காதல் வேண்டுமா
கவிதை வேண்டுமா
என்றால்
காதலைப் பாடும்
கவிதை வேண்டுமென்பேன்'
என்பார் கவிஞர் ப்ராணா (மழை நிகழ்ந்த போது) மதியழகன் சுப்பையாவின் கவிதைகளும் முழுக்க முழுக்க காதலைப் பாடும் கவிதைகளாக காதல் உணர்வில் இளைஞன் தொடுக்கும் மல்லிகைச் சரமாக மணக்கிறது.
இணையத்தில் சந்தித்து டிஸ்கோவில் ஆடி கடற்கரையில் கல்மேடையில் இருட்டுப் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு உடல்பசி தீர்க்கும் காட்சிகள் ரொம்பவும் சர்வ சாதாரணமாகிவிட்ட மும்பை வாழ்க்கையில் ஓர் இளைஞன் காதலுக்காக உருகுவதும் உயிர்க்குலைவதும் அந்தக் கவிதைகளைச் சேர்த்துவைத்து மல்லிகைக் காடாக்கி காட்டுவது ஜனத்திரளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு ஓடும் மின்சாரவண்டியில் தொங்கிக்கொண்டு பயணிக்கும்போது அந்தக் கூட்ட நெரிசலிலும் பூக்காரி நுழைந்து அந்தப் பூக்களின் மெல்லிய மணம் வியர்வை நாற்றத்தை விரட்டி அடிக்கும்போது ஏற்படும் சிலிர்பை சில வரிகளில் ஏற்படுத்திவிடுகிறது.
நித்திரை ஆழியுள்
விழுந்து மறைகிறேன்
தட்டி எழுப்புகிறதுன்
நினைவு விரல்கள்
எச்சில் உலர்ந்த
முத்த வடுக்கள்
வலிக்கிறது ரணமாய்
(பக் 67)
என்று காதலியின் நினைவுகளில் தவிக்கும் காதல் மனம்.
இன்றைய பெண் காதலன் விரும்பியதை அணிந்து வேண்டியதைச் செய்து அவன் வேண்டும் போதெல்லாம் தன்னை அவனுக்கு கொடுக்க எப்போதும் தயாராக இருப்பவள் அல்லள். அதனால் அவளைக் காதலிக்கும் ஆணின் பார்வையும் அவனின் வேண்டுதலும் இன்று மாறுபட வேண்டிய அவசியமிருக்கிறது. இந்த நிதர்சனமே கவிஞரை இப்படி எழுத வைத்திருக்க வேண்டும்!
'உன் ஞானப்பார்வையின்
கூர்மை பட்டு
கிழிபடுகிறதென்
பொய்முகம்
என்னைக் கடந்தவர்கள்
ஒட்டிவிட்டுப்போன
முகங்களையும் கிழி
அடியில் கிடைக்குமென்
மெய்முகம்
அதிலுமென் ஆணவம்
கண்டால்
இதை நான்
மரபில் பெற்றேன்
என்பதை உணர்..
(பக். 57)
என் ஆணவப்போக்கிற்கு என்னை மட்டும் குற்றவாளியாக்காதே, அது என் மரபியல் அணுவில் கலந்திருக்கும் ஒரு குணாதிசயம் என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்திருப்பது கவிஞரின் அறிவியல் கலந்த சமத்துவப் பார்வைக்கு அணி செய்கிறது. இக்கருத்தையே இவருடைய இன்னொரு கவிதையும் பதிவு செய்கிறது
'ஆதிக்க நாற்றமடிக்கும்
வார்த்தைகளை கழுவு
என் வாயை வெறுக்காதே
ஆதிக்க நரம்புகளை
மூளையிலிருந்து பிடுங்கு
என் உடலை விலக்காதே
......
தலைமுறைக் கோபம்
தனிந்துகொள்
வெறுக்காதே - விலக்காதே - ஒதுக்காதே.
என்று சொல்கிறது.
ஒண்ணு ரெண்டு மூனுயென
எண்ணியும்
ராமா ராமாவென
உச்சரித்தும்
கண்ணைமூடி
பல்லைக்கடித்து
அடக்கியும்
அடங்காமல்
மீண்டும் பார்த்துவிட்டேன்
பேருந்தில் கைதூக்கி
நின்றவளின்
அக்குள் கிழிசலை' (பக் ..43)
என்று மனித மனதின் இச்சைகளை தோலுரித்துக் காட்டுவார்.
தொகுப்பு முழுக்கவும் தன்னிலை (என், நான்) என்றமையும் கவிதைகளுக்கு நடுவில் எதிலும் ஒட்டாமல் ஒரு கவிதை ஒரு பெண் சொல்வதாக அமைந்துள்ளது.
என் ஏவல்களை
கடமையாகக் கொள்கிறான்
என் அலங்காரங்களால்
கவரப்பட்டிருப்பான்
உள்ளாடையின் கொக்கி
மாட்டிவிட்டது முதல்
முகம் பார்த்து பேசுவதில்லை
இப்பொழுதெல்லாம்
அக்காவென்று விளிக்காமலே
பேச முனைகிறான்'
என்ற கவிதை தொடர்வாசிப்பில் மயக்கத்தை ஏற்படுத்தும்.
'கட்டிலெங்கும்
மல்லிகைப் பரப்பி
மல்லாந்திருந்த உன்
யோனி முகர்ந்து
முத்தமிடுகையில்
மல்லிகைக்காடானது
மனசு' (பக் 51)
என்று ஆண்-பெண் உறவின் சங்கமத்தையே மல்லிகைக்காடாக உருவகப்படுத்தி இருக்கும் கவிஞர் அதையே பெண் செய்யும்போது அவள் காதலை கொச்சைப்படுத்தி உடலின் இச்சையாக மட்டுமே உருவகப்படுத்தி இருக்கும் காட்சி நெருடலாகவே இருக்கிறது.
அம்மாவின் கைகள்
அன்னத்தின் தூவள்
அன்பாய் என்
அங்கம் வருடும்
அப்பாவின் கைகள்
மாதுளை பழத்தொலி
சுரசுரப்பாய் என்
தலை வருடும்
ஆனால், எப்பொழுதும்
என் ஆடை களையவே
நீள்கிறதுன் கைகள்'
(பக் 78)
என்றும்,
நான்கடி விலகி நின்று
பேசியபோது
தோளில் கைப்போட்டபடி
நடந்தபோது
....
பலநிலைகளில்
மௌனமாய் இருந்துவிட்டு
உடல்பிசைந்து
உச்சம்கண்ட
ஒரு பொழுதில் கேட்டாய்
'இதுதான் காதலா?' என..
பாலியலைக் காதலாக்கி மணம் காணும் கவிஞர் அதையே பெண் கேட்டால் கேள்விக்குறியாக்குவது சமுதாய மரபுவழி எண்ணங்களில் சிக்குண்டு இருப்பதையே உணர்த்துகிறது.
காமசூத்ரா என்ற பாலியல் நுட்பங்களை எழுதி இருக்கும் நூலைப் படைத்த வாத்சாயனர் ஓர் ஆன்மிகத்துறவி என்று நம்புகிற விதத்தில் கட்டமைக்கப்பட்டது இந்திய மனம்.கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்று கிளைகள் விரியும் அகத்திணையப் பற்றி குறிப்பிடும்போது இளம்பூரணர் 'அகப்பொருளாவது போகநுகர்ச்சி, அதன் ஆயபயன் தானே அறிதலில் அகம்" என்றார்.ஐந்திணை இயல்களான களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் என்று விரிவாகப் பேசும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் விவரிக்கும் களவுக்கால மெய்ப்பாடுகள் பாலியலின் பெருக்கத்தையும் நுட்பத்தையும் சொல்லிச் செல்கிறார். பழந்தமிழ் இலக்கியப்படைப்புகளில் படைப்பாளர்களுக்கு இருந்த படைப்பு நேர்மையும் வாழ்க்கை குறித்தான தெளிவான பார்வையும் சமூகத்தின் முன்னகர்தலுக்கான அக்கறையும் இன்றைக்கு பாலியல் குறித்த உணர்வுகளை எழுதும் நவீன இலக்கியவாதிகளூக்கு இருக்கிறதா என்பது அய்யத்துகுரியதுதான்.
"நனவிலி மனதின் உளச்சல்களை எழுதிப் பார்க்க வேண்டுமென்ற அரிப்பாகவோ இலக்கியங்களின் கடைத்திறப்புப் படலத்தின் படைப்பு நேர்த்தியில் மயங்கி விழுந்த தனது வாசக மனதிற்கும் - படைப்பு மனதிற்கும் ஏற்பட்ட சவாலில் அந்த பிரதிகளை மீண்டும் புதுமொழியில் சிருஷ்டிக்கும் விருப்பத்தினாலோ நவீனக் கவிஞர்களின் எழுதுகோல்கள் முனைகின்றன" என்பார் வே.எழிலரசு. (வலது கை மின்னல்/பக் 93)
'கவிதை தனி மனித அனுபவத்தின் வெளிப்பாடுதான் என்னும்போதே அந்த அனுபவம் புறநிகழ்வுகளாலும் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படுவது தான் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். தனிமனிதம் என்ற நிலையில் அவனைப் பாதிக்கும் விஷயங்கள் கவிதையனுபவமாகும்போது அது பொதுவான மனித அனுபவமாகவும் விரிவு கொள்ள வேண்டும்- கலாபூர்வமாகத் தளமாற்றமடைய வேண்டும்." என்பார் கவிஞர் ராஜமார்த்தாண்டன். (புதுக்கவிதை வரலாறு.. பக் 68)
' நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு மும்பை தந்த கொடை ' என்று கவிஞர் அன்பாதவனால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கவிஞர் மதியழகன் மும்பை இலக்கிய வட்டத்தில் நவீன இலக்கியம் பற்றி அறிந்தவர். வாசிப்புகளை தொடர்பவர். குயில்தோப்பு என்ற இலக்கிய சிற்றிதழ் நடத்திய ஆர்வலர்.ஆவணப்படங்கள், ஓரங்க நாடகங்கள் என்று தன் தேடலை விரிவுப்படுத்திக் கொள்ள விரும்பும் இளைஞர். வாழ்க்கை மல்லிகைக்காடல்ல என்பதையும் புரிந்து கொண்டவர். பெண்கள் மல்லிகைக்கு மயங்குவதில்லை என்பதையும் அறிந்தவர். அறிந்தவர், புரிந்தவரிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பதில் தவறில்லைதானே. முதல் தொகுப்பில் எல்லோருக்கும் ஏற்படும் சின்னச்சின்ன குறைகள், கருத்தியல் முரண்கள் மல்லிகைக்காட்டில் இருந்தாலும் மல்லிகை இந்த மனித நெரிசலில் மணக்கிறது.
மல்லிகைக்காடு : கவிதைகள்
ஆசிரியர் : மதியழகன் சுப்பையா, மும்பை
வெளியீடு: மருதா பதிப்பகம், சென்னை 14,
விலை : ரூபாய் 50/-