும்... - ஒவ்வொரு இளம் பெண்ணின் கனவுக் களஞ்சியத்தைத் திறந்து காட்டிய கவிதையிது.
பாலபருவப் பாதிப்பு -மனமுறிவுகளால் துருவங்களாகிப் போகின்ற பெற்றோரால் பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பையும் மனத்தாக்கத்தையும் விளக்கியுள்ள உதாரணங்கள் சிறப்பு. புலம்பெயர் வாழ்வில் மலிவாகிப் போன சமாச்சாரத்தை மண்டையில் உறைக்கக் கூறியிருப்பதற்குப் பாராட்டுகள்.
தமிழே அமுதே -தமிழைக் காக்கவும் பிள்ளைகளுக்குத் தமிழை ஊட்டவும் அறை கூவல் விடுகின்ற போது எனது அணியில் இணைந்துள்ள உணர்வு. இன்னும் உரத்துச் சொல்லுங்கள்! உறைக்கச் சொல்லுங்கள்!
மாளிகைப் பிச்சைக்காரர் - இயந்திர வாழ்வின் இன்னுமொரு குறக்கு வெட்டுத் தோற்றம். விரும்பாமலோ விரும்பியோ விளைந்த வாழ்க்கை, வாழ்ந்தே ஆக வேண்டிய வருத்தம் தொனிக்கும் கவிதை.
ஓவ்வொருவரும் சமன்பாடு காணும் ஞானக் குளியலின் அவசியத்தை அறிவுறுத்தி மூளைச் சலவை செய்ய அழைப்பது அருமை. அந்நியக் கலாச்சாரத்தில் நம் தமிழும் கலாச்சாரமும் அடிபட்டுப் போவதற்கு நம்மவர் மனங்களும் காரணமென்று இடித்துக் கூறுகின்ற தைரியத்துக்கு என் பாராட்டுதல்கள்.
ஆராதனை -கற்பனையில் மிதக்கும் ஒரு ஆன்மாவின் மன நெருடல்களின் தெளிப்பு.
ஆச்சரியவிருந்து -சுற்றலாய்ப் பின் விழிபிதுங்கிய சுற்றுலா ஆச்சரியம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-04 00:00