பெண்ணியாவின் தொகுப்பான என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்புவை! என்ற கவித்தொகுதியை வாங்கியபோது என் மனதுள் ஊற்றெடுத்த அருவிகள் ஏராளம். பச்சைப்பசேல் என காட்சி தரும் மரக்காடு. தனிமைச்சுகம் வேண்டி காலாற தனியே நடந்தவர்களுக்கும், மனச்சுமை கூடிய பொழுதுகளில் மன ஆறுதலுக்கு இயற்கையின் லயிப்பில் தம்மை இழந்து நடந்தவர்களுக்கும், காதலனோடு அன்றி கணவனோடு கைகோர்த்து நடந்தவர்களுக்கும் இவ் அட்டைப்படம் பலதை கூறுகின்றது. அத்தனை பசுமைச் சூழல். ஆங்காங்கே சூரியனின் கரம் பட்டு நாணி நிற்கும் இலைத்தளிர்கள். சூரியனின்; தொடுகைக்காக கரம் காத்திருந்து, காத்திருந்து ஏங்கப் பெருமூச்சால் கரிய புகைபடிந்த இருள் பிரதேசம். எதையுமே தியானியாது பச்சைப் பசுமையாகி உணவைத் தயாரிக்கும் பொறுப்பில் ஆழ்ந்திருக்கும் பச்சை இலைகள் இப்படியாக விவரித்துக் கொண்டே போகலாம். ஆனாலும் தலைகீழான மரக்காடு. இது எனது உத்வேகத்தைக் கூட்டினாலும் இந்தக் கவிஞரோடு என்னால் கரம் பிடித்து செல்ல முடியுமா என ஒரு கணம் ஏற்பட்ட சிறு சலனம் கிழமைக் கணக்காகி மாதக்கணக்காகும் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. கவிதைகளை வாசிப்பதும் வைப்பதுமாகிவிடுகின்ற பொழுதுகளே அதிகமாகியது. சில உண்மைகளை உரத்துச் சொல்வதோடு ஒப்புக்கொள்ள வேண்டியும் உள்ளது. வேலைப் பழுவும் குடும்பப் பாரமும் அதிகமான இந்த புலம் பெயர் வாழ்வில் அலுப்பையும் வாழ்வின் மீதான சலிப்பையும் தந்தாலும் இங்குள்ள இயற்கையின் கொடை நம்மை வாழச் சொல்லித் து£ண்டுகின்றது. வீட்டில் அமைதியாக இருந்து எழுதிய ஒரு காலம். அந்த நேரம் இப்போதெல்லாம் பிள்ளைகளுக்கு என்றாகிவிட்டது. எனக்கு அப்பப்போ கிடைக்கக் கூடிய சொற்ப துளிகள் தாம். குழந்தைகள் வளர வளர தமக்கான இடத்தை தக்கவைத்து வளர்வது தானே இயல்பு. பெற்றோராகிய நாம் இடம் விட்டுக் கொடுத்தல் அதை விட உயரிய பண்பு. இப்போதெல்லாம் எனக்கான வாசிப்புக்கள் மலைக்காடுகள், வாவிக்கரைகள,; பரந்த புல்வெளிகள் என்றாகிவிட்டது. அழகியதொரு மாலைப்பொழுதில் அல்ப்ஸ் மலைத்தொடரெங்கும் தூவிவிட்ட மாக்கோலமாய் வெண்பஞ்சு பனித்துகள்கள். மெலிதான குளிர்காற்று சில்லென்று என்னை அணைக்க ஓர் வாவிக்கரை. என் கார் வாவிக்கரை நோக்கி வேகமெடுக்கிறது. ஆனாலும் என் மனக்கிடங்கில் இருந்து பெண்ணியாவின் கவித்தொகுதியின் பின் அட்டையில் இருக்கக் கூடிய கவிதை வரிகள் என்னுள் பல தடவை மனதில் எழுந்து ஓய்கிறது.
காற்றில்
எல்லையற்று விரியும் கிளைகளின்
பச்சை இளம் நுனிகளின்...
முடிவிலியில்
மண்ணைத் துளையிட்டு
விரல் விரியும்
வேர்களின் முனைப்பின்
உயிற்துடிப்பைக்கேள்.!'
அத்தகையதொரு நுண்ணிய உயிர் துடிப்பை அதன் மெலிதான அதிர்வை புரிதல் என்பது மென்மையான இதயம் படைத்தவர்களால் மட்டுமே முடியும் என்பது எனது வாழ்வியல் அறிவுக்கு எட்டிய உண்மை. நம்மை தமது உயர்வுகளுக்கெல்லாம் பயன்படுத்திக்கொண்டு சந்தோசங்களில் மட்டுமே பங்கெடுத்துவிட்டு துன்ப, துயரம் ஏற்படுகிறபோது நம்மை எல்லாம் விட்டு ஓடி, ஒளிந்து, ஒதுங்கி நம்மையும் ஒதுக்கிவிடுகின்றதான இந்த உலகு.
துன்பம் நேர்கையில்
யாழெடுத்து நீ
இன்பம் சேற்க மாட்டாயா'
இயன்ற வரை மென்மையான மனசோடு அத்தனை உயிர்த் துடிப்பையும் உணரக்கூடிய ஓர் மெல்லிய உணர்வலையோடு இக் கவிதைகளுக்குள் நனைகிறேன். நேசம் அல்லது நெல்லி மரம் என்ற கவிதையில்
வஞ்சமும் பொறாமையும் நிறைந்த மனிதர்களது
முகத்தை விட அந்த
நெல்லிமரத்தின் உடல் முழுக்க
அழகாகவே உள்ளது.
தேம்பித் தேம்பி அழும் பொழுதுகள் - தலைசாய்த்துக் கொள்ள மனிதர்கள் இல்லாத இந்த பூமியில் இயற்கையை சரண் அடைவது ஒரு வரப்பிரசாதமே. அத்தகையதொரு வஞ்சகம், பொறாமை நிறைந்த மனிதர்களது தொல்லை தாங்க முடியாது திணறிய கணப்பொழுதில் இந்தக் கவிதை வந்தமர்ந்திருக்கிறது.
தனிமைச் சூழலும் இந்த உலகமானிடமே வெறுத்ததாய் உணரும் பொழுதுகளில் எங்கோ ஒன்றில் மனம் லயித்து வாழ்வின் மிச்ச சந்தோசங்களை உணர்வதாலும் வாழ்வின் மீதான நம்பிக்கையை தருவதாலும, நாமெல்லாம் இன்று குனகலித்தும், நொறுங்கிப்போயும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அடுத்த கவிதை மாதராய் பிறந்திட என்ற தலைப்பு
ஒரு உருண்டையின்
நுனியில் தொங்கிக்கொண்டிருக்கிறேன்.
கேவலமான கௌரவவெறியுடன்
அலையும் சிவந்த கண் மனிதர்
இவர்களை நினைத்து மிகவும்
நடுங்குகிறேன் இரவில்.
மிக முக்கியமான வரிகள் இவை. பெண்ணாக பிறந்து விட்டோமே என்கின்ற சோகம் அதிகரிக்கிறது. ஒரு உருண்டையின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். தொப்புள் கொடி உறவு. காலம் காலமாக எமக்குள் வந்து சேர்ந்த அல்லது திணிக்கப்பட்ட சமூக அடக்கு முறைகள். ஆணாதிக்க வெறியுடன் அடக்கியாள முற்படும் சிவந்த விழிகளுடன் திரியும் மனிதர்கள் இவைகளால் என்றுமே பெண்கள் இருளில் தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்ளும் நிலமை. ஆனாலும் கவிஞர் தன்னைப்பற்றி, தனது இருப்பு பற்றி சிந்திக்கத்தொடங்கி இருப்பது சந்தோசத்தைத் தருகிறது. இப்படியாக நான் சொல்லி சந்தோசப்பட்டுக்கொண்டு தலையை நிமிர்த்துகிறேன். வாவிக்கரையெங்கும் வாத்துக்கள் நிறைந்து வழிந்தன. தமக்குள் தலையை இழுத்தபடிக்கு தூங்கி வழிந்தன. அல்ப்ஸ் மலைத்தொடர் வாவியுள் தெரிந்தது. வானமே நீலமாகி ஆங்காங்கே வெண்பஞ்சு முகில் கூட்டங்கள் வாவியுள் ஓடியது. அத்தனை சலனமற்றுக் கிடந்தது வாவி. நான் மட்டும் அடுத்த கவிதையைபற்றி எழுதும் அவசரத்தில். இப்படியாக நான் எழுதிவிட்டு அடுத்த கவிதையான கல் அதனுள் நுழைகிறபோது கவிஞர் தன்னை உணரவும் தேடவும் தொடங்கிவிட்டிருப்பது தெட்டத்தௌ¤வாகிறது.
ஆனால் அவள் உணரவில்லை
குளிரையோ
வெப்பத்தையோ
அவளின் உட்காவு நரம்புகள்
பழக்கப்பட்டன இவற்றுக்கெல்லாம்.
ஆனால் அவளின் மூளையோ
குழம்பிற்று.
எதையோ சிந்தித்தது
------------------------------------
சில சமயம் அவள் உணர்ந்தாள்
தான் ஒரு
சிலையாக்கப்பட்டிருப்பதாக.
எமது சமூகத்தில் பெண்களை இயல்பாய் வளர்ப்பதில்லையே. உருவம் அமைத்தல்லவா வளர்க்கப்படுகிறார்கள். எம் உணர்வுகள் நெரிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு நம்மை நாமே உணராது மற்றவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப நம்மை அப்பப்போ மாற்றி ஜடமாக வாழப் பழக்கினர். கண்ணீரும் கம்பலையுமாக்கி இது தான் வாழ்வென வரையறுத்த சட்டகத்துள் புன்னகை பூத்தபடி மனதில் பல ரணங்களை சுமந்தபடி வாழ்தலே வாழ்வென எம்மை வளர்த்தார்கள். பெரு மூச்சுடன் வாங்கை விட்டு எழுகிறேன். காலாற கொஞ்சம் நடக்கலாம் போல இருந்தது.
பரந்த புல் வெளிகள், சூரியனைக் காணாது தமது சோபை இழந்து கிடந்தன. ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக ஒற்றையபடிப் பாதைகள் நீண்டபடிக்கு தென்பட்டது. நடக்கிறேன். என்னை முத்தமிட்டுச் செல்லும் இதமான குளிர் அணைப்பு. மேனி சிலிர்க்கிறது. இத்தனை நேரம் இந்த குளிர் என்னை ஒன்றும் செய்யவில்லை. அத்தனை லயிப்புடன் பெண்ணியாவின் கவிதைத் தொகுதியுள் மூழ்கி இருந்தது இப்போது எனக்கு புலனாகியது. என் சமூகத்தின் மீது கொண்ட கோபத்தால் குளிர் தெரியவில்லையோ என நினைத்துக்கொண்டேன்.. இலையுதிர் காலமாதலால் மர இலைகள் எல்லாம் பல வர்ணங்களில் தெரிந்தது. அதன் பிரதிபலிப்பாய் வாவிக் கரைகளெல்லாம் பல வர்ணக்கலவையாக காட்சியளித்தது. யாரோ ஒரு ஓவியர் எனக்காக வரைந்து விட்டு சென்றிருக்கிறாரோ என்கின்றதான ஒரு மன நெகிழ்வுடன் கூடியதொரு படபடப்பு என்னுள் தொற்றிக் கொண்ட போது ஒரு வண்ணத்துப் பூச்சியாகியது என் மனசு. இந்த இயற்கையே ஒரு ஓவியக் கவிஞர் தானே. அடடா.. புகைப்படக்கருவியை எடுத்து வரவில்லையே என் மனசு தவித்தது. கண்களால் அத்தனை அழகையும் பருகிக்கொண்டேன். மீண்டும் வாவிக் கரையில் இருந்த வாங்கு நோக்கி நடக்கிறேன். அடுத்த கவிதையை என் விழிகள் பருகின. நான் மேலே சொன்ன கருத்து முட்களின் கற்கள் என்ற கவிதையில் பிரதிபலிக்கிறது.
உண்மைகளை விழுங்கும்
உணர்வுகளைச் சிதைக்கும்
சம்பிரதாயக் கயிற்றில் எனைத்
திரித்து வதை செய்ய வேண்டாம்.
அதனுள் அழுகிய மனிதனாய் வாழுதல்
அழிந்து அமிழ்ந்து போதல்
என்னால் இயலாது
வாழ்தலையும் மரணித்தலையும்
எனக்காய்ப் புரிய இசைகிறேன்.
தீக்கிடங்கினுள் கிடந்து
நான் உயிர்வாழ்வதற்காய்க் கூச்சலிட
எத்தகைய பிடிப்புகளுமில்லை எனக்கு
உணர்வுகளைத் தனியே உறிஞ்சி
பிணங்களாய்த்தான் வாழவைப்பீரெனின்
உடனேயே எனைக்
கொன்று விடுங்கள்.
ஏனெனில்
வாழ்தலுடன் கூடிய நடிப்புத்திறன்
எனக்கிருப்பதாய் மார்தட்டிக் கொள்ள
நான் நிஐங்களைப் பொய்ப்பிப்பவளல்ல
சபாஸ்! நேர்மையாக தன் உணர்வுகளை உரத்துச் சொல்லும் தைரியம் மிக்க ஓர் கவி விடுதலைப் பெண் உருவாகிவிட்டார். பெண்ணின் உணர்வுகளை அடக்கி ஒடுக்குகின்ற அல்லது அதை சொல்ல முடியாத படி உருவமைக்கப்பட்ட எம் சமூக வரையறைக்குள் தன்னை திணித்து வைத்திராது வெளியேறுகின்றதான முயற்சி என்றே கூறலாம். சமூக கட்டுப்பாடுகளை உணர்ந்து அதிலிருந்து தன்னை விடுவித்தல் என்பது பெரியதொரு மனக்குழப்பம் நிறைந்த உணர்வைத் தரும் என்பது நிஜம். அந்தமனக் குழப்பம் ஒரு சமயம் அதிக சந்தோச உணர்வையும் இன்னொரு தரம் அதிக சோம்பல் தனத்தை அல்லது வாழ்வின் மீதான பற்றற்ற நிலையையும் உணர்கின்றதான கணங்களாக அவை பல்வேறு உணர்வுகளோடு எம்மை ஆட்கொள்கிறது. நம்மை நாமே சமாதானப்படுத்தி மீண்டும் வைராக்கியத்தை மனத்திடை ஏற்றி எழுதல் என்பதில் இயற்கையை சமாதானத்துக்கு உருவகித்து திடம் கொள்கிறோம். அதே போலவே முட்களின் கதைகள் என்ற கவிதையிலும் வெறுமை என்ற கவிதையிலும் இயற்கையை தன்வசப்படுத்தி தன்னை திடம்கொள்ள வைத்து நம்பிக்கையை வான்வரை விரிக்கின்ற தன்மையை காணக் கூடியதாக இருக்கிறது. முட்களின் கதைகள் என்ற கவிதையில் மீண்டும் சில வரிகள் இவ் வரிகள் என்னை மிகவும் பாதித்தவையாக உள்ளன.
நான் எனை ஓர்
உன்னத பிறவியெனக் கருதிக்கொள்வேன்.
ஒளிர்ந்து பின் தேய்தல்
உறுதியென விதியெழுதப்பட்ட பின் கூட
பொன்னிலவு கரைந்து விடவில்லையே.!
என் முயல்வுகளும் சிந்தனைகளும்
தோற்கடிக்கப்படலாமென உணர்ந்தும்
நான் போரிடுகிறேன்
உங்களுள் ஒருத்தியாய்!
எனக் கூறுகிறார் கவிஞர்
அதே போல வெறுமை என்ற கவிதையிலும்
என்னவாயிற்றோ எனக்கு
ஒளிர்ந்து பின் இருள் வழும்
இப் புவியின் மீது ஓர்
கழிவிரக்கம் தோன்றலாயிற்று...
பெண்ணானவள் தன்னை உணர முற்பட்டபின் இந்த உலகின் மூடத்தனங்கள், கள்ளம் கபடங்கள், சூதுவாதுகள் யாவுமே புரியப்படுவனவாக மாறிவிடுகிறது. தன்னைத்தானே உணராத பெண் எல்லோராலும் ஏமாறுபவளாக, ஏமாற்றப்படுபவளாகவே வாழ்ந்து முடிக்கிறாள். இந்த கவிஞர் தன்னை உணர்ந்ததால் இந்த மனித வாழ்வின் மீதான பொய்மைத்தனங்களை நன்கு உணரக் கூடியவளாக இருக்கிறார்.
எல்லாவற்றினதும் செய்கைகளின் பின்னும்
ஒளிந்து மறைந்து கிடக்கும்
பெருமையின் தேடலை
பொய்மைத்தனத்தை உணர்கிறேன் என்கிறார்.
அதே போல தொடர்கிறார் மேலும்.
ஆதலால் தனித்து
எல்லாவற்றினதும் கைவிடுதல்களின் பின்
இந்த வானம்
இந்தக் காகம்
இவற்றுடன் என் நாட்களை
எண்ணிக் கழிக்கிறேன்.
என்னதான் மனித ஜீவன்கள்
இல்லையேயாயினும்
இவற்றுடன் என்நாட்கள்
மிக இனிமையாகத்தான்.....
மொத்த மானிடப் ஜீவன்களின் செய்கைகள் யாவுமே பொய்மையானது என உணர்கிறபோது யாவும் போலி என உணர்கிறபோது தனிமை தானே வாழ்வாகிறது. ஆனாலும் அத்தனை தனிமையையும் போக்குவது இந்த இயற்கைதான். என்பதை எத்தனை நாசூக்காக சொல்லிவிட்டார்.
சோகமும் விரக்தியுமே தோன்றும் இன்றய போர்ப்பிரகடன தேசங்களில் எம்மை எல்லாம் வாழச்சொல்வதும் சந்தோசம் தருவதும் எதுவென்றால் நமது இளமைக்கால வாழ்வை அல்லது சந்தோசம் பொருந்திய வாழ்வுக்காலத்தை மீட்டுப்பார்த்தல் என்பதாக அமைகிறது. சோகங்களையும் சுமைகளையும் தாங்கித் தாங்கி பழகிப்போன மனசுக்கு இளமைக் காலசந்தோசங்களை நினைவூட்டுதல் என்பது கூடிய மகிழ்ச்சியான கணங்களாக மாறி துன்பம், துயரங்களை தூக்கிப்போட்டு எரித்துவிடுகிறது. பீனிக்ஸ் பறைவையைப் போல் மீண்டும் பலமடங்காக துன்பமும் துயரமும் நம்மை ஆட்கொண்டு வதைப்பது தீராத வலி, ரணம் நிறைந்த காயங்களையும் தழும்புகளையும் தந்தபடியே உள்ளது என்பதை மறைக்க மறுக்க முடியாத உண்மையாகிவிடுகிறது. அத்தகையதொரு இனிய வரிகளை வெறுமை என்ற கவிதையில் காணக் கூடியதாக உள்ளது. அதே வெறுமை என்ற கவிதையில் இளமைக்கால தோழியின் பிரிவு சொல்லப்பட்டாலும் அந்த இனிமையான பொழுதுகள் மனத்திடை வந்த போகின்றதான வரிகள்.. இக் கவிதையில் ஒரு காதலனின் பிரிவை தத்ரூபமாக பாசாங்கு செய்யாமல் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதலர் பிரிகிறார்கள் என்பது எத்தனை கொடுமையிலும் கொடுமை. நினைவுகளை மீட்பதென்பது ஓர் அலாதியான வேதனை நிறைந்த இன்பம் தான். அழுது அழுது சிரித்தபடிக்கு மீட்டல் என்பது... அத்தகையதொரு பிரிவின் கொடுமையை உணரவைத்திருக்கிறார் இந்தக் கவிஞர். நமது வேர்கள் யாவுமே அறுந்து கிடக்கும் நிலை, வெறுமை பூதாகாரமாக நம்மை துரத்தும். அப்பப்போ தனிமையும் இயற்கையும் நமக்கு உதவிக்கரம் நீட்டும். ஆனாலும் நின்று நிதானித்து வாழ்வின் பாதையில் அஞ்சலோட்டம் ஓடவேண்டியவரான கடமைப்பாடாய் விரிகிறது வாழ்க்கை.
எதுவும் உன்னிடம் பேச முடியாதபடி
நான் ஊமையாக இருத்தப்பட்டுள்ளேன்.
உன்னுடன் பேசிக்கொண்டிருந்த
இந்தப்பொழுதுகளைப்பற்றி
இப்போது மழையுடன் பேசுகிறேன்.
-----
இப்போதெல்லாம் எனக்கு இவை
பெறுமதியான பொழுதுகளாய்த்
தெரியவில்லை.
நீயும் நானும் வாழ்ந்த
அந்தக்கணங்களை விட.
ஆத்மா பிரிந்த ஆவியாய்க்கிடக்கின்றேன்.
அடுத்த கவிதை உதிரும் இலைக்கனவு விரிகிறது. இதுவும் காதலனின் பிரிவை கூறுகின்றதான ஓரு கவிதை. காதல் வசப்படுகிறபோது பெண் மிகவும் மென்மையாக்கப்படுகிறாள். இயல்பாக காதல் வரும் போதே இது சாத்தியமாகிறது. அத்தனை தைரியங்களும் அவர்களை விட்டு போய்விடுகின்றது. அதிலும் காதல் பிரிவு என்கிறபோது மேலும் சூனியம் நிறைந்ததாகிவிடுகிறது. இதயமோ பலவீனமாகிவிடுகிறது. பல்வேறு சிந்தனைகளை ஆட்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிவிடுகிறாள் பெண். பிரிந்து விட்டோம் என தெரிந்தும் ஒருவரை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டுவரும் இந்த காதல் தோல்வி. பற்று அற்ற நிலையாகி காதலன் நினைவில் உணர்வுகள் பூத்து குலுங்கி அதில் அமிழ்வதும் அழுவதும், அழிவதும், மீண்டும் உயிர்ப்பதும் தான் காதல் தோல்வியின் மனநிலை. அதை அழகாக இக்கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
உன் பெயரை உச்சரிப்பதில் தான்
என் உணர்ச்சிகள் மெய்ப்படுகின்றன.
சிறிது உன்னை நினைக்கிறேன்
பிறகு அழுகிறேன்.
அதே கவிதையில் ஒரு பந்தியில் இப்படி விளிக்கிறார்
அழவேண்டும்.
என் உணர்ச்சிகளைக் கொட்டி.
என் இதயம் கனக்கிறது.
ஏதோ ஒன்று மனதில்
பாரம்போல் உணர்கிறேன்.
அது உன்நினைவின் துயரா அன்பே.
எனக்கு இது பிடித்திருக்கிறது.
உன் நினைவில் அமிழ்வதும்
அழிவதும்...
------------.
ஓர் மௌன ஜீவனாய்...
இன்னும் உனக்காகவே...
நீ எனக்குள் உயிர்க்கிறாய்
என் மனதில் துளிர்க்கும்
நினைவின் குருத்துகளாயென..
கருகுதல்களும் கனவுகளும் பச்சைக்கனவு, இருட்டு என்ற தலைப்புகளில் விரிகிறது அடுத்த கவிதைப்பிரபஞ்சம். போர்க்கால சூழல் தந்த வலியை கூறும் கவிதைகளாக வந்தமர்கிறது இக்கவிதைகள். ஒரு பெண்ணின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்தின் பின்னர் போர் தனக்கும் தனது சமூகத்திற்கும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை பகிர்ந்து கொள்கிறார் கவிஞர். அந்தப்பெண்ணின் மரணத்தின் பின்னான தேடல் கவிஞரை விழித்தெழ வைத்திருக்கிறது. போரால் ஆட்பட்டிருக்கும் மரண பூமியில் எங்கும் இருள் வாழ்வின் மீதான நம்பிக்கையற்று இருள் சூழ்ந்து காணப்படும் ஒரு மனநிலை. அது எல்லோருக்கும் இயல்பே. யாரும் தட்டிக்கேட்டலின்றி சாகடிக்கப்படுகின்றனர். என்பதை உணராது இன்றும் இவ் போர்ச் சமூகம். உள்ளது. மரணங்களோ செய்திகளாக்கப்படும் சம்பவங்களாகி விடுகிறது. மதில் ஓரங்களிலும் வாசற்படிகளிலும் கிணறுகளுக்குள்ளும், புதர்களுக்குள்ளும் இப்படியாக கொலைகள் தொடர்வதான ஒரு பூமிதான் என்னுடையது. அத்தகையதொரு பூமியில் வாழும் இச் சக கவிஞரின் மனத்திடை பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்திய கவிதையாக இக் கவிதைகள் வந்திருக்கிறது. வாயிருந்தும் ஊமைகளாப்பட்டு விழியிருந்தும், குருடர்களாக்கப்பட்டு காதிருந்தும் செவிடர்களாக்கப்பட்ட மரண பூமியது. ஆனாலும் கவிஞருக்கே உரிய கவிமனசு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் உணர்வுகளை இனம்காட்டவே முனையும் என்பது எத்தனை உண்மையாகிறது. கருகுதலும் கனவுகளும் என்ற கவிதை அதை சொல்லித் தான் நிற்கிறது என்றே கூறவேண்டியுள்ளது.
ஏனோ இது நாள் வரை
ஒளியிருந்தும் என் கண்கள்
திறத்தலற்றிருந்தன.
நேற்றைக்கு முதல் தினம் அவள்
மிதித்து துவைத்து
சாகடிக்கப்படும் வரை
இன்று தான் என்னுள் இத்தேடல்-----
சோகங்களுக்குள்ளும் துன்ப துயரங்களுக்குள்ளும் தமது வாழ்வை செலுத்துபவர்கள் மனத்திடை இயலுமையற்று வாழ்கின்றதான சூழலை இக்கவிதையில் அழகாக கூறிச்செல்கிறார். மீண்டும் தனது சமூகம் மீது கோபம் வருகிறது இவருக்கு. அதை இப்படி கூறுகிறார்.
எவ்விதமெனினும்
நாளை இவர்கள்
இறத்தல் மட்டும் உறுதி...
மிதிபட்டோ நல்லது நசிபட்டோ.
ஆக்கினைகளுற்று இறப்பதென்பது
மிக மிக உறுதி...
என்றேனும் அதிசயமாய்
கண்கள் விழித்தாலேயேயன்றி.!
இருட்டு என்ற கவிதையில்
வாழ்வு தொடங்கி பல்லாண்டுகள் பின்னும்
பிள்ளைகள் எம் பிறப்பின் பின்னும்
முடிவுறாத இவர்கள் குடும்பப்போரில்
எனது காற்றின் எனது மலரின்
எனது கனவின் முகம் கிழிந்து தொங்கிற்று.
கோணல் மாணலாய்
ஓய வேண்டாம் இவர்கள் போர்
இவர்கள் கூத்துக்கள் முன்
என் முழுமையையும் வெறுக்கின்றேன்.
-----
எப்பிறவியின் சாபமோ
நானும் அவர்களும் அறியோம்...
ஒரு யுகத்திலும் எறித்துவிடாதபடி
நிலவின் கறுத்த பின்புறத்தை எம் வாசல் நோக்கி
திருப்பிப் பிடித்திருப்பது எவருடைய கைகளோ..!
எத்தனையோ தெளிந்தேன் ஆயினும்
இப்போரின் மனநிலைகள்
இன்னும் இன்னும் புரியாதனவாகவே!
நிலவின் கறுத்த பின்புறத்தை எம் வாசல் நோக்கி மிகவும் அற்புதமான வரிகள் இவை.
பெண் என்றாலே எங்கோ யாரோ ஒருவரால் எப்போதுமே வதைபட்டு மடியக் கூடிய ஒரு நடைப்பிணமாகவே கணித்து இன்று பெண்ணை வதைக்கும் கோரம் நிகழ்ந்த படியே உள்ளது. என்பதை வதைபடலம் கவிதை என்ற கவிதை கூறிச் செல்கிறது
அதே கவிதையில் மீண்டும் சில வரிகள்
உன் ஆதிக்கம் என்பது
என்னை
என் நாவை
அடக்கி ஆள்கிறவரை மட்டுமே.
எனப் பொங்கி எழுகிறார்.
தன்னை உணர்ந்த ஒரு பெண்ணானவள் அப்பப்போ கனவுலகில் சஞ்சரிப்பவளாக தன்னை பாவனை செய்கின்றதான மனநிலைக்கு ஆளாகின்றாள். அதனை உணர்த்துவதாக வந்தமைகின்றது அடுத்த கவிதையான ஓர் வானமும் ஓர் அருவமும் என்ற கவிதை..
எல்லாக் கனவுகளின்
முடிவுகளின் பின்னும்
என்னுள் நான்
எனைத் தொலைத்து
வானத்தில் ஓர்
விடிவெள்ளியாய்
என் உரிமைகளை
வென்று கொள்கிறேன்.
என்றும் ஓர்
கனவுகளில் நடப்பவளாய்.
விடிவெள்ளியது எப்போதுமே விடியலைத் தோற்றுவித்தபடியே வருகிறது. அதே போல இவரது கவிதைகளும் எம்முள் பல விடியலைத் தோற்றுவித்தபடி மிளிர்கிறது என்றால் மிகையாகாது; இருள் வழ்ந்த வனியவெளிகளுள் இன்னதென்றே புரியாமல் வீழ்கிறபோது மரணம் நிகழ்ந்து விட்டதாக பாவனை செய்கின்றதான ஒரு மனநிலை. உணர்வுகளை கொன்று போடுதல் என்பது அத்தனை சாத்தியமா என்ன...? அது நிகழ்ந்த ஒரு பொழுதில் இக்கவிதை. அது தான் படியோலையின் ஒரு குரல் என்ற கவிதை. அதே போலவே தனக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராகவும், தன்கனவுகளின் மீது ஏறிமிதிப்போருககு எதிராகவும், தன் சுதந்திரங்களின் மீதும் தன் உணர்வுகளின் மீதும் கொடூரங்களை பாய்ச்சும் மனிதர்களுக்கு எதிராக புறப்படுகிறார். தனது உணர்வுகளோடும் தன் சகல சுதந்திரச் சிறகுகளோடும். தனித்து நின்று எதிர்த்து உயரப்பறக்க முனையும் ஓர் உந்துதல் இவருள். அதனால் அக் கவிதைக்கு தலைப்பிடுகிறார் என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை என அமைகிறது அக்கவிதை. அடுத்த கவிதையாக புத்துயிர்த்தல். கனவுகள் சிதைக்கப்பட்ட ஒரு நாளில் இக் கவிதை வந்தமர்கிறது. ஆனாலும் தன்னைத்தானே உணர்கிற போது அதை அவளைச் சுற்றிய உறவுகள் புரியாதபோது கனவுச் சிதைவும், வாழ்வுச் சிதைவும் ஏற்படும் என்பதை யாராலுமே மறுக்க முடியாது . ஆனாலும் அவற்றையும் தாண்டி தான்வாழ்வேன் என உறுதியிட்டு மீண்டும் தனக்கே தனக்கான கனவுகளோடும் இன்னும் பலமான நம்பிக்கை வலைகளை போட்டபடிக்கும் வானம் அகல தனது சிறகுகளை விரிக்கிறார் கவிஞர் பன் மடங்கு வீரியத்தோடும்
எனையழுத்தும் இவ்
இறுகிய பார்வைகளினூடிருந்து
வீறு கொண்டதொரு புல்லாய் நிமிர்வேன்.
கூவத்தான் முடியாதாயினும்
ஈனஸ்வரத்திலேனும் என் பாடல்களை முனகியபடி
யார் முன்னும் பணிதலன்றி
எனது உணர்வுகளோடும் அவாக்களோடும்
எவ்வகை வாழ்வெனப் புரியாது இது
குழப்பமிகு வாழ்வேதானாயினும்
வாழ்வேன்
வாழ்வேன்
வாழ்வேன் நான்.
என கூறி விடைபெறுகிறார் கவிஞர் பெண்ணியா.
இக் கவிதைகளோடு கரைந்து ஆவியாகிய பெருமிதம் என்னுள். வானம் இருட்டிக்கொண்டு வந்தது. ஆங்காங்கே வாவியுள் வாத்துக்கள் நீந்தித் திரிந்தன சின்னதாக ஓர் நீர் அசைவை எற்படுத்தியபடி. முழுநிலா வானத்தில் தெரிந்தது. நாளைக்காவது சூரியன் வருவான் என்ற ஏக்கத்தோடு பரந்த புல்வெளிக்காடு அமைதியாக இருந்தது. கார் நோக்கி எனது கால்கள் நகர்கின்றன.
உன்னை எழுது.
உயர்வாய்
உணர்வாய்.
ஆனாலும் இக் கவிஞரிடம் இருந்து இன்னும் பல கவிதைகளை எதிர்பார்த்த படி நாம்.
நளாயினி தாமரைச்செல்வன். (சுவிஸ்)