கவிதைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவிலும் கருக்கொண்டு முகம் காட்டுகிறது. கவிதைகள் என்றால் பெண்ணின் காதல், நிலாவின் அழகுச்சிரிப்பு, தாயின் அணைப்பு, மழைச்சாரலில் பச்சைப்புடவைக் கட்டும் மலைமகளின் நடனம், அரசியல், தமிழ் வாழ்த்து இப்படி ஒரு தடம் போடப்பட்டிருக்கிறது. இந்த பழைய வண்டிப்பாதைகளிலிருந்து இன்றைய கவிதைகள் வானூர்திகள் பறக்கும் ஆகாயப்பாதையைப் போல வாழ்வில் கண்ட, அனுபவத்தை அனைத்தையும் கவிதையாக்கும் வேகத்தில் இறக்கைக்கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருக்கிறது.

சிலர் கவிதைகள் எரிமலையாக, சிலர் கவிதைகள் நதி ஓட்டமாக , சிலர் கவிதைகள் தூக்கமிழக்கச் செய்யும் விம்மல் ஒலியாக இப்படி எத்தனையோ கவிதைகள் இன்று வாசகனுக்கு. அவரவர் நேரம், தேவை, அந்த நேரத்தின் மனநிலை இப்படி காலம், இடம், தேவை அறிந்து எடுத்துக் கொள்ளும் அளவிற்கு கவிதை உலகம் பல்வேறு தளங்களில் முகம் காட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு அமைதியாக ஈஸிச்சேரில் சாய்ந்து கொண்டு ஒரு மாலைப் பொழுதில் கவிதை வாசிக்கும் அனுபவத்தைத் தருவது அண்மையில் வெளிவந்திருக்கும் நண்பர். கவிஞர் பொன்குமார் எழுதியிருக்கும் 'தன்னினத்தை நிரப்பியுள்ளது நாற்காலி' கவிதைகள்.

எல்லா குடும்பங்களிலும் இப்படி ஒரு நாற்காலி கட்டாயம் இருந்திருக்கும். நாற்காலியாக, நார்க்கட்டிலாக, சாய்வு நாற்காலியாக, எழுத்து மேசையாக இப்படி எதோஒன்று தாத்தா, பாட்டி, அப்பாவின் அடையாளமாக பயன்பாட்டிலோ அல்லது பயன்படுத்தியவர்களில் மீதுள்ள மரியாதைக் காரணமாக ஓரு காட்சிப்பொருளாக ஒரு மூலையிலோ இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதே நாற்காலி கவிஞருக்கு கவிதையின் கருப்பொருளாகி கவிதை இடத்தில் அவருக்கான தனி இடத்தை நிரப்பிக்கொள்கிறது.

சின்ன சின்ன விஷயங்களையும் ஊன்றி கவனித்து கவிதையின் கருப்பொருளாக்கும் தெளிவும் திறமையும் படைத்த கவிஞர்

ஓய்வு பெற்ற தாத்தாவிற்க்காக
உழைத்தது ஓய்வின்றி

குடும்பத்தை தாங்கியதாக
கர்வப்பட்டுக்கொண்ட தாத்தாவையே
தாங்கியது

இறந்த தாத்தாவை
படுக்க வைத்ததால்
பயன்படுத்தாமல் கிடந்தது
இன்றுவரை

அப்பாவுக்கு
நாற்காலி மீது
பயம் கலந்த மரியாதை
எப்போதுமே
....
அனாதையாக உள்ளது
அப்பா இறப்பிற்குப் பின்

வெற்றிடமாயினும்
தன்னிடத்தை நிரப்பியுள்ளது
நாற்காலி.
(பக் 9)


எதிரிகளை அழிப்பேன், ஒழிப்பேன் என்ற காலம் போய் இன்று கவிஞர் பட்டாளம் எதிரிகளுடன் கைகுலுக்குவது வாழ்க்கையை சுவராஸ்யமாக ஆக்கும் நிலையைப் பார்க்கிறோம். 'நானும் நண்பர்களும் 'என்ற கவிதையில் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்

எதிரிகளும்
எதிரிகள் போலவும்
நண்பர்களும்
நண்பர்கள் போலவும்
நிறையப் பேர்
எனக்கு.

எதிரிகளை எளிதில்
இனம் காண முடிகிறது
அவர்களைக் கண்டு
அச்சமில்லை எனக்கு
நண்பர்களை
நினைத்தால்தான்..


என்று வித்தியாசமாக வருத்தப்பட்டிருப்பார். அதுபோலவே கவிஞர் பொன்.குமாரும்

பிரியமானவர்கள் எதிரிகள்

எதிரிகளைத் தேர்ந்தெடுப்பதில்
எச்சரிக்கையாக இருக்கிறேன்

விரோதிகளின்
உண்மையான விமர்சனக்களே
வாழ வைக்கின்றன
என்னை

எதிரிகள் இல்லா வாழ்க்கை
என்ன வாழ்க்கை!


என்று வாழ்க்கையை எதிரிகளுடன் இணைத்து கண்டு புன்னகைக்கிறார்.

வாழ்க்கையின் நிறைய சந்தர்ப்பங்களில் தொன்மை காரணமாகவே சில செயல்பாடுகள் தொடர்கின்றன. அந்தச் செயல்களுக்கான தேவையும் அர்த்தமும் இன்று இல்லை என்பதை அறிந்தப் பின்னும் அதுவே சடங்கு, சம்பிரதாயம், வழக்கம், ஏன் சில நேரங்களில் கலாச்சார பண்பாட்டு முகங்களுடனும் உலா வந்து கொண்டிருப்பதைக் காணுகிறோம்.ஆதிகாலத்தில் மனிதன் இறந்தவுடன் அவனை எடுத்துச் சென்று இடுகாட்டில் எரிப்பதற்கும் புதைப்பதற்கும் நெருப்பு தேவைப்பட்டிருக்கிறது. அந்த நெருப்பை இடுகாட்டில் பெறுவது சாத்தியமில்லை என்பதால் பிணத்துடன் நெருப்பு கனன்று கொண்டிருக்கும் கொள்ளிச்சட்டியையும் ஏந்திச் செல்ல வேண்டிய தேவை இருந்திருக்கிறது.ஆனால் இன்று அந்த தேவைகள் எதுவுமில்லை. இடுகாடுகளில் பிணங்களை எரிக்க மின் எந்திரங்கள் வந்தாகிவிட்டது. வெளிச்சத்திற்கு மின்சாரம் வந்தாகி விட்டது. இருந்தும் கொள்ளிச்சட்டியை ஏந்திச் செல்லும் பழக்கம் சம்பிரதாயம், சமயச் சடங்கு என்ற பெயரால் தொடர்வதைப் பார்க்கிறோம். இந்தக் கருத்தை வேறு ஒரு தளத்தில் கொண்டு சென்று அம்மன் கோவில் ஊர்வலத்தில் ஏந்தப்படும் தீப்பந்தமாக 'வெளிச்சம்' கவிதையில் படைத்துள்ளார்.

'மின்சாரம் தடைபட்டால்
தொடர் வெளிச்சத்திற்கு
தயாராய்
'பெட் ரோமாக்ஸ்கள்'

மஞ்சள் பகலாய்
மாறியிருந்தது இரவு

சடங்காக
அம்மன் ஊர்வலத்தில்
முன்னால் பிடித்துச் செல்கிறாள்
பெண்ணொருத்தி
தீப்பந்தம்
(பக் 18)


மழை நீரைச் சேமிக்க ஒவ்வொரு வீட்டிலும் நீர்த்தொட்டி அமைக்கும் படி சொல்லிய தலைவர்கள் தண்ணீரில்லாத குளத்தில் லாரி லாரியாக தண்ணீரைக் கொட்டி மகாமக மேளாவில் பாவம் தீர புண்ணிய நீராடலைப் பார்க்கிறோம். கவிஞர் 'தண்ணீர்' என்ற கவிதையில்

'சேமிப்பதில் அக்கறையானவர்கள்
செலவழிப்பதில் கொள்வதில்லை

வெள்ளிக்கிழமை மட்டும்
குடம் குடமாய கொண்டு
ஊற்றுவர் மாரியம்மனுக்கு'

(பக் 36)
என்ற விசனப்படுவதைக் காணலாம்.

சின்ன சின்ன விஷயங்களையும் ஊன்றி கவனித்து கவிதையின் கருப்பொருளாக்கும் தௌ¤வும் திறமையும் படைத்த கவிஞர் பொன்.குமார் அவர்கள் 'நீ யார்?' கவிதையில் இந்து மதத்தில் இன்று மக்களின் வழிபாட்டுத் தளத்தில் முழுவதும் மறைந்துவிட்ட சைவ, வைணவ வேறுபாட்டை பெரிய கேள்விக்குறியாக்கி இருப்பது வாசகனுக்கு அவருடைய கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக்கிவிட்ட அவலத்தை ஏற்படுத்திவிடுகிறது.

கவிஞர் பொன்.குமார் அவர்களின் இலக்கிய பயணத்தில் பனிரெண்டாவது நூல் இது. தன்னிடத்தை நிரப்பியுள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சில காட்சிகளை அசைபோடும் அனுபவப் பகிர்வு. அதுவும் எதிலும் பட்டுக்கொள்ளாமல் பாதிப்புகளில் காயப்படாமல் திண்ணையில் உட்கார்ந்து சிலவற்றைச் சொல்லுவதும் பலவற்றை நினைப்பதுமாக ஆடிக்கொண்டிருக்கிறது இந்த நாற்காலி.

புத்தகம் வாசிப்பது
பொதுவானது
சிலரே
சிரத்தையோடு வாசிக்கின்றனர்.
...

புத்தகம் அதுவாகவே உள்ளது
வாசிப்பில்தான் சிக்கல்.

புரிந்து வாசிப்பவரே
புத்திசாலிகள்

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்
அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளனர்

அதில் பலவுண்டு
அத்தியாயங்கள்

சிலவே சுவை
பல சோதனை

எனக்கானதை வாசித்த படியுள்ளேன்
நான்...

pon kumar
கவிஞர் பொன்.குமாரின்" வாசிப்பு" என்ற இறுதிக்கவிதை கவிதைகளை வாசித்து முடித்த வாசகனுக்காக கவிஞரே எழுதியிருக்கும் கவிதை. வாசகர்கள் அனைவரும் இக்கவிதையைத் தந்த கவிஞருக்கு கட்டாயம் ஒரு "ஜே" போடலாம் வாருங்கள்.

கவிதைநூல்: தன்னிடத்தை நிரப்புயுள்ளது நாற்காலி
வெளியீடு: மருதா பதிப்பகம், சென்னை.
பக் : 80 விலை : ரூ.40/-

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2000-01-01 00:00
Share with others