சீதாயணம் (நெடுங்கவிதைகளின் தொகுப்பு)


கவிதைகள் நெருக்கமானவை. கவிதைகள் படைப்பாளனின் நெஞ்சத்தையும் படிப்பவனி¢ன் நெஞ்சத்தையும் நெருக்கமாக்கி உறவாடச் செய்யும். அதேநேரத்தில் கவிதைகளின் நெருக்கம் விரிக்க விரிக்க , விரிவு பெறப் பெற புதுமை கொள்ளும். அதனால் கவிதைகள் நெருக்கமானவை.

இராமாயண அணைக்கட்டில் சீதை என்னும் நீர் சுழற்சி நெருக்கம் காரணமாக வெடித்துச் சிதறுகிறது. அது நீராக காற்றாக வானாக மண்ணாக நெருப்பாக உருமாறி படைப்பாளர்களிடம் பல தரப்பட்ட சிந்தனைகளைக் கீறிவிடுகிறது. கம்பன், தியாக பிரம்மம், விவேகானந்தர், ஜெயகாந்தன், சேதுபதி எனப்பல படைப்பாளர்கள் இராமனை சீதையை நேசிக்கிறார்கள். தரிசிக்கிறார்கள். ஏசுகிறார்கள். பேசுகிறார்கள். தொடர்ந்து இந்த இராமாணயம் என்னும் மூலப் பொருள் பல வேதிமாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது.

இராமாயணம் என்னதான் சொல்கிறது... பெண்ணை அழைத்துக் கொண்டு வெளியில் போ என்கிறதா. . . போகாதே என்கிறதா. . . போனால் என்ன ஆகும் . . . என்ன ஆகவேண்டும் . . . ஏன் ஆகவேண்டும் ... பெண்ணைத் தனியே வை என்கிறாதா. . . பெண்ணை மீட்டு எடு என்கிறதா. . . இன்னும் எதிர்வரும் காலங்களுக்கும் கேள்விகளுக்கும் இராமயாண மூலப் பொருள் கருத்து நல்கும்.

அவ்வகையில் இராமயண மூலப்பொருள் தந்த புதியதொரு வேதி வினைமாற்றம் சீதாயணம் என்னும் கவிநூல். கம்பன் கவிதையை உள்வாங்கி, வெளிதள்ளி, அகம் கண்டு, புறம் நோக்கி தீப்பெட்டிக்குள் உறங்கும் நெருப்புக் குளியலை கவிதைச்சூடாய்த் தருகிறது. இதில் விமர்சிக்கப் படுவது இராமன் அல்ல. சீதையும் அல்ல. கம்பன் மட்டுமே. கூடவே தமிழும். பாரத மண்ணும். பாரதப் பண்பாடும்.

சீதை வேலைக்குப் போகிறாள்.
மாருதி வந்து தூக்கிப் போகிறது
சம்பளம் கொடுப்பது இராவணக் கம்பெனி
(ப 125)

என்ற இந்த மூன்று வரிக்குள் இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகம் அதன் பண்பாடு அதில் வேலை பார்க்கும் பெண் பிம்பம் அனைத்தும் தொட்டுத் துழாவப் படுகின்றன. சீதை என்பது பெண்ணுக்கான குறியீடு. மாருதி என்பது அகில உலக அளவில் கிளை பரப்பி வரும் ஓர்அலுவலகத்தின் இந்தியக் கிளைக்கு இரவுப் பகுதி நேரப் பணிக்குப் போகும் பெண்ணை ஏற்றிச் செல்ல வந்த வாகனம் அதாவது Maruthi 800. அதே நேரத்தில் மாருதி என்பது அனுமனுக்கு மற்றொரு பெயர். அவன் ‘‘தோளில் ஏறு இராமனிடம் அழைத்துப் போகிறேன் ’’ என்று கூறிய போது ‘‘இல்லை இல்லை இராமன் வருவான் அவன் வந்து அழைத்துப் போனால்தான் மரியாதை ’’ என்று கூறிய சீதை இன்றைக்கு நாளொரு வண்டியில் பயணம் போகிறாள். ஏதோ ஒரு நாளில்¢ சாலை ஓரக் கிழிசலாய் எரியப் படுகிறாள்.

அந்த அகில உலக நிறுவனத்தின் குறியீடு இராவணக் கம்பெனி. இப்படிப் பல நெருப்புகள் இந்நூலில் சுடுகின்றன.

மற்றொரு கவிதை சுனாமிப் பேரலையை உவமையாக்குகிறது. சேதுபதி இந்தக் கவிதையை எழுதும்போது சுனாமிப் பேரலையை நேரில் சந்தித்திருப்பாரோ என்னவோ (ஏனென்றால் சேதுபதி வாழும் ஊர் பாண்டிச்சேரி) ஆனால் சுனாமி அவர் கவிதையில் கடல்வண்ணமாய் வருகிறது. நெய்தல் தலைப்பில் கடல் பாடுகிறது (ப. 53)


எங்கெல்லாம் அநீதி ஆட்சி புரியுமோ
அங்கெல்லாம் வந்து அசுரப்பசியுடன் விழுங்கிப் பூமியைப் புதிதாய்ச் சமைப்பேன்,
பிரளயம் என்று உலகம் பேசும்
அது நிகழும் முன்னர் நீங்கள் திருந்துங்கள்


என்ற இந்த கவிதையைச் சேதுபதி சுனாமி என்ற பெயரை நாம் நீர்ப்பிரளயத்திற்குச் சூட்டு முன்னர்தான் எழுதியிருக்க வேண்டும். பிரளயம் வருமுன் அல்லது வந்தபின் நாம் அல்லது நீங்கள் திருந்த முடியுமா இயலுமா திருந்த வேண்டும் என்ற தவிப்பை உங்கள் நூல் தருகிறது.

தீயையே எரித்த தீயையே சீதையாய்
ஆக்கிய கம்பனுள் அடந்த தீ கவித்தீ
பாக்கியில்லாமல் ஏன் படிப்போரைச் சுடவில்லை
(130)

என்ற கேள்வி உங்களை கம்பன் கவி அல்லது இராமாயணக் கருத்து சுட்டிருக்கிறது என்பதைத் தௌ¤வாக்குகிறது. உங்களிடம் ஏற்படுத்திய இந்த பாதிப்பு கம்பனுக்கு வெற்றி., படிப்போரில் ஒருவர்க்கேனும் அந்த தீப் பொறி உரசலை உண்டாக்குகிறது என்பதற்கு நீங்கள் ஒரு சான்று. இதுபோல உங்கள் கவிநூலுக்கும் பின்விளைவு இருக்கும் என்பதில்¢ ஐயமில்லை.

மற்றபடி படிக்கும்போது சோர்வு ஏற்படாமல் கீழேவைக்க விடாமல் கைகளை இந்த நூல் கட்டிப்போட வைக்கிறது. சொல்வளம், நடை, ஓட்டம் அனைத்தும் இதற்கு கைகொடுக்கின்றன.

காப்பியங்களில் யாப்பு வடிவம் மாறுகையில் வேறு என்று தலைப்பிட்டு நூலைச் செய்வது முறை. அவ்வகையில் மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் மாறி மாறி இந்நூலில் உலா வருகின்றன. அந்த அந்த நேரத்தில் அவை அவை சுவையூட்டுவன என்றாலும் ஒரு இடையீடு இருப்பதாக உணரமுடிகிறது. இவற்றிற்கு இனி ‘‘வேறு’’ என்ற கட்டமைப்பைப் பயன்படுத்தினால் உங்களைப் போன்ற மரபும் தெரிந்த புதுக்கவிஞர்கள் மேலும் கவனிக்கப் படுவார்கள்.

ஆசிரியர் சேதுபதி,
வெளியீடு - கபிலன்பதிப்பகம்,
12, 7வது குறுக்குத்தெரு, பாரதி நகர்,
புதுச்சேரி,605 008,

விலை ரூ 60,


மு. பழனியப்பன், புதுக்கோட்டை
palaniappan

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-12-01 00:00
Share with others