உராய்வு கவிதைத்தொகுதி என் கைசேர்ந்த போது அதன் அட்டைப்படம் என் உணர்வில் கலந்த போது தாயின் கருப்பையில் ஒரு கரு நீந்துவது போல என் மனக் கண்முன் காட்சி தந்தது. மிகுந்த பயபக்தியுடன் ஒரு தாய்மைக்கே உரிய உணர்வோடுதான் என்னால் அந்த புத்தகத்தை தொடமுடிந்தது என்றால் மிகையாகாது.

உண்மையிலேயே எனது கைகளில் புதிய புத்தகம் கிடைத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடி ஓடி மூச்சிரைக்க கவிப்பசி தீர்த்த பின் தான் அட்டைப்படத்தில் இருந்து இறுதி பின் மட்டைப் புறம்மட்டும் படிப்பேன்.ஆனால் இந்த கவித்தொகுதி என்கை கிடைத்தபோது,... கிடைத்த போது என்பதை விட தவழ்ந்த போது என்னுள் மூச்சிரைக்க ஓடி ஓடி கவிப்பசிதீர்க்க முடியாமல் போய்விட்டது.

ஒரு கரு ஒன்று புத்தக வடிவில் என்கையில் தவழ்கின்ற தாய்மை உணர்வுதான் அதனை தடுத்தது எனலாம். அட்டைப் படத்தின் முக்கியத்தவத்தை இதன் மூலம் உரணமுடிகிறது என்னால்.

அந்த உராய்வு என்ற எழுத்து வடிவம் கூட சில நிமிடங்கள் என்னை தாமதிக்கச்செய்து விட்டது. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டள்ளது. அதை அத்தகையதொரு வடிவமாக வடிவமைத்த ரொபேட்டுக்கும் பாராட்டுக்கள். இனி கவிதையுள் செலல்லாம் வாருங்கள்.

கவிதைதத்தொகுதி - உராய்வு

இளைய தலைமுறை கவிஞன் சஞ்சீவ்காந். ( இளைஞன்)
பக்கங்கள்-128
ஓவியங்கள்- மூனா
நூல் வடிவமைப்பு-நான்காம் தமிழ்.
கணணி வரைகலை-நான்காம் தமிழ்.
தலைப்பு எழுத்து- ரொபேட்.
வெளியீடு-வி.Nஐ.பதிப்பகம்.திருகோணமலை.
கவிதைகள்-54.

"காலத்தின் கவிக் கூர்" இவன் என்கின்ற ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் தாரக மந்திரத்தோடு தொடங்குகிறது.இக் கவி நூல்.அன்புடன் உராய்வுடன் நன்றியுடன் என முறையே கவிஞர் கி.பி அரவிந்தனது பார்வை அடுத்து கவிஞனுடைய பார்வை என விரிகிறது இன் நூல்.அந்தந்த கவிதைகளுள் இறங்கி அதற்கு தகுந்த மாதிரியான உணர்வுகளை படங்களிற்கூடாக கொண்டு வந்திருக்கிறார் கிறுக்கல் மன்னன் மூனா அவர்கள்.

இனி கவிதையுள் செல்லலாம் வாருங்கள்.

புதிய ஆண்டு ஒன்றை வரவேற்கின்றதான கவிதை. அப்படித்தான் நான் நினைத்தேன். வாசித்து முடித்த போது அந்த நினைப்பு காணாமல் போய் விட்டது. மிகுந்த ஆக்குரோசம் பொங்க கேள்விக் கணைகளோடு தொடங்கி புதியதோர் ஆண்டாய் மிளிர நீ என்னென்ன எல்லாம் செய்ய வேண்டும் என கட்டளை போடுவதாய் அமைகிறது.

அன்பு உள்ள இடத்தில்தானே ஆக்குரோசமும் கோபமும் கொப்பளிக்க முடியும். நாம் யாரிலெல்லாம் அதிகமாக அன்பு வைக்கிறோமோ அவர்களோடு தானே சண்டைபிடிக்கவும்; கெஞ்சவும்; கூத்தாடவும் முடியும்.

அதே போல புதிய ஆண்டிற்கு கட்டளை இட்டுவிட்டு வரங்கள் சில கேட்கிறார். புலம்பெயர்ந்த கட்டிடப்பனிக்கால வாழ்வை வெறுத்து ஓடும் ஒரு குழந்தையை இதில் காணமுடிகிறது.ஒரு தாயிடம் குழந்தை அடம்பிடிக்கிற தன்மை இந்த கவிதையில் காணப்படுகிறது. ஒரு குழந்தைக்கே உரிய துடினம் இந்த கவிதையில் தெரிகிறது. கவி வார்த்தைத்தேடல் பெருமிதத்தை தருகிறது. கவிதை வரிகள் ஒவ்வொன்றுமே இழுத்துவரப்படாமல் இயல்பாக வந்து அமர்ந்திருக்கிறது.உணர்வின் வடிவாய் கவிதைவரிகள் நர்த்தனமிடுகின்றன.

மொழியின் சிறப்பு பற்றி கூறுவதாக அமைகிறது அடுத்த கவிதை.

அன்னையின் தாலாட்டில் கண்வளர்ந்தவர்கள் தானே நாமெல்லாம். மொழிவளத்தை அங்கு தானே அறிந்து கொண்டோம். அந்த மொழியின் சிறப்பு இந்த அண்டமெல்லாம் தளைக்கும் என எத்தனை உறுதியிட்டு அறுதியிடுகிறார்.

ஆழக்கடலின் உள்ளிருந்தும்
கோளத்தமிழின் ஒலி முழங்கும்.
ஈழத்தாயின் மடியமரும்
தாளக் கூத்து ஆடி மகிழும்.

செத்து மடியும் என்பார்கள்
செம்மொழித் திறன் விளங்கும்.
செய்யுட் காலம் கடந்தும்
செய்மதி கண்டு தமிழ் சிறக்கும்.

கேள்வி கேட்டு கட்டளை இட்டு வரம் கேட்டு தன் மொழியாம் தமிழைப்பாடி தனக்குத்தானே நம்பிக்கை தீபத்தை ஏற்றிய கவிஞன். மீண்டும் நிலை குலைந்து அழும்காட்சி அடுத்து விரிகிறது.

தன்னைத்தானே தேற்றுவதும் அழுவதுமாய்போகும் கவிதை நம்மையும் கலங்க வைத்து விடுகிறது. இறுதியில் நம்மையெல்லாம் கலங்க வைத்த குழந்தை கண்சிமிட்டி சிரித்தபடி சிந்தனையை உதிர்ப்பது போல் கவிதையால் நம்மை கவர்ந்தீர்கிறார். அதில் பிரகாசம் தெரிகிறது. அடுத்தடுத்தமைந்த கடிதம் , ஈழம் என்ற தலைப்பிலான கவிதைகள்.

எண்ணத்தின் தோற்றமெல்லாம்
கன்னத்தில் தெரிகிறதே
ஏக்கத்தின் முழு உருவம்
என் உதட்டில் தவழ்கிறதே.

அழுது அடம்பிடித்து சிந்தனையை விரித்தவிட்டு குதூகலமாய் துள்ளி ஓடிய குழந்தையைப்பார்த்து அப்பாடா இனி அழுகை பிடிவாதம் எல்லாம் தொடராது என நினைத்து பெருமூச்சு விட்ட தாயை மறுகணமே ஏதோ ஒரு ஞாபகத்தில் மீண்டும் ஓடி வந்து அடம்பிடிக்கும் குழந்தைகயைப் பார்த்திருப்பீர்கள்.. அதே போல அடுத்த கவிதை தொடர்கிறது.விடுதலையின் பங்குதாரர் என்ற தலைப்பிலான கவிதை.

வீரமாய்ப் பாய்ந்த வேங்கை
து£ரம் நோக்கிப் பயணமென்ன
வேரென்று நம்பி நின்றோம்
நீண்டு நீரும் உறக்கமென்ன

அழுதழுது தன்னை சமாதானப்படுத்துகின்ற தன்மை
களத்தினிலே புயலாய் வீரர்.
உள்ளத்தினில் பூவாய் வீரர்.
விடுதலையின் பங்கு தாரர்.
விடிவினிலே வெள்ளி வீரர்.

அழுது வடிந்து பின் இவரது கோபப்பார்வை கடவுள் மீது செல்கிறது. நியாமான கோபக்கனலே. சிந்திக்க வைக்கிறார்.

அடுத்த கவிதையில் கவிதை என்ற தலைப்பிலான கவிதையில் கவிஞனுக்குரிய மிடுக்கு வந்து விடுவது தெரிகிறது.

என்னை யாரென்று நினைத்துக் கொண்டீர்கள் என குரல் எழுப்புவது தெரிகிறது. தன்னைத்தானே கவிஞன் என தானே உறுதியிடுகிறான் இந்த குழந்தை. தன்னைத்தானே கவிஞன் என கூறும் கவிஞனை குழந்தை என்பது தகுமோ இனி என எண்ணத்தோன்றுகிறது. என்றாலும் விளையாட்டுக் குழந்தையல்லவா இவன். நம்பமுடியாது.

ம்... சவால் விடுகிறான். கூவி அழைக்கிறான் நம்மையெல்லாம் முஸ்டியை முறுக்குவது தெரிகிறது.

கொத்தித் தின்று உம்தன்
உடல் கொழுக்க
விரைந்து கரைந்துடன்
வாரார் காக்கைகளே..

என அறைகூவல் விடுகிறான் இந்த குழந்தை. என்னாச்சு இவனுக்கு..!? இத்தனை நகைச்சுவை கொண்ட திமிர்த்தனம் கூடாது என நினைக்கத் தோன்றுகிறது.

இப்படித்தான் என் எழுதல்
அன்றைய கிறுக்கல்கள் பார்த்து
வெட்கித்தலைகுனியும்
இன்றைய எனது கிறுக்கல்கள்

ஓ.. இப்படிக் கூட ஒன்றா... என நினைத்தபடி சண்டித்தனமாக வாறன் என நினைத்தபடி கதிரையில் இருந்து நிமிர்ந்தபடி எழுதிய காகிதங்களை புறம் தள்ளி பேனைவை மூடிவைத்துவிட்டு இனி இந்த செல்ல விளையாட்டெல்லாம் இவரோடை சரிவராது என நினைத்தபடி நானும் அடுத்த பக்க கவிதைக்குள் நுழைகிறேன்.

ஓ ...... அது தானே பார்த்தேன்..!! என்ன இத்தனை வீரம் எங்கிருந்து வந்ததென.....!!!!

காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் இளைஞர்க்கு (குமரர்க்கு) மாமலையும் ஓர் கடுகாம். என்று சும்மாவா சொன்னார்கள்.

விருப்பு வெறுப்பு என்கின்ற கவிதை அந்த ரகசியத்தை சொல்லி நிற்கிறது.. அடுத்த பக்கத்திற்குள் நுழைகிறேன் இவள் யாரோ என்ற தலைப்பிலான கவிதை வாசித்தகுறையில் அடுத்த பக்கத்தை தட்டுகிறேன் ஆர்வமிகுதியால் ஆச்சரியம் அங்கும் காத்துக்கிடக்கிறது. ஆர்வமிகுதி மேலிட மற்றய பக்கங்களிற்கு தாவி ஓடுகிறேன். ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம். எதுவுமே ஒழுங்காக வாசிக்க முடியவில்லை. காதலர்க்கு பசி இருக்கும் ஆனா சாப்பிடேலாது. அதே மாதிரி கவிப்பசி இருக்கு காதல் கவிதைகளை வாசிக்க முடியாமல் ஆச்சரியத்தில் பக்கங்களை புரட்டுகிறேன். ஒருபடியாக அமைதியாகி வாசிக்க தொடங்குகிறேன். ஆச்சரியம் மேலிட. ஆனந்த சந்தோசம்.

இயற்கையையும் பெண்ணையும் இந்த கவிஞன் ஒப்பிடுகின்ற தன்மை அன்பை பண்பை நேசத்தை பாசத்தை நகைச்சுவைத்தன்மையை இவனிடத்தில் காணமுடிகிறது இவனது காதல் கவிதைகளிற்கூடாக .

ஐயோ ஐயோ--
உயிரின் உயிரில்
காதல் சிற்பம் செதுக்குகிறாள்.

அடடா. ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் வரும் உணர்வு இந்த கவிதை வரி.

காதல் நோய் என்ற கவிதை அழகுற இயல்பாக வந்த அமர்ந்திருக்கிறது. எந்த ஒளிவுமறைவுமின்றி அத்தனை உணர்வையும் இயல்பாக வெளிச்சமிட்டிருக்கிறார்.

அடியே சகியே வலிக்குதடி
கண்ணில் நீர்தான் துமிக்குதடி.
உள்ளங்கால்கள் கூசுதடி
உச்சந்தலை கொதிக்குதடி
மூச்சுக்காற்றும் உளறுதடி.
மண்டைத்தேசம் குளிருதடி.

இதை வாசித்து முடித்தவிட்டு அடுத்த கவிதைக்குள் நகர்கிறேன். காதல் என்றால் என்ன என உணர முயல்கிறார். அத்தனை காதல் மாற்றங்களுக்குள்ளும் தன்னை உட்படுத்திய கவிஞன் ஆற அமர இருந்து சிந்தனைச் சிறகை விரிக்கிறார்.

வெளிச்சக்குப்பை அதற்கு தொடக்கப் ப(பு)ள்ளியாக அமைகிறது. ஆரம்பகால மழலைப்பருவம் மிளிர்கிறது. அது ஒரு கனாக்காலமாக கழிந்துவிடுவது வேதனை தான். வளர வளர வயதும் ஏற ஏற ஏனோ நாமெல்லாம் ஆண், பெண் என பிரிந்து கிடக்கிறோம். அதே மழலை உணர்வோடு இங்கே இந்த கவிஞன் அழைக்கிறான் தனது தோழியை. அடடா--! திடீர் என வீரம்பேசி சிந்தனைச் சிறகை உயரவிரிக்கிறான். மிக கவனமாக கையாண்டு இருக்கிறார் சொற்பதங்களை இதில் எங்கே தான் சோர்ந்து போனது தெரியாமல் இருக்க மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார்.

அடுத்து உலகம் தின்போம் கவிதையை பலமுறை வாசித்தேன். மனதில் ஒரு புத்துணர்வை புது உத்வேகத்தை தருவதான கவிதை. வாசித்து வாசித்து அந்த கவிதையோடு இரண்டறக்கலந்துவிட்டேன். தன்னைத்தானே திடப்படுத்தி மீண்டும் தனது பயணத்தில் உறுதியான நடையை தன்னகத்தே வரவழைத்திருக்கிறார்.

திரைகள் அகற்றி
முன் தெரி
திமிறித் திமிறி
முன் நகர்.

வெளிச்சக்குப்பையில் தனது சோர்வை மறைக்க பிரயத்தனப்பட்ட கவிஞன். இதில் அதனை வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறார். அது தானே கவிதையின் தார்ப்பரியம். துடிப்பின் துளி அதற்கு ஈடுகொடுத்து பல நம்பிக்கைகளை தாங்கி வந்திருக்கிறது.

செயற்படு பொருள் ஆச்சரியப்படுகிறேன். நல்லதொரு கவிதை.

சமூதாயத்தை
நிர்வாணப்படுத்து
அதன் காயங்களில்
முத்தமிடு
அழுக்குகளை
நக்கு.

பலமுறை இந்த கவிதை வாசிக்கத் து£ண்டுகிறது. எத்தனை உண்மையை இயல்பாக சின்னச் சின்ன வரிகளுக்குள் சொல்லி முடித்திருக்கிறான் இந்த கவிஞன்.

ஒருமுறை என்ற கவிதையில் தன்னைத்தானே மீண்டும் இரண்டாவது முறையாக பகிரங்கமாக பிரகடினப்படுத்திக்கொள்கிறான்.

uraaivu

திலீபனையும,; காந்தியையும் அழகுற இன்றைய திலீபன் தான் அன்றைய காந்தி என நிறுவி இருக்கிறார் பாராட்டுக்கள்.

இன்றைய இந்த கவிஞன் சஞ்சீவ்காந்த்த் எடிசனாயிருப்பானோ...!!!?

அடுத்து பெரியாரைப்பற்றியதான கவிதை. கவிதையில் காதல் கொண்ட என்னை பெரியாரிலும் காதல் செய்ய வைத்துவிட்டான் இந்த கவிஞன் தனது பெரியார்க் கவிதைக் கூடாக. பெரியாரையும் காந்தியையும் திலீபனையும் தத்துவஞானியையும் தனித்தனியே அழைத்து வந்து கவிதைசொன்ன கவிஞனுள்ளும் ஏதோ ஒரு புரட்சி ஒன்று தெரிகிறது.மன நிறைவுடன் அடுத்த கவிதைக்குள் நுழைகிறேன்.

மனிதமனம். இத்தனை வயதுள் அத்தனை படிப்பினை அனுபவமா..!! விழிகள் விரிகிறது கவிதையைப் படித்து மேலே செல்லச்செல்ல. இந்தக் கவிதைக் கூடாக இந்த கவிஞன் ஞானம் பெற்று விட்டதை உணரமுடிகிறது.

ஒளி வழி விழி என்ற அடுத்த கவிதை வாழ்க்கையை கோட்டை விட்டு இந்த உலகத்தோடு ஒன்றிடமுடியாத புலத்தமிழருக்கான வழிகாட்டலாகவே நான் இதை நினைக்கிறேன். கட்டிடக்காட்டின் தனிமையை உணரமுடிகிறது. தனிமையில் குமைந்து போவோருக்கு நல்லதொரு நம்பிக்கை வழிகாட்டியாகிறது இந்த கவிஞனின் இந்த கவிதை.

காதல் பகிர், புலம் இலக்கியம், மீண்டும் சந்திப்போம் ஆகிய கவிதைகளில் சமூக அக்கறை அதிகமாக மேலிட்டு இருப்பதை காணமுடிகிறது. மூடக்கொள்கைகளை பீடமேற்றும் நாயக கவிஞனா தெரிகிறான் இந்த இளைஞன்.

எல்லொரும் இன்புற்று வாழ்வதே வாழ்க்கை என நினைத்த இந்த கவிஞனால் நாடு சிதறிப்போவதை இப்போதெல்லாம் பொறுத்தக்கொள்ள முடியவில்லை. அதனை அழகுற மீண்டும் சந்திப்போம் என்கின்ற கவிதை சொல்லி நிற்கிறது. ம்.... தைரியம் தான். கவித்தமிழ் எடுத்து கசையடி நடந்தேறி உள்ளது.

கண்டு பிடி, உறுதிசெய் என்கின்றதான கவிதை. இந்த போர் எப்படியெல்லாம் கவி எழுத வைக்கிறது....!! சின்னனிலேயே இப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறானே...!ஆனாலும் போரையும் அகதிவாழ்வையும் பயங்கர வாதத்தையும் அழிக்க முடியும் என நம்பிக்கையோடு சொல்லும் இந்த கவிஞனின் கவிகள். ஆனாலும் முன்னைய கவிதையான எடிசன் , காந்தி திலீபன் பற்றிய கவிதையில் இயல்பாகவே நிறுவ சொல்கிறது கவிதை. அதே போல இந்த இரு கவிதைகளையும் நிறுவ முயல்கையில் போர், புலம்பெயர் வாழ்வு பயங்கர வாதம் இவை முடிவடையவே மாட்டாது என்பது தெரிகிறது. இறுதியில் இத்தகையவை நடந்தேறினால் அழிவு தான் நிச்சயம் என இயல்பாகவே புரியவைத்தவிடுகிறது அடுத்த கவிதையான மூன்றெழுத்து.

அடுத்த கவிதையான இணையம் புதியதொரு பயங்கரவாதமாக மனதில் தோன்றச் செய்கிறது. மரபணு கணணி என இரு கவிதைகள் விரிகிறது. இவை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என அடுத்த கவிதை நம்மை நிறுவச்செய்கிறது.ஓசோன் எனும் தலைப்பிலான கவிதை.

அடுத்த கவிதைக்குள் நுழைகிறபோது பெண்ணியப்பேச்சுக்கள் விரிகிறது. நல்லதொரு எழுச்சிகொள் கவிதைகள் அனைத்தும்.இல்லையே இல்லையே இல்லையே என முடிவின் வரிகளாய் அமைந்த கவிதை ஒவ்வொரு பெண்ணையும் சிந்திக்கத் து£ண்டுகின்றதாக அமைகிறது.

திருமண பந்தத்திற்கும், சீதனப்பிரியர்களிற்கும் கவிச்சாட்டை அடி கிடைத்திருக்கிறது. சம்பிரதாயங்களை து£க்கிப்போட்டெரித்து வெளிச்சமிடும் துணிவு.

நான் மட்டும் என்கின்ற கவிதை மனம் சோர்ந்த அல்லது குழப்பத்தில் இருந்த போது கருக்கட்டி உள்ளது தெரிகிறது. சில சமயங்களில் சூனியவெளியுள் சிக்குண்ட நிலையை இந்த புலம்பெயர் வாழ்வு நமக்கெல்லாம் தந்திருக்கிறது. அத்தகைய தொரு சூனியவெளியுள் இந்த கவிஞனும் சிக்குற தவறவில்லை.

அடுத்த கவிதைக்குள் போகிறபோது அந்தக் குழப்பத்தை ஓரளவு உணரமுடிகிறது. வாழ்க்கை என்ற தலைப்பிலான கவிதையும் இடைவெளி என்ற தலைப்பிலான கவிதையும் தௌ¤யவைக்கிறது வாசகனை.

உண்மை என்கின்ற அடுத்த கவிதைக் கூடாக கவிஞனும் தன் சோர்வு நிலையில் இருந்து மீள்வது தெரிகிறது. இரவு என்கின்ற கவிதைக்குள் பலதை தேக்கி மறைத்து வைத்திருப்பது தெரிகிறது. அதை புடம் போட்டு காட்டுகிறது அடுத்த கவிதையான சுதந்திரம்.

மீண்டும் சில்லுப் பூட்டி, சிறகு கட்டி, நம்பிக்கை விதைகளை து£வி, பறக்க முனைகிறது அடுத்த கவிதையான நம்பிக்கை, பகை ஏது என்ற தலைப்பிலான கவிதைகள்.

அடுத்து அலை என்ற தலைப்பிலான கவிதை. வாசித்து வாசித்து ரசித்தேன் பலதடவை. காதல் கருக்கொண்டு (கரை)மையம் தொடுகிறது. காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால் இளைஞர்க்கு மாமலையும் ஓர் கடுகாம். இந்த கவிஞனால் இன்னும் பலதை தரமுடியும். தருவான். பல நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் மனதில் தோன்றி ªஐ£லிக்கிறது.

தலைமுறை இடைவெளியை தூக்கிப்போட்டெரித்து துணிவுடன் நடைபோட வாழ்த்துக்கள். காகங்களிற்கு இங்கு வேலையில்லாமல் போய்விட்டது . உடல்கொழுக்க இனிவழியேது..? நல்ல (கவி) பசிதீர்ந்த அனுபவம்.

புரட்சி விதை சேகரி
உன்னுள் விதை
விருட்சமாய் எழு.

நளாயினி தாமரைச்செல்வன்
சுவிற்சலாந்து.
23-09-05

* நன்றி மன ஓசை (அட்டைப்படம்)

இத்தொகுப்பு தொடர்பான தொடுப்பு:
உராய்வு கவிதைத்தொகுப்பு - ஒரு பார்வை - சந்திரவதனா

 

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-05-01 00:00
Share with others